ஜெயலலிதா எழுதிய கட்டுரை...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 2 | From Mysuru to 81, Poes garden...Travel of Jayalalithaa : Ammu waits for Amma : Episode-2

வெளியிடப்பட்ட நேரம்: 15:07 (14/10/2016)

கடைசி தொடர்பு:23:18 (04/12/2016)

ஜெயலலிதா எழுதிய கட்டுரை...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 2

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 8 | பகுதி 9| பகுதி 10 | பகுதி 11 | பகுதி 12 | பகுதி 13 | பகுதி 14 |பகுதி 15 | பகுதி 16 | பகுதி 17 | பகுதி 18 | பகுதி 19 | பகுதி 20 | பகுதி 21 | பகுதி 22 | பகுதி 23 | பகுதி 24 | பகுதி 25 | பகுதி 26 | பகுதி 27 | பகுதி 28 | பகுதி 29 | பகுதி 30 | பகுதி 31 | பகுதி 32 | பகுதி 33 | பகுதி 34 | பகுதி 35 | பகுதி 36 

 


 

(இந்த தொடரின் முதல் பகுதியைப் படிக்க  இங்கே கிளிக் செய்யுங்கள்)

ப்போது மட்டும் அல்ல, அப்போதும் மாநகரத்தின் நெரிசலில் தொலைந்துபோகாமல் இருப்பது என்பது ஒரு கடும் தவம் போன்றதாகத்தான் இருந்தது. தொலைந்துபோவது என்பது எலும்பு மஜ்ஜைகளால் ஆன பூத உடல் தொலைந்துபோவது அல்ல... தன் சுயம், தன் இருப்பு தொலைந்துபோகாமல் இருப்பது. இதற்காக வித்யாவதி போராடிக்கொண்டிருக்கும் போதுதான், விதியோ அல்லது தற்செயலோ...  வேதவல்லியின் சுயத்தையும், இருப்பையும் வேறுவிதமாக வடிவமைக்கக் காத்துக்கொண்டிருந்தது.  

ஆம். வித்யாவதியைச் சந்திக்க வரும் தயாரிப்பாளர்கள் வேதவல்லிக்கும் திரைப்படத்தில் நடிப்பதற்கேற்ற தோற்றம் இருப்பதைக் காண்கிறார்கள். தங்கள் படங்களில் நடிக்கக் கேட்கிறார்கள். வேதவல்லிக்குக் குழப்பம். என்ன முடிவு செய்வது என்று தெரியவில்லை... அவர் சென்னைக்கு வந்தது, தனது இரண்டு பிள்ளைகளுக்கும் நல்ல கல்வியை வழங்க... நல்ல எதிர்காலத்தைக் கட்டமைத்துத் தர... ஆனால், எதிர்பார்க்காத வாய்ப்பு வந்து இருக்கிறது. வாய்ப்பை ஏற்றுக்கொள்ளலாம்தான். ஆனால், இந்த விஷயம் அப்பாவுக்குத் தெரிந்தால் நிச்சயம் கோபப்படுவார். எதைத் தீர்மானிப்பது என்று பல்வேறு யோசனைகளில் இருந்தபோதுதான்,  கன்னடப் படத் தயாரிப்பாளர் கெம்பராஜூவிடமிருந்து மீண்டும் அழைப்பு.

“மீண்டும் கேட்கிறேன். என் படத்தில் நடிக்க சம்மதமா...?” -  கெம்பராஜூ.

“மீண்டும் அதே நபரிடமிருந்து வாய்ப்பு. நிச்சயம் இது ஏதேச்சையானது அல்ல. இதுதான் இறைவன் நமக்குக் காட்டி இருக்கும் பாதை. இதை நிராகரிப்பது, நிச்சயம் முட்டாள்தனமானது.” ஆம்,  அந்தப் பாதையில் பயணிக்கத் தீர்மானிக்கிறார். வாய்ப்பை ஏற்றுக்கொள்கிறார். வேதவல்லி சந்தியாவாக மாறுகிறார்.

சென்னை - பெங்களூரு - சென்னை:

சந்தியாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வர தொடங்குகின்றன. பெரிய வேஷங்கள் எல்லாம் இல்லைதான். ஆனால், சிறு சிறு கதாபாத்திரங்கள் என வாய்ப்புகள் கதவைத் தட்டிய வண்ணம்  இருக்கின்றன. எப்போதும்... எல்லோருக்கும்... விரும்பியது எல்லாம் கிடைக்காது அல்லவா...?  சந்தியாவுக்கும் அது கிடைக்கவில்லை. அவர் சென்னைக்கு வந்தது, தம் குழந்தைகளின் நல் எதிர்காலத்துக்காக. ஆனால், இப்போது அவர்களைக் கவனித்துக்கொள்ள முடியாத அளவுக்கு, பரபரப்பான வாழ்க்கை. என்ன செய்யலாம்...? வேறு வழியே இல்லை... மீண்டும் அம்முவையும், பாப்புவையும் பெங்களூருக்குத் தன் தந்தை வீட்டுக்கு  அனுப்பிவைக்கிறார்.

முதன்முதலாக அம்மு, தன் அம்மாவைப் பிரிகிறார்.  கனத்த இதயத்துடன் பெங்களூரு பயணம் ஆகிறார்.  ரெங்கசாமியும், கமலம்மாவும், சந்தியாவின் தங்கை பத்மா எனக் குடும்பமே அம்மு  மீது பாசத்தைக் கொட்டி கவனித்துக்கொண்டாலும், அந்த வயதில் அம்முவுக்குத் தேவைப்பட்டது, அம்மாவின் அரவணைப்பு...  ஆம். அம்மாவுக்காக அம்மு எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறார்.

சந்தியாவுக்கும் இது புரியாமல் இல்லை. இந்தப் பாதையில் செல்லத் தீர்மானித்ததே தம் பிள்ளைகளுக்காகத்தானே...?  அவரும் ஒருநாள் ஓய்வு கிடைத்தாலும், பெங்களூரு சென்று அம்முவைப் பார்த்துக்கொள்கிறார். அம்முவுக்குப் பிடித்தமான அனைத்தும் வாங்கித் தருகிறார். அம்முவை மகிழ்வாக வைத்துக்கொள்ள, என்னவெல்லாம் வாங்கித் தர முடியுமோ... அதையெல்லாம் செய்கிறார். ஆனால், பாவம்.. சந்தியாவுக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை... அம்முவின் சந்தோஷம் உயிரற்ற பொம்மையில் இல்லை... இனிப்பு தின்பண்டங்களில் இல்லை...   அம்முவின் சந்தோஷமும், சுவையும் தன் அம்மாவின் அருகாமை மட்டும்தான்.  சந்தியாவும், அம்முவை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், சென்னைக்கு அழைத்துக்கொள்கிறார்.

அம்முவின் அந்த விருப்பமும் விரைவில் நிகழ்கிறது. அம்முவைக் கவனித்துக்கொண்ட சந்தியாவின் இன்னொரு தங்கை பத்மாவுக்குத் திருமணமாகிறது.  வயதான  ரெங்கசாமி, கமலம்மாவால்,  குழந்தைகள் இருவரையும் கவனித்துக்கொள்ள முடியவில்லை. பத்மாவுடனும் அனுப்ப முடியாது...  வேறு வழியில்லை, மீண்டும் சென்னைக்குத்தான் அனுப்பியாக வேண்டும்.  ரெங்காமிக்கு அவர்களைச் சென்னைக்கு அனுப்பவது கவலையளித்திருக்கக் கூடும்... ஆனால்,  அம்முவுக்கு இதைவிட வேறு என்ன  மகிழ்ச்சி இருக்க முடியும்?  பறவை தன் தாய் இருக்கும் கூட்டுக்கு எவ்வளவு சந்தோஷமாக கிளம்புமோ.... அதைவிட பலமடங்கு மகிழ்ச்சியாக மீண்டும் தன் கூட்டுக்குத் திரும்புகிறார் அம்மு.

உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்மா...!

சென்னை திரும்பியதும் சர்ச் பார்க் பள்ளியில் சேர்க்கப்படுகிறார். படிப்பில் படு சுட்டி. பள்ளியில் சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே ஆசிரியர்களின் செல்ல மாணவியாக மாறுகிறார்.  பள்ளியில் பாராட்டு, ஆசிரியரின் அன்பு.. எல்லாம் இருந்தும் அவர் பெங்களூருவில் எப்படித் தனிமையை உணர்ந்தாரோ அதே தனிமைதான் அம்முவை சென்னையிலும் வாட்டுகிறது.  ஆம், சென்னை வந்தபின்னும் அம்மாவின் அருகாமை அவருக்கு கிட்டவே இல்லை.

இந்தக் கட்டுரையை வீடியோவாகவும் காணலாம்

 

 

எப்போதும் படப்பிடிப்பிலேயே இருக்கும் அம்மாவைப் பார்க்க ஏங்குகிறார். அன்பின் கதகதப்பை உணர விரும்புகிறார்... உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று சொல்ல விரும்புகிறார்... ஒரு நாள், அம்மு தன் அன்பைக் கடிதமாக மாற்றி,  ‘என் அம்மா’ என்ற தலைப்பில் கடிதமாக எழுதுகிறார். தன் அம்மாவுக்கு அந்தக் கடிதத்தைக் காட்ட ஓர் இரவு முழுக்க விழித்து இருக்கிறார். ஆனால், சந்தியா அந்த இரவு முழுவதும் வரவே இல்லை. அடுத்த நாள் பள்ளியில் அந்தக் கடிதத்தைப் பார்த்த ஆசிரியர்கள், உச்சிமுகர்ந்து அம்முவைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், அம்மு எதிர்பார்த்தது அதுவல்லதானே...? அம்மு விரும்பியது, அந்தக் கடிதத்தைத் தன் அம்மாவிடம் காட்டி, அவரை அணைத்து... ‘ உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்மா...’ என்று அழ வேண்டும் என்பதைத்தான்.


அது இரண்டு நாட்கள் கழித்து நிகழ்ந்தது. ஆம், இரண்டு நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்த சந்தியா, அம்மு ஒரு புத்தகத்தை அணைத்துக்கொண்டு தூங்குவதைப் பார்க்கிறார். அந்தப் புத்தகத்தை மெதுவாக எடுத்தபோது அம்மு விழித்துவிடுகிறார். பின் அழுதே விடுகிறார். கடிதத்தைப் படித்த சந்தியா, அம்முவை இறுக அணைத்து, “ இனி உன்னிடம் அதிக நேரம் செலவிடுகிறேன் அம்மு... இனி எப்போதும் இதுபோல் நிகழாது...” என்கிறார். ஆனால், துரதிர்ஷ்டமாக, அதுதான் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தது.  அம்மு தன் அம்மாவுக்காகக் காத்திருப்பது தொடர்கதை ஆனது.  பள்ளியில் அவர் பரிசு பெறும் நிகழ்வில்கூட சந்தியா கலந்துகொள்ளவில்லை.

(தொடரும்)

- மு நியாஸ் அகமது

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 8 | பகுதி 9| பகுதி 10 | பகுதி 11 | பகுதி 12 | பகுதி 13 | பகுதி 14 |பகுதி 15 | பகுதி 16 | பகுதி 17 | பகுதி 18 | பகுதி 19 | பகுதி 20 | பகுதி 21 | பகுதி 22 | பகுதி 23 | பகுதி 24 | பகுதி 25 | பகுதி 26 | பகுதி 27 | பகுதி 28 | பகுதி 29 | பகுதி 30 | பகுதி 31 | பகுதி 32 | பகுதி 33 | பகுதி 34 | பகுதி 35 | பகுதி 36 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்