ஆனை முகத்தானின் அபூர்வ தகவல்கள்!

பிள்ளையாரே முழுமுதற் தெய்வம் என்பதும், அவரே கணங் களின் அதிபதி என்பதும், அவர் அவதரித்த திருநாளே விநாயக சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது என்பதும் நமக்குத் தெரி யும். இவைமட்டுமின்றி, பிள்ளையாரைப் பற்றி நாம் அவசியம் அறியவேண்டிய தகவல்கள் இன்னும் உண்டு.

தெரிந்துகொள்ளலாமா ஆனைமுகன் குறித்த அந்த அபூர்வ தகவல்களை!

பிள்ளையாருக்கு எத்தனைப் பெயர்கள்?

கணபதி என்ற சொல்லுக்குத் தேவகணங்களின் தலைவன் என்று பொருள். ‘க’ என்பது ஞானநெறியில் ஆன்மா எழுவதையும், ‘ண’ என்பது மோட்சம் பெறுவதையும், ‘பதி’ என்பது ஞான நெறியில் திளைத்துப் பரம்பொருளை அடைதலையும் குறிக்கும். மேலும் ‘மனோவாக்கினை கடந்த தலைவன்’ என்றும் பொருள்கொள்ளலாம்!

தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் ஆதலால் பிள்ளையாருக்கு விநாயகன் என்று பெயர். விக்னங்களைப் போக்குபவர் ஆதலால் விக்னேஸ்வரர். கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி எனும் பெயர் கொண்டார். 

சாபத்தின் காரணமாக தனது பிரகாசத்தை படிப்படியாக இழக்க ஆரம்பித்தான் சந்திரன். இவனது துன்பம் தீர்க்க எண்ணிய விநாயகப் பெருமான், சந்திரனை தன் நெற்றியில் திலகமாக அணிந்து கொண்டாராம். இதனால், பாலசந்திர விநாயகர் எனும் திருநாமம் பெற்றார்.
ஒருமுறை, அக்னி பகவானும் சாபம் பெற்றார். அக்னியைக் காப்பாற்ற தனது காதுகளையே முறங்களாக்கி விசிறி, அக்னியின் வெப்பம் தணியாமல் இருக்க அருள் செய்தாராம் விக்னேஸ்வரர். இதனால் சூர்ப்பகர்ணர் என்று பெயர் கொண்டார்.

பரமேஸ்வரனால் வழங்கப்பட்ட பரசு ஆயுதத்தால் பூவுலகில் தனது லட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டார் பரசுராமர். இதன் பொருட்டு சிவனாருக்கு நன்றி சொல்ல திருக்கயிலாயம் வந்தார். வாயிலில் அவரைத் தடுத்து நிறுத்தினார் பிள்ளையார். அவரைப் பொருட்படுத்தாமல் உள்ளே நுழைய முயன்றார் பரசுராமர். இதனால் இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. அதன் உச்சகட்டமாக... விநாயகரை நோக்கி பரசு ஆயுதத்தை வீசினார் பரசுராமன்.

அந்த ஆயுதத்தால் தன்னை எதுவும் செய்துவிட முடியாது என்பது பிள்ளையாருக்குத் தெரியும். ஆனால், தந்தை அளித்த அந்த ஆயுதத்துக்கு இழிவு ஏற்பட்டுவிடக் கூடாது என்று கருதினார் பிள்ளையார்; தமது இடது தந்தத்தால் அந்த ஆயுதத்தை எதிர்கொண்டார். தந்தம் முறிந்தது! இதன் மூலம் ஏக தந்தர் எனும் திருநாமத்தை ஏற்றார்.

இவை பிரமாண்ட புராணம் கூறும் தகவல்கள். இவை தவிர,  பல்வேறு தலங்களில் பல்வேறு காரணப்பெயர்களும் உண்டு கணபதிக்கு.

பிள்ளையாருக்கு முதலில் மோதகம் படைத்தது யார்?

