வெளியிடப்பட்ட நேரம்: 11:47 (28/09/2016)

கடைசி தொடர்பு:11:47 (28/09/2016)

பகத்சிங் பயந்தது எதற்காக ?

 

‘‘இந்த மகன் அனைவரையும் மிஞ்சும்வண்ணம் செயல்பட்டு அன்னையின் விலங்கை நிச்சயமாக ஒடித்தெறிவான்’’ என்றார் கிஷன்சிங். இவர் வேறு யாருமல்ல... இந்திய நாட்டுக்காக தன்னுடைய 24-வது வயதில் தூக்குமேடையை முத்தமிட்டு, தூக்குக்கயிற்றை இறுக்கிக்கொண்ட புரட்சியாளர் பகத்சிங்கின் தந்தை. “புரட்சி என்றாலே பகத்சிங் என்றுதான் பொருள்’’ என்ற நேதாஜியின் வார்த்தைக்கு வடிவம் தந்தவர் பகத்சிங். அவருடைய பிறந்த தினம் இன்று.  

சிறுவயதிலேயே ‘ஜாலியன் வாலாபாக்’ படுகொலையைக் கேள்விப்பட்டு அங்கு சென்று குருதிபடிந்த மண்ணை ஒரு தாளில் எடுத்துவந்து அதை, கடைசிவரை தன்னுடன் வைத்திருந்த கொள்கை பற்றாளர். அந்தக் கொடிய செயல் நடப்பதற்குக் காரணமாக இருந்த வெள்ளையரை மட்டுமின்றி எல்லா வெள்ளையர்களையும் அழித்தொழிக்க வேண்டும் என்று எண்ணியவர்.

1928-ல் போலீஸ் விதித்த தடையை மீறி லாகூரில், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், ‘பஞ்சாப் சிங்கம்’ என்றழைக்கப்பட்ட லாலா லஜபதிராய், போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு இரண்டு வாரங்களில் உயிரிழந்தார். லஜபதிராய் இறந்து சரியாக ஒரு மாதம் கழித்து சாண்டர்ஸ் எனும் போலீஸ் அதிகாரியை, ராஜகுருவும், பகத்சிங்கும் சுட்டுக் கொன்றனர். மறுநாள், லாகூர் முழுதும் சாண்டர்ஸை கொலை செய்ய நேர்ந்ததற்கான அவசியம் குறித்து சுவரொட்டி ஒட்டப்பட்டது. பகத்சிங்கும், இதர தோழர்களும் லாகூரைவிட்டுத் தப்பிச் சென்றனர். தலைமறைவான நிலையிலும் நாட்டின் அரசியல் சூழலை புரட்சியாளர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர். அன்றைய சூழலில், தொழிற்சங்க இயக்கம் நாட்டில் முன்னேறிக்கொண்டிருந்தது. 1928-ல் வட மாநிலங்களில் பரவலாகத் தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் போர்க்குணத்தோடு நடைபெறலாயின. அப்போது, டெல்லி சட்டசபையில் தொழில் தகராறு சட்டம் விவாதிக்கப்பட்டது. இரண்டும் இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிரானவை.

 

வெடிகுண்டு வீசத் திட்டம்!
இந்தச் சட்டம் நிறைவேற்றப்படும் நாளன்று டெல்லி மத்திய சபையில் உயிர்ச்சேதமின்றி வெடிகுண்டு வீசுவதென்று திட்டமிடப்பட்டது. அதன்படி, 1929 ஏப்ரல் 8-ம் தேதியன்று கேள்வி நேரத்தில் எதிர்பார்த்தபடியே பார்வையாளர் அரங்கிலிருந்த பகத்சிங்கும், பி.கே.தத்தும் வெடிகுண்டுகளை காலி இருக்கைகளின் மீது வீசினார்கள். ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்ற முழக்கமும் எதிரொலித்தது. அவர்கள் வைத்திருந்த துண்டு அறிக்கைகளையும் எங்கும் வீசி எறிந்தனர். எந்தவிதப் பயமுமின்றி அவர்கள் இருவரும் அங்கேயே அமைதியாக நின்றனர். தப்பிச் செல்ல எந்த முயற்சியும் இருவரும் மேற்கொள்ளவில்லை. தாமாகவே கைதாகினர். ‘‘ஏன் இப்படிச் செய்தீர்கள்’’ என்றான் சார்ஜென்ட். ‘‘செவிடர்கள் காதில் நாங்கள் சொல்லும் செய்தி விழவேண்டும் அல்லவா... அதற்காக’’ என்றனர் வீரர்கள்.

பகத்சிங்கின் வாக்குமூலம்!
கைதுசெய்யப்பட்ட புரட்சியாளர்கள், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுப் பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளானார்கள். குண்டுவீசிய வழக்கில் விசாரணை நடைபெற்றது. அப்போது, பகத்சிங் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தின் சுருக்கம்: ‘‘நாங்கள் யாரையும் கொல்லும் நோக்கத்தில் குண்டுகளை வீசவில்லை. கொடுங்கோல் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசை குறிவைத்தே அவை வீசப்பட்டன. இது இரக்கமற்ற, பொறுப்பற்ற, வெள்ளை ஏகாதிபத்திய அரசு. இந்திய மக்கள் செயலற்று செய்வதறியாது நிற்கிறார்கள். அவர்களை ஏமாளிகளாக ஆக்கிக்கொண்டு இந்தச் சட்டசபை, இந்திய மக்களுக்கு, உழைக்கும் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. இந்த நாட்டு மக்கள் ஆங்கிலேயர்களால் கொடுமைபடுத்தப்படுகிறார்கள். அவர்களின் ஆட்சியால் விளைந்த - விளைந்துகொண்டிருக்கிற சீர்கேடுகள் கொஞ்சநஞ்சமல்ல. இந்த நாட்டின் சொந்தக்காரர்கள் இன்று ஏதுமற்ற நிலையில் வறுமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டு மக்களின் தேவைகளும், கோரிக்கைளும் பரிசீலிக்கப்படவில்லை. எங்களது நியாயமான முயற்சிகளுக்கு என்றுமே மதிப்பில்லாத ஒரு நிலை உருவாகி உள்ளது. மக்களை ஏமாற்றி வாழும் இந்த ஆட்சி இனி இங்கு நீடிக்கக் கூடாது; நீடிக்கவிடக் கூடாது என்பதே எங்கள் நோக்கம். இந்தியாவின் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் எந்தவித நாதியுமில்லாமல் திண்டாடுகிறார்கள். தொழிலாளர்களின் நலம் பற்றி இந்த அரசு இதுவரை எதையும் செய்யவில்லை. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அனைத்துமே அர்த்தமற்றவையாகவும் மனிதாபிமானம் அற்றவையாகவுமே உள்ளன. ஏகாதிபத்திய ஆட்சிக்கு எச்சரிக்கை மணி ஒலிக்கவே இப்போது நாங்கள் குண்டுகளை வீசினோம். நாங்கள் உங்களிடம் எந்தச் சமாதானமும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எங்கள் சுயமரியாதையைக் காண்பிக்கவும், உங்களுக்குச் சரியான எச்சரிக்கை கொடுக்கவும் நடந்த இந்த முயற்சியை நாங்கள் விரும்பியே செய்தோம்.’’

பகத்சிங் மற்றும் அவருடைய நண்பருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக அவர்கள் இருவரும் அப்பீல் செய்ய... தூக்குத் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது லாகூர் உயர் நீதிமன்றம். ‘தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும்’ எனத் தெரிந்தும் பகத்சிங் புத்தகங்களை வாசித்துக்கொண்டிருந்தார்.

ஒரு போராளியுடன் உரையாடல்!
பகத்சிங், தூக்கிலிடப்படுவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு, அவருடைய வழக்கறிஞரிடம் தான் கேட்ட மாமேதை லெனின் எழுதிய, ‘அரசும் புரட்சியும்’ (The STATE AND REVOLUTION) என்ற புத்தகத்தை வாங்கிப் படித்துக்கொண்டிருந்தார். ‘‘நாட்டுக்கு ஏதாவது செய்தி உண்டா’’ என்று வழக்கறிஞர் கேட்க... புத்தகத்திலிருந்து பார்வையை விலக்காத பகத்சிங், ‘‘எதேச்சதிகாரம் ஒழியட்டும்... புரட்சி ஓங்கட்டும்’’ என்று பதிலளித்தார்.

பகத்சிங்கை தூக்கிலிடுவதற்கு தயார்படுத்துவதற்காக சிறைக்காவலர்கள் முன்கூட்டியே அழைத்தார்கள். முதல்நாளே தூக்கிலிடப்போகிறார்கள் என்பதை அறிந்திராத பகத்சிங், ‘‘நான் இங்கே ஒரு போராளியுடன் உரையாடிக்கொண்டு இருக்கிறேன். அதனால் தொந்தரவு செய்யாதீர்கள்’’ என்றார். பகத்சிங்குடன் வேறொரு போராளி சிறைக்குள் நுழைந்து இருவரும் ஏதோ சதித் திட்டம் தீட்டுகிறார்களோ என்று காவலர்கள் பயந்துவிட்டனர். சிறிதுநேரம் கழித்து அந்தப் புத்தகத்துடன் வெளியே வந்த பகத்சிங், ‘‘இந்தப் போராளியைத்தான் (லெனினை) அப்படிச் சொன்னேன்’’ என்றாராம். அந்தப் புத்தகத்தைக் காவலர்கள் வாங்கிப் பார்த்தபோது... அதன் கடைசிப் பக்கத்தில், ‘‘இந்தப் புத்தகத்தை இந்திய மக்கள் அனைவரும் படிக்கவேண்டும்’’ என்று எழுதி கையெழுத்திட்டிருந்தாராம்.

“எனது வாழ்நாளில் நான் கடவுளை வணங்கியதில்லை. சொல்லப்போனால், ஏழைகளின் துயரங்களுக்குக் காரணமாக இருக்கிறார் என்று கடவுளைப் பலமுறை ஏசியிருக்கிறேன். இப்போது அவரிடம் மன்னிப்புக் கேட்டால், தனது முடிவு நெருங்கிவிட்டதால் மன்னிப்புக் கேட்கிறான் இந்தக் கோழை... என கடவுள் சொல்வார்” என்று கடவுளிடம்கூட கோரிக்கைவைக்க மறுத்துவிட்டாராம் பகத்சிங்.

பகத்சிங்கின் பயம்?
“அம்மா, எனது நாடு ஒருநாள் சுதந்திரமடைந்துவிடும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வெள்ளைக்காரத் துரைமார்கள் விட்டுச்சென்ற நாற்காலிகளில் மாநிறத் தோல் துரைமார்கள் வந்து உட்கார்ந்துவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது” என்று தன் தாய்க்கு பகத்சிங் ஒருமுறை கடிதம் எழுதியிருந்தாராம். ஆம்... அவர் சொன்னபடி அவர்கள்தான் உட்கார்ந்திருக்கிறார்கள், ‘‘நாளை காலை மெழுகுவர்த்தி ஒளி மங்குவதுபோல் நானும் மறைந்துவிடுவேன். ஆனால், நம்முடைய நம்பிக்கைகள், குறிக்கோள்கள் இந்த உலகத்தைப் பிரகாசிக்கச் செய்யும்’’ என்று பகத்சிங் சொன்னதை மறந்துவிட்டு!

அநீதிகள் பல நிறைந்த அமைப்பை மாற்றுவதே புரட்சியின் அடிப்படை!
 

- ஜெ.பிரகாஷ்

 

 

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்