காவிரி குடிநீரில் 50 சதவிகிதத்தை இப்படித்தான் வீணாக்குகிறது பெங்களூரு! (பட விளக்கம்) | Bengaluru Wastes 50 percent of Water it gets from Cauvery River

வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (21/09/2016)

கடைசி தொடர்பு:17:50 (17/11/2017)

காவிரி குடிநீரில் 50 சதவிகிதத்தை இப்படித்தான் வீணாக்குகிறது பெங்களூரு! (பட விளக்கம்)

 

இந்த ஆண்டு சராசரி அளவை விட பருவமழை குறைவானதால், கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் தேக்கங்களில், தண்ணீரின் அளவு பாதிக்கும் கீழ் குறைந்துள்ளது என்று காரணம காட்டி கர்நாடக அரசு தண்ணீர் வழங்க மறுப்பு தெரிவிக்கிறது. நல்ல பருவ மழை பெய்தாலும், காவிரி ஆறு நிரம்பி செழித்து ஓடினாலும், அங்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்கத்தான் செய்கிறது என்கிறது புள்ளி விவரங்கள். அப்படியானால் கர்நாடகாவுக்கு தண்ணீர் தேவை அதிகமாக இருக்கிறது, என்று உருவகம் செய்ய வேண்டாம். இந்த தண்ணீர் பற்றாக்குறை இயற்கையாக அல்ல, செயற்கையாக உருவாகியுள்ளது.

கர்நாடகாவுக்கு கிடைக்கும் 270 டி.எம்.சி காவிரி நீரில், 80% விவசாயம் மற்றும் தொழில் துறைக்கு பயன்படுகிறது. மீதமுள்ள 20% நீர், மக்கள் பயன்பாட்டுக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதிலும், தலைநகர் பெங்களூருவுக்கே முன்னுரிமை. 85 லட்சம் பெங்களூரு மக்களின் அன்றாடும் தேவைக்கு 10% காவிரி நீர் வழங்கப்படுகிறது. பெங்களூரு மாநகரோடு இணைக்கப்பட்டுள்ள 110 கிராமங்களுக்கும் இதே தண்ணீர் தான்.


ஒரு நாளுக்கு பெங்களூருவுக்கு 1,350 மில்லியன் லிட்டர்கள் கிடைக்கிறது. இதில் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், கிட்டத்தட்ட 600 மில்லியன் லிட்டர் தண்ணீர் வீணாகிறது. அதாவது தனக்கு கிடைக்கும் காவிரி நீரில் 49 சதவிகிதத்தை வீணாக்குகிறது பெங்களூரு. “இதனை வருவாய் இல்லாத தண்ணீர் (Non Revenue Water)“ என்கிறது பெங்களூர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் மேலாண்மை வாரியம். அதாவது பகிர்மானத்தின் போது வீணாகும் தண்ணீருக்கு இப்படி பெயர். இந்த தண்ணீரால் அரசுக்கு எந்த வருவாயும் இல்லை என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

பெங்களூரு நகரம் வீணாக்கும் காவிரி நீர் குறித்த இன்ஃபோகிராப் தகவலை, கீழே உள்ள படத்தை க்ளிக் செய்து பார்க்கலாம்.

Bengaluru Wasteage of 50% cauvery Water

 

நீர் வீணாவதை இரண்டு வகையாக இங்கு பிரிக்கிறார்கள். நீர் தேக்கங்கள், பகிர்மான நிலையங்கள், சுத்தீகரிப்பு நிலையங்கள், பகிர்மான குழாய்கள் போன்றவற்றில் ஏற்படும் நீர் கசிவு மிக முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது. அனுமதியற்ற தண்ணீர் இணைப்புகளால் மீதமுள்ள தண்ணீர் திருடப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆக மொத்தம் ஒரு பெங்களூரு வாசிக்கு நாள் ஒன்றுக்கு கிடைப்பது 65 லிட்டர் தண்ணீர் தான். ஆனால் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின் படி, ஒரு நபருக்கு சராசரியாக 150 லிட்டர் தண்ணீர் கிடைக்க வேண்டும். வீணாகும் 600 மில்லியன் லிட்டர் தண்ணீரை முறையாக சேமித்தால் ஒரு நபருக்கு 158 லிட்டர் தண்ணீரை வழங்க முடியும் என்கிறது பெங்களூருவில் செயல்படும் Institute for Social and Economic Change (ISEC) என்ற மத்திய அரசு அமைப்பு .

தேசிய அளவில் தண்ணீரை வீணாக்கும் மெட்ரோ நகரங்களின் பட்டியலில் 48 சதவிகிதத்துடன் பெங்களூரு இரண்டாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் கொல்கத்தா(50%) உள்ளது. சென்னை 20% நீரை வீணாக்குகிறது. இதுவே பெங்களூருவின் நீர் மேலாண்மையின் மேசமான நிலையை வெளிச்சமிட்டு காட்டுகிறது. ஒரு நாளைக்கு நீரினால் கர்நாடக அரசுக்கு ஏற்படும் இழப்பு 1.68 கோடி ரூபாய்.

indian metros water wastage statistics

வளரும் மக்கள் தொகையை மனதில் கொண்டு பெங்களூருவின் தேவையை பூர்த்தி செய்ய தற்போது பெங்களூருவுக்கு வழங்கப்படும் நீரை 19 டி.எம்.சியில் இருந்து 30 டி.எம்.சியாக உயர்த்தியுள்ளது கர்நாடக அரசு. கூடுதலான இந்த 11 டி.எம்.சி நீரூக்கு எங்கு போவது? விவசாயிகளுக்கான பங்கில் தான் கைவைக்க வேண்டி இருக்கும். 2007 விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஒதுகப்பட்ட நீரை 90 சதவிகிதத்தில் இருந்து 80 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு அலட்சியத்தின் விளைவு விவசாயிகளின் தலையிலா?. நியாயமாக பார்த்தால் கர்நாடக அரசுக்கு எதிராகத்தான் விவசாயிகள் போர் கொடி தூக்க வேண்டும்.

ஆட்சியை மாற்றும் சக்தி தண்ணீருக்கு உண்டு. தலைநகரில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் அது மாநிலத்துக்கே ஏற்பட்ட பற்றாக்குறை போல பின்பம் ஏற்படுத்த அரசியல் கட்சிகள் தயாராக இருக்கின்றன. ‘அரசின் இயலாமை’ என்ற ஒரு வார்த்தையில், ஆட்சியை பறிகொடுத்து விடுவோமோ என்ற அச்சம், ஆளும் அரசுக்கு. இவர்களின் அரசியல் விளையாட்டுக்கு விவசாயிகள் தான் பொம்மை. பெங்களூருவில் நடந்த வன்முறை வெறியாட்டங்களில் இது அப்பட்டமாக தெரிந்திருக்கும். பேருக்கு தான் விவசாயிகள் போராட்டம், ஆனால் அதில் ஒரு விவசாயியைக் கூட பார்க்க முடியவில்லை. அதிலும் விவசாயிகளின் உரிமை பறிபோனது தான் வேடிக்கை.

“தேவை... தேவை....” என்று தங்கள் உரிமைகளுக்காக போர் கொடி தூக்கும் இரு மாநில அரசுகளும், அதே போர் குணத்தை தண்ணீரை சேமிப்பதிலும், வீணாகாமல் தடுப்பதிலும் ஆக்கப்பூர்வமாக செலுத்தினால் தமிழ்நாடு கர்நாடக எல்லை, இந்தியா பாகிஸ்தான் எல்லை போல் ஆகாமல் இருக்கும். விவசாயிகளும், பொதுமக்களும் இதை புரிந்து கொண்டு தங்கள் மாநில அரசுகளை வழிநடத்த வேண்டும்.

 

ரெ.சு.வெங்கடேஷ்

Infograph: ஹாரிஃப் முகமது


டிரெண்டிங் @ விகடன்