Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கைது...புழல் சிறை...போலீஸ் காவல்! பாரிவேந்தர் கிளைமேக்ஸ் என்ன?

       

வேந்தர் மூவிஸ் மதன் காணாமல் போன கடந்த மே மாதம் 29ம் தேதி முதல் பரபரப்பு செய்திகளில் இடம்பிடித்த எஸ்.ஆர்.எம்.குழுமத் தலைவர் பாரிவேந்தர்,தற்போது கைதாகி, புழல் சிறை வாசம்,ஜாமீன் மனுத் தாக்கல்,ஒரு நாள் போலீஸ் கஸ்டடி என்று சட்ட வளையத்தில் சிக்கியுள்ளார்.

மதன், பாரிவேந்தர் பெயரைச் சொல்லி மாணவர்கள் பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு 'சீட்' பெற்றுக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார் என்று முதலில் கூறப்பட்டாலும், நான் மாணவர்களிடம் வாங்கிய பணத்தை எஸ்.ஆர்.எம். நிறுவனத்தில் கொடுத்துவிட்டதாக மதன் எழுதிய கடிதங்களில் உள்ளதால் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் போலீசாரின் கவனம் பாரிவேந்தர் பக்கம் திரும்பியது. இது தொடர்பாக நடந்து வரும் வழக்கில்,சென்னை உயர் நீதிமன்றம், பாரிவேந்தரை விசாரிக்க என்ன தயக்கம் என்று கண்டிப்புக்கு காட்டியது. இதனால் விழித்துக்கொண்ட காவல்துறை கடந்த 25ம் தேதி இரவில் பாரிவேந்தரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து,அடுத்த நாளே கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தது.  

அடுத்து வந்த சனி,ஞாயிறு நாட்கள், கோர்ட் விடுமுறை என்பதால் அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை திங்கள்(29.08.2016) விசாரித்த நீதிமன்றம் ஒரு நாள் ஒத்திவைத்து, செவ்வாய் மீண்டும் விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும்  கேட்ட நீதிபதி, இன்று(புதன்) ஒருநாள் பாரிவேந்தரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தும், அதன் பின்னர் மாலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

மதனுக்கும் பாரிவேந்தருக்கும் இடையில் நடந்தது என்ன...

எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவரும் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனருமான பாரிவேந்தர் கைது அரசியல் மற்றும் கல்வி நிறுவன அதிபர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கைது ஏன் நடந்தது, மதனுக்கும் பாரிவேந்தருக்கும் இடையில் அப்படி என்ன நடந்தது, மதன் காணாமல் போய் மாதங்கள் பல கடந்த நிலையில் இப்போது ஏன் கைது நடந்தது என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.

     

இது தொடர்பாக ஐ.ஜே.கே. கட்சியினர் மத்தியில் விசாரித்தோம். அவர்கள் கூறியதாவது,

"மதனின் உண்மையான பெயர் பாலச்சந்திரன். இந்தப் பெயரில்தான் அவருக்கு பாஸ்போர்ட் இருக்கிறது. மதனின் இரண்டு மனைவிகள் பெயரிலும், இன்னும் சில பினாமிகள் பெயரிலும் கேரளாவில் சொத்துக்களை வாங்கிக்  குவித்துள்ளார். சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் 'சீட்' வாங்கித்தருவதாக தமிழகம்,ஆந்திரா,கேரளா மாநில மாணவர்களிடம் வாக்குறுதியளித்து, புரோக்கர் வேலை செய்து வந்தார். அதில் பணம் சம்பாதித்து சினிமாவில் முதலீடு செய்தார். சீட் வாங்கித் தரும் வேலையில் மதனுக்கு உதவிகரமாக அவரின் இரண்டாவது மனைவி செயல்பட்டுள்ளார். மதன்  காணாமல் போன கடந்த மே மாதம் 29ம் தேதிக்கு முந்தைய நாளில் கூட பல மாணவர்கள் மீது, சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்குப் பணம் வாங்கியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் உள்ளது.

அத்தோடு, கடந்த ஜனவரி-பிப்ரவரி மாத வாக்கில், வடபழனி அப்பாசாமி நிறுவனத்தில் சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேலான மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியுள்ளார். அந்த பிளாட் மதன் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற சொத்துக்கள் எல்லாம் அவரின் மனைவிகள் பெயரில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளன.மேலும் அவர் தனது போக்குவரத்துக்கென 6 க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் வைத்து இருந்தார். அது எதுவும் அவர் பெயரில் இல்லை. அதே போல 5 க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் வைத்துள்ளார்.அவையும் மதன் பெயரில் இல்லை. இதெல்லாம் அவரின்  வெளிவராத மறுபக்கங்கள்.

அவர் காசிக்குச் சென்றதே,சினிமாவில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்டத்தான். அதிலும் பாரிவேந்தர் பெயரைப் பயன்படுத்தி கேரள, ஆந்திர,வடமாநில மாணவர்களிடம் பணம் வசூலித்து,அதை சினிமா தயாரிப்பில் போட்டார். அதில் லாபம் கிடைக்காமல் போகவே, வேந்தர் மூவிஸ் தொடங்கினார். அதில் ஆரம்பக் கட்டத்தில் நிறைய லாபம் பார்த்துள்ளார். லிங்கா திரைப்பட வெளியீட்டில் சிக்கல் வரவே அவருக்கு மற்ற படங்களிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பாரிவேந்தருக்கு நெருக்கமானவராகக் காட்டி, அது தொடர்பாக பல சினிமா நிகழ்வுகளுக்கு  அவரை அழைத்துச் சென்று ஊடக வெளிச்சம் வருமாறு காட்டிக் கொண்டார்.

பின்னர் நன்கு திட்டமிட்டு, பாரிவேந்தரை நெருக்கடி கொடுத்தால் பணம் கொடுத்துவிடுவார் என்று திட்டமிட்டே தலைமறைவானார். மீண்டும் இவரிடம் வந்துவிடலாம் என்ற எண்ணமும் அவரின் மனதில் உள்ளது. அவர் சென்ற நாளில் இருந்து வெவ்வேறு போன்கள் மூலம் போலி சிம்கார்டுகள் பயன்படுத்தி தனது பினாமிகள், உறவினர்களிடம் அவ்வப்போது பேசி, என்ன என்ன செய்யவேண்டும் என்று ஆலோசனைகள் தருகிறார். இதை போலீசாரே உறுதிப்படுத்தியுள்ளனர்.வடமாநிலங்களில் பதுங்கியுள்ளார் மதன்.செல்லும் இடங்களில் யாரிடமாவது  செல் போன் வாங்கி தன்னிடம் உள்ள சிம்கார்டை போட்டு உற்றவர்களிடம் பேசுகிறார்.

அடிப்படையில் மதன் ஒரு ஒயிட் காலர் கிரிமினல். தான் செய்தது எல்லாமே அரசியல் ரீதியிலானது.ஒரு விழாவை நடத்துவது,அதில் பாரிவேந்தரைக் கலந்துகொள்ள செய்வதுமாக தனது நெருக்கத்தை உலகிற்கு காட்டியுள்ளார். இதை ஒருகட்டத்தில் பாரிவேந்தராலும் கட்டுப்படுத்த இயலவில்லை.ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக மதனின் நடவடிக்கைகளில் மாற்றத்தை உணர்ந்த பாரிவேந்தர், போக்குச் சரியில்லை என்று கூறி மதனை கட்சி ரீதியாகவும் கூட அணுகவில்லை. இது தெரிந்த மதன், இனி இவரிடம் நெருக்கம் காட்டுவது போல காட்டி, நம்பிக்கை கொடுத்து மாணவர்களிடமும் சினிமாவிலும் பணம் சம்பாதிக்க முடியாது என்று முடிவு செய்து, தலைமறைவானார்.

கடந்த சில ஆண்டுகளாக அவர் ரிஷிகேஷ் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.அதற்கு காரணம் காசியில் ஒரு ஆசிரமம் தொடங்க அவர் ஆசைப்பட்டதே. 5 ஏக்கர் அளவில் நிலம் வாங்கி ஆசிரமம் அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளார். அதற்காக பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார். இது கடந்த மே மாதமே நடந்த விவகாரம்.மதன் காணாமல் போனவுடனே எந்தப் பதட்டமும் இல்லாமல், பாரிவேந்தரை சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால் பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி போலீஸ் வரைக்கும் சென்றுவிட்டு அப்புறம் என்ன நம்மிடம் பேச்சுவார்த்தை என்று பாரிவேந்தர் ஒப்புக்கொள்ளவில்லை.

       

இந்நிலையில்தான், மதனின் குடும்பத்தினர் எஸ்.ஆர்.எம். குழுமம் மீது குற்றம் சுமத்தி மாணவர்களைத் தூண்டி விட்டனர். அதனடிப்படையில்தான் மாணவர்களுக்கும் மதன் தரப்புக்கும் ஒரே வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார். " என்றனர்.

பாரிவேந்தர் கைதில் பாமகவுக்கு மகிழ்ச்சியா?

எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பாரிவேந்தர் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்திலும்,கல்விக் குழும அதிபர்கள் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரிவேந்தர் கைது பாமகவுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது என்கிறார்கள் தைலாபுரம் வட்டாரத்தினர்.

கடந்த மே மாதம் இறுதியில் எழுந்த வேந்தர் மூவிஸ் மதன் மாயமான விவகாரம், நான்கு மாதமாகக்  கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது. சென்ற ஜூன் மாதம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,மோசடி நடந்துள்ள  'எஸ்.ஆர்.எம் குழும மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்குப் பதிலடி தரும் வகையில் பாரிவேந்தர், 'சாதாரண டாக்டராக இருந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியானது எப்படி' என்று கேள்விகள் பல அடுக்கி அறிக்கை கொடுத்தார். இதில் கடுப்பான ராமதாஸ், பாமகவின் முன்னாள் எம்.பி. ஏ.கே.மூர்த்தி பெயரில், 'ராமதாஸ் மீதும், அன்புமணி மீதும் கூறிய அவதூறு புகார்களுக்காக பச்சமுத்து மீது பாமக அவதூறு வழக்கு தொடரும். இந்த பிரச்சினையில் பச்சமுத்து போன்ற குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை பாமக ஓயாது' என்று பதில் அளித்திருந்தார்.

இந்த விவகாரத்தை பாமக ஏன் கையில் எடுத்துள்ளது என்பதை பாரிவேந்தர் தரப்பு அலசி ஆராய்ந்து, 'கை நீட்டி வாங்கிய ஈரம் காயும் முன்பே கொடுத்த கரங்களைக் கொச்சைப்படுத்தும் மருத்துவர் அவர்கள் காவல்துறையைப் பார்த்து செஞ்சோற்றுக் கடன் என்று சொல்லிக் கறை பூசுகிறார்' என்று பதில் அளித்திருந்தது. அப்போதும் விடாத பாமக, வழக்கறிஞர் பாலு பெயரில் 'ராமதாசின் கால்களில் விழுந்து வணங்கிய போது அவரது முகத்தில் ஒட்டிய தைலாபுரம் தோட்டத்து மண் இன்னும் விலகவில்லை' என்று அறிக்கை வெளியிட்டு எறிந்த நெருப்பில்  எண்ணெய் ஊற்றியது.

இதற்கிடையே 'மருத்துவ கல்வி சீட் தருவதாக பண மோசடி செய்ததாக 109 பேர்  பச்சமுத்து மீது புகார் கொடுத்த பிறகும், அவரை கைது செய்ய தடையாக இருக்கும் சக்தி எது' என்று கேள்வி எழுப்பி ராமதாஸ் மீண்டும் அறிக்கை அளித்தார். அப்போதுதான் பாரிவேந்தர் தரப்பு, அரசியலில் எழுந்துள்ள நெருக்கடியை  உணர்ந்தது.  இதனையடுத்து தீவிர ஆலோசனையில் இறங்கியது  எஸ்.ஆர்.எம். மற்றும் ஐ.ஜே.கே. தரப்பு.

இதனையடுத்து, தீவிரமாக விசாரணையைக் கையில் எடுத்த தமிழக போலீஸ், 'திண்டுக்கல் ஐ.ஜே.கே. கட்சியின் மாவட்ட செயலாளர் பாபு, திருச்சியைச் சேர்ந்த டாக்டர் பார்க்கவன் பச்சமுத்து, மதுரையைச் சேர்ந்த சண்முகம்,வேந்தர் மூவிஸ் மதனின் கூட்டாளி சுதீர் ஆகியோரைக் கைது செய்தது. ஆனாலும் திருப்தி அடையாத பாமக, போயஸ் கார்டன் வரையும் சென்று 'பாரி வேந்தரைக் கைது செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் கடந்த வெள்ளியன்று,' மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் சீட் கொடுப்பதாகக்  கூறி ரூ.72 கோடி  அளிக்கப்பட்ட புகார்கள் அப்படையில், நம்பிக்கை மோசடி (406), மோசடி (420), 34 ஐபிசி' ஆகிய பிரிவுகளின் கீழ் பாரிவேந்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து பாமக தரப்பில் கருத்துக் கேட்டோம். 'எங்கள் அய்யா வெளியிடும் அறிக்கை, அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்துகிறதா அரசு மற்றும் காவல்துறை செவிசாய்க்கிறதா என்று வியப்பு காட்டியபடி பதில் அளித்தனர்.

'பாமக வலியுறுத்தியபடிதான் இந்தக் கைது நடந்துள்ளது. எங்களின் கேள்விக்குப் பதில் கொடுத்துள்ளது தமிழக அரசு. மற்ற எந்த அரசியல் கட்சித் தலைவரும் பாமக போல இதில் வலியுறுத்தல் செய்யவில்லை. மதன் காணாமல் போன பிறகு  நடந்த விவகாரங்கள் எங்களுக்கு சாதகமாகவே நடந்தது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம்  நவீனா எரித்துக் கொல்லப்பட்ட விஷயத்தில்,பாரிவேந்தரின் தொலைக்காட்சி தப்பு தப்பாகச்  செய்திகள்  வெளியிட்டது. இது அவரின் மீடியா கேரியருக்கு பெரும் பின்னடைவு. இந்த நிலையில் கைது நடவடிக்கை நடந்துள்ளது மகிழ்ச்சியே.' என்றனர் பாமகவினர்.

இந்த நிலையில்,நேற்று சைதாப்பேட்டை நீதி மன்றத்தில், பச்சமுத்து தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. முன்னதாக போலீசார் அவரை விசாரிக்க கேட்டிருந்த மனுமீது விசாரணை நடத்தி, ஒரு நாள் போலீஸ் விசாரணைக்கு அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அந்த உத்தரவில், இன்று(புதன்) மாலை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

வேந்தர் மூவிஸ் மதன் குறித்து எந்தத் தகவலும் இல்லாத நிலையில்,அவர் காணாமல் போன விவகாரம் மர்மமாகவே இருக்கிறது. அதனால், இந்த வழக்கில் கிளைமேக்ஸ் என்ன என்பது மதனின் வருகைக்குப் பின்னரே தெரியவரும் என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.

- சி.தேவராஜன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement