வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (08/08/2016)

கடைசி தொடர்பு:13:16 (09/08/2016)

நம் தண்ணீர்... நம் உரிமை...! - தண்ணீர் விலைபொருள் ஆன வரலாறு...!

க்வா டி கிரிஸ்டில்லோ 750 மி.லி., வாட்டர் பாட்டிலின் விலை 60,000 அமெரிக்க டாலர்.  இந்திய மதிப்பில்  40, 24, 047 ரூபாய். இதுவே உலகின் காஸ்ட்லியான மினரல் வாட்டர். வருங்காலத்தில் தங்கத்தின் விலை நிலவரம் போல், லிட்டர் தண்ணீரின் அன்றைய விலை என்னவென்று பங்கு வர்த்தகத்தில் பார்க்கும் நாள் நெருங்கிவிட்டது.

இந்தியாவில் பிரபலமான பிஸ்லரி, 1965 -ம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டது. இதுதான் நமக்கு 'மினரல் வாட்டர்' என்று சொல்லப்படும் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்த நீரை அறிமுகப்படுத்தியது.
அன்று அதை வாங்கிப் பருகியவர்கள் பெரும் செல்வந்தர்கள் மட்டும்தான். இன்று எல்லோரது கைகளிலும் மினரல் வாட்டர் பாட்டில்கள். 

தமிழகத்தில் உரிமம் இன்றி செயல்படும் மினரல் வாட்டர் நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகளை விட எண்ணிக்கையில் அதிகம். பெரிய பிராண்டுகளைப் போன்றே வடிவமைக்கப்பட்டு, குட்டி எழுத்து செருகலோடு, அதே விலையில் உள்ள வாட்டர் பாட்டில்களை நாம் வாங்கி குடித்துக்கொண்டே இருக்கிறோம். தண்ணீர் அடைக்கப்பட்டிருந்தால் அது சுகாதாரமானது என்ற மனநிலை நம்முள் வந்துவிட்டது.

அடைக்கப்பட்ட நீரில் ஆக்ஸிஜன் குறைவு என்பது பற்றி நமக்கு எந்த பிரக்ஞையும் இல்லை.
ஒரு வாரத்தில் நாம் குடித்துவிட்டு தூக்கியெறியும் வாட்டர் பாட்டில்களைக் கொண்டு,  பூமியை 3 சுற்றுகள் கட்டலாம். அவ்வளவு பிளாஸ்டிக் பாட்டில்களை நாம் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறிகிறோம்.  30 அடியில் வந்த நீரூற்று இப்போது 800 அடி தோண்டியும் முரண்டு பிடிக்கிறது. அங்கு மட்காத பிளாஸ்டிக்கை வரவழைத்த சாதனை நம்முடையதுதான். 

சிறிய கம்பெனிகள் வாட்டர் பாக்கெட்டுகளையே ஆரம்ப காலங்களில் விற்பனை செய்தன.  தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் மனோபாவத்துக்கு  மக்கள் முழுவதுமாக மாறிய பின்னர்தான், இவர்கள் கொள்ளை லாபம் பார்க்க, பாக்கெட்டுகளில் இருந்து பாட்டில்களுக்கு மாறினார்கள். அதன் விளைவே இப்போது எந்த குடிநீர் குழாயிலும் தண்ணீர் வருவது இல்லை; எந்த பேருந்துநிலையத்திலும் இலவச தண்ணீர்  வைக்கப்படுவது இல்லை; ஹோட்டல்கள், திரையரங்குகள் என்று எங்கும் தண்ணீரை இலவசமாக கொடுக்க தயாராக இல்லை. 'விலைக்கு வாங்கிக் குடிக்க கூட்டம் தயாராக இருக்கும்போது. அதை ஏன் சும்மா வைப்பானேன்' என்று பலரது மனம் தமிழக ஆறுகளைப் போல் வற்றிவிட்டது

தண்ணீர் எப்போது விலைக்கு வந்தது?

ங்கிலாந்தில் 1621 ம் ஆண்டு, 'ஹோலி வெல்' என புனித கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட நீர்,  நோய்களை தீர்க்கும் மருத்துவக் குணமுள்ளது என நம்பப்பட்டது. அதை கண்ணாடி பாட்டில்களில் அடைத்து,  ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்தார்கள்.

இதனை முறியடிக்கும் விதமாக, 1783 ல் கார்பனேட் கலந்த மினரல் வாட்டர் பாட்டிலை, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஸ்வெப்ஷ் நிறுவனம் தயாரித்தது. இவர்கள்தான் முதன்முறையாக மினரல் வாட்டருக்கான காப்புரிமையைப் பெற்றார்கள். 1834 ல் வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் காலரா தொற்று ஏற்பட்டபோது, 'குளோரின் கலந்த பாட்டில் நீரே சுத்தமானது' என மருத்துவர்களைக் கொண்டு விளம்பரம் செய்து விற்றார்கள்.

1973 களில்,  பெட் பாட்டில் எனப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களின் அறிமுகத்துக்கு பின்னர்தான் தண்ணீர் விற்பனை மாபெரும் காசு கொட்டும் வர்த்தகமானது. இதன் தயாரிப்புச் செலவு மிகக் குறைவு, அதேசமயம் லாபம் கடல் அளவு.

வாட்டர் பாட்டில் லேபிள்களில் இவர்கள் மலைகளையும் இயற்கை நீரூற்றுகளின் காட்சிகளையும் அச்சிடுகிறார்கள். சில பாட்டில்களில்  ஸ்பிரிங் வாட்டர் என்று  எழுதியிருக்கும். ஆனால் 'எந்த நீரூற்று தண்ணீர்' என்ற விவரம் இருக்காது. 'இயற்கையான நீரை உங்களுக்கு தருகிறோம்' என்று விளம்பரம் செய்கிறார்கள். உண்மையில் அனைத்து நிறுவனங்களும் குழாய் நீரையே ஃபில்டர் செய்து விற்கிறார்கள்.

நீர் வர்த்தகத்தில் இவர்களின் தொழிற்போட்டி என்பது அதன் சக கம்பெனியோடு இல்லை. சாதாரண தண்ணீரை பயன்படுத்தும் நம் உரிமை மீதுதான். 'குழாய்களில் வரும் நீர் தூய்மையற்றது... பாட்டில் நீரே சுத்தமானது' என்று தலையில் அடித்து, பாட்டில் தண்ணீரை குடிக்க வைக்கிறார்கள். இவர்கள் தொலைக்காட்சிகளின் மூலமும் தினமும் தங்கள் பாட்டில்களை காண்பித்து, குழாய் தண்ணீர் மீது அழுக்கைப் பூசி, அவை குடிநீர் என்ற எண்ணத்தையே நம் நினைவிலிருந்து கழுவி விட்டார்கள்.

முன்பு வீடுகளில், முந்தைய நாள் பிடித்த தண்ணீரை மறுநாள் குடிநீராக பயன்படுத்த மாட்டார்கள். அது சமையல் பயன்பாட்டிற்கு சென்றுவிடும். ஆனால் இன்று,  என்றைக்கு பிளாஸ்டிக் கேன்களில் அடைக்கப்பட்டது என்ற உறுதிப்படுத்தாத நீரை, வாரம் முழுக்க பயன்படுத்துகிறோம். பித்தளை குடங்களிலும், மண் பானைகளிலும் இருந்த தண்ணீர் இப்போது கேன் வாட்டர்.

பாட்டில் தண்ணீரை குடித்தவுடன் பிளாஸ்டிக் சுவையோடு கூடிய வாடையை உணரலாம். இவை PETE என்று அழைக்கப்படும் மறுசுழற்சி செய்யும் பாலி எத்தலினால் செய்யப்பட்டவை. எனவே இவை 'PET பாட்டில்' என்ற செல்லப் பெயர் பெற்றன. இந்த நீரை பருகுவதன் மூலம் கல்லீரல் பிரச்னையும், குடல் புண்,  இனப்பெருக்க உறுப்புகள் பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என கண்டறியப்பட்டுள்ளது

மினரல் வாட்டர் என்றால் என்ன?

மினரல் என்றால் கனிமம். இயற்கையில் நிலவியல் வேறுபாட்டால் பாறைகளாகவும் உப்பு வளங்களாகவும் சிக்கலான தொகுதியாக உள்ள படிகங்கள் ஆகும். இந்த படிகங்களைதான் தண்ணீரை சுத்தப்படுத்த மினரல் வாட்டர் கம்பெனிகளில் உபயோகிக்கிறார்கள். 

இந்த படிகங்கள் எனப்படும் படிகாரங்களை நாம் அன்றாடம் வீட்டு வாசல்களில், திருஷ்டி பொம்மை விற்கும் கடைகளில், முகச் சவரம் செய்யும் கடைகளில் பார்த்துக் கொண்டே கடந்து செல்கிறோம்.  முன்னர் கடலோர மாவட்டங்களில் தண்ணீரின் உப்புத் தன்மையை மாற்றவும், நீரில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கவும் இந்த கற்களை குடங்களில் போட்டு வைப்பார்கள். காரணம், இது தண்ணீரை தூய்மையாக்கும்.  இவ்வாறு கனிமம் கலந்த நீருக்குத்தான் 'ஸ்வெப்ஷ்' நிறுவனம் 'மினரல் வாட்டர்' என காப்புரிமை பெற்றது.

இந்த கனிமம் கலந்த நீரைத்தான் பிஸ்லரி நிறுவனம்,  80 ஆண்டுகளாக விற்றுக்கொண்டு, இந்தியாவின் 60% மார்கெட்டை கையில் வைத்துள்ளது

'தண்ணீர் விற்பனைப் பொருளாக மாறும்' என்று நம் முந்தைய தலைமுறையினர் யோசித்திருக்க மாட்டார்கள். நாம் குளங்களில், ஏரிகளில் தண்ணீர் பருகியபோது அவைகளை சுத்தமாக  வைத்திருந்தோம். அவை மனிதன் முதல் விலங்குகள் வரை அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது. இந்நிலையில்தான், தன் சொந்த பயன்பாட்டிற்காக வீட்டிலேயே கிணறுகளை வெட்டிக் கொண்டோம். கிணற்றை சுத்தம் செய்ய மீன்கள் வளர்க்கப்பட்டன.  தண்ணீர் விலைபொருளாக மாற மாற, ஏரி  குளங்கள் கைவிடப்பட்டன. அவை மண் எடுக்கவும், நில ஆக்கிரமிப்புகளுக்கும் பலியாயின.

'தண்ணீர் ஒவ்வொரு உயிரின் உரிமை, விற்பனைப் பொருள் இல்லை' என்ற எண்ணமே நமக்கு இல்லை.   மனிதர்கள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கிவிடுவார்கள். ஆனால்,  விலங்குகளும், பறவைகளும், மரங்களும் தண்ணீரை எங்கே தேடும்? மனிதன் சுய லாபத்துக்காக இயற்கையிடமிருந்து தண்ணீரைப் பிடுங்கி வெகு காலம் ஆகிவிட்டது. நம் உரிமையை பாட்டில்களில் அடைத்து நம்மிடமே விற்கிறார்கள்.

தண்ணீர் மீது நமக்கு உள்ள உரிமையை இந்த பாட்டில் விற்பனையாளர்களிடமிருந்து மீட்டெடுப்பதே,  நம் சந்ததியினருக்கு நாம் வாங்கித் தரும் சுதந்திரமாக இருக்கும். ஹோட்டல்கள், திரையரங்குகள், பொது இடங்கள் என அனைத்திலும் இலவசத் தண்ணீர் கொடுக்க வைப்பது அரசின் கடமை. இங்கு தண்ணீர் தராத உணவகங்களில் முதல் இடத்தில் இருப்பது அயல்நாட்டு நிறுவனங்களே. அவர்களிடமிருந்து திரையங்குகள் கற்றுக்கொண்டன. இவ்வாறான இடங்கள் புறக்கணிக்கப்படும்போது, தண்ணீர் மீண்டும் இலவசமாகும். பயணங்களின்பொழுது வீட்டிலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்ல மீண்டும் பழகுவோம். 

படிகாரத்தை பயன்படுத்தி வீடுகளில், நாமே மினரல் வாட்டர் செய்துகொள்வோம். பிளாஸ்டிக் புட்டி தண்ணீரே தீங்கானது. அவை மெல்ல நம் பொருளாதாரத்தையும், உரிமையையும், உடல் நலனையும் கெடுக்கக் கூடியவை ஒவ்வொரு முறையும் நாம் தண்ணீர் வாங்கும்போது நாமே நம் உரிமையை மறுக்கிறோம் என்பதுதான் உண்மை.

தண்ணீர் நம் உரிமை; விலைபொருள் இல்லை!

- பிரேம் டாவின்ஸி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்