Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீல்சேரில் பயின்றார் அன்று...வெள்ளி வென்றார் இன்று! -பி.வி. சிந்து 360* #SilverSindhu

‘சில சமயம் தோட்ட வெள்ளாமையை விட காட்டு வெள்ளாமை பட்டையக் கிளப்பும்’ என வெண்ணிலா கபடி குழு படத்தில் ஒரு வசனம் வரும். சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட பேப்பர் மில்ஸ் அணி சொதப்ப, அறிமுகமே இல்லாத வெண்ணிலா கபடி குழு அணி, ஜாம்பவான் அணிகளை புரட்டிப் போட்டு கோப்பை வெல்லும். சினிமா போலத்தான் சில நிஜங்களும். 

ரியோ ஒலிம்பிக் ஆரம்பிக்கும் முன், லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாய்னா நேவால் மீதுதான் பேட்மின்டன் ரசிகர்கள் மீது கண். ஆனால், அவர் காலிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேற, மறுபுறம் காட்டாற்று வெள்ளமாய் பாய்ந்து வந்தார் சிந்து. ரியோவில் அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் அழுத்தமாக பதிவானது. காலிறுதிக்கு முந்தைய சுற்று, காலிறுதி, அரையிறுதி என நாக் அவுட் சுற்றுகளில் தன்னை விட தரவரிசையில் முன்னிலையில் உள்ளவர்களை வீழ்த்தி அசர வைத்தார் சிந்து. ஒரு காலத்தில் சாய்னாவுக்கு மாற்று என நினைக்கப்பட்டவர் இன்று சாய்னாவை மிஞ்சி நிற்கிறார்.

சிந்து இனி எங்கு சென்றாலும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர் என்ற அடைமொழி தொற்றிக் கொள்ளும். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற எலைட் பெண்களான கர்ணம் மல்லேஸ்வரி (பளுதூக்குதல்), மேரி கோம் (குத்துச்சண்டை), சாய்னா (பேட்மின்டன்), சாக்ஷி மாலிக் (மல்யுத்தம்) ஆகியோர் வரிசையில் சிந்துவின் பெயரும் பொன்னேட்டில் பொறிக்கப்படும். தடகள ஜாம்பவான் பி.டி.உஷாவுக்கு கூட கிடைக்காத பெருமை இது. இன்று சிந்து இந்த உயரத்தை அடைய, அவர் கடந்து வந்த பாதை கடினம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனாலும், சுவாரஸ்யமானது. 

விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட பெற்றோருக்கு பிள்ளையாக பிறந்தவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். சிந்து அந்த வகை. சிந்துவின் பெற்றோர் ரமணா & விஜயா இருவருக்கும் வாலிபால் மீது காதல். சிந்துவுக்கு பேட்மின்டன் மீது பிரியம். இந்த ஆர்வத்தைப் புரிந்து கொண்ட ரமணா, ஏழு வயது சிறுமி சிந்துவை செகந்திரபாத்தில் உள்ள ரயில்வே பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டார். அங்கு பேட்மின்டனுக்கான பால பாடம் பயின்றார். 

பயிற்சிக்காக தினமும் வீட்டில் இருந்து 56 கி.மீ., தூரம் பயணித்தார். இந்த சமயத்தில்தான் துறுதுறுவென இருந்த சிந்துவின் ஆட்டத்தின் மீது கோபிசந்த் கண்கள் பதிந்தது. அடுத்த சில நாட்களில் ஹைதராபாதில் உள்ள கோபிசந்த் அகாடமியில் சிந்து சேர்க்கப்பட்டார். அதில் இருந்து  வேகமெடுத்தது அவர் பயணம். 

சப் ஜூனியர், ஜூனியர் பிரிவுகளில் அசத்திக் கொண்டிருந்த சிந்து ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப், காமன்வெல்த் யூத் கேம்ஸ், தெற்காசிய போட்டிகள், ஏசியன் கேம்ஸ், காமன்வெல்த் கேம்ஸ் என பங்கேற்ற அனைத்து தொடரிலும் ஏதாவது ஒரு பதக்கம் தட்டினார். இதையெல்லாம் விட, உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இருமுறை வெண்கலம் வென்றதும், யார் அந்த சிந்து என உலகம் உற்று நோக்கியது.

’டைரக்டர்ஸ் ஆர்ட்டிஸ்ட்’ என்று சொல்வார்களே சிந்துவும் அப்படித்தான். பயிற்சியாளர் சொல்வதை அப்படியே கேட்கும் வீராங்கனை. அமைதியாக இருந்தவரை, ‘களத்தில் நீ அப்பட்டமாக உணர்வுகளை வெளிப்படுத்தாதவரை ராக்கெட்டை கையில் தொடக் கூடாது’ என ஆக்ரோஷமாக மாற்றியவர் பயிற்சியாளர் கோபிசந்த். இதற்காக யாருமற்ற களத்தில் தன்னந்தனியாக அழுத சிந்து, இன்று நம்மை சிரிக்க வைத்திருக்கிறார். தேங்க்ஸ் டூ கோபிசந்த். 

கோபிசந்த் பாசறையில் பாடம் பயின்ற யாரும் சோடை போகவில்லை. அவர் பயிற்சி அப்படி இருக்கும் என வியக்கிறார், தமிழக பேட்மின்டன் சங்க துணைத் தலைவரும், இந்திய பேட்மின்டன் பயிற்சியாளருமான மாறன். அதற்கு ஒரு உதாரணம். கடந்த ஆண்டு சிந்து காயத்தால் அவதிப்பட்டார். எழுந்து நடக்க முடியாத நிலை. ஆனாலும் கோபிசந்த் விடவில்லை. சிந்துவை ஒரு வீல் சேரில் அமர்த்தி, அந்த சேரை களத்தின் நடுவே நிறுத்தினார். எதிர்முனையில் கோபிசந்த் நின்று கொண்டு ஒவ்வொரு ஷட்டிலாக த்ரோ செய்ய, செய்ய, உட்கார்ந்த நிலையிலேயே ஷாட் அடித்து பயின்றார் சிந்து. பயிற்றுவித்தார் கோபிசந்த். 

‘சிந்துவை எனக்கு 13 வயதில் இருந்து தெரியும். ஆரம்பத்தில் குழந்தைத்தனமாக இருந்தார். நாளாக நாளாக மெச்சூரிட்டியாகி விட்டார். உயரமானவர் என்பதால், எகிறி ஸ்மாஷ் அடிப்பது அவருக்கு கை வந்த கலை. நெட் டூ நெட் நின்று டிரிபிளிங் செய்வதில் கில்லி. இதில் தேர்வதற்காக மட்டுமே, ஒவ்வொரு நாளும் வழக்கமான பயிற்சிக்குப்பின், 4,000 முறை ஷட்டில் த்ரோ செய்து பயிற்சி கொடுப்போம். அசராமல் சொன்னதை கேட்பார். ஒருமுறை கூட முகம் சுழித்ததில்லை. இன்று அவர் அடைந்த வெற்றிக்கு இதுதான் காரணம்’ என அடுக்குகிறார் மாறன்.


சிந்து இன்று இந்த இடத்தில் நிற்பதற்கு காரணம் அவரது பெற்றோர். ஒலிம்பிக் துவங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே ரயில்வேயில் இருந்து விடுப்பு எடுத்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கான சாத்தியக் கூறுகள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்து, பார்த்து செய்து வருகிறார் சிந்துவின் தந்தை ரமணா. டயட்டில் இருந்து பயிற்சி இதர விஷயங்களை ஷெட்யூல் போட்டு பக்கவாக பார்த்துக் கொண்டார் அவர் தாய். களத்தில் டெக்னிக்கல் ரீதியாக, களத்துக்கு வெளியே மன ரீதியாக உற்சாகப்படுத்தினார் கோபிசந்த். அதற்கெல்லாம் இன்று கிடைத்த பரிசுதான் இந்த வெள்ளிப் பதக்கம்.

 

-தா.ரமேஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement