Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நா.முத்துக்குமார் - எக்காலத்திற்குமான கலைஞன்! #RIPNa.Muthukumar

ழை - கவிஞர்களின் தலைக்காவிரி. மண் சுமந்த துளிகளை விட மொழி சுமந்த துளிகள் அதிகம். ஆனால், 'மழை மட்டுமா அழகு, சுடும் வெயில் கூட அழகு' என வெயிலின் அழகைப் பேசியதற்கு... அண்ணா நா.மு... உமக்கு நன்றி. வெயில் எங்கள் அடையாளம், புழுதி எங்கள் சட்டை. தட்டானைப் பிடிப்பதும், நிலவைத் துரத்தி ஜன்னல் கம்பிகளுக்குள் அடைப்பதும்தான் எங்களின் தேசிய விளையாட்டு. இந்தக் குழந்தைப் பருவ நினைவுகளை தேஜா வூவாய் ஊட்டியதற்கு நன்றி.
    
வெயில் மட்டுமல்ல... இருளும் உன்னால் பாடப்பெற்று பிராப்தியடைந்தது. வெறுமைக்கும் அமானுஷ்யத்திற்கும் பெயர்போன இருள் மீது, 'இருளைப் பார்த்து மிரளாதே, இதயம் வெந்து துவளாதே, இரவுகள் மட்டும் இல்லையென்றால் நிலவின் அழகு தெரியாதே' என பாசிட்டிவ் வெளிச்சம் பாய்ச்சியதற்கு நன்றி.
    
'தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய்...தோழியே இரண்டுமாய் நானிருப்பேன்' - எங்களுக்காக வாழும் தேவதைகளுக்கு நாங்கள் தரும் உறுதிமொழி இது. 'என் தந்தை, தோழன் ஒன்றான ஆணை நான் கண்டுகொண்டேன்' - தேவதைகள் எங்களுக்காற்றும் மறுமொழி இது. 'நீ என்பதே நான்தானடி, நான் என்பதே நாம்தானடி' என இதயங்கள் இணைவதைக் கொண்டாட காதல் தேசத்தில் வேறு வார்த்தைகள் ஏது?
    
எல்லோருக்குள்ளும் ஒரு தொலைந்து போன காதல் இருக்கிறது. மறுமுனை வெளிச்சத்தை இலக்காக வைத்து இருளடர்ந்த கணவாயின் வழியே கை கோர்த்துச் செல்லத் துடிக்கும் முடிவற்ற பயணம், தீராக்காதலில் திளைத்துச் செழிக்கும் முடிவிலா உரையாடல் என அந்தக் காதலில்தான் எத்தனை எத்தனை ஆசைகள்? அந்த தடயங்களை கண்கள் இன்னும் தேடித் திரியத்தான் செய்கின்றன. இந்த அத்தனை தவிப்பையும் 'பறவையே எங்கு இருக்கிறாய்' என ஒற்றைப்பாவில் புதைத்துத் தந்தமைக்கு நன்றி.

நாஸ்டால்ஜியா - நம் பின்மூளையில் பதிவான டைரிக்குறிப்புகள். 'அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் நமது கதையை காலமும் சொல்லும்' என காதலையும், 'வகுப்பின் மேஜையிலும், நடந்த பாதையிலும் நமது சிரிப்பொலிகள் இருக்குமே' என நட்பையும் நினைத்துப் பார்க்க வரிகள் தந்தமைக்கு நன்றி.

தங்கையாய், காதலியாய், தாயுமானவளாய் தோழி அமையப் பெற்றவர்கள் பாக்கியவான்கள். முடிவிலி அன்பும் பூஜ்ஜிய காமமுமாய் வகைப்படுத்த முடியாத உறவு அது. இதென்ன ரகம் என குழம்பித் தவித்த எங்களுக்கு, 'காதல் இல்லை... இது காமம் இல்லை... இந்த உறவிற்கு உலகத்தில் பெயரே இல்லை' என விளக்கமளித்ததற்கு நன்றி.

கடைசியாய் எப்போது அவர் உடற்சூட்டை உணர்ந்தோம்? கன்னச்சுவை அறிந்தோம்? இந்த ஷோக்கிற்கும் டீக்கிற்கும் பின்னால் இருப்பது வியர்வை வாசமும் அழுக்கும் படிந்த தந்தையின் கரங்கள்தான் எனத் தெரிந்த நமக்கு, காலம் அவருக்கும் நமக்கும் இடையில் எழுப்பிய கண்ணுக்குப் புலப்படாத சுவரை தகர்க்கத்தான் வழி தெரியவில்லை. 'வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம்...தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்?' என உள்ளே கிடந்து அழுத்தியதை போட்டுடைத்ததற்கு நன்றி. லவ் யூ அப்பா!

தாலாட்டும் தாய்மையும் பெண்களுக்கே என்பதை மாற்றி தகப்பன்சாமிகளுக்கும் 'ஆராரிரோ' பாடக் கற்றுக்கொடுத்தன உம் வரிகள். 'இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம், கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே' - உயிரணுவில் விளைந்து உலகில் அடியெடுத்து வைக்கும் பிஞ்சுப்பூக்களுக்கு சமர்ப்பணம்.

போரால் பேச முடியாத உலக அரசியலை ஒற்றைப்பாடல் பேசி விடக்கூடும். 'மனிதன் மனிதன் இல்லை உடைகள் என்று மாறிப் போனதா? ஆள் பாதி ஆடை பாதி யார் சொன்னது... அவனால்தான் நம் மானம் காத்தாடி போல பறந்தோடுது' என சாமானிய அரசியலை பொட்டில் அடித்துச் சொல்லின உம் வரிகள். கபாலிக்கும் முன்பாய் 'ஆடை அரசியல்' பேசிய உன் பேனாவிற்கு முத்தங்கள்.

'ஜோக்கர் என்பதால் ஜீரோ இல்லை, சீட்டுக்கட்டிலே நீதான் ஹீரோ!' - இந்த ஒற்றை வரி அளிக்கும் கிளர்ச்சியை எத்தனை தன்னம்பிக்கை நூல்களாலும் அளிக்க முடியாது.

 'அவனாக இருந்தாலும் இவனாக இருந்தாலும் எவனாக இருந்தாலும் இறுதி என்ன?
பிச்சைதான் எடுத்தாலும் பேரரசன் ஆனாலும் புழுவிற்கு இரையாவான் வேறே என்ன?'

 - நரை கூடி, மூன்றாம் காலின் உதவியும் தோற்றுப் போய் நான்கு தோள்களின் வழியே பயணப்படும் கணத்திற்கு கொஞ்சம் முன்பாக நான் சொல்லிக் கொள்ள ஆசைப்படும் வரிகள் இவை. இப்படியாக எம் இறுதி வார்த்தைகளை வார்த்தமைக்கு நன்றி.

இப்படி எல்லாக் காலத்திற்குமான வரிகளை வள்ளலாய் வழங்கிய நல்ல கவிஞன் வேண்டுமென்று அந்த மரணமும் நினைக்கிறது போலும். ஓய்வெடுங்கள் கவிஞரே... உங்கள் உதிரத்தில் உதித்த வார்த்தைகளினால் உதிரும் கண்ணீர்த்துளிகளில் என்றென்றும் வாழ்வீர்கள் நீங்கள்!

- நித்திஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement