Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மடக்கப்பட்ட தாதுமணல் லாரிகள்! சூடு பிடிக்கிறதா சசிகலாபுஷ்பா - வைகுண்டராஜன் விவகாரம்?

திருநெல்வேலி மாவட்டம் உவரி பகுதியில் தாதுமணல் கடத்திச் சென்ற லாரிகளை மாவட்ட அரசு நிர்வாகம் மடக்கிப் பிடித்து, போலீஸ் நிலையத்தில் சிறை வைத்துள்ள விவகாரம் தென் மாவட்ட அரசியல் புள்ளிகள் மத்தியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இதன் பின்னணி குறித்தும் விறுவிறுப்பாக விவாதிக்கப்படுகிறது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தனது தாது மணல் ஏற்றுமதி தொழிலில் கோலோச்சி வருபவர்கள் வைகுண்டராஜன் அண்ட் பிரதர்ஸ். அரசிடம் முறையான அனுமதி வாங்கவில்லை என்று கூறி, கடந்த 2013 முதல் தாது மணல் ஏற்றுமதிக்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது என்றெல்லாம் கூறப்பட்டாலும் வி.வி பிரதர்ஸ் என்னும் 'மாய சக்தி'யின் தொழில் தங்கு தடையின்றி நடந்து கொண்டேதான் உள்ளது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

தற்போது சப்-கலெக்டர் ஒருவரால் மணல் லாரிகள் வளைக்கப்பட்டிருப்பதே அதற்கு சாட்சி.
நெல்லை மாவட்டம் திசையன்விளையைச்  சேர்ந்தவர் வைகுண்டராஜன். இவருடன், இவரின்  சகோதரர்கள் ஜெகதீசன், சுகுமாரன், சந்திரேசன் ஆகியோர் அடங்கிய 'டீம்'  கடற்கரையோரத்திலுள்ள தாது மணலை அள்ளி அதிலிருக்கும் தாதுக்களைப் பிரித்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் தொழிலை அசராமல் செய்து வருகிறார்கள். அரசிடம் முறையாக அனுமதி வாங்குவதில்லை எனவும் அதிகாரிகள், அரசியல்வாதிகள் வி.வி. குழுக்களை ஒன்றும் செய்திட முடியவில்லை. அந்த அளவிற்கு தொழில் சூத்திரங்களைக்  கற்று வைத்திருக்கிறார்கள் என்றும் சூடாக விவாதிக்கப்படுவதே நெல்லை வட்டார ஹாட் டாப்பிக்.  

தமிழகத்திலுள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் ஆதரவு பார்வை இருப்பதால் வி.வி பிரதர்ஸின்  தொழிலுக்கு எந்தத்  தடையும் வந்ததில்லை. அப்படியே வந்தாலும் அதை ஆரம்பத்திலே முறியடித்து தாதுமணல் ராஜாங்கம் நடத்தும் தந்திரத்தை கற்றவர்கள் வி.வி.பிரதர்ஸ்.  அதனால் அரசு உத்தரவுகள் இவர்களை என்றுமே தொந்தரவுகள் செய்ததில்லை. அவை மணலோடு மணலாய் மாயமாகிப்போகும்.

ஆனாலும் சமூக ஆர்வலர்கள் பாதிக்கப்படும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் கொடுப்பதால் எதாவது இரண்டு லாரிகளை பெயருக்குப்  பிடித்து போட்டுவிடுவது மட்டும் அவ்வப்போது நடக்கும்.ஆனால் அதன்பிறகும் அதே தொழில் தொடர்ந்து நடைபெறும்.அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் போலீஸ் ஸ்டேசனில் கடந்த ஒரு மாத காலமாக இரண்டு லாரிகள் லோடோடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அண்மையில் 'என்னை எனது தலைவர் அறைந்தார்' என்று நாடாளுமன்றத்தில் பேசி உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு தேசிய அளவில் பரபரப்பை உண்டாக்கிய எம்.பி. சசிகலா புஷ்பாவின் அரசியல்  வளர்ச்சிக்கு வைகுண்டராஜன் தான் காரணம் என பேசப்பட்டு வருகிற நிலையில், டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சசிகலாபுஷ்பா, 'என்னைச்  சீண்டினால் அ.தி.மு.கவின் உள்ளே நடப்பதை வெளியில் சொல்வேன். என்னை சாதாரணமாக நினைக்க வேண்டாம். தமிழக அரசியலையே புரட்டிப் போட்டுவிடுவேன்’ என்று கூறியிருக்கிறார். அவரின் இந்தப் பேச்சு, வைகுண்டராஜன் விவகாரத்தில், தமிழக அரசு வேகமெடுக்க காரணமாகிவிட்டதோ என்று எண்ண வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக நேற்று(வியாழன்) மாலையில் நெல்லை - தூத்துக்குடி எல்லையான உவரி பகுதியில் தாது மணல் ஏற்றிச்  சென்ற மூன்று டாரஸ் லாரிகள் மற்றும் மணலை அள்ளி போடும் ஒரு லோடரையும் அம்பாசமுத்திரம் சப்-கலெக்டரான விஷ்ணு வளைத்துப் பிடித்து உவரி போலீஸாரிடம் ஒப்படைத்தார். உவரி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.

இன்னும் என்ன என்ன நடவடிக்கைகள் மூலம் தமிழக அரசு தனது பிடியை இறுக்கும் என்பதை பொறுத்திருந்ததுதான் பார்க்கவேண்டும்.
 
-எஸ்.சரவணப்பெருமாள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement