Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யார் இந்த சாக்‌ஷி மலிக்? - #RealHeroineSakshiMalik

"Its a Girl!"

-பொதுவாக மருத்துவமனைகளில் சில அப்பாக்கள் முகம்திருப்பிக் கொள்ளும் வாசகம் இது. ஆனால் ‘2016 ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தைப் பெற்றுத்தரப்போவது யார்?’ என்ற கேள்விக்கு இன்று அதிகாலை மூன்று மணிக்கு கிடைத்த பதில் இதுதான். இப்போது இந்தியாவே கொண்டாடிக் கொண்டிருக்கிறது ஒரு பெண்ணை!

ஆம். சாக்‌ஷி மலிக். 2016 ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை பெற்றுத்தந்த வெற்றி மங்கை. 58 கிலோ ஃப்ரீஸ்டைல் ரெஸ்லிங் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றிருக்கிறார் சாக்‌ஷி.

கைர்ஜிஸ்தானின் ஐசுலு டைனிபெகோவாவை எதிர்கொண்ட சாக்‌ஷி, முதலில் 0-5 என்று பின் தங்கி இருந்துள்ளார். அதன்பிறகு அதிரடியைக் காண்பித்த அவர், 8-5 என்ற கணக்கில் வெண்கலப்பதக்கம் வென்றிருக்கிறார்.

வழக்கமாக, நாம் கேள்விப்படுகிற, ஸ்போர்ட் ஜானர் படங்களில் பார்க்கிற அதே பின்னணிதான் சாக்‌ஷிக்கும்.

ரியானா, ரோஹ்டாக் மாவட்டம் மோக்ரா கிராமத்தில் செப்டம்பர் 2, 1992ல் பிறந்தவர் சாக்‌ஷி. தந்தை சுக்பிர் மலிக்குக்கு டெல்லி போக்குவரத்தில் பணி, தாயார் சுதேஷும் அரசுப்பணியில் இருப்பவர். 12 வயதில் மல்யுத்தத்தின் மீது ஆர்வம் வர, இப்போது அவரது பயிற்சியாளராக இருக்கும் ஈஷ்வர் தாஹியாவிடம்  பயிற்சிக்கு சேர்கிறார். ‘கிராமத்தில் குறைவான பெண்களே மல்யுத்தப் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததால், பயிற்சியின்போது ஆண்களுடன் சேர்ந்து பயில வேண்டிய கட்டாயம் இருந்தது’ என்றிருக்கிறார் சாக்‌ஷி.

அதனால் என்ன?

ஆண்களுடன் பயிற்சி செய்வதற்கு அவரது கிராமத்தில் எதிர்ப்பு இருந்தது. ஈஷ்வர் தாஹியாவுக்கு அடிக்கடி எதிர்ப்பாளர்களை சமாளிக்க வேண்டி இருந்தது. ‘அதெப்படி ஒரு பொண்ணு.. ஆம்பளப்பசங்ககூட போட்டிலாம் போட்டுகிட்டு..’ என்ற கிராமவாசிகளின் எதிர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக மங்கத்தொடங்கியது.. காரணம் சாக்‌ஷியின் ஆர்வமும், உள்ளூரில் அவ்வப்போது பெற்ற வெற்றிகளும்.         

அடுத்த சவால். படிப்புக்கும் விளையாட்டுக்கும் சரிவர நேரம் ஒதுக்க சிரமப்பட்டார் சாக்‌ஷி. அங்கேயும் ஆதரவாக அவர் படித்த வைஷ் பப்ளிக் பள்ளியும், வைஷ் பெண்கள் கல்லூரியும் நின்றன. இவர் போட்டிகளுக்கு போகும் நாட்களுக்கான அனுமதியை தொடர்ந்து வழங்கி வந்தன.

இவரது பெற்றோரும் தொடர்ந்து இவருக்கு ஊக்கமளித்து வந்தனர். ‘இந்தியாவுக்காக விளையாடி மெடல் வாங்கணும்’ என்ற தங்கள் மகளது கனவுக்கு தங்களால் முடிந்த ஆதரவை வழங்கி வந்தனர். சாக்‌ஷியின் உடல்நிலை, அவர் பின்பற்ற வேண்டிய டயட் என்று பல விஷயங்களில் துணை நின்றார்கள்.

அமெரிக்க ஃப்ரீ ஸ்டைல் வீரரான Dave Schultz நினைவாக நடத்தப்படும், Dave Schultz International Wrestling Tournament-ல் 2014ம் ஆண்டு அமெரிக்க வீராங்கனை ஜெனிஃபர் பேஜை வீழ்த்தி தங்கம் வென்றதே இவரது குறிப்பிடத்தக்க முதல் சாதனை. அதற்கு முன் 2010ல் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றிருந்தாலும், தங்கம் வென்ற தருணம் என்னால் மறக்கவே முடியாத ஒன்று என்கிறார் சாச்ஷி. ‘நான் மேடையில் நிற்க, தேசியகீதம் ஒலிபரப்பப்பட... அப்ப்ப்ப்பா! புல்லரித்துப் போனேன்’ என்கிறார்.

(2014 காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றபோது)

2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி வென்றிருக்கிறார். 2015 சீனியர் ஆசியன் ரெஸ்லிங் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றிருக்கிறார். ‘முதல் தங்கம் மறக்க முடியாத ஸ்பெஷல் தருணம் என்றாலும், எனக்கு மிகவும் விருப்பமான வெற்றியாக 2014ல் காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதே என்பேன். காரணம், ஒவ்வொரு சுற்றிலும் அத்தனை சவால்களை எதிர்கொண்டு அதற்குப் பின் பெற்ற வெற்றி அது!’ என்கிறார் சாக்‌ஷி.         

இப்போது.. ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம்! இங்கேயும் ஒரு சம்பவத்தைச் சொல்லியாக வேண்டும்.

சாக்‌ஷியின் போட்டிக்கு சில மணிநேரங்கள் முன்பு நடந்தது இது. வினேஷ் போகட் (Vinesh Phogat). அதே ரெஸ்லிங் பிரிவில் இந்தியாவுக்கான பதக்க நம்பிக்கைகளில் ஒருவராக ரியோ சென்றவர். 48 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் சைனாவில் சன் யனானை எதிர்த்து விளையாடிக் கொண்டிருந்தார். 1-0 என்று முன்னிலையில் விளையாடிக் கொண்டிருந்த வினேஷுக்கு, திடீரென தசை நாரில் ஒரு வலி. அப்படியே விழுந்துவிடுகிறார். போராடி எழுந்தவருக்கு தொடர்ந்து விளையாடமுடியாத நிலை. மருத்துவர்கள் அவரை அள்ளிச் சென்றுவிட, பதக்கக் கனவு பறிபோன வலியில் துடிக்கிறார்.

(வினேஷ் போகட்)

சிறிது நேரத்தில் 58 கிலோ பிரிவில் களமிறங்குகிறார் சாக்‌ஷி. தனக்காக, இந்த தேசத்துக்காக என்று இருந்த சாக்‌ஷியின் பொறுப்பு, ‘தன் தோழி வினேஷுக்காகவும் இந்த வெற்றியை நான் பெற வேண்டும்’ என்று கூடுகிறது. ஆசியன் நம்பர் ஒன் சாம்பியன் டைனிபெகோவா ஐந்து புள்ளிகள் எடுத்து முன்னிலையில் இருக்கிறார்.

வினேஷ் அந்தத் தருணத்தை பகிர்ந்து கொள்கிறார்:  “சாக்‌ஷி விளையாடிக் கொண்டிருக்கிறார். டைனிபெகோவா முன்னிலையில் இருக்கிறார். திடீரென்று என் காதுக்குள் அந்த வாசகம் கேட்டது. ‘நீ என்னோடு இரு. நான் உனக்கு பதக்கத்தைப் பெற்றுத் தருவேன்’. லக்னோவில் நாங்கள் சந்தித்துக் கொண்டபோது சாக்‌ஷி என்னிடம் சொன்ன வாசகம் இது”

அதற்குபிறகு சாக்‌ஷி விளையாடியது வேற லெவல் கேம். ஐந்து புள்ளிகளுக்கு மேல், ஒரு புள்ளி எடுக்க முடியவில்லை டைனிபெகோவாவால். ஒவ்வொரு புள்ளியாக முன்னேறி 8-5 என்ற கணக்கில் ஆக்ரோஷமாக விளையாடி வெண்கலம் வெல்கிறார் சாக்‌ஷி. ரெஸ்லிங்கில், இந்தியாவுக்காக விளையாடி பதக்கம் பெறும் முதல் பெண்மணி இவர்தான்.

‘எனது 12 வருட இரவு பகல் உழைப்பிற்கும், கனவுக்குமான பலன் இது. இந்தப் பிரிவில் பதக்கம் வெல்லும் முதல் பெண்ணாக இருப்பேன் என்று நினைத்ததில்லை. ஆறுநிமிடங்கள் தாக்குப் பிடித்தால் வெல்வேன் என்ற நம்பிக்கை வலுவாக இருந்ததால் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் விளையாடினேன்’ என்கிறார் சாக்‌ஷி.

சமீபத்தில் வெளியாகி, இன்னமும் பாக்ஸ் ஆஃபீஸில் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சுல்தான் படத்திலும் ஹரியானாவிலிருந்து வந்த வீரராகத்தான் சல்மான்கான் நடித்திருக்கிறார். அதில் ஒரு வசனம் வரும். ‘வாழ்க்கை உன்னைப் புரட்டிப் போடும்போது திமிறி எழுந்து நின்னு ஜெயிக்கணும்’

அப்படித்தான் திமிறி எழுந்து, விஸ்வரூபமாய் நிற்கிறார் சாக்‌ஷி மலிக்.   

நடிகர் சல்மான்கான் கொடுக்கும் ஒரு லட்சத்திலிருந்து, ஹரியானா அரசு கொடுக்கப் போகிற இரண்டு கோடி வரை பணமழை கொட்டும்தான். ஆனால் அதையெல்லாம் மீறி இவர் பெற்றுத்தந்திருக்கிற பெருமை...

Priceless!

-பரிசல் கிருஷ்ணா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