ஏன் நாம் கிராம சபா கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்...?

காந்தி, “கிராமங்கள் நசிந்தால், இந்தியா நசியும். கிராமங்கள்தான் இந்தியாவின் ஆன்மா. அது சிதைந்தால் இந்தியா, இந்தியாவாக இருக்காது. அது உலக அரங்கில் தன் குறிக்கோளை இழக்கும்.” இதை, காந்தி சொல்லி ஆறு தசாப்தங்களுக்கு மேல் ஆகப் போகிறது. ஆனால், காந்தி இதை எந்தப் பொருளில் சொன்னாரோ... அந்தப் பொருள் இன்றும் சிதையாமல் அப்படியேதான் இருக்கிறது. இதை, ஆட்சியாளர்கள் விரும்பாமல் இருக்கலாம்; எல்லோரும் தங்கள் சொந்த புலத்தைவிட்டு நாடோடிகளாக நகரங்களில் வெறும் நுகர்வோராக மட்டும் திரிய வேண்டும் என்று அரசுகள் விரும்பலாம். ஆனால், இன்றும் கிராமங்கள்தான் இந்தியாவின் உயிராக இருக்கிறது. அதன் இயக்கத்தில்தான் இந்தியா இயங்குகிறது. இன்று, நீங்கள் எந்தப் பெருநகரத்தில் வேண்டுமானாலும் வசிக்கலாம்... ஆனால், நீங்கள் எந்தத் திசையில் குறுக்குவெட்டாக ஒரு 30 மைல் பயணித்தாலும், ஒரு கிராமத்தைச் சென்றடையலாம். ஆம். இந்தியா கிராமங்களில்தான் வசிக்கிறது. ஆனால், அந்தக் கிராமங்களின் நிலை இன்று எப்படி இருக்கிறது...?

ஏன் கிராமங்களை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்...?

நிச்சயம் மகிழ்ச்சிகரமானதாக இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகவெல்லாம் இல்லை.... அதிவேகமான கிராமங்கள் தன் பொலிவை இழந்துகொண்டு இருக்கின்றன. இதற்கு யார் காரணம்? அரசா... அதிகாரிகளா... ஊழல் கறைபடிந்த அரசியல்வாதிகளா? இல்லை... நிச்சயம் இல்லை. இதுபோன்ற ஒரு பதிலைத் தருவோமென்றால், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம் என்று அர்த்தம். இதற்குக் காரணம் நாம்தான். ஆம், நாம் மட்டும்தான். நமது அக்கறையின்மைதான் காரணம். நாம் கிராமங்களைப் புறக்கணிக்கிறோம். இன்னும் நேரடியாகச் சொல்லவேண்டும் என்றால், கிராமங்களில் எந்த வாய்ப்பும் இல்லை. அது சிதைந்தால், என்ன என்று நினைக்கிறோம். நகரங்களில் வாழ்வதுதான் கெளரவம் என்று நம்புகிறோம். அதனால், கிராமங்களை நாம் புறக்கணிக்கிறோம். ஆனால், ஒன்றை  மறந்துவிட்டோம். கிராமங்கள்தான் வேர். அந்த வேரில் புற்றுவைத்தால், அது கிளை முழுவதும் பரவி... சருகாக நாம் வீழ்வோம் என்பதை மறந்துவிட்டோம்.

 

கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கின்படி ஏறத்தாழ 70 சதவிகித மக்கள் இன்றும் கிராமங்களில்தான் வசிக்கிறார்கள். ஆனால், நாம் இவர்களைத் தொடர்ந்து புறக்கணித்துவிட்டு, மிச்சம் உள்ள 30 சதவிகித மக்கள் மீது மட்டும்தான் நம் குவியம் உள்ளது. அவர்களின் வளர்ச்சி மட்டும்தான் தேசத்தின் வளர்ச்சி என்று நமக்கு நாமே கற்பிதம் செய்துகொள்கிறோம். திட்டங்கள் எல்லாம் அவர்களுக்காகவே தீட்டுகிறோம். ஒரு தேசத்தின் பெரும்பான்மை பகுதியைப் புறக்கணித்துவிட்டு, இன்னொரு பகுதிக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றால், என்ன நடக்கும்...? அதாவது, உங்கள் உடலைத் தாங்கும் கால்களைப் புறக்கணித்துவிட்டு, உங்கள் வயிற்றை மட்டும் வளர்க்கிறீர்கள் என்றால், என்ன நடக்குமோ அதுதான் நடக்கும். ஆம் நொடித்து, நிலைகுலைந்து போய்விடுவீர்கள். இப்போது, அதுதான் மெல்ல இங்கு நடந்துகொண்டு இருக்கிறது.

நீங்கள் இப்போது நகரங்களில் வசிக்கலாம். அது, தரும் அனைத்து செளகர்யங்களையும் நீங்கள் அனுபவித்து வரலாம். ஆனால், ஒரு பெரும் பகுதி மக்கள் தங்களுக்கு அந்த வசதி கிடைக்கவில்லை, நாம் வறுமையில் மட்டுமே உழல்கிறோம் என்று வெகுநாட்கள் வெம்பி வெதும்பினால், நிச்சயம் அங்கு கலகம் மட்டுமே பிறக்கும். ஆம், அந்தப் பொருளாதாரச் சமத்துவமின்மை, அமைதியைச் சீர்குலைக்கும். அதனால், கிராமங்களின் சீரான வளர்ச்சியில்தான், நம் அமைதியும் இருக்கிறது.

கிராமங்களின் வளர்ச்சியும், நகர மக்களின் அமைதியும்!

எல்லாம் சரிதான்... இதற்காக நான் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்வியை முன்வைப்பீர்கள் என்றால், கிராமங்களின் தங்கள் சல்லிவேரை இன்னும் பரவவிட்டு இருப்பவர்கள், இந்த வார விடுமுறைக்கு உங்கள் கிராமங்களுக்குச் செல்லுங்கள். வரும் அக்டோபர் 2-ம் தேதி, அங்கு நடக்க இருக்கும் கிராம சபா கூட்டங்களில் பங்குபெறுங்கள். அங்கு, உங்கள் மக்களுடன் உரையாடுங்கள். அவர்களுடன் ஆலோசித்துவிட்டு உங்கள் கிராம வளர்ச்சிக்குத் தேவையான விஷயங்களை அந்தக் கூட்டத்தில் முன்வையுங்கள். உங்கள் கிராமத்தில் இருக்கும் மதுபானக் கடை, உங்கள் கிராமத்தின் ஆயுள்ரேகையை அழிக்கிறது என்றால், மதுபானக் கடைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றவையுங்கள். உங்கள் கிராமத்தின் வாழ்வாதாரத்தில் ஒன்றாக இருக்கும் ஏரி, குளம் செப்பனிடப்பட வேண்டுமென்றால், அதைத் தூரவார கிராம சபா கூட்டத்தில் முடிவெடுக்கவையுங்கள். உங்கள் கிராமத்துக்காக எவ்வளவு செலவிட்டு இருக்கிறார்கள்? அது முறையாகச் செலவிடப்பட்டு இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க சமூக தணிக்கையில் ஈடுபடுங்கள்.

மகசேசே விருதுபெற்ற ஊடகவியலாளர் சாய்நாத் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்தார். “கோடா பழங்குடி சமூகத்தின் வளர்ச்சிக்காக, அரசு அதிகம் பால் தரும் மாடுகளை அளிக்கிறது. ஆனால், அந்தப் பழங்குடி மக்கள் மாட்டிலிருந்து பாலை கறந்து விற்பதை பாவம் என்று கருதும் நம்பிக்கைகொண்டவர்கள். அதனால், அவர்களுக்கு அந்த மாடு சுமையாகத்தான் போனது” என்றார். அதாவது, உண்மையாக மக்களுக்கு எது தேவை என்று அறியாமல் அரசு, ஏதோ ஒன்றை மேலிருந்து திணிக்கிறது. அதற்கு அனுமதிக்காதீர்கள். உங்கள் கிராம மக்களுக்குத் தேவையானவற்றைத் தீர்மானிக்க இந்தக் கிராம சபா கூட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

வளர்ச்சி என்பது உச்சியிலிருந்து வருவதில்லை... அது வேரிலிருந்து வருவது. அந்த வேரில் வேலை செய்யுங்கள்.

- மு.நியாஸ் அகமது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!