Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பத்திரிகையுலகப் பிதாமகர் ( சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள் - பகுதி - 1)

அன்பு வாசகர்களே...

இன்று, ஆகஸ்ட் 10-ம் தேதி, பத்திரிகையுலகப் பிதாமகர் சாவியின் (சா.விஸ்வநாதன்) நூற்றாண்டு. அதையொட்டி, அவரைப் பற்றிய 100 தகவல்கள்,  ஐந்து பகுதிகளாக இங்கே பதிவிடப்பட்டுள்ளது.

முதல் பகுதிக்கான 20 தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

1) பத்திரிகையுலகப் பிதாமகர் சா.விஸ்வநாதன் என்கிற சாவி பிறந்தது 10.08.1916-ல்; அமரர் ஆனது 9.02.2001-ல்.

2) காஞ்சி மகா பெரியவா அவ்வப்போது போய்த் தங்கும் கலவை என்னும் ஊரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது மாம்பாக்கம் என்னும் கிராமம். அங்கே சாமா சுப்பிரமணிய அய்யர், மங்களம் அம்மாள் தம்பதியின் புதல்வராகப் பிறந்தார் சாவி.

3) சா.விஸ்வநாதன் என்னும் தம் பெயரைத்தான் சுருக்கி சாவி எனப் புனைபெயராகச் சூட்டிக்கொண்டார் சாவி. பின்னாளில் இதே பெயரில்தான் பத்திரிகை தொடங்கி நடத்தினார்.

4) விஸ்வநாதன் என்னும் பெயரை வழக்கமாகப் பெரும்பாலோர் ஆங்கிலத்தில் எழுதும்போது Viswanathan என்றுதான் எழுதுவார்கள். ஆனால், சாவி சாரோ வித்தியாசமாக தமது பெயரை w-க்கு பதிலாக v எழுத்தைப் போட்டு, Visvanathan என்றுதான் எழுதுவார்.

5) காஞ்சி மகா பெரியவரிடம் மிகுந்த பக்தி கொண்டவர் சாவி. அதே போல், புட்டபர்த்தி சாயிபாபாவிடமும் தீவிர பக்தி கொண்டவராக இருந்தார்.

6) சாவிக்கு மிகவும் இஷ்ட தெய்வம் என்றால், பெங்களூரில் உள்ள ‘பள்ளத்துப் பிள்ளையார்’தான். எப்போது பெங்களூர் போனாலும், பள்ளத்துப் பிள்ளையாரை தரிசிக்காமல் வரமாட்டார். பள்ளத்துப் பிள்ளையாருக்குப் பெரிய கோயில் எல்லாம் கிடையாது. பெங்களூர் சாலையின் ஓரமாக, ஒரு பிளாட்பாரத்தில், இரண்டு மூன்று படிகள் இறங்கிச் செல்லும்படியான ஒரு பள்ளத்தில் வீற்றிருக்கிறார் பிள்ளையார்.

7) ஆனந்த விகடன், தினமணிக்கதிர், குங்குமம் ஆகிய பத்திரிகைகளில் சாவி ஆசிரியராகப் பணியாற்றியது பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், அதற்கு முன்பே விசித்திரன், ஹனுமான், சந்திரோதயம், தமிழன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார் சாவி.

8) பல்லாண்டுகளுக்கு முன்பே ‘வெள்ளிமணி’ என்னும் இலக்கியப் பத்திரிகையை நடத்தியுள்ளார் சாவி. முதன்முதலில் சிறுகதைகளுக்கு வண்ணப்படம் அச்சிட்டு வெளியிட்டது வெள்ளிமணி பத்திரிகைதான்!

9) 1938-ம் ஆண்டு, ஆனந்த விகடன் பத்திரிகையில், ஆசிரியர் கல்கியிடம் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார் சாவி.

10) சாவி, தினமணி கதிரிலிருந்து விலகிய போது, நட்பின் காரணமாக சாவி சாருக்காகவே ஒரு பத்திரிகையைத் தொடங்கினார் கலைஞர் மு.கருணாநிதி. அதுதான் ‘குங்குமம்’. அதன் முதல் இதழின் அட்டைப்படத்திலேயே ஒரு பெண்ணுக்கு மங்களகரமாக குங்குமம் வைக்கும் படமும், பின்னணியில் காஞ்சிப் பெரியவரின் படமும் இடம் பெற்றிருந்தது.

11) வெள்ளிமணி, சாவி பத்திரிகைகள் தவிர, மோனா, சுஜாதா, திசைகள், பூவாளி, விசிட்டர் லென்ஸ் ஆகிய பத்திரிகைகளையும் சாவி சொந்தமாகத் தொடங்கி நடத்தியுள்ளார். இவற்றில் ‘திசைகள்’, பத்திரிகை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் ‘பூவாளி’, ஆங்கில ரீடர்ஸ் டைஜஸ்ட்டுக்கு இணையான தமிழ்ப் பத்திரிகையாக விளங்கியது. சாவி தொடங்கிய விசிட்டர் லென்ஸ் பத்திரிகைதான் இன்றைய இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ பத்திரிகைகளுக்கெல்லாம் முன்னோடி என்று சொன்னால் மிகையாகாது. இதன் ஆசிரியராக இருந்தவர்தான் பின்னர் ‘விசிட்டர் அனந்த்’ என்று அடைமொழியோடு அழைக்கப்பட்டார்.

12) சாவி ‘ஆன்ட்டெனா’ என்றொரு பத்திரிகை தொடங்குவதாகத் திட்டமிட்டிருந்தார். சினிமா பத்திரிகைகள் இருப்பதுபோல் முழுக்க முழுக்க டி.வி-யை மையமாகக் கொண்டு இந்தப் பத்திரிகையை நடத்த அவர் எண்ணியிருந்தார். சாவி பத்திரிகையில் தொடர்ந்து விளம்பரங்களும் கொடுத்து வந்தார். பல காரணங்களால், அதை அவரால் தொடங்க இயலாமல் போனது. என்றாலும், மக்களின் ரசனையை பல்லாண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசனமாக உணர்ந்து, அதற்குத் தீனி போடும் விதத்தில் பத்திரிகை நடத்த வல்லவர் சாவி என்பதற்கான அத்தாட்சி இது என்பதில் சந்தேகம் இல்லை.

13) நகைச்சுவை எழுத்தாளர்கள் என்று பட்டியல் இட்டால், கல்கி, தேவனுக்கு அடுத்தபடியாக நம் நினைவுக்கு வருபவர் சாவி அவர்கள்தான்.

14) ஆனந்த விகடனில் ‘சாவி’ எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ பல புதுமைகளை உள்ளடக்கியிருந்தது. அத்தியாய எண்களுக்குப் பதிலாக, தலைப்பில் உள்ள வா, ஷி, ங், ட... என்கிற எழுத்துக்களையே அத்தியான எண்களாக்கி, 11 வாரம் இந்தத் தொடர்கதையை எழுதினார் சாவி. எந்த வாரமும் இதன் எழுத்தாளர் பெயர் வெளியிடப்படவே இல்லை. கடைசி அத்தியாயத்தின் இறுதியில்தான் மிகச் சிறியதாக ‘சாவி’ என்ற பெயர் காணப்பட்டது. வாராவாரம் வாசகர்களை குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்த இந்தக் கதை, சாவியின் மாஸ்டர் பீஸ் படைப்பாகவே ஆகிவிட்டது. இது பூர்ணம் விஸ்வநாதன் குழு உள்பட பல்வேறு குழுக்களால் நாடகமாக நடிக்கப்பட்டு, ஆயிரம் முறைகளுக்கு மேல் அரங்கேறியிருக்கிறது. அந்தக் காலத்தில், பெரும்பாலான திருமண விழாக்களில், தாம்பூலப் பையில் ‘வாஷிங்டனில் திருமணம்’ புத்தகத்தையும் வைத்துக் கொடுப்பது வழக்கத்தில் இருந்தது.

15) தேசப்பிதா மகாத்மா காந்தி நவகாளி யாத்திரை மேற்கொண்டபோது அவருடனே நடைப்பயணம் செய்து, அந்த அனுபவங்களை ‘நவகாளி யாத்திரை’ என்னும் தலைப்பில் தொடர் கட்டுரையாக எழுதியுள்ளார் சாவி.

16) எவரையும் மனம் திறந்து பாராட்டுவதில் சாவிக்கு நிகர் யாருமில்லை. தன் ‘சாவி’ பத்திரிகையில் வெளியான படைப்புதான் என்றில்லை; வேறு ஒரு பத்திரிகையில் நல்ல சிறுகதையையோ, ஓவியத்தையோ கண்டாலும், உடனே அவரைக் கூப்பிட்டுப் பாராட்டுவார் சாவி. அந்தப் பாராட்டு உதட்டிலிருந்து வராமல் அவரது உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

17) கர்னாடக இசைக்குப் பரம ரசிகர் சாவி. மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் கச்சேரி என்றால் உயிர். கர்னாடக இசைப் பாடகர் மதுரை சோமுவைத் தமது இல்லத்துக்குப் பலமுறை வரவழைத்து, கச்சேரி செய்யச் சொல்லி அனுபவித்து ரசித்து, அவரை கௌரவப்படுத்தி அனுப்பியுள்ளார்.

18) இயக்குநர் கே.பாலசந்தர், சாவியின் ஆப்த நண்பர். இருப்பினும், இயக்குநர்களான மணிரத்னம், பாரதிராஜா இருவரின் திறமையையும் மிகவும் போற்றினார். ஒருமுறை, ‘உங்களுக்குப் பிடித்த இயக்குநர் யார்?’ என்ற கேள்விக்கு, “அன்று, பாலசந்தர்; இன்று, மணிரத்னம்; என்றும் பாரதிராஜா’ என்று பதில் சொன்னார். ”இந்த பதிலைப் படித்தால், உங்கள் நண்பர் பாலசந்தருக்கு உங்கள் மேல் வருத்தம் உண்டாகாதா?” என்று கேட்டேன். “கட்டாயம் வருத்தப்பட மாட்டார். ஏனென்றால், அவர் என் நண்பர்!” என்றார் சாவி அழுத்தமாக.

19) சரித்திரக் கதை, கவிதை என்றால் சாவிக்கு அலர்ஜி!

20) சாவிக்கு மிகவும் பிடித்த ஊர் - சிங்கப்பூர். அதேபோல், சாவியை மிகவும் கவர்ந்த விஷயம் ஜப்பானியர்களின் பர்ஃபெக்‌ஷன். தாமும் அதேபோன்று பர்ஃபெக்‌ஷனாக நடந்து கொள்வார்.

சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள் - பகுதி -1

சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள் - பகுதி -2   

சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள் - பகுதி -3   

சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள் - பகுதி -4  

சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள் - பகுதி -5

தொகுப்பு: ரவிபிரகாஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement