வெளியிடப்பட்ட நேரம்: 12:43 (12/11/2016)

கடைசி தொடர்பு:12:42 (12/11/2016)

விவசாயி வீட்டு திருமணத்தில் என்ட்ரி... ரோட்டோர கடையில் டீ... ஸ்டாலினின் 'நமக்கு நாமே பார்ட் 2' !


ட்டமன்ற தேர்தலுக்கு முன் நமக்கு நாமே என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்ட தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், ரோட்டோர கடையில் டீ சாப்பிடுவது, தள்ளுவண்டி கடையில் டிபன் சாப்பிடுவது, ஆட்டோவில் போவது, பஸ்சில் போவது, பைக் ஓட்டுவது என தினம் ஒரு ஸ்டைலில் கவனம் ஈர்த்து வந்தார். நமக்கு நாமேவுக்காக தமிழகம் முழுவதும் வலம் வந்த அவர், அதன் பிறகு தேர்தல் பிரச்சாரத்துக்காகவும் ஊர் ஊராக சென்று வந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரச்சாரத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் தள்ளி வைக்கப்பட்ட அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, ரோட்டோர கடையில் டீ சாப்பிடுவது, கட்சி தொண்டர்கள் வீட்டு திருமணத்துக்கு செல்வது, சாலையில் ஊர்வலமாக செல்லும் கல்யாண ஜோடியை நிறுத்தி வாழ்த்துவது என கிளம்பி விட்டார் மு.க.ஸ்டாலின். இவையெல்லாம் இயல்பாக நடக்கிறதா? இல்லை நமக்கு நாமே பார்ட் 2 ஆ? என பெரும் விவாதமே நடக்கத்துவங்கியிருக்கிறது.

விவசாயி வீட்டு திருமணத்தில் ஸ்டாலின் பங்கேற்றது தான் கரூரின் ஹாட் டாக். எப்படி நிகழ்ந்தது இந்த நிகழ்வு என்பது குறித்து மணமகள் தேன்மொழியின் தந்தை விவசாயி வேலுச்சாமியிடம் பேசினோம்.

"நான் சாதாரண விவசாயி. தி.மு.க.வோட கிளைச்செயலாளரா இருக்கேன். எனக்கு 5 பொண்ணுங்க. ரெண்டாவது பொண்ணு தேன்மொழிக்கு, திண்டுக்கல், புதுக்கோட்டையைச் சேர்ந்த கண்ணதாசனுக்கு கல்யாணம் பண்ண பேசி முடிச்சிருந்தோம். 11ம் தேதி கல்யாணத்துக்கு நாள் குறிச்சிருந்தோம். தளபதி இங்கே இருந்ததால அவருக்கு பத்திரிகை கொடுக்கலாம்னு அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு போனேன். என்னை எப்படியும் பாக்க அனுமதிக்க மாட்டாங்க. பி.ஏ.கிட்ட கொடுத்துட்டு வந்துடலாம்னு நினைச்சேன். ஆனா தளபதி என்னை கூப்பிட்டார்.

பத்திரிகையை அவர்கிட்ட கொடுத்தேன். ரொம்ப சந்தோஷமா பத்திரிகையை வாங்கீட்டார். 'என்னை எதிர்பார்க்க வேண்டாம். முடிஞ்சா வர்றேன்'னு சொன்னார். பத்திரிகை கொடுத்ததே சந்தோஷம்னு சொல்லீட்டு வந்துட்டேன். காலையில 7 மணிக்கு கல்யாணம் நல்லபடியா நடந்துச்சு. காலை 10 மணி இருக்கும். மண்டபத்துல திடீர் பரபரப்பு. என்னானு பார்த்தா தளபதி வந்திருந்தார். எனக்கு ரொம்ப சந்தோஷம். மேடைக்கு வந்து மணமக்களை வாழ்த்தி, அறிவுரையும் சொன்னார்.

என்னால இன்னும் நம்ப முடியலை. இந்த ஏழை வீட்டையும் மதிச்சு தளபதி திருமண விழாவுல கலந்துகிட்டத நெனச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் முப்பது வருஷமா தி.மு.கவுல இருக்கேன். நடுவுல வைகோ 1992ல் தி.மு.கவுல இருந்து பிரிஞ்சப்ப,எங்க ஊர்ல அவர் பின்னே போனவங்க என்னையும் கூப்பிட்டாங்க. ஆனால்,நான் 'சாவுற வரைக்கும் தி.மு.கதான் என் கட்சி. கலைஞர்தான் என் தலைவர்'ன்னு சொல்லி மறுத்துட்டேன். அதுக்கு சரியான பரிசு கிடைச்சுருக்கு. அஞ்சு பொண்ணுங்களை வச்சுகிட்டு கஷ்ட ஜீவனம் பண்றேன். நிலம்னு கொஞ்சம் இருக்கு.

15 வருஷத்துக்கு முன்னாடி என்னை கிளைச் செயலாளராகவும் ஆக்கினாங்க. அதனால்,கட்சி கட்சின்னு எந்நேரமும் அலைவேன். உறவினர்கள்கூட,'ஏண்டா கட்சி கட்சினு அலையிறியே.கலைஞர்,ஸ்டாலினை ஒருதடவைகூட ஒன்னால பார்க்ககூட முடியாது. பொண்ணுங்கள் வச்சுகிட்டு வேலைக்கு போகாம,இப்படி கட்சி பின்னாடி சுத்திறியே'ன்னு ஏசுவாங்க. இப்போ என் வீட்டு கல்யாணத்துக்கு வந்து நிக்குறார் தளபதி. இது போதும் எனக்கு," என்றார்.

"முதல்ல நான் கூட கட்சி கட்சின்னு இந்த மனுசன் இப்படி அலையுறாரே. என்ன சுகத்தை கண்டார்'ன்னு நினைச்சதுண்டு. இப்ப அந்த எண்ணம் சுத்தமா இல்லை" என்கிறார் அவரது மனைவி சரஸ்வதி.  "கல்யாணம் ஆகி வந்த வீட்டுல ஒவ்வொருத்தரா,'எப்படி ஸ்டாலின் வந்தார்?'ன்னு ஆச்சரியத்தோடு விசாரிச்சுக்கிட்டே இருக்காங்க. எனக்கு பதில் சொல்லி சொல்லி வாய் வலிச்சு போயிட்டு" என்கிறார் மணமகள் தேன்மொழி.

இந்த திருமணத்தை முடித்துக் கொண்டு செல்லும் வழியில், மற்றொரு கல்யாண ஜோடி ஊர்வலமாக போக.. காரை நிறுத்தச்சொல்லி அந்த மணமக்களையும் வாழ்த்திச் சென்றார் மு.க.ஸ்டாலின். செல்லும் வழியில் ரோட்டோர கடையில் சூடா டீ கொடுப்பா' என டீயை வாங்கி குடித்து விட்டு போயிருக்கிறார் ஸ்டாலின்.

எல்லாவற்றையும் பார்க்கும் போது நமக்கு நாமே பயணம் நமக்கு நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

- துரை.வேம்பையன்,

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்