Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரதமர் மோடிக்கு ஒரு சாமானியனின் கடிதம்...! #HBDPMModi

பிரதமர் மோடிஜிக்கு இந்த சாமானியனின் அன்பான இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள். குஜராத்தின் வத்நகர் ரயில் நிலையத்தில் தேனீர் விற்பவராக வாழ்க்கையைத் தொடங்கிய நீங்கள், இந்த நாட்டின் பிரதமராக உயர்ந்தது எங்களுக்கு மிகப்பெரிய உந்துதல். ஆம், எங்கும் புரையோடி இருக்கும் லஞ்சம், லாவணியம்... ஒரு சாதாரண கவுன்சிலர் பதவிக்கே தேவைப்படும் அதிகார பின்புலம் என... நஞ்சுப்படிந்த இந்தியாவின் நுரையீரலில்... எந்த பின்புலமும் இல்லாமல் வந்த நீங்கள் ஒரு கதாநாயகர் தான்... அதுமட்டுமல்ல, உங்களுடைய வேகம், உங்கள் ஆளுமை... இது ஒவ்வொரு இளைஞனும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முன்னெடுத்து இளைஞர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறீர்கள்.  குறிப்பாக, இந்தியாவில் நம் எதிர்காலம் இல்லை என்று மனம் வெதும்பிய இளைஞர்களின் மனதில் நம்பிக்கை விதைத்து இருக்கிறீர்கள். அதற்கு கதகதப்பான கைக்குலுக்கள். ஆனால், இதை தாண்டி உங்களிடம் சில விஷயங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்...  இந்த நாட்டின் குடிமகன் என்பதையெல்லாம் கடந்து, உங்களை விரும்பும் ஒரு சாமானியனாக, உங்களிடம் சுட்டிக் காட்ட விரும்பியே இந்தக் கடிதம்.

 

 


மவுனானந்தா ஆகிவிட்டீர்கள்

பிரதமர் வேட்பாளராக பி.ஜே.பி சார்பில் நீங்கள் அறிவிக்கப்பட்டது முதல் ஒரு ஆண்டாக இந்தியா முழுவதும் தேர்தல் பிரசார மேடைகளில், "நான் பிரதமர் ஆனால் சாதாரண மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். 100 நாட்களுக்குள் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவேன்" என்று முழக்கமிட்டீர்கள். நீங்கள் சாதாரண மனிதனின் ரட்சகராக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை விதையை விதைத்தீர்கள். பிரதமர் பதவியேற்ற பின்னர், ரேஸ்கோர்ஸ் ரோட்டில் இருக்கும் பிரதருக்கான இல்லத்திற்குள் சென்ற உடன் இன்னொரு நரசிம்மராவைப் போலவும், இன்னொரு மன்மோகன் சிங்கைப் போலவும் மவுனானந்தாவாக ஆகிவிட்டீர்கள். கருப்புப் பணத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை.


வார்த்தை ஜாலங்கள்

உங்களுக்கு ஒன்று நினைவு இருக்கிறதா. நிச்சயம் நினைவு இருக்கும் என்று நம்புகின்றேன். கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி தமிழகம் வந்த நீங்கள் மீனம்பாக்கம் விமானநிலையத்துக்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்தீர்களே. அப்போது கைகளை உயர்த்தியபடி ஆவேசமாக நீங்கள் பேசும் போது, "மாநிலங்களின் உணர்வுகளுக்கும், எண்ணங்களுக்கும் மதிப்புக் கொடுக்கும் அரசு இப்போது இல்லை. நிச்சயமாக, மத்தியில் மாநிலங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் அரசு அடுத்துவரும் என்பதை தமிழக மக்களுக்கு உறுதியாகச் சொல்கின்றேன். மத்தியஅரசு மாநிலங்களை அடிமைகளாக நினைக்கிறது. குஜராத்தில் நான் 4 முறை முதல்வராக இருந்திருக்கின்றேன். மாநிலங்களை மத்திய அரசு கேவலமாக நடத்துவதை அனுபவித்தவன். ஆனால், டெல்லியில் இனி அமையப்போகும் அரசு மாநிலங்களுடன் தோளோடு தோள் கொடுக்கும்"  என்று பேசியதை மறந்திருக்க மாட்டீர்கள். ஆவேசமான குரலில் காங்கிரஸ் அரசை வார்த்தை ஜாலங்களால் வறுத்தெடுத்ததை பார்வையாளர்கள் வரிசையில் இருந்து அப்பாவி தமிழர்களும், நாடெங்கிலும் தொலைகாட்சி லைவ்-களில் கோடிக்கணக்கான மக்களும் பார்த்தனர். நீங்கள் இப்படி பேசி ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆட்சிக்கு வந்தும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது.


தமிழக உணர்வுகளை மதித்தீர்களா

மாநில உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என்று சொன்ன நீங்கள்தான் தமிழக விவசாயிகள் காவிரி நதிநீர் பிரச்னையால் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் இந்த நேரத்தில் ஒரு பிரதமராக எதையும் கண்டுகொள்ளாமல், மாநில உணர்வுகளை மதிக்காமல் இருக்கிறீர்கள். தமிழகத்தின் ஒட்டு மொத்த உணர்வுகளை மதிக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் மோடிஜி. கர்நாடகா அரசுக்கு அறிவுறுத்தும் படி முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதங்களின் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் மோடி ஜி. உங்களால் பதில் சொல்ல முடியுமா? தமிழகத்தை விடுங்கள் "மாநிலங்களை மத்திய அரசு கேவலமாக நடத்துவதை அனுபவித்தவன் நான்" என்று சொன்னீர்கள். டெல்லி மாநிலத்தில் ஒருவர் ஆண்டுகொண்டு இருக்கிறாரே அரவிந்த் கெஜ்ரிவால். அவரை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்துவது உங்கள் மத்திய அரசுதானே? உங்கள் மீது அவர் வெளிப்படையாக  வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஏன் நீங்கள் இன்னும் வாய் திறக்கவில்லை மோடி ஜி. "டெல்லியில் இனி அமையப்போகும் அரசு மாநிலங்களுடன் தோளோடு தோள் கொடுக்கும்" என்று நீங்கள் மீனம்பாக்கத்தில் பேசியதற்கு இதுதான் அர்த்தமா மோடிஜி. எவ்வளவுதான் அரசியல் எதிரி என்றாலும், டெல்லி மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை தேர்ந்தெடுத்துவிட்டார்களே அவருக்கு முதல்வர் என்ற வகையில் அவர் சொல்வதற்கு மதிப்பளிக்கக் கூடாதா?


மகாத்மா காந்தி மீதான உங்கள் பேரன்பு !

காங்கிரஸ் காரர்களைப் போலவே மகாத்மா காந்தி மீது நீங்கள் பேரன்பு கொண்டவராகக் காட்டிக்கொண்டீர்கள். ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியின் போது துடைப்பத்தைத் தூக்கிக் கொண்டு டெல்லி மந்திர் மார்க் காவல் நிலையத்தைச் சுத்தப்படுத்தப் போனீர்கள். "2019-ம் ஆண்டு காந்தியின் 150-வது ஆண்டு விழா கொண்டாடப்படும் போது இந்தியா தூய்மையாக இருக்கும். இதுதான் மகாத்மாவுக்கான அஞ்சலி" என்று சொன்னீர்கள். உங்களைப் போலவே பி.ஜே.பி காரர்களும் புத்தம் புது துடைப்பத்தை எடுத்துக்கொண்டு இந்தியா முழுவதும் வீதி வீதியாக அலைந்தார்கள். சுத்தமாக இருந்த இடங்களில் குப்பைகளைக் கொட்டி அள்ளுவது போல போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள். இயக்கம் தொடங்கி இரண்டாம் ஆண்டு விழாவை கொண்டாடப்போகும் நேரத்தில் இந்தியா முன்பைப் போலவே குப்பையாகவே காட்சி அளிக்கிறது. 2015-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதியே இதனை ஊடகங்கள் அம்பலப்படுத்தி விட்டன. காந்தியைப் பற்றி வெளிப்படையாக புகழ்ந்தாலும், நீங்கள் உள்ளுக்குள் காந்தியைப் பற்றி நெகட்டிவ் ஆன எண்ணத்தைக் கொண்டிருக்கும் ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர்தான்.


தலித்களைக் கண்டு ஏன் அச்சம்?

காந்தியை விடுங்கள் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி கோவையில் தமிழக சட்டமன்றத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய நீங்கள், "அம்பேத்கரின் 125-வது ஆண்டு விழாவை கொண்டாடி அவருடைய ஸ்டிக்கர், தபால் தலை ஆகியவற்றை வெளியிட்டோம். நாடாளுமன்றத்தில் அவர் குறித்து விவாதம் நடத்தினோம். லண்டனில் அவர் வாழ்ந்த வீட்டை அரசு சார்பில் மீட்டு நினைவு சின்னமாக்கியுள்ளோம். மும்பையில் அவர் வாழ்ந்த வீட்டை நினைவு சின்னமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது" என்று சொன்னீர்கள். இவையெல்லாம் எதற்காகச் செய்தீர்கள். நாங்கள் தலித்களை மதிக்கத் தொடங்கியிருக்கின்றோம் என்ற பிரசாரத்தை முன்னெடுப்பதற்காகத்தானே. நீங்கள் அப்படி ஒன்றும் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டாம் என்று உத்தரபிரதேசத்திலும் இன்னும் சில மாநிலங்களிலும் தலித்களுக்கு எதிராக உங்கள் கட்சிக்காரர்கள் செயல்பட்டார்களே அதெயல்லாம் தடுப்பதற்கு பதில் "முதலில் என்னைத் தாக்குங்கள்" என்று வழக்கம்போல மேடையில் வார்த்த்தை ஜாலம் மட்டும்தானே செய்தீர்கள். அதற்கு பின்னர்தானே அப்பாவி தலித்கள் மீது மேலும் அதிக தாக்குதல்கள் நடந்தன. உங்கள் பிறந்த நாளுக்காக உங்கள் அம்மாவிடம் ஆசி வாங்க செப்டம்பர் 16-ம் தேதி இரவு நீங்கள் குஜராத் செல்லும் போது உங்கள் மாநிலத்தின் தலித் தலைவர்  ஜிக்னேஷ் மேவானி  கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டாரே? எதற்காக? தலித்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர்களைக் கண்டு உங்களுக்கு ஏன் இவ்வளவு அச்சம்? அடுத்த பிறந்த நாளுக்குள்ளாவது உங்களுக்குள் ஒரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கையோடு.

-கே.பாலசுப்பிரமணி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement