வெளியிடப்பட்ட நேரம்: 07:25 (08/11/2016)

கடைசி தொடர்பு:11:07 (08/11/2016)

‘கராச்சி முதல் டெல்லி வரை...’ - எல்.கே.அத்வானியின் வாழ்க்கைப் பயணம்! #HBDAdvani

தயாத்திரைகள் மூலம் பி.ஜே.பி-யை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியவர் எல்.கே.அத்வானி. வாஜ்பாய் ஆட்சியில் இரண்டாம் இடத்தில் இருந்தவர். 2009-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர். அப்போது பி.ஜே.பி-க்கு எதிரான அலை காரணமாக பி.ஜே.பி ஆட்சியைப் பிடிக்கவில்லை. எனவே, அவரது பிரதமர் கனவு நிறைவேறவில்லை.

பி ஜே.பி மூத்த தலைவர் அத்வானி, பிரிவினைக்கு முந்தைய பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பிறந்தவர். அவருக்கு நன்றாக நினைவு தெரிந்த நாட்கள் வரை அங்குதான் வளர்ந்து வந்தார். பிரிவினையின் ரத்தம் தோய்ந்த நாட்களை நேரில் கண்டவர்களில் அத்வானியும் ஒருவர். வாழ்ந்த இடத்தையும், பூர்வீகத்தையும் விட்டு உடுத்தியிருந்த உடைகளோடு இந்தியாவுக்கு வந்த லட்சக்கணக்கான இந்துக்களில் அத்வானியும் ஒருவர். ஆனால், தான் வாழ்ந்த கராச்சி நகரம் மீது அளவிடாத அன்பு கொண்டிருந்தார். "எனக்குப் பிடித்தமான நகரம் கராச்சி" என்று சொல்லி இருக்கிறார். கராச்சியில் இருக்கும்போதே அவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணைந்து விட்டார்.

ராஜஸ்தானில்...

கராச்சியில் இருந்து அத்வானி குடும்பம் மும்பை வந்தது. ஆர்.எஸ்.எஸ் இயக்கப் பணிக்காக அத்வானி ராஜஸ்தானுக்கு அனுப்பப்பட்டார். 1952 வரை ராஜஸ்தான் மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின்  நாட்களை நினைவு கூர்ந்துள்ள அவர், "ஆர்.எஸ்.எஸ் பணி எனக்கு பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைக்கு என்னை அர்ப்பணிக்கும் வகையில் எளிய, ஒழுக்கமான வாழ்க்கை வாழவேண்டும் என்ற உறுதி என்னுள் ஏற்பட்டது. பொதுவாழ்க்கை குறித்தும், அரசியல் குறித்தும் அடிப்படை விஷயங்களை ராஜஸ்தானில்தான் கற்றுக்கொண்டேன்" என்று கூறி உள்ளார்.

வாஜ்பாய்க்கு சாரதி

1957-க்குப் பிறகுதான் அத்வானியின் அரசியல் வாழ்க்கையில் முக்கியமான கால கட்டம் தொடங்கியது. அப்போது ஜனசங்கத்தில் இருந்த வாஜ்பாய் முதன் முறையாக லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி ஆகிறார். அவருக்கு உதவியாளராக இருப்பதற்கு டெல்லி வருமாறு ஜனசங்கத்தின் தலைவர் தீன் தயாள் உபாத்தியா, அத்வானியை அழைக்கிறார். இதனால் ராஜஸ்தானில் இருந்து டெல்லி வருகிறார் அத்வானி. டெல்லியில்தான் அரசியலின் அடுத்த கட்ட நகர்வுகளை அத்வானி தெரிந்து கொள்கிறார். நெருக்கடி கால கட்டம் அமலில் இருந்தபோது எல்.கே. அத்வானியும் 19 மாதங்கள் சிறையில் இருந்தார். "டெல்லிக்கு வந்த 20 ஆண்டுகாலத்தில் ஒரு அரசியல் அமைப்பின் அனுபவங்கள் எப்படி என்பது எனக்குப் புரிந்தது. அரசியல் உத்திகள், தலைமைப் பண்பு ஆகியவை குறித்தும் புரிந்து கொண்டேன்" என்று சொல்லி இருக்கிறார் அத்வானி.

