Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெல்லி டூ ஜெனீவா! காந்தியவாதி ராஜகோபாலுடன் ஒரு நேர்காணல்...!

 

“2019-ம் ஆண்டு, டெல்லியிலிருந்து - ஜெனிவா நோக்கி ஒரு நடைப்பயணத்தை ஆயிரம் பேருடன் மேற்கொள்ள இருக்கிறேன்.  அதற்கான பணிகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறேன். 14 நாடுகள் வழியாக, 8,400 கிலோமீட்டர் நடைப்பயணம். அதிகமான உழைப்பைக் கோருகிறது. இப்போது அந்த வேலையில்தான் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு இருக்கிறேன்...” என்று ஓர் அசாதாரணமான வேலை குறித்த திட்டமிடலை, ஒரு காபி அருந்திக்கொண்டே வெகு சாதாரணமாக பகிர்கிறார் பி.வி.ராஜகோபால்.

ஹூம்... உங்களுக்கு பி.வி.ராஜகோபால் யாரென்று அறிமுகப்படுத்தவில்லை அல்லவா...? அவர் இந்தியாவின் தென் பகுதியான கேரளா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவராக இருந்தாலும், நமக்கு அவர் குறித்து அதிகம் தெரியாது. ஆனால், வட இந்தியர்கள் அவரை ‘ராஜு பாய்’ என்று கொண்டாடுகிறார்கள். விளிம்பு நிலையில் இருக்கும் மனிதர்கள் அதுவும் குறிப்பாக ஆதிவாசிகள், தங்கள் மீட்பனாக... தங்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் அவரிடம் தீர்வைத் தேடுகிறார்கள். அமைதியையும், அஹிம்சையையும் எப்போதும் காலாவதியான சித்தாந்தமாகப் பார்ப்பவர்கள், இவரை ‘பாதயாத்ரா (நடைப்பயண) காந்தி’ என்கிறார்கள். அவர்கள் கிண்டலாகவே சொல்லிவிட்டுப் போகட்டும், ‘பாதயாத்ரா காந்தி’ என்பது ஒன்றும் தவறான பதம் இல்லைதானே...? அந்தப் பதத்தில் அழைக்க மிகச்சரியான மனிதர்தான் இவர். ஆம், ஏறத்தாழ ஒரு லட்சம் பேரை திரட்டிக்கொண்டு, இவர் சென்ற இரண்டு நடைப்பயணங்கள்தான் பிரிட்டிஷ் காலத்தில் நிலம் கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முக்கியக் காரணம்.

சென்னை வந்திருந்தவரை மாலையும், இரவும் ஊடாடும் ஒரு நேரத்தில் நேற்றுச் சந்தித்தேன். அமைதியைப் போதிக்கும் மனிதருடனான ஓர் உரையாடலை, ‘உலக அமைதி நாள்’ அன்று பகிர்வது, நிச்சயம் ஆச்சர்யமான தற்செயல் நிகழ்வுதான்.

“உங்களை விமர்சிப்பவர்கள் உங்கள் மீதுவைக்கும் குற்றச்சாட்டில் இருந்தே என் கேள்வியைத் தொடங்குகிறேன்.இன்னும் காந்திய சித்தாந்தம் பயன் தரும் என்று நம்புகிறீர்களா...?’’

‘‘நிச்சயம் நம்புகிறேன். சொல்லப்போனால், அதை மட்டுமேதான் நம்புகிறேன். காந்தி முன்மொழிந்துவிட்டுப்போன அஹிம்சையைவிட, உங்களுக்கான நீதியை, நியாயத்தைத் தழுவ வேறு என்ன வழிமுறை இருக்கிறது...? ஆயுதத்தால் உங்களுக்கான நீதியை வென்றுவிடலாம் என்று நம்புகிறீர்களா...? அது நிச்சயம் முடியாது.

 

‘‘காந்தி காலத்தில் இருந்த சிக்கல்கள் வேறு... ஆனால், இப்போது... அதுவும் உலகமயமாக்கலுக்குப் பின் இருக்கும் சிக்கல்கள் அதிதீவிரமானவை. அப்போது இருந்த அறம், இப்போது இல்லை. இன்னும் 60 ஆண்டுகளுக்கு முந்தைய வழிமுறை எப்படிப் பயன் தரும்?’’

‘‘சரி... இது பயன் தராது என்று வைத்துக்கொள்ளுங்கள்... ஆயுதம்தான் தீர்வு என்ற ஒரு வாதத்தை வைத்துக்கொள்வோம். அந்த ஆயுதம் வாங்க, பணம் தேவை... அந்த ஆயுதமும் ஒரு பெரும் நிறுவனத்திடம்தான் இருக்கப்போகிறது. நீங்கள் யாரை எதிர்க்க வேண்டும், உங்கள் சித்தாந்தம் எதைப் போதிக்கிறதோ... இறுதியில் உங்களையும் அறியாமல், நீங்கள் அவரையே சார்ந்து இருக்கும் நிலை ஏற்படுகிறது. அதுவும், உங்களைவிட அரசுகளிடம் அதிக ஆயுதங்கள் இருக்கின்றன... பணம் இருக்கிறது. உங்களால் அதை எப்படி வெல்ல முடியும்.  சொல்லப்போனால், நீங்கள் சொல்லும் இந்த 60 ஆண்டுகளுக்குப் பின்புதான், அஹிம்சையின் தேவை அதிகம் இருக்கிறது.’’

 

‘‘ஆனால், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசே... தன் பெரும்பாலான மக்களுக்கு எதிரான திட்டங்களைத் தீட்டுகிறதே. அறமற்ற அரசுகளை, மக்களுக்கான அரசுகளாக எப்படி மாற்றுவது...?’’

‘‘நீங்கள் வாக்களிப்பதுடன், உங்கள் கடமை முடிந்துவிட்டது என்று எண்ணுவதால்தான்... அரசு, நிறுவன நலன் சார்ந்த அரசாக மாறிவிட்டது. நிச்சயம், அரசைத் தேர்ந்தெடுப்பதுடன் நம் கடமை முடியவில்லை. அப்போதுதான் தொடங்குகிறது. ஒரு நல்ல குடியாட்சி என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைத் தொடர்ந்து ஒரு மக்கள் சக்தி கண்காணிக்க வேண்டும், கட்டுப்படுத்த வேண்டும். அந்த மக்கள் சக்தி, ஒழுக்கம் மற்றும் சமூக மதிப்பீடுகள் மீது அதீத நம்பிக்கையும், பற்றும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அரசுகள் என்பது யானை போன்றது... அதற்கு பாகன் இல்லை என்றால் அது, தோன்றித்தனமாகத்தான் நடக்கும். மக்கள்தான் அதன் பாகன்.’’

 

‘‘இது இயலும் என்று நம்புகிறீர்களா... ஒரு பக்கம் நிறுவனமயத்தால், சமூக மதிப்பீடுகள் மாறிவிட்டன மற்றும் தனி மனிதனின் ஆன்மாவே கறைபடிந்துவிட்டது. இத்தகைய சூழலில் இது எப்படி சாத்தியம்...?’’

‘‘அப்படியானால், நீங்கள் மாற்றம் வர வேண்டும், அமைதியான வாழ்வு வேண்டும் என்று  எதிர்பார்க்கவில்லையா? தனி மனிதனிடம் கட்டற்றுக் குவியும் பொருளாதாரத்தை, லஞ்சத்தை, ஊழலை, இந்தச் சமத்துவமின்மையை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று நீங்கள் விரும்பவில்லையா..? நிச்சயம் நாம் அனைவரும் எதிர்பார்க்கிறோம்தானே... ஆனால், நாம் யாரும் அதற்காக வேலை பார்க்கத் தயாராக இல்லை. அதனால், நமக்கு நாமே இதுபோன்ற சமாதானங்கள் சொல்லிக்கொள்கிறோம். மாற்றத்தை விரும்புபவர்கள் அனைத்துத் தளங்களிலும் இருக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைக்கும் பணியில்தான் இருக்கிறேன். இது உடனே முடியும் வேலை இல்லை. இது பெரும் பணி... அதற்கு நீண்டகாலம் தேவைப்படும். ஆனால், நிச்சயம் அந்த மாற்றம் வரும். யாராலும் வெகுகாலம் இந்தச் சாக்கடையில் உழல முடியாது அல்லவா..?’’

 

 

‘‘நடைப்பயணத்தால் மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று நம்புகிறீர்களா...?’’

‘‘நடைப்பயணம் என்பது மக்களுடன் உரையாடுவதற்கான ஒரு வாய்ப்பு... ஒரு லட்சம் மக்களுடன் எல்லாம், நடைப்பயணம் சென்று இருக்கிறேன். அப்படியானால், ஒரு லட்சம் மக்களுடன், அவர்கள் நலன் சார்ந்த அரசியலைப் பேசி இருக்கிறேன் என்றுதானே அர்த்தம். இவ்வளவு மக்களைத் திரட்டி நடைப்பயணம் செல்லும்போது, அவர்களுடன் ஒரு நீண்ட உரையாடலை நிகழ்த்த முடிகிறது. இதற்குத்தான் அரசும் அஞ்சுகிறது. நான் முன்பே சொன்னதுபோல் நீங்களை அரசை ஆயுதத்தால் எதிர்கொள்ளும்போது, அரசால் சுலபமாக நம் மக்களையே நமக்கு எதிராகத் திருப்பிவிட முடியும். ஆனால், அமைதியை முன்வைக்கும்போது, அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் வேண்டுமானால், வன்முறையை ஏவலாம். ஆனால், மக்கள் அரசியல்மயப்படுவதைத் தடுக்க முடியாது. பெருந்திரளான மக்கள் தொடர்ந்து அரசியல்மயப்பட்டுக்கொண்டே வரும்போது, ஒரு கட்டத்தில் மாற்றம் வந்தேதானே தீரும்.’’

 

‘‘மத்தியில் பல ஆட்சி மாற்றத்தைப் பார்த்து இருக்கிறீர்கள்... பல பிரதமர்கள், அமைச்சர்களுடன் உரையாடி இருப்பீர்கள்... இந்த அரசை எப்படிப் பார்க்கிறீர்கள்...?’’

‘‘உலகமயமாக்கலுக்கு நிறம் இல்லை...! அனைத்துக் கட்சிகளும் இங்கு ஒன்றுதான். நிலத்தின்மீது, நான் குடிக்கும் தண்ணீர்மீது அவர்களுக்கு எந்த அறம் சார்ந்த மதிப்பீடுகளும் கிடையாது. அரசுகள் நிறுவனமயமாகிவிட்டது. அவர்களுக்கு அனைத்துமே பண்டங்கள்தான்.’’

 

‘‘அடுத்து, உங்கள் நடைப்பயணம்...?’’

‘‘சம்பரானிலிருந்து, பாட்னாவரை ஒரு நடைப்பயணம். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் செல்கிறேன். 1917-ம் ஆண்டு காந்தி, சம்பரானில் விவசாயிகள் நலனுக்காகப் போராடினார். 100 ஆண்டுகள் ஆகப்போகின்றன. ஆனால், ஆண்டுக்கு 17,000 விவசாயிகள் இந்தியாவில் சாகிறார்கள். இது, வெட்கக்கேடு இல்லையா? அரசுக்குக் கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமா? கொஞ்சமாவது அரசுக்கு மனசாட்சி இருந்தால், அதைத் தட்டி எழுப்பும் முயற்சியாகத்தான் இந்த நடைப்பயணம். மக்களுக்கும் தெரிய வேண்டும் அல்லவா...? இந்த அரசுகள், விவசாயிகளுக்கு என்ன செய்திருக்கின்றன என்று... அடுத்து, 2019-ம் ஆண்டு டெல்லியிலிருந்து, ஜெனிவா நோக்கி ஒரு நடைப்பயணம்...’’

 

‘‘ஜெனிவா நோக்கியா...?’’

‘‘ஆம்... இறையாண்மையான அரசு என்று பிதற்றிக்கொள்ளும் எதுவும் தன் மக்களுக்கான முடிவை, தானே எடுப்பதில்லை... உலகமயமாக்கலுக்கு எல்லைகள் கடந்து சிக்கல்கள் அனைத்தும் பின்னிப்பிணைந்துவிட்டன... அதற்காக ஐ.நா. சபை இருக்கும் ஜெனிவா நோக்கி ஒரு நடைப்பயணம்... 14 நாடுகள் வழியாக 8,400 கிலோமீட்டர் செல்கிறோம்.’’

 

‘‘நீங்கள் சொல்லுவது அசாத்தியமான ஒன்றாக இருக்கிறது... நடைப்பயணம்... அதன்மூலமாக மக்களைத் திரட்டுவது, அரசியல்மயப்படுவது, அதன்மூலமாக மாற்றம்... இது, எல்லாவற்றையும் நீங்கள் முதலில் நம்புகிறீர்களா...?  இதே கேள்வியை நான் சுற்றிச்சுற்றி வருவதற்காகக் கோபம்கொள்ளாதீர்கள்...’’

(சிரிக்கிறார்...).‘‘ஆசிரியர் கிரிபால்னி ஒருமுறை காந்தியிடம், ‘நீங்கள் மக்களை முட்டாள் ஆக்குகிறீர்கள். வரலாற்றில் எந்தப் புரட்சியும் அமைதியால் வென்று எடுக்கப்பட்டதில்லை... ஆயுதத்தால்தான் வென்று எடுக்கப்பட்டு இருக்கிறது... நீங்கள் பொய்யான ஒரு தத்துவத்தை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறீர்கள்..’ என்றார். அதை  அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த காந்தி, ‘நீங்கள் வரலாற்றைப் பாடமாக எடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்... நான் படைத்துக்கொண்டு இருக்கிறேன். நிச்சயம் ஒருநாள், நீங்கள் அஹிம்சை குறித்தும் பாடம் எடுப்பீர்கள்’ என்று பதில் அளித்தார். இறுதியில் காந்தி சொன்னதுதானே நிகழ்ந்தது. வரலாற்றின் இறுதிப்பக்கம் இன்னும் எழுதப்படவில்லை...!’’

 

‘‘இறுதியாக ஒரு கேள்வி... பொதுவாக உங்களைப்போல் அஹிம்சையைப் போதிக்கும் ஆட்கள் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது...அதாவது, மக்களுக்கு அரசின் மீது இருக்கும் கோபத்தை மடைமாற்றுகிறீர்கள்... அரசைக் காப்பாற்றுகிறீர்கள் என்று...?’’

‘‘காந்தி மீதே அந்தக் குற்றச்சாட்டு இருந்ததுதானே...? அது, ஆயுதங்கள் மீது காதல் கொண்டவர்கள்வைக்கும் குற்றச்சாட்டு... அவர்கள், ‘எங்களைக் கோழைகள்’ என்கிறார்கள்... ஆனால், உலகமயமாக்கலுக்குப் பின், ஆயுதத்தின் மூலம் எங்கு ஒரு திடமான அரசு நிறுவப்பட்டு இருக்கிறது என்று காட்டுங்கள் பார்ப்போம்? நிச்சயம், ஆயுதத்தால் அன்பை விளைவிக்க முடியாது... நல்ல அரசைக் கட்டமைக்க முடியாது. நிச்சயம் மாற்றம் வர வேண்டும்தான்... அது அன்பின் வழியில், அமைதியின் வழியில்தான் இருக்க வேண்டும்.’’

மெலிதான தூரல் வெளியே தூர, இறுக்கமான கைகுலுக்களுக்குப் பின் அங்கிருந்து விடைபெற்றேன்.

- மு.நியாஸ் அகமது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement