வைஃபை வசதி செய்வது மட்டும்தான் ஸ்மார்ட் சிட்டியா? | What is Smart City..?

வெளியிடப்பட்ட நேரம்: 11:27 (01/09/2016)

கடைசி தொடர்பு:12:43 (01/09/2016)

வைஃபை வசதி செய்வது மட்டும்தான் ஸ்மார்ட் சிட்டியா?

காங்கிரீட் காடுகளில் நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் நகர்புற மக்களுக்கு ஸ்மார்ட் சிட்டித் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது மத்திய அரசு. மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் சென்னை உள்ளிட்ட 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை தியாகராயநகரும் ஸ்மார்ட் சிட்டி ஆகிறது.

முதற்கட்டப் பணிகள்

தியாகராயநகர் பகுதியில் உள்ள பாண்டிபஜார், தியாகராய நகரை ஒட்டிய மேற்குமாம்பலம், தேனாம்பேட்டை, ஆழ்வார் பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டையில் சில பகுதிகளும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கப்பட உள்ளன.

1,366 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் முதல் கட்டப்பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்மார்ட் சிட்டி ஆய்வுக் கூட்டம், சென்னையில் உள்ள, 'டுபிட்கோ' அலுவலகத்தில் அண்மையில் நடந்தபோது அதில், சென்னை மாநகராட்சி, டுபிட்கோ, டுபிசெல் ஆகியவற்றின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சென்னையில், கடந்த (2015- நவம்பர்-டிசம்பர்) ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பைக் கருத்தில்கொண்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், மழை நீர் வடிகால் வசதிகளை மேம்படுத்தும் போது கையாள வேண்டிய நவீன தொழில் நுட்பங்கள் குறித்துப் பேசப்பட்டது.

குடிநீர், மின்வசதி, திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம், போக்குவரத்து, சாலை, வீட்டு வசதி, தகவல் தொடர்பு, மாசு, குப்பையில்லாவீதி போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பல உலக நாடுகளில் ஸ்மார்ட் சிட்டிகளில் சாக்கடை செல்லும் வழிகள், தொலைபேசி கேபிள்கள், கண்காணிப்புக் கருவிகளுக்கான கேபிள்கள் அனைத்தும் ஒரே நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதே போல தி.நகரிலும் அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது எப்படி இருக்கிறது தி.நகர்?

ஆசியாவின் ஷாப்பிங் சொர்க்கங்களில் ஒன்றாக இருக்கும் தியாகராய நகர் ஆக்கிரமிப்பின் பிடியிலும், போக்குவரத்து நெருக்கடியிலும், கட்டிடங்களின் நெருக்கடியிலும் சிக்கித் திணறுகிறது.

குறிப்பாக தியாகராய நகரில் உள்ள உலகின் அதிக மக்கள் வந்து செல்லும் பகுதிகளில் ஒன்றாகத் திகழும் ரெங்கநாதன் தெரு, பேருந்து நிலையம், பாண்டி பஜார், பனகல் பார்க் போன்ற பகுதிகள் அதிக நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கின்றன. இந்த பகுதிகளுக்கு வரும் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு, தினந்தோறும் வந்து செல்லும் மக்களால் ஏற்படும் குப்பைக்கூளங்கள் என இவையெல்லாம் தியாகராயநகர் பகுதியில் வசிக்கும் மக்களை பெரும் துயரத்துக்கு உள்ளாகுகின்றன. இவற்றுக்கெல்லாம் தீர்வாக அமையுமா ஸ்மார்ட் சிட்டி?

இது எங்க திட்டம்

முன்னாள் மேயரும், தி.மு.க எம்.எல்.-வுமான மா.சுப்பிரமணியனிடம் பேசினோம். "கடந்த தி.மு.க ஆட்சியில் தியாகராய நகர் மறுசீரமைப்பு திட்டம் என்ற ஒரு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தோம். அதற்காக தியாகராய நகர் குடியிருப்போர் சங்கங்கள், கூட்டமைப்புகளை சார்ந்தவர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினோம். இரண்டு கட்டமாக ஆலோசனைக் கூட்டம் நடத்திய பின்னர், பாண்டி பஜாரில் நடைபாதை வியபாரிகளுக்கு ஒரு ஷாப்பிங்காம்ப்ளக்ஸ் கட்டிக்கொடுத்தோம். உஸ்மான் சாலை, பாண்டி பஜார் சாலை உள்ளிட்ட நான்கு சாலைகளில் இருந்த சாலையோர வியபாரிகளுக்கு இந்த காம்ப்ளக்ஸில் 836 கடைகள் ஒதுக்கப்பட்டது.

ஐரோப்பியாவின் பெரிய நாடுகளில் உள்ளது போல பார்க்கிங் வசதிகளுக்காக சாலைகளை ஒதுக்குவது என திட்டமிட்டோம். இந்தச் சாலைகளில் கார்கள் மட்டுமே நிறுத்த முடியும். அதே போல ஈவினிங் பஜார் என்ற ஒரு சாலையை உருவாக்குவது என திட்டமிட்டிருந்தோம். இந்த ஈவினிங் பஜாரில் இரவு நேரத்தில் மட்டும் ஷாப்பிங் செய்ய முடியும். ஈவினிங் பஜாரில் மக்கள் மட்டுமே நடந்து செல்ல முடியும். வாகனங்களுக்கு அனுமதிஇல்லை என்றெல்லாம் முடிவு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் போட்ட அந்தத் திட்டத்தைத்தான் இப்போது ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் செயல்படுத்துகிறார்கள். எங்களுக்கு அது மகிழ்ச்சிதான். ஆனால் மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி, யாரையும் பாதிக்காத வண்ணம் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும்" என்றார்.

இலவச மாத்திரை கொடுங்கள்

தியாகராயநகர் குடியிருப்போர் சங்கத்தின் செயலாளர் கண்ணனிடம் பேசினோம்."தி.நகரில் அரசின் ஆதரவு எல்லாமே வணிகர்களுக்குச் சாதகமாகத்தான் இருக்கிறது. வணிக நிறுவனங்கள் நினைத்தால் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைதான் உள்ளது. ரெங்கநாதன் தெரு உள்ளிட்ட வணிக வளாகங்கள் நிறைந்த பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களில் தீ தடுப்பு கருவிகள் முறையாக இல்லை. தீ விபத்து நிகழ்ந்து விட்டால், தீயணைப்பு வண்டிகள் உள்ளே செல்வதற்கு வழியே இல்லை. உஸ்மான் ரோடு மேம்பாலத்துக்குக் கீழே இரண்டு புறமும் சர்வீஸ் சாலை உள்ளது. மக்கள் நடக்கக்கூட முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன.

ஸ்மார்ட் சிட்டியாக தி.நகரை மாற்ற வேண்டும் எனில் தியாகராய நகரில் முறையான கழிப்பிட வசதிகள் ஏற்படுத்த வேண்டும். வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கழிவு நீர், மழைநீர் கால்வாய்கள் அமைத்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட ஒரு நகரின் அடிப்படை வசதிகளைச் செய்யக் கூடிய பணிகளுக்கு ஒரே ஒரு நிறுவனத்தை அணுகும் வகையில் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும். வெறுமனே வைஃபை வசதி செய்வது மட்டும் ஸ்மார்ட் சிட்டி என்பதல்ல. தி.நகரை ஸ்மார்ட் சிட்டி ஆக்கும் முன்பு இப்போது அங்கு நெருக்கடியில் வசிக்கும் மக்களுக்கு தினமும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களுக்கான மாத்திரைகளை இலவசமாகத் தர வேண்டும்" என்றார் வேதனையுடன்.

 

என்ன வசதிகள் கிடைக்கும்?

3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு 41 மில்லியன் லிட்டர் குடிநீர்.

குடிநீர் குழாய்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்.

100 சதவிகிதம் அனைவருக்கும் குடிநீர் இணைப்பு

சாலைகளில் சூரிய சக்தி டிராஃபிக் சிக்னல்கள், வைஃபை வசதிகள், டிஜிட்டல் போர்டுகள், -டாய்லெட், எல்..டி. விளக்குகள்

22 பேருந்து சாலைகள், 52 கான்கிரீட் சாலைகள், 176 தார் சாலைகள் என 110 கி.மீ அளவுக்கு 250 சாலைகள் மேம்படுத்தப்படுகிறது

 

தியாகராய நகர் சில புள்ளிவிவரங்கள்

1980-ல் இருந்து வணிக நிறுவனங்கள் அதிகரித்தன

இந்தியாவின் மிகப்பெரிய ஆடைகள், நகைகளின் ஷாப்பிங் மையம்

தினந்தோறும் 2 லட்சம் பேர் வருகின்றனர்.

வணிக நிறுவனங்களின் ஆண்டு வருமாய் ரூ.20,000 கோடி

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் இருந்து ஷாப்பிங் செய்ய வருகின்றனர்.

 

 

மக்கள் நலன் முக்கியம்

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் முன்னாள் தலைமைத் திட்ட அமைப்பாளர் மற்றும் உறுப்பினர் கே.ஆர்.தூயவனிடம் பேசினோம். "தியாகராய நகரை ஸ்மார்ட் சிட்டியாக்குவது என்பது ஒரு சவாலான விஷயம். முற்றிலும் புதுப்பிப்பது அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்றவகையில் பசுமையாக மாற்றுவது என்பது இயலாது. ஏற்கனவே இருப்பதை மேம்படுத்துவது என்பது மட்டுமே முடியும்.

அதன்படி தி.நகரில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக கழிவு நீர், குடிநீர் குழாய்களை இப்போது இருப்பதை விட அதிக திறன் கொண்டதாக அமைக்கவேண்டும். சாலைகளை முடிந்த அளவு அகலப்படுத்த வேண்டும். மக்கள் நடந்து செல்வதற்கு நடைபாதைகள் அமைக்கப்படவேண்டும். தி.நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வேண்டும். மல்டி லெவல் கார்பாக்கிங் கொண்டு வரவேண்டும். முக்கியமான ஷாப்பிங் சாலைகளில் வாகனங்கள் முற்றிலும் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும். திடக்கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது இருக்கின்ற வசதிகளை மேம்படுத்தி, சுகாதாரத்துடன், மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே ஸ்மார்ட் சிட்டியின் பணியாக இருக்கவேண்டும். எளியமக்கள், நடுத்தர மக்கள், வணிகர்கள் என மூன்று தரப்பினரின் நலமும் பாதுகாக்கப்பட வேண்டும். மக்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்த வேண்டும்" என்றார்.

ஸ்மார்ட் சிட்டித் திட்டத்தின் கீழ் தியாகராய நகரில் நிலவும் பாதகமான அம்சங்கள் அனைத்தும் சாதகமானதாக மாறும் என்கிறது மாநகராட்சி நிர்வாகம்.

"ஒரு மனிதன் வாழ எதிர்பார்க்கும் வசதிகளைவிட எல்லா வசதிகளையும் ஏற்படுத்துவதுதான் ஸ்மார்ட் சிட்டியின் நோக்கம்" - என்று 'ஸ்மார்ட் சிட்டி' குறித்து பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு உள்ளார்.

அந்த வசதிகள் அத்தனையும் கிடைக்குமா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

- கே.பாலசுப்பிரமணி, .பா.சேதுராமன் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்