ரதயாத்திரை..

எமர்ஜென்சி காலகட்டத்தில் காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்ட தலைவர்கள் 1977-க்குப் பிறகு மக்களின் கவனத்தை ஈர்த்தனர். அவர்களில் அத்வானியும் ஒருவர். இந்திராவை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த ஜனதா அரசில் அத்வானி மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராகிறார். பி.ஜே.பி கட்சி உருவானதும் அதன் முக்கிய தலைவர்களில் ஒருவரானார். 1990-ல் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அத்வானி ரதயாத்திரை மேற்கொண்டார். 1990-செப்டம்பர் முதல் அக்டோபர் வரை அவர் மேற்கொண்ட ரத யாத்திரை அவரது அரசியல் வாழ்வில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்த ரத யாத்திரை மூலம் பி.ஜே.பி-யின் அரசியல் செல்வாக்கும் அதிகரித்தது.

பி.ஜே.பி ஆட்சியில்...

பி.ஜே.பி வளர்ச்சியின் தூணாக இருந்த அத்வானி, முதன் முதலாக அமைந்த பி.ஜே.பி ஆட்சியில் உள்துறை அமைச்சராகிறார். துணைப்பிரதமராகவும் இருந்தார். இந்த கால கட்டத்தைப் பற்றி கூறி உள்ள அத்வானி, "தேசிய ஜனநாயாகக் கூட்டணி ஆட்சியின் பல சாதனைகளை நினைத்து நான் பெருமைப்படுகின்றேன். குறிப்பாக தேசியப் பாதுகாப்பு, தேசிய வளர்ச்சி ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றியது. இந்தியா அணு சக்தி நாடு என்ற நிலையை உருவாக்கத் துணிச்சலான முடிவு எடுக்கப்பட்டது" என்று கூறி உள்ளார்.

அரசியல் பின்னடைவு...

2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அத்வானியை பிரதமர் வேட்பாளராக பி.ஜே.பி அறிவித்தது. ஆனால், பி.ஜே.பி-யை மீண்டும் மக்கள் ஆட்சியில் உட்கார வைக்கவில்லை. அத்வானியின் அரசியல் உத்தி எடுபடவில்லை என்று பி.ஜே.பி வட்டாரம் கருதியது. எனவே லோக்சபா எதிர்கட்சித் தலைவராக சுஷ்மா சுவராஜுக்கு வாய்ப்புக் கிடைத்தது. 2014 லோக்சபா தேர்தலுக்காக நரேந்திரமோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் முடிவில் பி.ஜே.பி இருந்தது. ஆனால், அத்வானி இதனை மனதளவில் ஏற்றுக்கொள்ளவில்லை. பல்வேறு வகைகளில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். கடந்த 2013-ம் ஆண்டு தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டார். ஆனால், அப்போதே, தாம் பி.ஜே.பி-யில் இருந்து பதவி விலகுவதாக அறிவித்தார். ஆனால், அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கட்சியின் நடவடிக்கைகள் குறித்து அத்வானி எழுப்பிய கவலைகள் பரிசீலிக்கப்படும் என்று ராஜ்நாத் சிங் கூறியதை அடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது. ஆர்.எஸ்.எஸ் அறிவுறுத்தல்படி பி.ஜே.பி-யில் அடுத்த தலைமுறையினருக்கே வாய்ப்பு என்று முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் ஆக்டிவ் பாலிடிக்ஸில் இல்லை. எனினும் அத்வானி தற்போது பி.ஜே.பி நாடாளுமன்ற குழுவில் இடம் பெற்றிருக்கிறார். கராச்சி முதல் டெல்லி வரையிலான அவரின் நகர்வுகள் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவைதான்.

- கே.பாலசுப்பிரமணி 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்