Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரசனையின் மொத்த உருவம் சாவி ( சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள் - பகுதி - 5)

 

81) 'நான் பத்திரிகைத் துறையில் அரிச்சுவடி கற்றது ஆதித்தனாரிடம். பிஹெச்.டி முடித்தது ஆனந்த விகடனில்!' என்பார் சாவி.

82) சாவி சாரின் கையில் MSV என்று பச்சை குத்தியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். மெல்லிசை மன்னருக்குண்டான அதே எம்.எஸ். இனிஷியல் கொண்டவர்தான் சாவியும். பல நேரங்களில் மெல்லிசை மன்னருக்குப் போகவேண்டிய தபால்கள் இந்த பத்திரிகையுலக மன்னருக்கு வந்துவிடும். அவற்றையெல்லாம் உடனுக்குடன் தமது அட்டெண்டர் மூலம் எம்.எஸ்.வி-க்குக் கொடுத்து அனுப்பிவிடுவார் சாவி.

அது ஒருபுறம் இருக்கட்டும். சாவி சாரின் கையில் பச்சை குத்தியிருப்பதன் பின்னணி விவரம் சுவாரஸ்யமானது. வாலிப வயதில், கிராமத்துக்கு வந்த நரிக்குறவக் கூட்டம் ஒன்றில் இருந்த ஒரு பெண் மிக அழகாக இருந்ததைப் பார்த்திருக்கிறார் சாவி. அவளைப் பார்ப்பதற்கென்றே அவர்களின் கூடாரம் பக்கம் அடிக்கடி சென்று வருவாராம். ஒருநாள், அவள் பச்சை குத்துவாள் என்றறிந்து, ஆசை ஆசையாக அவளிடம் சென்று, பச்சை குத்திக்கொண்டாராம். இந்தச் சம்பவத்தை சாவி சார் தனது 'வேதவித்து' நூலிலும் குறிப்பிட்டுள்ளார்.

83) சாவிக்கு மிகவும் பிடித்த ஓவியர் கோபுலு. இருவரும் நேரில் சந்தித்தாலோ, போனில் பேசத் தொடங்கினாலோ, 'ஹலோ..' என்றோ,   ‘வணக்கம்’என்றோ பேசத் தொடங்க மாட்டார்கள். ‘நமஸ்காரா’ என்பார்கள். பக்கத்தில் இருந்து பார்க்கிறவர்களுக்கு இது விசித்திரமாகத் தெரியும். இருவரும் கர்நாடக மாநிலத்தில் சில நாட்கள் சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பிய பின்னர் தொடங்கிய பழக்கம் இது.

84) ‘அக்கிரஹாரத்து அதிசய மனிதர்’ என்று அறிஞர் அண்ணாவால் போற்றப்பட்டவர் எழுத்தாளர் வ.ரா. அவரின் துணைவியார் வறுமையால் வாடுவதை அறிந்த சாவி, அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம் பேசி, வ.ரா-வின் துணைவியாருக்கு மாதம்தோறும் ரூ.1000/- பென்ஷன் தொகை வழங்க ஏற்பாடு செய்தார்.

85) முதலமைச்சர் கருணாநிதியின் ஆப்த நண்பராக இருந்தும், தமக்கென பதவியோ பட்டமோ எதுவும் கேட்டுப் பெறாதவர் சாவி. இருப்பினும், கலைஞரின் வற்புறுத்தலுக்கிணங்க சில காலம் இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியை வகித்தார்.

86) சாவிக்கு மிகவும் பிடித்த நடிகர் சிவாஜி கணேசன். பிடித்த நடிகை மனோரமா. நடிகை மனோரமா பலமுறை சாவி இல்லத்துக்கு வந்து, சாவியின் துணைவியார் கையால் விருந்துண்டு சென்றிருக்கிறார்.

87) சாவியிடம் தாம் வரைந்த ஓவியத்தை எடுத்து வந்து காண்பித்து, தனக்குப் பத்திரிகையில் வரையச் சந்தர்ப்பம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார் ஒரு பெண்மணி. அந்தப் படத்தைப் பற்றி ஒரு குறிப்பு எழுதித் தரச் சொன்னார் சாவி. அப்படியே அந்தப் பெண்மணி எழுதிக் கொடுக்க, அதைப் படித்த சாவி, ‘உனக்குப் படம் வரைவதைவிட எழுதுவது நன்றாக வருகிறது. அதனால், ஒரு சிறுகதை எழுதிக் கொண்டு வா! பிரசுரிக்கிறேன்’ என்று அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார். பின்னாளில் அந்தப் பெண்மணி புகழ்பெற்ற எழுத்தாளர் ஆனார். அவர் வேறு யாருமல்ல; அனுராதா ரமணன்.
 

88) சாவி பல புத்தகங்கள் எழுதியிருந்தாலும், தாம் எழுதியவற்றில் அவருக்கே பிடித்த புத்தகங்களாக அவர் குறிப்பிடுவது இரண்டைத்தான்! ஒன்று - நீங்களே எளிதில் யூகிக்க முடியும்; ஆம், காந்திஜியுடன் பயணம் செய்து எழுதிய ‘நவகாளி யாத்திரை’ புத்தகம். இரண்டாவது, தமது மனம் கவர்ந்த பெருந்தலைவர் காமராஜர் பற்றி, தாம் எழுதிய ‘சிவகாமியின் செல்வன்’ நூல்.

89) சாவி நடத்திய ‘வெள்ளிமணி’பத்திரிகையில் விற்பனைப் பிரிவில் சேர்ந்து பணியாற்றி, தன் பத்திரிகை உலக வாழ்க்கையைத் தொடங்கியவர்தான் பின்னாளில் ‘நந்திபுரத்து நாயகி’போன்ற சரித்திர நாவல்களை எழுதி, புகழ்பெற்ற எழுத்தாளராக ஆனதோடு, அமுதசுரபி இலக்கியப் பத்திரிகையில் பல்லாண்டுக் காலம் ஆசிரியராகவும் இருந்த ‘கலைமாமணி’விக்கிரமன்.

90) ஓவியர் கோபுலுவும் சாவியும் ஒருமுறை அஜந்தா, எல்லோரா குகைக் கோயில்களுக்குச் சென்றிருந்தார்கள். எல்லோரா குகைக் கோயிலின் வெளியே பிரமாண்டமான கங்காதேவி சிற்பம்! வானத்திலிருந்து ஆவேசத்துடன் இறங்கி வருவது போன்ற அழகிய கலை நயமுள்ள சிற்பம் அது. ‘வெயிலும் மழையும் இதைச் சேதப்படுத்தாதா? இதை வடித்த சிற்பி குகையின் உள்ளே இதை நிறுவாமல் வெளியே அமைக்க என்ன காரணம்?’ என்ற கேள்வி இருவரின் மனத்தையும் குடைந்தது. அதே நேரம், பலத்த இடியுடன் மழை கொட்டோ கொட்டென்று கொட்டத் தொடங்கியது. பரவசமான சாவி, ‘கோபுலு! அங்கே பாருங்கள். ஆகாயத்திலிருந்து நீர் கொட்டுகிறது. அதன் நடுவே கங்கை இறங்கி வருவது போன்ற அற்புதமான சிற்பம்! ஆஹா! இதை இங்கே வடித்த சிற்பி என்னவொரு கலாரசிகனாக இருக்க வேண்டும்!’ என்று ரசித்துச் சிலிர்த்தார். ரசனையின் மொத்த உருவம் சாவி என்றால், மிகையில்லை!

91) அந்தக் காலத்துப் பத்திரிகைகளில் ‘ சந்தனு சித்ராலயா’விளம்பரங்கள் வந்தது சீனியர்கள் பலருக்கும் தெரிந்திருக்கலாம். மதுரையில் வசித்த ஓவியர் சந்தனுவின் ஓவியத் திறமையை அறிந்து, அவரை சென்னைக்கு வரவழைத்து அதிக சம்பளத்தில் தன் ‘வெள்ளிமணி’ பத்திரிகைக்கு கார்ட்டூனிஸ்ட்டாக நியமித்தார் சாவி.

92) போட்டோ போலவே வாஷ் டிராயிங் செய்வதில் வல்லவர் ஓவியர் வர்ணம். அவரை அழைத்து வந்து, பிரபல நாவலாசிரியர்களின் கதைகளுக்கு வரையச் சொல்லி, புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததும் சாவிதான்.

93) ‘கோல்டன் பீச்’  உருவாக்கத்தில் சாவிக்கும் முக்கியப் பங்கு உண்டு. வி.ஜி.பன்னீர்தாஸுக்குப் பல அரிய யோசனைகளைச் சொல்லி, தங்கக் கடற்கரையை வடிவமைத்தவர் சாவி. அவர் தமது கையால் அங்கு நட்ட தென்னைகள் இன்னமும் அங்கு இருக்கக்கூடும்.

94) ‘வடக்கு வளர்கிறது; தெற்கு தேய்கிறது’என அந்தக் காலத்தில் வட இந்தியாவைப் புகழ்ந்தும், தென்னிந்தியாவை மட்டம் தட்டும் விதமாகவும் அரசியல்வாதிகளும், பத்திரிகைகளும் சொல்வது வழக்கம். இதைச் சகித்துக்கொள்ள முடியாத சாவி, இந்த எண்ணத்தை மாற்ற விரும்பினார். ஜீவ நதிகளோ, கனிம வளங்களோ அதிகம் இல்லாத நிலையிலும், இங்கே தமிழ்நாட்டில்தான் அதிகமான தொழில்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டும் விதமாக, முக்கியமான தொழிற்சாலைகளை நேரில் சென்று பார்த்து, அவற்றின் அதிபர்களை பேட்டி கண்டு, பல கட்டுரைகள் எழுதினார் சாவி. அந்தத் தொடர் கட்டுரைகளுக்கு அவர் கொடுத்த தலைப்பு, ‘தெற்கு வளர்கிறது!’
 

95) சாவி சாரின் முன் பற்களுக்கு இடையில் சிறிய இடைவெளி இருக்கும். இயக்குநர் சரண், தன் வீட்டில் சாவி சாரின் படத்தைத் தனக்கே உரிய குறும்புடன் (ஆனந்த விகடனில் கார்ட்டூனிஸ்ட்டாகப் பணியாற்றியவரல்லவா?!) அவரின் முன்பற்களின் இடைவெளியை ‘சாவி ’(Key) உருவமாகக் கற்பனை செய்து வரைந்து வைத்திருந்தார். இதைப் பற்றி சாவியின் இரண்டாவது மகள் ஜெயஸ்ரீ, தன் அப்பாவிடம் சொல்ல, சாவி சார் என்னிடம், ‘அந்தப் படத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டு வாயேன்’ என்றார். நான் போய் சரணிடம் கேட்டதும், அவர் பதறிவிட்டார். ‘ ஐயையோ! சாவி சார் தப்பாக நினைத்துக் கொள்ளப் போகிறார்’என்று தயங்கியபடியே அதை என்னிடம் கொடுத்து அனுப்பினார். ஆனால், சாவி சார்தான் ரசனையின் நாயகராயிற்றே! சரணின் கற்பனையை வெகுவாக ரசித்ததோடு, தனது ‘வாஷிங்டனில் திருமணம்’ புத்தகத்துக்கு அட்டைப்படமாக அதை வைத்து லேஅவுட் செய்யச் சொல்லிவிட்டார்.

96) பண்பட்ட எழுத்தாளர் லக்ஷ்மியின் மீது சாவிக்கு மிகுந்த மதிப்பு உண்டு. ஆனந்த விகடன் காலத்துப் பழக்கம். ‘மோனா’மாத நாவல் தொடங்கியபோது, முதல் நாவலாக லக்ஷ்மி எழுதிய கதையைத்தான் வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்தார் சாவி. ஆனால், அப்போதைய சூழலில் உடனடியாக நாவல் எழுதித் தரமுடியாத நிலை லக்ஷ்மிக்கு. இருந்தாலும், மோனா வெளியீட்டை நிறுத்தி வைத்து, சில மாத காலத்துக்குப் பின்பு, லக்ஷ்மியிடமிருந்து கதை கிடைத்த பின்பு, தான் எண்ணியபடியே அதைத்தான் மோனாவின் முதல் நாவலாக வெளியிட்டார் சாவி. அது, லக்ஷ்மியின் ‘உறவுகள் பிரிவதில்லை’

97) எழுத்தாளர் சுஜாதாவின் அபார எழுத்துத் திறமை பற்றிச் சொல்லும்போது, ‘அவர் சலவைக் கணக்கு எழுதினால்கூட பத்திரிகைகள் அவற்றைப் பிரசுரம் செய்யத் தயாராக இருக்கும்’என்று புகழ்ந்து சொல்வது இன்றைக்கும் பத்திரிகை உலகில் வழக்கமாக இருக்கிறது. இதற்கு வித்திட்டவர் சாவிதான். சுஜாதாவின் சலவைக் கணக்குக் குறிப்பைக் கேட்டு வாங்கி, ஒரு தமாஷுக்காக சாவி, தமது பத்திரிகையில் வெளியிட்டதிலிருந்துதான் சுஜாதாவின் எழுத்தாற்றலைப் புகழ்வதற்கான ஒரு வழிமுறையாகவே அது ஆகிவிட்டது.

98) இன்றைக்கு, பிறக்கிற குழந்தைகள் உள்பட கையில் உள்ள ஸ்மார்ட் போனில் நெட் பிரவுஸிங் செய்கிற கணினி யுகமாகிவிட்டது. ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன்பு, இன்டர்நெட் பயன்பாடு மெதுமெதுவே தலைகாட்டிக்கொண்டிருந்த நேரத்தில், அதை எப்படிக் கையாள்வது என்று பலரும் திணறிக்கொண்டிருந்த காலகட்டத்தில், தமது 85-வது வயதில், தனக்கென்று வீட்டில் ஒரு கம்ப்யூட்டர் வாங்கி வைத்துக்கொண்டு, அதில் கம்போஸ் செய்யப் பழகியதோடு, இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பவும் கற்றுக் கொண்டுவிட்டார் சாவி என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்!

99) நட்புக்கு மரியாதை கொடுப்பதில் சாவிக்கு நிகர் வேறு யாருமில்லை. 2001-ம் ஆண்டு, ‘சாவி-85‘ புத்தக வெளியீட்டு விழா, சென்னை, நாரத கான சபாவில் நடந்தது. புத்தகத்தை வெளியிட்டவர் சாவியின் நெருங்கிய நண்பர் கலைஞர் மு. கருணாநிதி. புத்தகத்தைப் பற்றிப் பேச எழுந்த கலைஞரைத் தடுத்து, ‘நீங்கள் பேசி முடித்தால் கூட்டம் கலைந்துவிடும். அதனால், முதலில் நான் நன்றியுரை சொல்லிவிடுகிறேன்‘ என்ற சாவி, கலைஞருக்கும் தனக்குமான ஆழ்ந்த நட்புக்கு ‘கர்ணன் - துரியோதனன்’நட்பை உதாரணமாகக் காட்டி, தொண்டை கரகரக்க பரவசமும் நெகிழ்ச்சியுமாகப் பேசிக்கொண்டு இருந்தபோதே, ‘மார் வலிக்கிறது...’ என்றபடி மேடையிலேயே மயங்கி விழுந்தவர்தான்; அதன்பின், பதினைந்து நாட்களுக்கு மேல் அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கோமா ஸ்டேஜிலேயே இருந்து, கடைசி வரை கண் திறவாமலே அமரரானார்.

100) எழுத்தாளர் மணியன் ஒருமுறை சொன்னதுபோல், ‘சா’ என்றால் சாதனை, ‘வி’  என்றால் விடாமுயற்சி என வாழ்ந்துகாட்டிய பெருமகனார் பத்திரிகையுலகப் பிதாமகர் சாவி.

சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள் - பகுதி -1

சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள் - பகுதி -2   

சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள் - பகுதி -3   

சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள் - பகுதி -4  

சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள் - பகுதி -5தொகுப்பு: ரவிபிரகாஷ்
 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement