Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இதுவும்தாண்டா போலீஸ்! #கர்நாடக காருக்கு பல மைல் பாதுகாப்பு!

கேரளாவைச் சேர்ந்த ஜோயல் பிந்து என்பவர், பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஓணம் விடுமுறை கழிந்து, நேற்று மதுரை வழியாக பெங்களூர் செல்ல பயணித்துக் கொண்டிருந்தவர் மதுரை பைபாஸில்  போலீஸால் நிறுத்தப்படுகிறார்.
அதன்பின் நடந்தவை அவரது மொழியிலேயே:


”இன்று நடந்ததை நான் என்றும் எப்போதும் மறக்க முடியாது. தமிழக காவல்துறை செய்த ஒரு செயல் அந்த அளவுக்கு என்னையும் என் குடும்பத்தாரையும் மனதைத் தொட்ட நிகழ்வாக அமைந்துவிட்டது. பொதுமக்களுக்கு  தகுந்த பாதுகாப்பு கொடுப்பதில் தமிழக காவல்துறையின் தீரமும், அர்ப்பணிப்பும், நேர்மையும் எங்களை மிகவும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. 

ஓணம் விடுமுறை முடிந்து நான் பெங்களூர் திரும்பிக் கொண்டிருந்தேன். கொல்லத்திலிருந்து, மதுரை பைபாஸ் அருகே உள்ள டோல் கேடில் வண்டியை நிறுத்தினேன். அமைதியான ஒரு பெண் போலீஸ் கான்ஸ்டபில் கர்நாடக பதிவெண் பொருத்தப்பட்ட எனது வாகனத்தைப் பார்த்து ஓரமாக நிறுத்தச் சொன்னார். காவேரி பிரச்னையால் எங்கள் வாகனத்துக்கு ஆபத்து ஏதும் நேராமல் இருக்க போலீஸ் பாதுகாப்புடந்தான் நாங்கள் செல்ல வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு சாதாரண பொதுஜனம்.. பைபாஸில்  போலீஸ் பாதுகாப்புடன் செல்வதா என்று குழம்பியபடி காத்திருந்தேன். சிறிது நேரத்தில் மேலும் இரண்டு கர்நாடகா பதிவெண் கொண்ட கார்கள் எங்களோடு சேர்ந்து கொண்டன. காலை பத்து மணிக்கு எங்கள் பயணம் ஆரம்பித்தது.

எவ்வளவு தூரம் இந்த போலீஸ் எஸ்கார்ட் எங்களுக்கு என்று தெரியாமல் இருந்தது. மதுரை பைபாஸ் எல்லை தாண்டியதும், நாங்கள் போய்க்கொள்ள வேண்டியதுதான் என்று நினைத்தேன். ஆனால்.. ம்ஹும்!  போலீஸ் வாகனங்கள் ஒவ்வொரு செக் போஸ்ட்டிலும் நின்று, கர்நாடக பதிவெண் வாகனங்களைச் சேர்த்து அனுப்பிக் கொண்டே இருந்தன. நான்கில் ஆரம்பித்த கர்நாடக பதிவெண் வாகனங்கள்,  மொத்தம் 16 வாகனங்கள் சேர்ந்து கொள்ள பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது. சூரியன் மறைய ஆரம்பித்தது. காலையில் ஆரம்பித்து, தொடர்ந்து கொண்டே வந்த மதுரை போலீஸின் உற்சாகம் வடியவே இல்லை. தமிழ்நாடு எல்லையைத் தாண்டி கர்நாடக எல்லைக்குள் எங்கள் வாகனங்கள் நுழையும் வரை அவர்கள் தொடர்ந்தனர். என் வாகனத்தை நிறுத்தி ஒரு நன்றி தெரிவிக்க எண்ணினேன். ஆனால், பைலட்டாக எங்களுடன் வந்த வாகனமோ, நன்றி எதுவும் எதிர்பார்க்காமல் சடாரென யு டர்ன் அடித்து இருளில் மறைந்து விரைந்து சென்றது.

இரவு ஒன்பது மணிக்கு பெங்களூருக்குள் வந்துவிட்டோம். எங்கள் வாகனங்களை நுணுக்கமாக கண்காணித்து, கட்டுபாட்டோடு வழிநடத்தி பொதுமக்களின் பாதுகாப்பிற்காக.. - 350+ கிலோ மீட்டர்கள்.. ஓ... இது ஜோக் இல்லை. நிஜம்!

கடவுள் இவர்களைப் போன்ற வைராக்கியம் மிக்க நல்ல மனிதர்களை நமக்குத் தந்து நம் நாட்டை இன்னும் பலப்படுத்துவார் என வேண்டிக்கொள்கிறேன்”

இப்படி முடிகிறது அவரது நிலைத்தகவல். 

ஜோயலிடம் பேசினோம்.

“இதுவரை நம்பமுடியவில்லை. என் வாகனத்தில் நான், மனைவி, ஒன்றரை வயது குழந்தை, கஸின் ஆகியோர் இருந்தோம்.  எத்தனையோ டெக்னாலஜி உண்டு. சிசிடிவி, ட்ராக்கிங் சிஸ்டம் என்று எங்கள் வாகனத்தைக் கண்காணிக்க எத்தனையோ வழிகள் உண்டு. அதைக் கேட்கவும் செய்தேன். ‘ஒரு விஷயம் நடக்காமல் இருக்கத்தான் நாங்கள் முயல்கிறோம். நடந்த பின் கண்டுபிடிக்க அல்ல. ஒரு கல் விழுந்தாலும்  விளைவுகள் வேறு விதமாகலாம். உங்களை பாதுகாப்பாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பது எங்களுக்கு மேலிடத்து உத்தரவு’ என்றார் அந்தப் பெண் அதிகாரி. சரி.. கொஞ்ச தூரம் வருவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அங்கங்கே இருக்கும் போலீஸ், எல்லா கர்நாடகா பதிவெண் வாகனங்களையும் ஒன்று சேர்த்து இப்படி ரிலே ரேஸ் போல கிட்டத்தட்ட 350 கிலோ மீட்டருக்கும் மேலாக பாதுகாப்பு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை” என்று நெகிழ்கிறார்.

இதுவும்தான் போலீஸ்! 

-பரிசல் கிருஷ்ணா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement