Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெங்களூருவில் கலவரத்தை தூண்டிய அந்த நான்கு பேர்...!

ஐ.டி அவுட்சோர்சிங் சிட்டியான பெங்களூரு, நான்கு கன்னட அமைப்புகளின் ‘அவுட்சோர்சிங்’ ஆட்களிடம் சிக்கித் தவித்துவருகிறது. காவிரிப் பிரச்னை தீம்பிழம்பாக வெடித்தபிறகு, கன்னட அமைப்புகள் பெங்களூருவைக் ‘கடத்தி’ தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. பெங்களூருவில் கலவரம் வெடித்த 24 மணி நேரத்தில், 500-க்கும்  மேற்பட்ட வன்முறையாளர்கள் கைதுசெய்யப்பட்டனர். கைதானவர்கள், பெங்களூரு வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இருந்து செயல்படும் ரவுடிகள் மட்டுமல்ல... விளிம்புநிலை இளைஞர்களும்தான்.

கன்னடர்கள், பெருமையைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் கடந்த சில வருடங்களில் கர்நாடக ரக்ஷனா வேதிகா, ஜெயா கன்னட, ஒக்காடா மற்றும் கன்னடம் சேனா எனப் பல அமைப்புகளை உருவாகியுள்ளனர்.  தண்ணீரைவைத்து அரசியல் செய்த இந்த அமைப்புகள், அமீபாபோல சிறுசிறு கிளைகளாக வளர்ந்து இன்று காவிரித் தண்ணீருக்காக வன்முறை செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளன. இதில், பெரும்பாலான 25 மற்றும் 30 வயதுடைய இளைஞர்கள் தினக்கூலிகளாக, கட்டுமானத் தொழிலாளர்களாகப் பணியாற்றுகிறார்கள். கழுத்தில் சிவப்பு மற்றும் மஞ்சள் துண்டைப் போட்டுக்கொண்டு, தங்களை ஒரு போர்வீரன்போல நினைத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடும் இவர்களுக்குப் பின்புலமாக இருப்பது யார்? இந்த இளைஞர்களுக்கு இனவெறியை ஊட்டுவது யார்? அதன் பின்னணியில் உள்ளவர்களின் விவரம் இதோ...

வாட்டாள் நாகராஜ்:

கர்நாடகாவில் பல கன்னட அமைப்புகள் தோன்றியிருந்தாலும், இதற்கு எல்லாம் மூலமாக இருந்தவர் கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ். இவர், கடந்த 40 ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தியுள்ளார்.

எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே தமிழகத்துக்குத் தண்ணீர் தருவதை எதிர்த்துப் போராட்டங்களை நடத்தி வந்துள்ளார். தற்போதும் வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெங்களூரு, மாண்டியா, மைசூரு உள்ளிட்ட பல பகுதிகளில் வித்தியாசமான போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

நாராயண கவுடா:

கர்நாடக ரக்ஷனா வேதிகா அமைப்பின் தலைவராக இருப்பவர் நாராயண கவுடா. ஐ.டி துறையில் மற்ற மாநிலத்தவர்களுக்கு வேலை தருவதை எதிர்த்துப் போராட்டம் நடத்திப் பிரபலமடைந்தவர்கள் இந்த அமைப்பினர்.

காவிரி நீருக்காகவும், கர்நாடக எல்லை பிரச்னைக்காகவும் எப்போதாவது பிரச்னை செய்துவந்த இந்த அமைப்பினர், தற்போது முழுவீச்சில் இறங்கி வன்முறைகளைக் கட்டவிழ்த்துள்ளனர். நாராயண கவுடாவுக்கு அவர் சார்ந்திருக்கும் ஒக்கலிக்கா சமூக அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் பொருளாதாரப் பின்புலமாக இருக்கின்றனர்.

முத்தப்ப ராய்:

ஜெயா கன்னட அமைப்பை நடத்தும் முத்தப்ப ராய், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உடன் இணைந்து பல கடத்தல்களில் ஈடுபட்டவராம். இவர் மீது பல கொலை வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அரசியலில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில், ஜெயா கன்னட என்ற அமைப்பை நடத்தி வருகிறார் முத்தப்ப ராய். இவருக்கு ஏழு லட்சம் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. தனது ஆதரவாளர்களுக்குப் பணத்தை வாரி இறைத்துப் போராட்டம் நடத்தச் செல்வது இவரது ஸ்டைல்.

ஶ்ரீதர்:

‘அக்னி ’ஶ்ரீதர் என அழைக்கப்படும் இவர், ஒரு ரவுடி என்று சொல்லப்படுகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கன்னட சேனா என்ற அமைப்பைத் தொடங்கி பிரபலமடைந்தவர். தற்போது ஒரு பக்கம் புத்தகம் எழுதுவது.. மறுபக்கம் தனது அமைப்பை வலிமைப்படுத்துவது என தீவிரமாக செயல்பற்று வருகிறார். ‘‘மகாராஷ்டிராவுக்கு சிவசேனா... கர்நாடகாவுக்கு கன்னட சேனா’’ என ‘அக்னி’ ஶ்ரீதர் ஆதரவாளர்கள் பெருமை பொங்கக் கூறி வருகிறார்கள்.

மக்கள் மத்தியில் பிரமலமாவது யார்... அதிக TRP ரேட்டைப் பெறுவது யார் என்ற போட்டியில் இந்த அமைப்புகள் உருவாகியுள்ளன. இதன் விளைவுகளால்தான் அதிக வன்முறைச் சம்பவங்களை பெங்களூரு சந்தித்து வருகிறது. தங்கள் அரசியல் பாதுகாப்புக்கும், தனிப்பட்ட விருப்ப வெறுப்புகளுக்கும் கன்னட அரசியல்வாதிகள் இந்த அமைப்பினரைப் பயன்படுத்தி வருவதால், அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகின்றனர். பெங்களூருவை பிளவு, பிளவாகப் பிரித்து ஆதிக்கம் செலுத்துகிற இந்த மாஃபியா கும்பல்கள், ரியல் எஸ்டேட் டீலிங், மாமூல் வசூல் ஆகியவற்றைப் பொருளாதார ரீதியாகப் பலமாக வைத்திருக்கின்றன.உண்மையில், எம்.ஜி ரோடு, எலெக்ட்ரானிக் சிட்டி ஆகியவை மட்டும் பெங்களூருவின் முகம் அல்ல... மொழி, இனம் ஆகிய போர்வையில் இயங்கும் இந்த வன்முறைக் கும்பல்களை ஒழித்தால்தான் பெங்களூருக்கு நல்லது.

வன்முறைக் கும்பல்கள் களையெடுக்கப்படுமா?

- ஆ.நந்தகுமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement