Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிகரிக்கும் அமிலத் தாக்குதல்கள்... மாற்றம் நம் வீட்டிலிருந்து துவங்கட்டும்...!


 

து செவ்வாய் கிழமை. பொழுது புலர்ந்து சில மணி நேரங்கள்தான் ஆகி இருந்தது. முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு மருத்துவர்,  புதுடெல்லியில் ஒரு பிரதான சாலையில், தன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

சாலையில் தன் பார்வையை செலுத்தி இருந்தாலும்,  அன்று முடிக்க வேண்டிய பணிகள் குறித்த எண்ணங்களை அசைபோட்டுக் கொண்டே ஒரு மிதமான வேகத்தில் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனத்தை இன்னொரு இருச்சக்கர வாகனம் குறுக்கிட்டது. அதில் இருந்த ஒருவர், அவர் கைப்பையை இழுக்க... இன்னொருவர் அவர் முகத்தில் அமிலத்தை வீசிவிட்டுச் சென்றார். அமிலம் வேகமாக அவர் முகத்தில் , திசுக்களை கிழித்துக் கொண்டு ஊடுருவியது. வலியால் துடித்தார், கத்தினார். அமிலத்தை வீசியவர்கள் எந்த பதற்றமும் இல்லாமல், ஏதோ ஒரு சாதனை நிகழ்த்திய திருப்தியில் கடந்து சென்றார்கள்.

இந்த சம்பவம் நிகழ்ந்தது டிசம்பர் 23, 2014.  இதற்கு சரியாக ஐந்து நாட்களுக்கு  முன்புதான், புதுடெல்லியில்  ஒரு சிறு தன்னார்வலர்கள் குழு,  'அமிலம் வீசுபவர்கள்  மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள், சுலபமாக அமிலம் கிடைப்பதை கட்டுப்படுத்துங்கள்' என்ற கோரிக்கைகளுடன், இந்திய நாடாளுமன்றம் அருகே,  ஒரு போராட்டத்தை முன்னெடுத்தது. ஆனால் கெடுவாய்ப்பாக,  'அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்துகிறார்கள்' என்று, காவல்துறை ஆர்ப்பாட்டக்காரர்களை கடுமையாக தாக்கியது.
 
அழுக்கான ஆசிய ஆண் மனம்:

நாகரிகமடைந்துவிட்டதாக நம்பத் துவங்கி சில நூற்றாண்டுகள் ஆன பின்னும், அழுக்கான ஆசிய ஆண் மனதிற்கு, பெண்களை எதிர்கொள்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. பெண்களின் வெற்றிகளை ஜீரணிக்க முடியாமல் தடுமாறுகிறது. அவர்களின் நிராகரிப்பை, தன்னைவிட கீழானவர் தன்னை நிராகரிப்பதா என்ற ரீதியில் அணுகுகிறது. அதன் விளைவுகள்தான் இப்படியான அமிலத் தாக்குதல்களாக உருமாறி இருக்கின்றன. ஆம், உலக அளவில் நடக்கும் பெரும்பாலான அமிலத்தாக்குதல்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஆசியாவில் நிகழ்ந்துள்ளது. அதுவும் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசத்தில். இது ஏதோ விபத்து அல்ல... எதேச்சையாக நிகழ்ந்ததும் அல்ல. அனைத்தும், திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டவை. சீழ் படிந்த ஆண் மனதால் நிகழ்த்தப்பட்டவை.

நம்பிக்கையை சிதைக்க அமிலம் வீசு:

யாரையும் புறத்தோற்றத்தை மட்டும் வைத்து அழகென்று மதிப்பிடுவது அறமாகாது. ஆனால், இங்கு எழுதி தான் ஆக வேண்டும். ஆம், லலிதா பென்பான்ஸி மிகவும் அழகானவள். அவள் 2012 ம் ஆண்டு, உத்தர பிரதேசத்தின், உள் கிராமம் ஒன்றிற்கு ஒரு திருமண நிகழ்வில் பங்கு கொள்ள, தன் அம்மாவுடன் பயணமாகிறாள். திருமண உற்சாகத்தில் குடி போதையில் இருந்த உறவினர் ஒருவர், லலிதாவுடன் சண்டை போடுகிறார். லலிதாவும் தன்னம்பிக்கை உடன் எதிர்கொண்டு, அவரை திட்டுகிறாள். அப்போது அந்த நபர், “அழகா இருக்கேன்னுதானே, இவ்வளவு திமிரா நடந்துக்குற, அது இல்லாம ஆக்குறேன் பார்...” என்று சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து செல்கிறார். ஆனால், அப்போது யாரும், அதை அவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏதோ கோபத்திலும், போதையிலும் உளறுகிறார் என்று கடந்து சென்று விட்டார்கள். ஆனால், சரியாக ஐந்து மாதங்கள்  கழித்து, லலிதாவின் முகத்தில் அமிலம் வீசுகிறான் அவன்.  அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த லலிதாவின் தாயார் சுதாரிப்பதற்குள்ளேயே, அமிலம் அதன் ரசாயன வேலைகளை லலிதாவின் முகத்தில் நிகழ்த்துகிறது.

லலிதா உடனடியாக அந்த பகுதியில் இருந்த ஒரு சிறு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். ஆனால், அதற்குள் அமிலம் அவள் முகத்தின் செல்களை முழுமையாக தின்று இருந்தது.

குடும்பத்தின் ஆன்மாவை சிதைக்க அமிலம் வீசு:

 

தனி ஒருத்தியின் நம்பிக்கையை மட்டும் அல்ல. ஒரு குடும்பத்தின் ஆன்மாவை சிதைக்கவும் ஆண் மனம் பயன்படுத்தும் கருவி அமிலம்.

வெக்கையான மே மாதம்,  பதினேழு வயதான ரேஷ்மா குரேசியும், அவளது சகோதரி குல்சானும், ஒரு தேர்வு எழுத மும்பையிலிருந்து உத்தரபிரதேசம் நோக்கிச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். குல்சான் சில நாட்களுக்கு முன்புதான், தன்  கணவரின் நடவடிக்கை பிடிக்காமல், அவரிடமிருந்து பிரிந்து வந்திருந்தார். அன்று குல்சானும், ரேஷ்மாவும் தேர்வெழுத தேர்வு மையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது,  குல்சானின் முன்னாள் கணவரும், அவரது மூன்று நண்பர்களும், அவர்களை இடை மறித்து, ரேஷ்மாவின் முகத்தில் அமிலம் வீசினார்கள். ஆம், ரேஷ்மாதான் அவர்களின் குறி. ஏனென்றால், ரேஷ்மா, அந்த குடும்பத்தின் கடைசி பெண். சுட்டியானவள். அந்த குடும்பத்தில் அனைவருக்கும் செல்லம்.  அவர்கள் ரேஷ்மாவை சிதைப்பதன் மூலம்,  அந்த குடும்பத்தின் ஆன்மாவை சிதைக்க முடியும் என்று நம்பினார்கள். அதனால்தான் ரேஷ்மாவை குறி வைத்தார்கள்.

அதிகரிக்கும் அமிலத் தாக்குதல்கள்:

இது ஏதோ, இருவரின் கதை மட்டுமல்ல... இந்த பட்டியல் நீளமானது லக்‌ஷ்மி, தவுலத் கான், சாய்ரா, விநோதினி, வித்யா என இந்த பட்டியல் ஒரு முடிவிலியாக நீண்டுகொண்டே போகிறது.  நீண்டுகொண்டு மட்டுமல்ல, அது ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டும் போகிறது.

2011 ம் ஆண்டு 83 ஆக இந்த அமிலவீச்சு நிகழ்வுகள், 2014 ம் ஆண்டு 309 ஆகவும், 2015 ல்  349 ஆகவும்  உயர்ந்து இருக்கின்றன என்று அரசு தரவுகளே கூறுகின்றன. நிச்சயம் இது ஆபத்தானது.  அமிலங்கள் அந்த பெண்களின் திசுக்களை மட்டும் சிதைக்கவில்லை, அது மெல்ல இந்த சமூகத்தின் நல் மதிப்பீடுகளையும் சிதைத்து வருகிறது.

சட்டங்கள் ஏட்டளவில்தான் இருக்கின்றன:

அமிலத் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்த லக்‌ஷ்மி, 2013 ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கிறார். அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், மத்திய அரசுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்குகிறது. அதன்பின் அமிலங்களை கடையில் விற்பதை முறைப்படுத்த புதுசட்டமும் இயற்றப்படுகிறது. ஆனால், இது எதுவும் பயனளிக்கவில்லை. ஏனெனில், சட்டங்கள் அனைத்தும் ஏட்டளவிலேயே தங்கிவிட்டன.

இந்தியாவில் அமிலத் தாக்குதல்கள் அதிகரித்த அதே காலகட்டதில்தான், வங்காள தேசத்தில் குறிப்பிட்ட அளவில் இது குறைந்து இருக்கிறது. 2002 - ம் ஆண்டு 500 ஆக இருந்த அமிலவீச்சு தாக்குதல்கள், 2012 - ல் 71 ஆக குறைந்துள்ளன.  ஆனால், இதே காலகட்டத்தில்தான் இந்தியாவில் இந்த தாக்குதல்கள்  அதிகரித்து இருக்கின்றன.  வங்காள தேசத்தின் மக்கள் தொகை குறைவு.  இதனுடன் இந்தியாவை ஒப்பிட முடியாது என்றாலும் கூட, அங்கிருந்து நாம் படிக்க சில பாடங்கள் இருக்கின்றன.  அதில் பிரதானமானது, சட்டத்தை செயல்படுத்தும் நடைமுறை. ஆம், அங்கு எந்த சட்டமும் ஏட்டளவில் மட்டும் இல்லை. அனைத்தும்  கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சட்டங்கள், தண்டனைகள் அனைத்தையும் கடந்து, தனி மனித ஒழுக்க மாண்புகளும் நிச்சயம் மாறவேண்டும். அது வீட்டிலிருந்தே துவங்க வேண்டும். ஆம், ஆணும், பெண்ணும் சமமில்லை என்று நினைப்பதுதான், இந்த தாக்குதல்களுக்கான வேர்.  “இரு... அண்ணன் சாப்பிட்ட பிறகு... நீ சாப்பிடலாம்..” என்று பெண்களை வீட்டிலேயே பாகுபாட்டுடன் நடத்துவதை நிறுத்த வேண்டும். ஒழுக்கமும், மதிப்பீடுகளும் அனைவருக்கும் பொதுவானதுதான் என்று நம் வீட்டு ஆண் பிள்ளைகளை உணரச் செய்ய வேண்டும்.  நிச்சயம் அப்போதுதான் இந்த அமிலத் தாக்குதல்கள் குறையும்.

ஏனென்றால், அமிலம் வீசுபவர்கள் யாரும் வேற்று கிரகத்தை சேர்ந்தவர்கள் அல்ல.... அவர்கள் யாரோ ஒரு அம்மாவுக்கு மகன்தான்... யாரோ ஒரு சகோதரிக்கு சகோதரன்தான்...!

- மு. நியாஸ் அகமது | ஓவியம் : பிரேம் டாவின்ஸி

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement