பருவகால காய்ச்சல்தான் ‘டெங்கு’! - மருத்துவர்கள் எச்சரிக்கை | Doctor's Alert about Dengue

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (10/09/2016)

கடைசி தொடர்பு:12:35 (10/09/2016)

பருவகால காய்ச்சல்தான் ‘டெங்கு’! - மருத்துவர்கள் எச்சரிக்கை

 

டெல்லியில் சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் தாக்கிவரும் நிலையில், தமிழகத்தில் டெங்கு பீதி அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து காய்ச்சல்கள் பரவி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் தீவிரமடைந்ததைத் தொடர்ந்துதான் தமிழக சுகாதாரத் துறை மெல்ல விழித்துக்கொண்டது.

இந்தக் காய்ச்சல் காரணமாக 1,000-க்கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குழந்தைகள், சிறுவர்கள் உட்பட  இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேசியபோது, ‘‘எல்லாக் காய்ச்சலும் டெங்கு காய்ச்சல் கிடையாது’’ என்றார். ஆனால் மருத்துவர்களோ, ‘‘இந்தப் பருவகாலத்தில் வரக்கூடிய காய்ச்சல் பெரும்பாலும் டெங்கு காய்ச்சல்தான்’’ என்கிறார்கள்.

‘‘டெங்கு, உயிர்கொல்லி இல்லை!’’

டெங்கு, உயிர்கொல்லி நோய் இல்லை. கவனிக்காமல் இருப்பதும் விழிப்பு உணர்வு இல்லாமல் இருப்பதுமே இந்த நோயால் இறப்பு ஏற்படுகிறது. ஏ.டி.எஸ் ஏகிப்டி (Aedes Aegypti mosquito) என்ற பெண் கொசு கடிப்பதால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இந்தக் கொசு, 16 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையிலேயே வளரக்கூடியது. அதேபோன்று, 60 முதல் 80 டிகிரி ஈரபதத்தில் வாழக்கூடியதாக இந்தக் கொசுக்கள் இருக்கின்றன. தென்னிந்தியாவில் தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருக்கக்கூடிய வெப்பநிலை, டெங்கு கொசு வளர்வதற்குச் சாதகமாக உள்ளது. டெங்கு கொசுவானது நன்னீரில் முட்டையிட்டு, அது வளர்வதற்கேற்ற வெப்பநிலை இருக்கும்போது பல்கிப் பெருகும். மழைநீர் தேங்கியிருப்பது; அந்தத் தண்ணீர் வடிந்து ஓடுவதற்கான சரியான வடிகால் முறைகள் இல்லாதது; ஒழுங்கற்ற மழைப்பொழிவு, நகரமயமாதலால் பெருநகரங்களில் மக்கள்தொகை அதிகரிப்பு; கொசு வளர்வதற்கு ஏற்ற வெப்பநிலை தொடர்ந்து நீடிப்பது போன்ற காரணங்களால் டெங்கு பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும். டெங்கு கொசு பெரும்பாலும் பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கும். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவு பாதிக்கப்படலாம்.

‘‘விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும்!’’

பெரும்பாலும் வியர்வைத் துளிகளின் வாடையைவைத்து இந்த வகை கொசுக்கள் மனிதர்களைத் தாக்குகின்றன. சுகாதாரமில்லாதவர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோரையும் கடிக்கும் அபாயம் உள்ளது. குழந்தைகளின் உடல் முழுவதையும் மூடியவாறு உடையணியச் செய்வதும், கொசு கடிக்காமல் இருப்பதற்கான கிரீம்களைப் பயன்படுத்துவதும் டெங்கு கொசுக்கடியில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள உதவும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மக்களிடையே அதிக விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் பணியைச் சுகாதாரத் துறை செய்ய வேண்டும்.

“பருவகால நோய்தான் டெங்கு!”

இதுகுறித்து மருத்துவர் ரவீந்திரநாத்திடம் பேசினோம். ‘‘ஆண்டின் அனைத்து நாட்களிலும் காய்ச்சல் வந்தால்கூட, மழைக்காலத்தில் வரக்கூடிய பருவநோய்தான் டெங்கு. ஏ.டி.எஸ் ஏகிப்டி கொசுக்கள் வளருவதற்கு ஏற்ற தட்பவெட்ப நிலை செப்டம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம்வரை என்பதால் இந்த நோய் பரவுகிறது. இவையெல்லாம் அரசுக்குத் தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்துவிட்டு, பின்னர் உயிர்பலி நிகழ்ந்தால்தான் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், காய்ச்சல் கட்டிப்பாட்டில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

‘‘தடுப்பு நடவடிக்கைகளை ஏன் கையாளவில்லை?’’  

அதேபோன்று, ஜிகா வைரஸ் பரவுவதைத் தடுக்க அமெரிக்காவில் எலிகாப்டர் மூலமாக பெல்லட் முறையில் கொசுத் தடுப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். அதனை ஏன் தமிழகத்தில் சுகாதாரத் துறை கையாளவில்லை? புதிய வழிமுறைகளைக் கையாண்டால்தான் கொசுக்களை ஒழிக்கமுடியும். ‘மெத்திலின்’ என்ற மருந்தைப் பயன்படுத்தித் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். மரபியல் மாற்றுடைய கொசுக்களைப் பயன்படுத்தி மலட்டுத் தன்மையை உருவாக்கிவருகிறார்கள். மெக்சிகோ மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் டெங்குவுக்குத் தடுப்பூசி பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் இவற்றை எல்லாம் ஏன் பின்பற்றாமல் இருக்கிறார்கள் என்பது புரியவில்லை. சுகாதாரத்தைச் சர்வதேச தரத்துக்கு உயர்த்தாமல் உயிர்பலி தடுப்பது என்பது முடியாத விஷயம்.
 
‘‘அனைத்துத் துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும்!’’

தனியார் நிறுவனங்கள், உணவு விடுதிகள், தொழிற்சாலைகள் எனப் பல பகுதிகளில் இருந்து சுகாதாரத்துக்கு எதிரான செயல்பாடுகள் நடந்துவருகின்றன. இதனால் முற்றிலும் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. காவல் துறை, நீதித்துறை, சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, மாநகராட்சிகள், மாவட்ட நிர்வாகங்கள் என அனைத்துத் துறைகளும் இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தமிழக அரசு சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த துறை சம்பந்தபட்ட அதிகாரிகள் களத்தில் இறங்கிப் பணியாற்றினால் மட்டுமே உயிரிழப்பைக் கட்டுப்படுத்த முடியும்’’ என்றார் ரவீந்திரநாத்.

‘‘எல்லாக் காய்ச்சலும் டெங்கு அல்ல!’’

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘‘இது பருவகால காய்ச்சல்தான். அதில், ஒரு சிலருக்கு டெங்கு வந்துள்ளது. காய்ச்சல் என்று வந்தாலே உள்நோயாளியாகச் சேர்க்குமாறு அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக காய்ச்சல் என்று வருபவர்களையும் சேர்த்து வருகிறோம். அதன் காரணமாகவே எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. வேறு நோய்கள் காரணமாக உயிரிழந்தால்கூட டெங்கு காய்ச்சல்தான் என்று சொல்வது இந்த அரசின் செயல்பாடுகளைத் தவறாகச் சித்தரிக்கும் செயலாகும். டெங்கு காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் எண்ணிக்கை குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து சுகாதாரத் துறைக்கு நாள்தோறும் அறிக்கை வந்துகொண்டிருக்கிறது. அதேபோன்று, வாரந்தோறும் சனிக்கிழமை அன்று தலைமைச் செயலாளர் தலைமையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்த கூட்டமும் நடைபெற்று வருகிறது. டெங்குவை ஒழிக்க பிளாக் அமைக்கப்பட்டு தினக்கூலி அடிப்படையில் ஒரு பிளாக்குக்கு 30 பேர் நியமிக்கப்பட்டு, சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்’’ என்றார்.

‘டெங்கு’ பரவாமல் தடுக்கு அரசு கவனம் செலுத்தவேண்டும்.

- கே.புவனேஸ்வரி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்