'இரண்டாவது தடவையும் தோற்றுப்போக விரும்பமாட்டார் அகிலேஷ்!' - சந்திக்கு வந்த சமாஜ்வாதி மோதல்

முலாயம் சிங், அகிலேஷ் யாதவ்

 

ந்தை - தனயன், அண்ணன் - தம்பி என  குடும்பச் சண்டையில் பல சாம்ராஜ்யங்கள் வீழ்ந்த கதை இந்தியாவுக்கு புதிது அல்ல. அதிலும் இன்றைய அரசியலில், அதிகாரப் பதவிகளின் போதையை ருசித்துவிட்டவர்கள், அதனை தக்க வைத்துக்கொள்ள எந்த மட்டத்திற்கும் செல்ல தயங்கமாட்டார்கள் என்பதை பல அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பங்களில் நடந்த நிகழ்வுகள் நமக்கு உணர்த்தி இருக்கின்றன. இதற்கு தமிழகத்தில் திமுகவில் தொடங்கி மகாராஷ்ட்ராவில் சிவசேனா கட்சியின் பால்தாக்கரே குடும்பம் வரை பல உதாரணங்களை அடுக்கலாம். தற்போது அப்படியான  ஒரு குடும்பச் சண்டையில்தான் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஆளும் கட்சியான சமாஜ்வாதி கட்சி சிக்கித் தவிக்கிறது. கட்சியின் அகில இந்திய தலைவரான முலாயம் சிங்கின் சகோதரர் ஷிவ்பால் யாதவுக்கும், மகன் அகிலேஷ் யாதவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கட்சியையே பிளவுப்படுத்திவிடுமோ என்கிற அளவுக்கு குடும்பத்தில் உள்ளுக்குள் புகைந்துகொண்டிருந்த சண்டை,  வீதிக்கு வந்து சிரிப்பாய் சிரித்த நிலையில், கடும் முயற்சிக்கு பின்னர் இருவரையும் சமாதானப்படுத்தி உள்ளார் கட்சித் தலைவர் முலாயம் சிங்.

பகவான் கிருஷ்ணரின் மறைவுக்குப் பின்னர், யாதவ குலத்தின் பெருமையும் புகழும் சகோதரச் சண்டையினால் அழிந்ததாக புராணம் சொல்கிறது. அது புராணம். ஆனால் தற்போது உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் அரசியல் அதிகாரப்போட்டி,  கண்முன்னால் நடந்துகொண்டிருக்கும் அப்பட்டமான நிஜம். அதே கிருஷ்ணர் குலத்தின் வழித்தோன்றலான சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு வயதாகிவிட்ட நிலையில், புராணத்தில் சொல்லப்பட்டது நிஜமாகிவிடும் என்று எண்ணும் அளவுக்கு கட்சித் தலைவர் பதவி மற்றும் முதலமைச்சர் பதவியை மையமாக வைத்து முலாயமின் சகோதரர் ஷிவ்பாலும் மகனும் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவும் முட்டி மோதினர்.

" இது அரசியல் பிரச்னைதானே தவிர, குடும்பச்சண்டை இல்லை" என அகிலேஷ் யாதவ் சமாளித்தாலும், அதன் அர்த்தம் 'முதலமைச்சர் பதவியை ஷிவ்பால் குறிவைக்கிறார்' என்பதுதான். இந்த பிரச்னை இப்போது ஏற்பட்டதல்ல, நீண்ட நாட்களாகவே புகைந்துகொண்டிருந்ததுதான் இப்போது பகிரங்கமாக பற்றி எரியத் தொடங்கி உள்ளது. முலாயம் குடும்பத்தினரை பொறுத்தவரை அக்குடும்ப உறுப்பினர்கள் பலபேர் அரசியல் அதிகார மையங்களாக திகழ்கிறார்கள். அதில் முக்கியமானவர் ஷிவ்பால். கட்சியில் முலாயமுக்கு அடுத்தபடியாக தொண்டர்களிடையே பரவலான செல்வாக்கு கொண்டவர். எனவே முலாயமுக்கு அடுத்து தான்தான் முதலமைச்சர் என்ற கனவில் இருந்தவருக்கு திடுமென, அகிலேஷ் யாதவை அப்பதவிக்கு கொண்டு வந்ததை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அகிலேஷ் அதிகாரத்திற்கு வந்ததும், தான் ஓரங்கப்பட்டதாக உணர்ந்தார். ஆனாலும் அண்ணனை ( முலாயம்) மீறி எதுவும் செய்ய முடியவில்லை. இருப்பினும் கட்சியில் அவருக்கு இருந்த செல்வாக்கால், ஷிவ்பாலை பாதி முதலமைச்சர் என்றே கட்சியினர் அழைத்து வந்தனர். இது அவர் எந்த அளவுக்கு அகிலேஷ் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசில் ஆதிக்கம் செலுத்தி வந்தார் என்பதை உணர்த்தும். அகிலேஷுக்கு இது கடும் எரிச்சலை ஏற்படுத்தினாலும் குடும்பத்தை கருதி சகித்துக்கொண்டு வந்தார். ஆனால் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டுதானே...? தற்போது அந்த எல்லையை தாண்டிவிட்டார் அகிலேஷ். 'இதை செய்யாதீர்கள்... இதனை அனுமதிக்க முடியாது...!" என அவர் மறுப்பு சொல்லவும்தான் ஷிவ்பாலுடன் வெடித்தது மோதல்.

அகிலேஷ் முதல்வர் ஆக்கப்பட்டது ஏன்?  

மோதலுக்கு காரணம் என்ன என்பதை அறிந்துகொள்ளும் முன், அகிலேஷ் ஏன் அரசியலுக்குள் இழுத்துவரப்பட்டு முதலமைச்சராக்கப்பட்டார் என்ற கதையை பார்த்துவிடுவோம். அரசியலில் அகிலேஷ் முதலில் அடியெடுத்து வைத்தது 2000 ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் கன்னாயுஜ் நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலின்போதுதான். அத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி-யான அவர், அதன் பின்னர் மேலும் இரண்டு முறை எம்.பி. பதவியை வகித்தார். இந்நிலையில்தான் 2012 உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதனையடுத்து முதலமைச்சராக முலாயம் சிங்தான் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக தனது மகனான அகிலேஷை முதலமைச்சர் பதவிக்கு முன் நிறுத்தினார் முலாயம். தேர்தலில் அகிலேஷ் யாதவை முதல்வர் வேட்பாளர் எனச் சொல்லி வாக்கு கேட்கவில்லை சமாஜ்வாதி கட்சி. இதனால் முலாயம் இவ்வாறு கூறவும், அக்கட்சி எம்.எல். ஏக்கள் ஒரு கணம் திகைத்துதான் போயினர். அவர்களுக்கு திகைப்பு என்றால், முலாயமின் சகோதரரான ஷிவ்பாலுக்கோ ஆத்திரமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. அவர் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதனால் அகிலேஷ் மீது கடும் சினத்துடனேயே உள்ளுக்குள் பொறுமிக்கொண்டு இருந்தார் ஷிவ்பால்.  

 

ஆனால் முலாயமின் கணக்கோ வேறு மாதிரியாக இருந்தது. தம் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரித்துக்கொண்டிருக்கும் நிலையில், கட்சியில் முன்னணி தலைவர்களாக வலம் வந்துகொண்டிருக்கும் பலரும் ஊழல் கறை படிந்தவர்களாகவே திகழ்கின்றனர். இன்னும் இரண்டு வருடங்களில் நாடாளுமன்ற தேர்தல் வந்துவிடும். மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. எனவே மத்தியில் ஆட்சியமைப்பது யார் என்பதை தீர்மானிக்கக் கூடிய உத்தரபிரதேச மாநிலத்தில் பெருவாரியான தொகுதிகளை கைப்பற்றினால்தான் மத்திய அரசியலில் செல்வாக்கான பதவியைப்பெற முடியும். அதிலும் மூன்றாவது அணி ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் தாமே பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கணக்குப்போட்டார். அப்படி நாடாளுமன்ற தேர்தலில் அதிகமான இடங்களை கைப்பற்ற வேண்டுமானால்,   'மிஸ்டர் க்ளீன்' இமேஜ் கொண்ட ஒரு இளம் தலைவரை முதலமைச்சராக்கி கவர்ச்சிகரமான திட்டங்களை செயல்படுத்தி மக்களை கவர வேண்டும். சகோதரர் ஷிவ்பாலுக்கு கட்சித் தொண்டர்களிடையே செல்வாக்கு காணப்பட்டாலும் தேர்தலில் வெற்றியை தேடித்தரக்கூடிய அளவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதையும் முலாயம் உணர்ந்தார். எனவே வெளிநாட்டில் படித்த, கட்சியில் உள்ள மற்ற தலைவர்களைக் காட்டிலும் வித்தியாசமாக உள்ள, புதுமுகமாகவும் மேற்கத்திய பாணியில் பளபளப்பான தோற்றத்துடனுன் காணப்படும் அகிலேஷை முதலமைச்சராக்கி, வளர்ச்சியை மையமாகக் கொண்ட புதுமையான அரசு நிர்வாகத்தை அளித்தால் நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிகளை அள்ளலாம் என திட்டமிட்டே அகிலேஷை முதலமைச்சராக்கினார். கூடவே சமாஜ்வாதியின் மாநில கட்சித் தலைவர் பதவிக்கும் அவரை கொண்டு வந்தார் முலாயம். அவர் இவ்வாறு செய்ததில் வியப்பேதும் இல்லை. அது இயல்பானதும், காலங்காலமாக இந்திய அரசியலில் பல்வேறு கட்சிகளில் அரங்கேறிக் கொண்டு இருக்கும் நிகழ்வும் கூட.

மோதலுக்கு காரணம்  

அதே சமயம் சகோதரர் ஷிவ்பாலையும் ஒதுக்கிவிடவில்லை முலாயம். அவருக்கு நில மேம்பாடு, நீர்வளம் மற்றும் சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய இலாகாக்களின் அமைச்சராக்க வைத்தார். கூடவே கட்சியிலும் செல்வாக்குடன் வலம் வந்தார் ஷிவ்பால். முலாயம் சிங்கின் நம்பிக்கைக்குரிய இளைய சகோதரர் என்பதால் ஷிவ்பாலுக்கு சமாஜ்வாதி கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்களிடையேயும் தொண்டர்களிடையேயும் நல்ல மரியாதை உண்டு. இருப்பினும் அகிலேஷ் முதலமைச்சராக்கப்பட்டதிலிருந்தே ஷிவ்பால் மனம் புழுங்கத்தொடங்கி விட்டார். அதனை அவர் மனதிற்குள்ளேயே வைத்துக்கொண்டிருந்தாலும், முலாயம் குடும்பத்தில் விரிசல் வெடித்துள்ளது என்பதற்கான அறிகுறிகள் முதலில் தென்படத் தொடங்கியது கடந்த டிசம்பர் கடைசியில்தான். அகிலேஷுக்கு நெருக்கமான சுனில் யாதவ் மற்றும் அசிஷ் படோரியா உள்ளிட்ட சிலரை முலாயம் நீக்கியபோது, அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அவர். கூடவே பாலிவுட் நட்சத்திரங்களை அழைத்து வந்து முலாயம் தமது சொந்த கிராமத்தில் நடத்திய மகாஉத்சோவ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது என அகிலேஷ் மறுக்கவும், வேறு வழியில்லாமல் நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்து, அவர்களுக்கு எம்.எல்.சி பதவிகளையும் அளித்தார் முலாயம்.

 

ஷிவ்பால் யாதவ்

அப்போதைக்கு பிரச்னை ஓய்ந்த நிலையில், அடுத்த மோதல்  ஷிவ்பால் உடன். உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் செல்வாக்குடன் திகழும் குவாமி ஏக்தா தள் கட்சியை சமாஜ்வாதி கட்சியுடன் இணைக்க சில மாதங்களுக்கு முன்பு ஷிவ்பால் தீவிர முயற்சி மேற்கொண்டார். அக்கட்சியின் தலைவர்களான முக்தார் அன்சாரியும் அவரது சகோதரரான அஃப்சல் அன்சாரியும் முன்பு பிரபல ரவுடிகளாக திகழ்ந்தவர்கள் என்பதால், அந்த கட்சியை இணைத்தால் சமாஜ்வாதி கட்சிக்கு அடுத்த ஆண்டு நடைபெற சட்டசபை தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்று கருதி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் இது தன்னை அவமானப்படுத்துவதாக உள்ளது என்று முலாயமிடம், அவரது சகோதரர் ஷிவ்பால் புகார் தெரிவிக்க,  அப்போதைக்கு அகிலேஷை கண்டித்து அடக்கி வைத்தார் முலாயம்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம், அதிகாரிகள் தாம் சொல்வதை கேட்பதில்லை என்றும், இது நீடித்தால் தாம் அமைச்சரவையிலிருந்து விலக நேரிடும் என ஷிவ்பால் எச்சரிக்கவும், மீண்டும் முலாயம் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி, அவர்கள் இருவரையும் ஒரே மேடையில் ஏற்றி குடும்பத்துக்குள் ஒற்றுமை இருப்பதுபோன்று காட்டிக்கொண்டார். ஆனால் இந்த ஒட்டுப் பிளாஸ்திரி வேலைகள் அதிக நாட்கள் நீடிக்கவில்லை.

அரங்கேறிய அதிரடிகள்

ஊழல் புகாரில் சிக்கிய சுரங்கத்துறை அமைச்சர் காயத்ரி பிரஜாபதி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ராஜ்கிஷோர் ஆகியோரை கடந்த வாரம் அகிலேஷ் அதிரடியாக நீக்கினார். இவர்கள் இருவரும் ஷிவ்பாலின் ஆதரவாளர்கள் ஆவர். 'இவர்களை பதவியில் விட்டு வைத்தால் 2017 சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு எழுப்ப ஏதுவாகிவிடும்; அதனால் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும்' என்று கருதியே அகிலேஷ் இந்த முடிவை மேற்கொண்டதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மறுதினமே மாநில அரசின் மாநில தலைமைச் செயலர் தீபக் சிங்காலையும் அகிலேஷ் நீக்கினார். இவரும் ஷிவ்பாலின் ஆதரவாளர்தான். இதனால் ஷிவ்பால் கொந்தளித்துப்போனார். இதுகுறித்து முலாயமிடம் அவர் ஆவேசம் காட்ட, அகிலேஷுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரிடமிருந்த கட்சியின் மாநிலத் தலைவர் பதவியை பறித்த முலாயம், அப்பதவிக்கு தனது சகோதரர் ஷிவ்பாலை நியமித்தார்.

கட்சியிலும், ஆட்சியிலும் நடந்த இந்த அதிரடிகள் உத்தரபிரதேச அரசியலில் பரபரப்பை கிளப்ப, கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் நடப்பது என்ன என்பதை புரிந்துகொள்ள முடியாமல் குழம்பினர். ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், " இருவருக்கும் தனித்தனி பதவிகள் அளிக்கப்பட்டுவிட்டன. இனி கட்சியை சித்தப்பா ஷிவ்பால் பார்த்துக்கொள்வார்; ஆட்சி அதிகாரத்தை மகன் அகிலேஷ் பார்த்துக்கொள்வார்" என்று நடந்த அதிரடிகளை நியாயப்படுத்தினர்.

ஆனால் அது அதிக நேரம் நீடிக்கவில்லை. பதிலடிக்குப் பதிலடியாக பொதுப்பணித் துறை, நீப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு, வருவாய், கூட்டுறவு, பொது நிர்வாகம் என பல துறைகளை வைத்திருந்த அமைச்சர் ஷிவ்பாலிடம் இருந்து சமூக நலத்துறையை மட்டும் விட்டுவைத்துவிட்டு, அனைத்து இலாகாக்களையும் பறித்தார் அகிலேஷ்.  

இதனால் குடும்பச்சண்டை வீதிக்கு வந்து நாறியது. ஆனாலும் அழுகி முடைநாற்றம் வீசும் புண்ணுக்கு புனுகு தடவி மறைப்பது போல், " முலாயம் குடும்பத்துக்குள் சண்டை ஏதுமில்லை. சில வெளியாட்களின் சதியால்தான் இந்த குழப்பங்கள் அரங்கேறின" என்று கூறி கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் சமாளித்துக்கொண்டிருந்த நிலையில், இருவரையும் சமாதானப்படுத்துவதற்காக டெல்லி வருமாறு அழைத்தார் முலாயம். ஆனால் அகிலேஷ் டெல்லி செல்ல மறுத்துவிட, ஷிவ்பால் மட்டும்  டெல்லி சென்று முலாயமை சந்தித்துப் பேசிவிட்டு வந்தார். சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்ற அந்த சந்திப்பில், " கவுரவத்தையும் மதிப்பையும் இழந்து என்னால் வெறும் சமூக நலத்துறை அமைச்சராக குப்பைக்கொட்ட முடியாது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்" கறாராக சொல்லிவிட்டு லக்னோ திரும்பினார்.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் கட்சியில் இப்படி ஒரு முட்டல் மோதல்கள் நடந்தேறினால், எதிர்க்கட்சிகளுக்கு கொண்டாட்டம்தானே... "முலாயமுக்கு 'புத்ர மோகம்' தலைக்கு மேல் சென்றுவிட்டது. அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும். அகிலேஷ் யாதவுக்கும் ஷிவ்பாலுக்கும் இடையே தற்போது நடப்பதாக சொல்லப்படும் மோதல் எல்லாம் வெறும் நாடகம்தான். முலாயம் குடும்பத்தை சேர்ந்தவர்களில் குறைந்தது ஒரு டஜன் பேராவது கட்சியிலும், ஆட்சியிலும் முக்கிய பதவிகளில் அமர்ந்துகொண்டு தங்களது அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொண்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, ஊழல் தலைவிரித்தாடுகிற அகிலேஷ் அரசு மீதான மக்களின் கவனத்தை  திசைதிருப்புவதற்காகத்தான் இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறது" என்று சாடினார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியோ, " அகிலேஷ், தனது அரசு மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை போக்க தனது பஞ்சரான சைக்கிளின் ( சமாஜ்வாதி கட்சியின் சின்னம்) டயரை மாற்ற முயற்சிக்கிறார். ஆனால் இது காலம் கடந்த செயல்" என்று கிண்டலடித்தார்.

இந்த நிலையில்தான் முதலமைச்சர் அகிலேஷை கடந்த வியாழக்கிழமை மாலையில் சந்தித்துப் பேசிய ஷிவ்பால் யாதவ், அமைச்சர் பதவி மற்றும் கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கூறி, அது தொடர்பான ராஜினாமா கடிதங்களை அவரிடம் அளித்தார். இது கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவை சரிக்கட்டும் முயற்சி தோல்வியடைந்ததையே உணர்த்தியது. இருப்பினும் ஷிவ்பாலின் ராஜினாமா கடிதத்தை அகிலேஷ் ஏற்றுக்கொள்ளவில்லை என சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஷிவ்பாலின் இந்த ராஜினாமா விவகாரம் டெல்லியில் இருந்த முலாயமுக்கு எட்ட, அவர் அன்றைய தினமே லக்னோ பறந்துவந்தார். மறுநாள் வெள்ளிக்கிழமை மதியம், தனது தம்பி ஷிவ்பாலை மீண்டும் சந்தித்துப் பேசிய முலாயம், அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார். இந்த சமாதான முயற்சிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கையிலேயே, மறுபுறம் ஷிவ்பால் யாதவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பிரசாத் பாண்டே மற்றும் கட்சித் தொண்டர்கள், அவரது வீடு முன் திரண்டனர். மேலும் ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். பல இடங்களில் கடை அடைப்பும் நடந்தது.

சமாதானப்படுத்திய முலாயம்

இதுகுறித்த தகவல் முலாயமுக்கு எட்ட,  ஷிவ்பாலை வெளியே விட்டால் கட்சி உடைந்துவிடும் என்பதை தெளிவாக உணர்ந்துகொண்ட முலாயம், உடனடியாக அகிலேஷையும் ஷிவ்பால் யாதவையும் நேரில் வரவழைத்துப் பேசினார். அப்போது ஷிவ்பால் யாதவிடமிருந்து பறிக்கப்பட்ட இலாகாக்களை அவரிடம் திரும்ப ஒப்படைக்காவிட்டால், தானே முதலமைச்சர் பதவியை ஏற்க நேரிடும் என அகிலேஷை முலாயம் எச்சரித்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் கட்சிக்குள்ளும் குடும்பத்துக்குள்ளும் தற்போது ஏற்பட்ட பிரச்னைக்கு அமர்சிங் போன்ற வெளியாட்களை மீண்டும் சேர்த்துக்கொண்டதுதான் காரணம் என்றும், அவர்களுக்கு ஷிவ்பால் அளவுக்கு அதிகமாக இடங்கொடுக்கக்கூடாது என்றும் அகிலேஷ் யாதவ் கூற, அதனை தான் பார்த்துக்கொள்வதாக கூறி, இருவரும் சமாதானமாக செல்லுங்கள் என முலாயம் அறிவுறுத்தவும், ஒருவழியாக பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அதன்படி ஷிவ்பால் யாதவ் ஏற்கனவே வகித்து வந்த இலாகாக்களை அவரிடம் திரும்ப ஒப்படைப்பது மற்றும் அவரையே கட்சியின் மாநில தலைவராக்குவது என்றும், காயத்ரி பிரஜாபதிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஷிவ்பால் சிங் தனது அமைச்சர் பதவி ராஜினாமாவை வாபஸ் பெற்றார்.  

இதைத்தொடர்ந்து கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்களிடம் பேசிய முலாயம் சிங், " நான் இருக்கும்வரை கட்சியில் கோஷ்டிகள் என்பதே கிடையாது. எங்களுடையது பெரிய குடும்பம். அதனால் கருத்துவேறுபாடுகள் நிகழலாம். ஷிவ்பால் சிங்கிற்கும், அகிலேஷ் யாதவுக்கும் இடையே எந்த மோதலும் கிடையாது. இது தேர்தல் நேரம். இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். எனது வார்த்தைகளை அகிலேஷ் மீறமாட்டார்" என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முலாயம், "எங்கள் குடும்பத்தில் ராம்கோபால் யாதவ் (முலாயம் சிங்கின் இன்னொரு சகோதரர்), அகிலேஷ் யாதவ், ஷிவ்பால் யாதவ் ஆகியோர் இடையே எந்த மோதலும் இல்லை. ஒவ்வொரு தந்தைக்கும், மகனுக்கும் பிரச்னைகள் இருப்பதுபோல்தான் எங்களுக்குள்ளும் இருக்கிறது. ஆனால் அது விரிசல் அல்ல" என்றார். மேலும் குடும்பத்தில் ஏற்பட்ட இந்த மோதலுக்கு அன்னியர்களை உள்ளேவிட்டதுதான் காரணம் என அம்ர்சிங்கை மறைமுகமாக குறிப்பிட்டு குற்றம் சாட்டியிருந்தார் அகிலேஷ். ஆனால் தற்போது அமர்சிங்கை சமாஜ்வாதி கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக நியமித்துள்ளார் முலாயம்.  ஷிவ்பால் யாதவின் முயற்சியில் கடந்த மே மாதம் அமர்சிங்கை கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்ளும்போதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் அகிலேஷ். ஆனால் அமர்சிங்கிற்கு தற்போது அகில இந்திய அளவில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதன் மூலம் கட்சியில் தனக்கு உள்ள பிடிப்பை உறுதி செய்துள்ளார் முலாயம்.

அதே சமயம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், எதிர்காலத்தில் மீண்டும் இதேப்போன்ற பிரச்னை வெடிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஏனெனில்  சமாதான முயற்சி மேற்கொள்ளப்பட்ட  கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அகிலேஷ், " ஷிவ்பால் யாதவின் ராஜினாமாவை நான் ஏற்கவில்லை. அதேப்போன்று தலைவரின் ( முலாயம் ) உத்தரவுக்கு ஏற்ப காயத்ரி பிரஜாபதி மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்படுவார். கட்சியின் மாநில தலைவர் பதவியிலிருந்து நான் நீக்கப்பட்டதை மிகவும் துயரமாக உணர்ந்தேன். அதன் விளைவுகள் என்ன என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒரு நல்லவர் முதலமைச்சர் பதவியை கேட்டால் அதனை விட்டுக்கொடுக்க நான் தயாராக உள்ளேன். அதே சமயம் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட கட்சியில் யார் யாருக்கு 'சீட்' கொடுக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் எனக்கு தரப்பட வேண்டும். எனக்கு அளிக்கப்பட்ட எந்த ஒன்றையும் திருப்பி அளிக்க தயாராக உள்ளேன். ஆனால் தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கும் அதிகாரம் என்னிடம்தான் இருக்க வேண்டும். ஏனெனில் வரவிருக்கும் தேர்தல் எனக்கான ஒரு பரீட்சை" என்று கூறினார்.

"முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தாலும் கொடுப்பேனே தவிர, கட்சித் தலைவர் பதவியையும் தேர்தலில் போட்டியிட யாருக்கு 'சீட்' வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தையும் விட்டுக்கொடுக்க முடியாது என அகிலேஷ் வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். அப்படி அவருக்கு அந்த அதிகாரம் அளிக்கப்பட்டால், அடுத்த தேர்தலில் ஷிவ்பால் ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்படுவார்கள் அல்லது மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே அவர்களுக்கு 'சீட்' வழங்கப்படும். போதாதற்கு ஷிவ்பால் ஆதரவாளர்களின் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பறிக்கப்பட்டு, அவர்களுக்கு வெற்றிவாய்ப்பு சாத்தியம் இல்லாத அல்லது கடும் போட்டி நிலவும் தொகுதிகள் ஒதுக்கப்படலாம். அப்படி ஒரு நிலைமை ஏற்படும்போது கட்சிக்குள் மீண்டும் ஒரு களேபரம் உருவாகவும் கட்சி பிளவுபடவும் வாய்ப்பு அதிகம்.

ஒருவேளை தற்போது ஷிவ்பாலை அமைச்சரவையில் சேர்க்க மறுத்திருந்தாலோ அல்லது எதிர்காலத்தில் ஏதாவது மீண்டும் ஒரு மோதல் ஏற்பட்டாலோ ஷிவ்பால் சமாஜ்வாதி கட்சியை உடைக்கும் அளவுக்கு அவர் வலுவான தலைவரா என்று கேட்டால், உடைக்கலாம்; ஆனால் மக்கள் செல்வாக்கு கிடைக்குமா என்றால் அது கேள்விக்குறிதான். ஷிவ்பால் யாதவுக்கு கட்சித் தொண்டர்களிடம் செல்வாக்கு இருக்கலாம். ஆனால் அகிலேஷா ஷிவ்பாலா என்ற கேள்வி எழுந்தால் நிச்சயம் மக்கள் செல்வாக்கு அகிலேஷுக்குத்தான் இருக்கும்." என்கிறார் உத்தரப்பிரதேசத்தின் மூத்த அரசியல் அனலிஸ்ட்டான வர்மா.

பா.ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர்த்து இந்தியாவில் பரவலாக எல்லா கட்சிகளுமே குடும்ப நிறுவனமாக மாறி, வாரிசு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம்தான் அதிகமாக காணப்படுகிறது. அப்படி வாரிசு மற்றும் குடும்ப அரசியல் தலையெடுத்தாலே அதிகாரப்போட்டிகளும் முட்டல் மோதல்களும் வெடிப்பது இயல்பானதுதானே. அதேப்போன்ற நிலைமைதான் முலாயமின் சமாஜ்வாதி கட்சியிலும் ஏற்பட்டுள்ளது. ஆனால் மோதல் எப்படி என்றால் முலாயம் குடும்பத்தின் மூத்த தலைமுறைக்கும் இளைய தலைமுறைக்கும் இடையே. இன்றைய காலத்திற்கேற்ற நவீனமான முறையில் கட்சியையும் ஆட்சியையும் தனது விருப்பத்திற்கேற்ப நடத்திச் செல்ல வேண்டும் என விரும்புகிறார் அகிலேஷ். ஊழல் முத்திரை குத்தப்பட்டவர்கள், ரவுடி இமேஜ் கொண்டவர்கள் போன்றவர்களை கட்சியில் சேர்த்தால், இமேஜ் பாதிக்கப்படும் என கருதுகிறார். ஆனால் ஷிவ்பால் யாதவும் முலாயம் சிங் யாதவும் பழைய பாணியிலான அரசியலில் கட்சியை நடத்திச் செல்ல வேண்டும் என நினைக்கிறார்கள். இந்த முரண்பாடுதான் இப்போதைய மோதலுக்கு காரணம்.

"இப்போதைக்கு முலாயம் தனது தந்தை மற்றும் கட்சித் தலைவர் என்ற அடிப்படையிலும், குடும்பத்தில் குழப்பம் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்திலும் அகிலேஷ் இறங்கி வந்திருக்கலாம். ஆனால் நாளை இன்னொரு மோதல் வெடிக்கும்போது இரண்டாவது தடவையும் தோற்றுப்போக விரும்பமாட்டார் அகிலேஷ்!" என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.   

- பா. முகிலன்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!