பிள்ளையாருக்கு முதன்முதலில் மோதகம் படைத்தது, வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி.
சர்வவியாபியான விநாயகர் அண்டத்தின் உள்ளே எங்கும் பூரணமாய் நிறைந்துள்ளார்! அருந்ததி அண்டத்தை உணர்த்த, மாவினால் ‘செப்பு’ என்ற மேல் பகுதியைச் செய்தாள். அண்டத் தின் உள்ளே பூரணமாய் நிறைந்திருக்கும் பிள்ளையாரைக் குறிக்கும் வகையில் இனிப்பான பூரணத்தை, மாவுக்குள் வைத்தாள். அதுவே, மோதகம் என்னும் கொழுக்கட்டை.


இப்படியும் சொல்லலாம்... இந்த உலகமே மோதகம்தான். உலகில் உள்ள ஒவ்வொரு படைப்பும் பூர்ணத்தைப் போன்று இனிமையானதுதான். நாமும் இனியவர்களாக, இனிய செயல் களையே செய்பவர்களாகத் திகழ்ந்தால், இறைவன் நம்மை உள்ளங்கையில் வைத்துத் தாங்குவான்!


பிள்ளையாருக்கு எத்தனை தேவியர்?

ஸித்தி, புத்தி மற்றும் வல்லபை ஆகியோரை விநாயகரின் தேவியராகக் குறிப்பிடுகிறது விநாயக புராணம். இவர்கள் மட்டுமல்ல... மோதை, பிர போதை, கமலை, சுந்தரி, மனோரமை, மல்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, சுமந்தினை, நந்தினி, காமதை ஆகியோரும் விநாயகரின் தேவிகளாகத் திகழ்வதாக ஞானநூல்கள் தெரிவிக்கின்றன.

மண் பிள்ளையாரும் மாவுப் பிள்ளையாரும்!

ஐம்பொன் விக்கிரகங்களாக மட்டுமல்ல, மண்ணில் பிடித்து வைத்து வழிபட்டாலும் பரிபூரண பலன் தருவார் விநாயகர்.மண்ணால் செய்த விநாயகரை வழிபட, நற்பதவி கிட்டும்.

 

புற்றுமண் விநாயகரை வழிபட, லாபம் பெருகும்.
வெல்ல விநாயகர்- நன்மைகள் அதிகரிக்கச் செய்வார்.
உப்பு விநாயகர்- எதிரிகளை வெல்லும் வல்லமை தருவார்.
வெள்ளெருக்கு விநாயகர்- செல்வம் பெருக அருள்வார்.
கல் விநாயகரை வழிபட்டால், சகல நலன்களும் கிட்டும்.
மாவினால் செய்த விநாயகரை வழிபட, அனைத்துக் காரியங் களிலும் வெற்றி பெறலாம்.

பிள்ளையாரைப் போற்றும் புராணங்கள்

முத்கல புராணம், சிவ புராணம், கந்த புராணம், கணேச புராணம், மச்ச புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், பத்ம புரணம் ஆகிய புராணங்களும், ரிக் வேதம், சுக்ர நீதி, சுப்பிர பேதம், அபிதான கோசம் முதலான ஞான நூல்களும் விநாயகரைப் போற்றுகின்றன.

பிள்ளையாரை அர்ச்சிக்க 21 இலைகள்!

விநாயக சதுர்த்தி அன்று 21 பத்ரங்களால் (இலை) பிள்ளை யாரை அர்ச்சித்து வழிபடுதல் விசேஷம். அவை: முல்லை, கரிசலாங்கண்ணி, வில்வம், ஊமத்தை, இலந்தை, வெள் ளருகம்புல், துளசி, வன்னி, நாயுருவி, கண்டங்கத்திரி, சுருளி, எருக்கு, மருதை, விஷ்ணு கிராந்தி, மாதுளை, தேவதாரூ, மருவு, அரசு, ஜாதிமல்லிகை, தாழை, அகத்திக் கீரை.
வெள்ளிக் கிழமை, விநாயக சதுர்த்தி, வளர்பிறை சதுர்த்தி ஆகிய தினங்கள் பிள்ளையாரை வழிபட உகந்த தினங்கள். இந்த தினங்களில் சிரத்தையுடன் விரதம் இருந்து பிள்ளையாரை வழிபட்டால், நினைத்ததை அடைந்து நீடூழி வாழலாம்.

பிள்ளையார் சுழி!

வியாச பகவானின் மகாபாரதத்தை எழுத்திலே வடித்த முதல் எழுத்தாளன் விநாயகர். ஆகவேதான், எதையும் எழுதுமுன் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிறோம் என்பார்கள்.
வைணவ ஆலயங்களான திருவரங்கம் கோயிலில் விக்னபதி, திருவல்லிக்கேணியில் வெண்ணெய் விநாயகர், அழகர் கோயிலில் தும்பிக்கை ஆழ்வாராகத் திகழ்கிறார் பிள்ளையார்.

சிதறு தேங்காய் எதற்கு?

வித்யுன்மாலி, தாருகாக்ஷன், கமலாக்ஷன் ஆகிய அசுரர்களையும் அவர்களின் கோட்டைகளையும் சிவனார் அழிக்கப் புறப்பட்டபோது, தேர் அச்சு முறிந்து தடை ஏற்பட்டது.
விநாயகரை வேண்டிக் கொள்ளாமல் புறப்பட்டதால் ஏற்பட்ட இடர் இது என்பதை உணர்ந்த ஈசன், கணபதியை எண்ணினார். மறுகணம் அங்கு தோன்றிய கணபதிக்கு உகந்த காணிக்கையைத் தருவதாகச் சொன்னார் சிவனார். அப்போது, முக்கண்ணனையே தனக்குக் காணிக்கையாகத் தர வேண்டும் என்றார் கணபதி. எனவே ஈசன், தன்னைப் போல் மூன்று கண்களும், சடையும் உடைய தேங்காயை கணபதிக்குப் படைத்தருளினார். அன்று முதல், தடைகள் நீங்கிட விநாயகருக்குத் தேங்காய் உடைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

உச்சிப்பிள்ளையார்

நாம் வாழ்வது பூவுலகம். இதற்கு மேலே விண்ணுலகும், கீழே பாதாள லோகமும் இருப்பதாக புராணங்கள் கூறும். இந்த மூன்றையும் மும்மண்டலங்கள் என்றும், மூவுலகங்கள் என்றும் சிறப்பிக்கிறோம். இந்த மூன்றுக்கும் முழுமுதற் தெய்வமாகத் திகழ்பவர் கணபதி. ஞானநூல்களெல்லாம் அவரை உச்சிப் பிள்ளையார், மகா கணபதி, பாதாள கணபதி என்ற மூன்று நிலைகளில் வைத்து போற்றுகின்றன.

ஆலயங்களில் மகா கணபதியாக வழிபடும் பிள்ளையாரை, மலை முகட்டிலும் உச்சியிலும் வைத்து உச்சிப்பிள்ளையாராகவும், பள்ளத்தில் சந்நிதி அமைத்து பாதாள விநாயகர் என்றும் அன்பர்கள் வழிபடுகின்றனர்.

தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள திருச்சியில் மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையாராக அவர் கோயில் கொண்டுள்ளார் கும்பகோணத்திலும் ஒரு உச்சிப்பிள்ளையார் உண்டு. அந்த ஊரில் கட்டுமலை  அமைப்பு ஒன்றை உண்டாக்கி அதன் மீது விநாயகர் ஆலயத்தை அமைத்துள்ளனர். இவரும் உச்சிப்பிள்ளையார் எனப் போற்றப்படுகிறார்.

 

சிதம்பரம் திருத்தலத்தில் உள்ள திருமுறை காட்டிய விநாய கரும் உயரமான இடத்தில் உள்ள உச்சிப்பிள்ளையார் ஆவார்.

திருநல்லூர் என்னும் தலத்தில் கட்டுமலை மீது, மலைப் பிள்ளையார் எனும் பெயரில் அவர் அருள்பாலிக்கிறார்.

பாதாள விநாயகர்!

சில தலங்களில், மண்ணின் கீழே பாதாளத்தில் வீற்றிருப்ப வராகவும் விநாயகரைத் தரிசிக்கலாம்.  இந்த நிலையில், பூமி மட்டத்திலிருந்து பல படிகள் இறங்கிப் போய் அவரைத் தரிசிக்க வேண்டும். இவரை ஆழத்துப் பிள்ளையார், பாதாள பிள்ளையார் என்ற பெயர்களில்  பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

காளஹஸ்தி சிவாலயத்திலும், விருத்தாசலம் திருக்கோயிலிலும் ஆழத்துப் பிள்ளையார் சந்நிதிகள் உள்ளன. விருத்தாசலத்தில் அமைந்திருக்கும் ஆழத்துப் பிள்ளையார் ஆலயம் பெரியதாகவும் புராதனச் சிறப்பு மிக்கதாகவும் விளங்குகிறது.

பெருமை வாய்ந்த பிள்ளையார் திருத்தலங்கள்...

மயிலாடுதுறை- திருவாரூர் இடையே பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது திலதர்ப்பணபுரி. இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கை இல்லாமல் காட்சி தருகிறார்!


ராமேஸ்வரம் கோயிலின் நுழைவாயிலில் தரிசனம் தரும் இரட்டைப் பிள்ளையாரை வழிபட்ட பிறகே கோயிலுக்குள் செல்லவேண்டும் என்பது மரபு.

மருதமலையில் ஆலமரம் முதலான ஐந்து விருட்சங்கள் பின்னிப் பிணைந்திருக்கும் இடத்தருகில் அருள்கிறார் பஞ்சவிருட்ச கணபதி. பஞ்ச விருட்சத்தின் அடியில், முனிவர்கள் அருவமாக தவம் செய்வதாக ஐதீகம்!

தாமரை மலரில் அமர்ந்த நிலையில்... வழக்கத்துக்கு மாறாக கையில் கரும்புடன் காட்சி தருகிறார் திருப்பரங்குன்றம் கற்பக விநாயகர்.

கன்னியாகுமரி மாவட்டம், கேரளபுரம் மகாதேவர் கோயிலில் அருளும் விநாயகர் ஆவணி முதல் தை மாதம் வரை வெள்ளை நிறத்துடனும், மாசி முதல் ஆடி வரை கறுப்பு நிற மேனியராகவும் காட்சி தருவார். நிறம் மாறுவதால் இவரை, பச்சோந்தி விநாயகர் என்ற பெயரில் வழிபடுகின்றனர்.

சென்னை- மீஞ்சூருக்கு அருகில் உள்ளது செட்டிப் பாளையம். இங்குள்ள விநாயகர் கோயிலில், வலப்புறம் சாய்ந்த நிலையில் அருளும் பிள்ளையாரை தரிசிக்கலாம். இவரை, ‘வலஞ்சை விநாயகர்’ என்கின்றனர்.

குழந்தை கணபதி

நவநீத கிருஷ்ணரைப் போன்று அழகிய குழந்தை வடிவில் உள்ள விநாயகரை, வேலூர் கோட்டையில் சிற்பக் கலை நிறைந்த கல்யாண மண்டபத்தில் தரிசிக்கலாம்.

அரியலூர்- ஜெயங்கொண்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ள வைரவனீஸ்வரர் ஆலயத்தில், அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரப்பயிற்சி தந்த வில்லேந்திய விநாயகரை தரிசிக்கலாம்.

ஐங்கரனான விநாயகர் மூன்றுகரத்தோனாக எழுந்தருளும் தலம் பிள்ளையார்பட்டி. இங்கே, விநாயகருக்கு வெள்ளை ஆடை மட்டுமே அணிவிக்கின்றனர். சகஸ்ரநாம அர்ச்சனைக்காக, தினமும் 108 மோதகம் படைப்பதும் இந்தக் கோயிலின் தனிச்சிறப்பு.
திருவையாறு கோயிலில் அருள்கிறார் ஓலமிட்ட விநாயகர். நள்ளிரவில் ஓலமிட்டு, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டிருப்பதை ஊர்மக்களுக்கு உணர்த்திக் காப்பாற்றியதால் இவருக்கு இந்தத் திருநாமம்! இதே தலத்தில் லிங்கத்தின் ஆவுடைப் பகுதியின் மீது அமர்ந்தருளும் ஆவுடைப்பிள்ளையாரை தரிசிக்கலாம்.

வேண்டுதலுக்கு செவிசாய்க்கும் பிள்ளையார்!

தஞ்சை- திருவையாறு சாலையில் திருக்கண்டியூருக்கு அருகில் உள்ளது திருவேதிக்குடி. இங்குள்ள வேத விநாயகர், வேதங்களை காதுகொடுத்துக் கேட்கும் பாவனையில் சற்றே செவி சாய்த்து அமர்ந்திருக் கிறார். இறைவன் அருளும் வேதங்களை இவர் செவி சாய்த்துக் கேட்பதாக ஐதீகம். எனவே இவரை, செவி சாய்த்த விநாயகர் என்றும் அழைக்கின்றனர்.


மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள முக்குருணி விநாயகரின் விக்கிரகத் திருமேனி, திருமலை நாயக்கரால் வண்டியூர் தெப்பக்குளம் வெட்டும்போது கண்டெடுக்கப்பட்டது.


தஞ்சாவூர் மாவட்டம்- மருத்துவக்குடியில் அமைந் துள்ளது அபிராமியம்மை சமேத ஐராவதீஸ்வரர் ஆலயம். இங்கே அருள்பாலிக்கும் விருச்சிக விநாயகரின் திருமேனி முழுவதும் விருச்சிகத்தின் (தேள்) செதில் போன்ற அமைப்புள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது!
கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருவலஞ்சுழி. இங்கு எழுந்தருளியுள்ள விநாயகருக்கு வெள்ளைப் பிள்ளையார் என்று பெயர். இவரின் விக்கிரகத் திருமேனி கடல் நுரையால் செய்யப்பட்டது என்பது ஐதீகம். எனவே, இவருக்கு அபிஷேகம் கிடையாது.
திருவாரூர் கோயிலில் அருளும் ஐங்கலக் காசு விநாயகர் விக்கிரகத்தை, சோழ மன்னர் ஒருவர் ஐந்து கலம் பொற்காசுகளைக் கொண்டு செய்ததாக ஐதீகம்.

அம்மையப்பனை பிள்ளையார் வலம்வந்த ஊர்

விநாயகப்பெருமான் அம்மை-அப்பனை வலம் வந்து ஞானப்பழம் பெற்ற ஊர் திருவலம் என்பர். வேலூரில் இருந்து சுமார் 28 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த ஊரில் அருள்பாலிக்கும் வலம்வந்த விநாயகரை தரிசிக்க, வல்வினைகள் யாவும் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் தலத்தில் நர்த்தன விநாயகரை தரிசிக்கலாம். ஒரு காலம்... வேதம் ஓதுதலை முனிவர்கள் மறந்துவிட, விநாயகரே வேதியராக வந்திருந்து, வேதம் ஒலித்து வீரநடனம் ஆடினாராம். இதையட்டி அமைந்த பெயரே நர்த்தன விநாயகர்.


மயிலாடுதுறைக்கு தென்மேற்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள தேரழுந்தூரில் வழிகாட்டி விநாயகர் அருள் புரிகிறார். இங்கு வந்த திருஞானசம்பந்தருக்கு, சிவாலயம் செல்ல வழிகாட்டினாராம் இந்தப் பிள்ளையார்.

 

 

சாட்சி கணபதி... பாக்கு பிரசாதம்!

ஆந்திர மாநிலம்- சைலம் அருள்மிகு மல்லிகார்ஜுனர் கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது, சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு பிள்ளையார் கோயிலுக்குச் சென்று தங்களின் வருகையை பக்தர்கள் பதிவு செய்ய வேண்டுமாம். பக்தர்கள் சைலத்துக்கு சென்றுவந்ததற்கு இந்தப் பிள்ளையாரே சாட்சி என்பதால், இவரை ‘சாட்சி கணபதி’ என்கின்றனர்.

கர்நாடக மாநிலம்- ஹுப்ளியில் இருந்து சுமார் 8 கி.மீ தூரத்தில் உள்ள ஊர் சப்பி. இங்கு, விநாயக சதுர்த்தி அன்று ஐந்து அந்தணக் குடும்பத்தைச் சேர்ந்த வர்கள், செந்தூரத்தால் விநாயகர் செய்து பூஜிப்பார்களாம். வழிபாடுகள் முடிந்ததும், பிரசாதமாக பாக்கு தரப்படுமாம். பாக்கு பிரசாதம் கிடைத்த பக்தர்களின் வேண்டுதல்கள், அடுத்த மூன்று வருடத்துக்குள் நிறைவேறிவிடும் என்பது நம்பிக்கை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!