வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (19/10/2016)

கடைசி தொடர்பு:15:24 (19/10/2016)

‘புழுவுக்கும் கடவுளுக்குமான யுத்தம்...’ ஐரோம் சர்மிளாவிற்கு அரசியல் ஆயுதம் கைகொடுக்குமா ?

ஆகஸ்ட் 9 , 2016... அவர் சிந்திய கண்ணீர்த் துளிகள் முக சுருக்கங்களில் தேங்கி நின்றன. சில துளி தேனை விரலில் தொட்டு எடுத்துக் கொண்டார். 16 ஆண்டுகாலமாக நீரையும், உணவையும்... வேறெதையும் கண்டிராத அவரின் வறண்ட தொண்டையினுள் அந்த தேன் துளிகள் இறங்கின. வறட்சியில் வெடித்திருந்த உணவுக் குழாய்களுக்கு அது புத்துணர்வு அளித்தது. சுருங்கிக் கிடந்த குடலுக்கு சுவாசம் கிடைத்தது. முடிவில்லா தொடக்கத்தோடு தொடங்கிய தன் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஓர் முடிவைத் தந்தார் ஐரோம் ஷர்மிளா.

" உங்களின் 16 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டத்தை நான் உளமாற மதிக்கிறேன். ஆனால், இத்தனை ஆண்டுகளில் அரசியல் சூழல், அரசாங்கம், மக்கள் என மொத்த சமூகமும் மாற்றங்களைக் கண்டுள்ளது... உங்கள் போராட்ட முறை மாற வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா??..." - சில மாதங்களுக்கு முன்பு, காவலில் இருந்த அவரைச் சந்தித்த போது நான் கேட்ட கேள்வி இது...

நீண்ட சிந்தனைக்குப் பிறகு... "எனக்கு வேறு வழி தெரியவில்லை..." என்று சொல்லி விட்டு மீண்டும் மெளனத்துக்குள் ஆழ்ந்தார். ஆனால், இன்று தனக்கான மாற்று வழியை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். கடந்த 18ம் தேதியன்று "மக்களுக்கான மறுமலர்ச்சி மற்றும் நீதிக் கூட்டணி" என்ற புதியக் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

ராணுவத்துக்கு அளவு கடந்த அதிகாரத்தை வழங்கும் ஆயுதப் படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை (1958) நீக்கக் கோரி, கடந்த 2000-ம் ஆண்டு, நவம்பர் 4-ம் தேதி முதல், 16 ஆண்டுகளாக தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார் ஐரோம். மாநிலத்திலும், மத்தியிலும் மாறிய அரசாங்கங்கள் இவரின் குரலைப் பொருட்படுத்தவில்லை. ஆரம்ப காலங்களில் ஐரோமுக்கு ஆதரவாக இருந்த அமைப்புகளும், பொது மக்களும் ஒரு கட்டத்தில்.. ’இவர் நமக்காகப் போராடட்டும், நாம் நம் வேலைகளைக் கவனிக்கலாம்’ என்று வாழ்வியல் ஓட்டத்தில் ஐக்கியமானார்கள்.

ஆனால் ஷர்மிளாவோ, ”இது கடவுள் எனக்கிட்ட கட்டளை. இது என் பிறவியின் கடமை. எனக்குத் தெரியும்... நான் யாருக்காகப் போராடுகிறேனோ... எம் மக்கள்... அவர்களே என்னை வெறும் போராட்டக் கருவியாக மட்டுமே பார்க்கிறார்கள்..அவர்களைப் பொறுத்தவரை நான் உயிருள்ள ஒரு ஆயுதம்... யார் என்னை ஆதரித்தாலும், ஆதரிக்காவிட்டாலும் என் போராட்டம் தொடரும்..." என்று சொன்னார். அதன்படியே இன்று மாற்றுக் களத்தில் போராடத் தொடங்கியுள்ளார். தனிமையைக் கடந்து தனக்கான ஒரு அழகான வாழ்க்கையை வாழ்ந்திட ஆசையாய் இருக்கிறது என்று சொன்ன ஐரோம், தனக்கான நேரத்தை செலவிடாமல் அடுத்த போராட்டத்துக்குத் தயாராகிவிட்டார். 

மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, சீஸர் சாவேஸ் போன்ற அமைதிப் போராளிகளிடமிருந்து அரசியல் பழகியவர் ஐரோம். அவரின் அரசியல் நகர்வுகள் எத்தகையதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடத்திலும் இருக்கிறது. தன் வாழ்வின் குறிக்கோளான AFSPA சட்டத்தை நீக்குவதுதான் அவரின் அரசியல் கட்சியின் அடிப்படை நோக்கம். அதோடு, வன்முறை ஒழிப்பு, பாலின சமத்துவம், பொருளாதார வளர்ச்சி, மக்களுக்கான சுயமரியாதை போன்ற விஷயங்களில் தன் கட்சி கவனம் செலுத்தும் என்று அறிவித்துள்ளார். முதற்கட்டமாக அடுத்தாண்டு நடக்கும் மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலின் 60 தொகுதிகளில், தன் கட்சி 20 இடங்களில் போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார். தெளபல் தொகுதியில் முதல்வர் ஐபோபி சிங்கை நேரடியாக எதிர்த்து போட்டியிடுகிறார் ஐரோம். சமீபத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து அவரிடம் ஆலோசனை செய்தார். பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க அனுமதி கோரி இருக்கிறார். 

ஐரோம் தனித்துவமானவர்.. எப்படி ?

ஷர்மிளா நிச்சயம் வழக்கமான ஓர் அரசியல்வாதி கிடையாது. இன்றைய அரசியலில் அவருக்கான இடம் எங்கே இருக்கிறது? என்பது கேள்விக் குறியாக இருக்கும் அதே சமயத்தில் அவர் மீதான அக்கறையின் பால் சில கேள்விகளும் எழுகின்றன. 16 ஆண்டுகாலமாக உணவை எடுத்துக் கொள்ளாததால், அவரின் உடல் பலவீனமான நிலையில் உள்ளது. போதுமான உணவுகளை எடுத்துக் கொண்டு, மருத்துவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அவர் தன்னை உடலளவில் பலப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோதே சில ஆயுதப் போராட்டக் குழுக்கள் ஷர்மிளாவுக்குக் கொலை மிரட்டல்கள் விடுத்தனர். அவரை கொல்லவும் முயற்சிகள் நடந்திருக்கின்றன. எனவே, ஷர்மிளா தன் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது அவசியம். 

அரசியல் களத்தில் மக்கள் ஆதரவு மிகவும் முக்கியம். ஷர்மிளாவை வெறும் போராட்ட ஆயுதமாக மட்டுமே பார்க்கும் பெரும்பான்மையான மக்கள், ஆங்கிலோ - இந்தியரான டெஸ்மண்டுடனான காதல் குறித்து ஐரோம் சொன்னதையும், உண்ணாவிரதத்தைக் கைவிட்டதையும் கொச்சைப்படுத்தி உள்ளனர். மேலும், பிழைப்புக்காக நாட்டின் பல்வேறு இடங்களில் வாழும் இன்றைய தலைமுறை மணிப்பூர் இளைஞர்களிடம் AFSPA குறித்த எதிர்ப்பும், போராட்ட குணமும் குறைந்தே காணப்படுகிறது. இவர்களின் ஆதரவைப் பெறும் வகையில் ஐரோம் திட்டங்களைத் தீட்ட வேண்டியதும் அவசியம். 

முடிவில்லா தொடக்கமான, தன் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டதும், மக்களுக்கான தன் போராட்டம் முடிந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் ... தன் போராட்டத்தின் தொடர்ச்சியாக, மறுவாழ்வின் மீட்சியாக இந்த அரசியல் பாதையை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். தன்னுடைய "அமைதியின் நறுமணம்" கவிதைத் தொகுப்பில் ஐரோம் இப்படி சொல்லியிருப்பார்.

" நேர்மையான மனிதன்தான் கடவுள். 
கடவுளுக்கும் புழுவுக்கும் இடையே நடந்த போரில்
புழு கடவுளைக் கொன்றுவிட்டது..."

புழுக்கள் நெளியும் அரசியல் களத்தில் கடவுளின் விதி என்னவாகும் என்பதை அந்த இயற்கையும், காலமுமே முடிவு செய்யும். அந்த முடிவு கடவுளைக் காக்கவேண்டும் என்பதே நம் ஆசை...!

-  இரா.கலைச்செல்வன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்