வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (15/10/2016)

கடைசி தொடர்பு:16:10 (15/10/2016)

உலக உணவு தினமும்...பசியால் வாடும் மக்களும்! #WorldFoodDay

                                                            

அக்டோபர் 16 -  உலக உணவு தினம்.
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானத் தேவை; 'உணவு'. பசி என்ற இயற்கை உணர்வுக்கு இயற்கையே உணவுப் பொருட்களையும் கொடுக்கிறது. ஆனால் அந்த உணவுப் பொருளை உற்பத்தி செய்வதில் தொடங்கி அவை ஒருவரது வயிற்றுக்குள் செல்வது வரையிலான பிரச்னைகள் மிக நீண்டவை... நெடியவை.  

உலகின் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நம்மைப் போன்ற நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பவை மக்கள் தொகை பெருக்கமும், விளைநிலங்கள் எண்ணிக்கை குறைந்து வருவதும், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு போன்ற காரணங்கள். இவை மூன்றுமே நம்மைப் போன்ற பல நாட்டு மக்களின் உணவுத் தேவையையும், பசியையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றன. தங்கள் அதீத வசதியால் ஆடம்பர நட்சத்திர உணவகங்களில் அடிக்கடி உணவு சாப்பிட்டு டிப்ஸ் கொடுக்கும் வர்க்கத்தினரும் நம் நாட்டில் இருக்கின்றனர். அதே வேளையில் ஒருநாளைக்கு ஒருவேளை உணவாவது கிடைக்காதா எனத் தவிப்போரும், கோவில் வாசலிலும் கடைத்தெருக்களிலும் யாசகம் கேட்பவர்களும் இருக்கிறார்கள். உலகம் முழுக்க அன்றாடம் பலர் பட்டினிச்சாவால் மரணிக்கிறார்கள். இயற்கை, இலவசமாகக் கொடுக்கும் உணவுப் பொருட்கள் ஒரு ஏழையின் பசியைப் போக்குவதற்குள் உயிர்வலியும் மரண வலிகளும் கண்முன் காட்டிச்சென்றுவிடுகின்றன. விஷயம் அவ்வளவு தீவிரமானதுதான். ஆனால் இப்போது அல்ல. காலம் காலமாக.

 

                                                           

 

1945-ம் ஆண்டு 16-ம் நாள் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நாளை நினைவு கூறும் விதமாகவும், அனைத்து உயிர்களும் ஆரோக்கியமாக வாழ வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும், பசியால் யாரும் வாடக்கூடாது; உணவு குறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் சரியாக சென்றடைய வேண்டும் போன்ற காரணங்களுக்காக 1979-ம் ஆண்டு ஐநா சபையின் 20-வது பொது மாநாட்டில் அக்டோபர் 16-ம் நாள் உலக உணவு தினமாக அறிவிக்கப்பட்டது. 37 ஆண்டுகளை கடந்துவிட்டாலும் உலகின் அனைத்து மக்களுக்கும் பொதுவாக, சரிவிகிதமான உணவு கிடைப்பது உறுதி செய்யப்படவில்லை. உற்பத்தி, பகிர்வு, நுகர்வு இவை அனைத்தும் சரிவிகித அளவில் இல்லாமல் இருப்பதே உணவு சார்ந்த பல பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கின்றது.

'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' எனப் பாடினார் பாரதி. ஆனால் இந்தியாவில் தினமும் 30 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் தூங்குகிறார்கள். 18 கோடி மக்கள் காலை அல்லது மதிய உணவின்றி வாழ்கிறார்கள். உலகிலேயே அதிகப்படியான அளவாக இந்தியாவில் 19 கோடி பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதோடு தினமும் ஆயிரக்கணக்கானோர் இப்பிரச்சனையால் பாதிக்கப்படுவதாகவும் ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் தெரிவிக்கிறது. இதில் பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அனைவருக்கும் தேவையான உணவு கிடைக்கவும், உணவு உற்பத்தியை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை அரசு சரியாக செய்வதில்லை. அதோடு வசதி படைத்த பெரும் பணக்காரர்களினால் உயர்த்தப்படும் விலைவாசி உயர்வு, கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் நடுத்தர, ஏழை மக்கள் மட்டுமே கடுமையான சிக்கல்களை சந்திப்பதுடன் வறுமையில் தள்ளப்படுகின்றனர். குறிப்பாக பலர் உணவு சாப்பிட வியர்வை சிந்திய விவசாயி தனக்கு சாப்பிட உணவில்லை என எலி கறியை சாப்பிட்ட கொடுமையெல்லாம் நம் நாட்டில் நடந்ததை நாம் அறிந்திருக்கிறோம். தென்னாப்பிரிக்காவில் மண்ணால் சுடப்பட்ட ரொட்டிகளை சாப்பிட்டு குழந்தைகள் உள்பட பலர் உயிர் இழக்கின்றனர். இப்படி பல நாடுகளில் பல உணவுப் போராட்டங்கள் தினமும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. விளைச்சல் குறைவு, தண்ணீர் பற்றாக்குறை, விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி பொருட்களுக்கு போதிய விலை இல்லாதது என உணவு உற்பத்தி செய்யப்படும் இடத்திலேயே எண்ணற்ற பிரச்னைகள். இதன் ஒருகட்டமாக விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் போட்டப்பட்டு கட்டடங்களாக மாற்றப்படுகின்றன. இயற்கை விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது போன்ற வேதனையான நிகழ்வுகள் நம்மை சர்வ சாதாரணாமாகவே கடந்து செல்கின்றன. 

 

                                                               

 

மறுபுறமோ இந்தியாவில் நடுத்தர குடும்பத்தினர் ஆண்டுக்கு 100 கிலோ உணவை வீண் செய்கிறார்கள். திருமண மண்டபங்களில் சராசரியாக 10 - 100 நபர்கள் உண்ணும் அளவிலான உணவுப்பொருள் வீண் செய்யப்படுகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களும், பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகளும் அன்றாடம் பல டன் உணவுப் பொருள் தெரிந்தோ தெரியாமலேயே வீண் செய்கிறோம். இவை அனைத்திற்குமே உணவுப் பொருள் குறித்த விழிப்புஉணர்வு இல்லாமல் இருப்பதே காரணமாக இருக்கின்றது. இப்படி வீண் செய்யும் உணவுப் பொருட்களால் பசியால் வாடும் மக்களின் உணவுத் தேவையை கணிசமான அளவு பூர்த்தி செய்ய முடியும். ஆனால் நம்மிடம் உபரியாக இருக்கும் உணவுப் பொருட்களை மற்றவர்களுக்கு பகிர்ந்துகொடுக்கும் எண்ணம் நம்மில் எத்தனைப் பேருக்கு இருக்கிறது என்பது தெரியவில்லை. 

 

                                                            

 

ஆரோக்கியத்தைக் கொடுக்கும் தானிய வகைகளின் உற்பத்தி மிகக்குறைவாக இருப்பதால் அவற்றின் விலை அதிகமாக இருக்கிறதே என புழம்புகிறார்கள் நடுத்தர வர்க்கத்தினர். மறு புறமோ ஏசி அறையில் பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளை உட்கொள்கிறார்கள் இன்னொரு வர்க்கத்தினர். இதில் படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடே இல்லாமல் போய்விட்டதுடன் உணவிலும் நாகரிகத்தை பார்க்க ஆரம்பித்து கூடவே உடல்நலத்தையும் கெடுத்துக்கொள்கிறார்கள். கால்சியம், புரோட்டின், வைட்டமின், மினரல்ஸ் என அனைத்துவித சத்துகளும் நிறைய சரிவிகித உணவை அன்றாடம் மிகக் குறைவானவர்களே உட்கொள்கிறார்கள். தொழில், படிப்பு என வெளியூர்களுக்குச் செல்பவர்கள் பலரும் நல்ல உணவின்றி தவிக்கிறார்கள். இப்படி பரமபத விளையாட்டுப்போல எண்ணற்ற நெழிவு சுளிவுகளைக் கொண்டதாக ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழலும் ஆரோக்கியமும் இருக்கின்றன.

உணவுப் பொருட்கள் வீணாகாமல் தடுக்க நம் வீட்டில் இருந்தே நாம் செய்ய வேண்டிய செயல்கள்:

* என்ன சமைக்கப் போகிறோம் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கேற்ற உணவுப் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்.

* ஃபர்ஸ்ட் இன், ஃபர்ஸ்ட் அவுட் என்பது போல முதலில் வாங்கிய உணவுப் பொருட்களை பயன்படுத்திய பிறகு அடுத்த பொருட்களைப் பயன்படுத்துவதால் உணவுப்பொருட்கள் கெடுதல், வீணாகுதல் தடுக்கப்படும்.

* ஃப்ரிட்ஜ் இருக்கிறது என பல நாளுக்கான பொருளை ஒரே நாளில் வாங்கி குவித்து வைப்பது. பின்னர் அதில் பலவற்றை தூக்கி எறிவது போன்ற செயல்களை பலர் செய்வதுண்டு. இதுபோன்ற செயல்களைத் தவிர்க்க, சில நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை மட்டும் வாங்கி வைக்கலாம்.

* சாப்பிடும்போது உணவுகளைப் பரிமாறும் அளவு குறைவாக இருந்தால், மீதமான உணவை எச்சில் படாமல் மற்றவர்களுக்கு கொடுத்து உதவலாம்.

மக்களிடம் மீதமாகும் உணவுப் பொருட்களை சேமித்து பசியால் வாடும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் பொது நலன் சேவகர்கள் இன்று பெருகிவருவது வரவேற்கத்தக்க செய்தி. இன்னும் அதிகமான சேவகர்கள் உருவாகி பசியால் வாடும் மக்களுக்கு உதவ வேண்டும். அதேசமயம் நாம் வீணாக்கும் உணவுப் பொருட்களின் அளவினையும் கட்டுப்படுத்தி பசியால் வாடுவோர் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.  

 

 

- கு.ஆனந்தராஜ்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்