வெளியிடப்பட்ட நேரம்: 13:04 (18/09/2016)

கடைசி தொடர்பு:13:03 (18/09/2016)

'விஷ்ணுப்ரியா சாவுக்கான காரணம் தெரியாமல் ஓய மாட்டேன்!' - கலங்கும் தந்தை

"சரியானவற்றை செய்ய எதற்கு பயப்படவேண்டும்"
- டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா அடிக்கடி சொல்லும் வார்த்தை இது...திடமான அந்தப் பெண்மணி உயிரிழந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. அவ்வளவு எளிதில் யாராலும் மறக்கமுடியாதது விஷ்ணுப்ரியாவின் மரணம்.


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய விஷ்ணுபிரியா தான் பயிற்சி முடித்த நாளில், "மக்களை காக்கும்  உன்னத பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளோம். எந்த நேரத்திலும்  நேர்மை  தவறாமல்,  எவ்வளவு  தடைகள்  வந்தாலும் தன்னம்பிக்கையோடு  உழைக்க வேண்டும்" என்று பேசியவர்தான்....கடந்த ஆண்டு இதே நாளில் (செப்டம்பர் -18), திருச்செங்கோடு டி.எஸ்.பி. முகாம் அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். தன்னம்பிக்கை மனுஷியாக அடையாளம் காணப்பட்ட விஷ்ணுப்ரியாவின் மர்ம மரணம் குறித்த காரணங்கள்தான் இதுவரை வெளியுலகுக்குத் தெரியாத மர்மமாகவே நீடித்து வருகிறது.

விஷ்ணுப்ரியா வழக்கு குறித்த சின்னதொரு ஃப்ளாஷ்பேக் இது...

தமிழகத்தை உலுக்கியெடுத்துவரும் ஆணவப் படுகொலைப் பட்டியலில் ஒன்று ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலையான வழக்கு. இந்த வழக்கினை விசாரிக்குமாறு  சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டதன் பேரில், டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா இந்த வழக்கை விசாரித்து வந்தார்.  இந்த நிலையில்தான் விஷ்ணுப்ரியா மர்மமான முறையில் மரணமடைந்தார். வழக்கின் முக்கியக் குற்றவாளி என்று சொல்லப்பட்ட  தீரன் சின்னமலை கவுண்டர் பேரவைத் தலைவர் யுவராஜ் அளித்த நெருக்கடி காரணமாகவே விஷ்ணுப்ரியா தற்கொலை செய்து கொண்டார் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.ஆர்.செந்தில்குமார் அளித்த நெருக்கடி காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் மற்றொரு வழக்கில் விஷ்ணுப்ரியா எடுத்தநேர்மையான , வேகமான நடவடிக்கையே அவர் சாவுக்கு  காரணமானது என்றும் அடுத்தடுத்து செய்திகள் அலையடித்தது.இந்த நிலையில்தான் "உயரதிகாரிகள் நெருக்கடி காரணமாகவே விஷ்ணுப்ரியா தற்கொலை செய்து கொண்டார்'' என அவரது தோழி கீழக்கரை டி.எஸ்.பி.யாக இருந்த மகேஸ்வரி, வழக்குரைஞர் மாளவியா ஆகியோர் குற்றம்சாட்டினார். இறுதியாக கோகுல்ராஜ் வழக்கும், எஸ்.பி செந்தில்குமார் கொடுத்த நெருக்கடி விவகாரமும்தான் நங்கூரமாக நின்றது. இதனையடுத்து, டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கோடு, பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கையும் சிபிசிஐடி விசாரித்து வந்தது. இந்நிலையில், விஷ்ணுப்ரியாவின் தந்தை ரவி, 'விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்' என்று  உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பிறகு, ரவி மேல்முறையீடு செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 'விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்' என  உத்தரவிட்டது . இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ஏன் சி.பி. ஐ விசாரிக்க  கூடாது ?

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு குறித்துப் பேசும் விஷ்ணுப்ரியா தரப்பினர்,
''நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை  சேர்ந்த  அ.தி.மு.க அமைச்சர்கள் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்றும் முயற்சியில் இருந்த  அதிகாரிகளும் இதில் தொடர்புடையவர்கள் .எனவே அவர்களுக்கு  சிக்கல் ஏற்பட்டு விடும் என்பதால் இந்த வழக்கில் அரசு மேல்முறையீடு செய்துள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடிக்ககூடாது என்ற நோக்கத்தில் அரசுத் தரப்பில் வழக்கு தாக்கல் செய்திருப்பதை என்னவென்று சொல்ல?  இதை விட வெளிப்படையாக குற்றவாளிகளை தமிழக அரசு  மறைக்க முடியாது'' என்றார்கள்.

''சமூகத்தில் என் மகள் தனியாக தெரிய வேண்டும் என்று விரும்பினேன் ."

விஷ்ணுப்ரியா உயிரிழந்து  இன்றோடு ஒரு வருடம் ஆன  நிலையில் அவருடைய தந்தை ரவி பேசும்போது,
"தமிழக முதல்வரிடம் தகவலை கொண்டு சென்றவர்கள்  தவறாக கொண்டு சென்று விட்டார்கள். அவரும்  உடனடியாக  சட்டசபையில் அறிவித்துவிட்டார் . இந்தக் கவுரவ பிரச்னைதான்  என் மகளுக்கு கிடைக்கும் நீதியைத் தடுக்கிறது. என் மகளின் தற்கொலைக்கான காரணங்கள் தெரிய வேண்டும். எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம். இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடந்தால்  நாங்கள் ஏன் தமிழக அரசை குறை  கூறப் போகிறோம் . என் மகளின் சாவுக்கான உண்மையான  காரணம் தெரியாமல் நான் ஓய மாட்டேன் . என்னுடைய  மகள் தன்னம்பிக்கையற்றவள் அல்ல. இந்த சமூகத்தில் என் மகள்  தனியாக தெரிய வேண்டும் என்று விரும்பினேன். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி , சகாயம் போன்ற  நல்ல மனிதர்களை  உதாரணம் காட்டி வளர்த்தேன் .
அவள் உயிரோடு இருந்தபோது, 'இவர்தான் டி .எஸ். பி. விஷ்ணுப்ரியாவின் தந்தை' என்று என்னை எல்லோரும் அடையாளம் காட்டியபோது பெருமையாக நான் ரசித்தேன். அது  கடைசி வரை தொடரும் என்று நினைத்தேன் . ஆனால் இப்படி என் மகள்  பாதியில் போவாள் என்று எதிர்பார்க்கவில்லை. என் மகள்  இறப்புக்கான  காரணம் தெரிய வேண்டும். சம்பவத்தன்று 2.48 மணியில் இருந்து 5.30 மணி வரை என்ன  நடந்தது?  யார் பொறுப்பு?  என்று தெரிய வேண்டும்.

எஸ்.பி- யின் மனசாட்சிதான்  உண்மையை சொல்ல வேண்டும்

விருப்பத்துடன்தான் வேலைக்கு சென்றாள் அவள். எந்த நெருக்கடியாலும் செல்லவில்லை.  என் மகளுக்கு நேர்ந்த கொடுமை  வேறு யாருக்கும் நேரக்கூடாது என்பதால்  நான்  இன்னும் போராடிக் கொண்டிருக்கிறேன்.  அந்த எஸ்.பி. மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. எஸ். பி. செந்தில்குமாரின்  மனசாட்சிதான் உண்மையை சொல்ல வேண்டும். என் மகளுக்கு இந்த கொடுமை என்றால் சாதாரண பெண்களின் நிலை என்ன ?

மகளை இழந்து என் மனைவி படுத்த படுக்கையாகி விட்டாள். நானாவது வெளியே சென்றுவருவதால்  மறந்து விடுகிறேன். ஆனால் என் மனைவி..." என்று துக்கம் தொண்டையை அடைக்க வார்த்தைகள் வராமல் கண்ணீர் வடித்தார் அந்த அப்பாவித் தந்தை. மகளைப் அநியாயமாகப் பறிகொடுத்த தந்தையின் வலிக்கான நீதி வெகு விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தொடர்பை  துண்டித்தோம்.
விஷ்ணுப்ரியாவின்  தோழி மகேஸ்வரி முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கடிதம் ஒன்றை  வெளியிட்டுள்ளார். இது குறித்து அவரைத் தொடர்பு கொண்டபோது  ''பயணத்தில் இருப்பதால் பேச முடியவில்லை  மீண்டும் பேசுகிறேன்'' என்று  தொலைபேசியைத்  துண்டித்தார்

உண்மையைத் தடுக்கவே யுவராஜ் ஜாமீன் மனுவுக்கு  தடை !

விஷ்ணுப்ரியா மரணத்தின் வழக்கின் ஆரம்பத்தில் இருந்து  ஏற்பட்ட நெருக்கடிகள் குறித்து  தகவல்  கொடுத்த யுவராஜின் வழக்கறிஞர் ஆனந்தை  தொடர்பு கொண்டு பேசினோம். ''இந்த வழக்கில்  யுவராஜ்  சில உண்மைகளை  சிபிஐ-யிடம்  சொல்வதாகக் கூறியுள்ளார். அது தொடர்பான ஆவணங்களும் உள்ளது. அதனைத் தடுக்கவே  யுவராஜின்  ஜாமீன்  மனுவுக்கு இடைக்கால தடை விதித்தார்கள். வழக்கை சிபிஐ  விசாரித்தால்தான் உண்மை தெரியவரும். அதனால்தான்  தமிழக  அரசு சிபிஐ விசாரிக்க கூடாது என்று மேல் முறையீடு  செய்தது. யுவராஜ்  உள்ளே  இருந்தால்தான் உண்மையை உறங்க செய்ய முடியும் எனவே  காவல்துறையினர்  திட்டமிட்டே இந்த வேலையைச் செய்கிறார்கள் " என்றார்

அவிழ்க்கப்படாத  முடிச்சுகள்

1. விஷ்ணுப்ரியா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக 15 பக்கம்   கடிதம் எழுதியிருந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது . பின்னர்  9 பக்கம்தான் என்று மாற்றிக் கூறினார்கள். ஏன் இந்த குழப்பம்  ?
2. அவருடைய  இரண்டு  செல்போன் ? லேப்டாப்  என்ன ஆனது  ?
3.  டி.எஸ்.பி.யாக  பணியாற்றியவர் ஏன்  தமிங்கிலிஷில் எழுத வேண்டும் ?
4. கடிதம் தொடர்பான  தடயவியல்  அறிக்கை  ஏன்  வெளியிடப்படவில்லை ?
5.  சிபிசிஐடி  விசாரணை  அறிக்கை  ஏன்  தாக்கல் செய்யப்படவில்லை ?
6. 'பிரேதப் பரிசோதனை  செய்ய வேண்டாம்' என்று போலீஸ் அதிகாரியாக இருந்த விஷ்ணுப்ரியாவே  கடிதத்தில் எப்படி எழுதியிருப்பார்?
7. 'அனைவரின்  மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்  பதிவு செய்ய சொல்கிறார்கள்'  என்று விஷ்ணுப்ரியா பேசியிருக்கிறார். ஆனால், புகாருக்கு  உள்ளான  அதிகாரி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
8. புகாருக்கு உள்ளான  அதிகாரிகள்  ஏன்  இதுவரை வெளிப்படையாக ஊடகங்களை  எதிர்கொள்ள  மறுக்கிறார்கள் ?

.... இப்படி விடைதெரியாத கேள்விகள் இந்தவழக்கின் நெடுகிலும் காத்துக் கொண்டிருக்கின்றன.  இந்தக் கேள்வி முடிச்சுகள் எப்போது, யாரால் அவிழ்க்கப்படும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்புமாக இருக்கிறது. காவல்துறையின் உயர் பதவியில் பணியாற்றிய ஒரு பெண் அதிகாரியின்  மர்ம மரணத்தின் உண்மையையே உலகிற்குச் சொல்லத் தயங்கும் அரசு, சாமான்யனின்  சாவுக்கு பதில் சொல்லுமா என்ன?

- கே.புவனேஸ்வரி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்