செல்லாமல் போன ரூபாய் நோட்டுக்களும் மறந்து போன 6 செய்திகளும்!

ரூபாய் நோட்டு

பிரதமர் நரேந்திரமோடி நவம்பர் 8-ம் தேதி இரவு 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த நொடியில் இருந்து வழக்கமான செய்திகள் எல்லாம் தலை காட்டவில்லை. மக்கள் அனைவரும் மற்ற செய்திகளை மறந்து விட்டு, நோட்டுகளை எடுத்துக்கொண்டு மாற்றுவதற்கு கிளம்பி விட்டனர். அரசியல் தலைவர்களும் நோட்டுக்களை மாற்றும் மக்களின் அவஸ்தைகளைப் பற்றியே பேசினர்.

கெஜ்ரிவால்-நஜீப் மோதல் இல்லை

டெல்லி மாநிலத்தின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அடிக்கடி கவர்னர் நஜீப் மீது குற்றச்சாட்டுகளை வைப்பார். அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறார் என்றெல்லாம் குற்றம் சுமத்துவார். ஆனால், 8-ம் தேதி இரவு முதல் இத்தகைய குற்றசாட்டுகள் எதுவும் இல்லை. மாறாக 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போவது பா.ஜ.க நிர்வாகிகளுக்கு முன்பே தெரியும் என்று சொல்லி கெஜ்ரிவால் பரபரப்பை ஏற்படுத்தினார்.

உ.பி தேர்தல் குறித்து செய்திகளும் கூட வரவில்லை

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்து எந்த செய்தியும் முக்கியத்துவம் பெறவில்லை. மாறாக பழைய நோட்டுகள் செல்லாமல் போனதால் உத்தரப்பிரதேசத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் முடங்கி இருப்பதாகத் தகவல் வெளியானது.

மோடி ஜப்பான் பயணம்

செல்லாத நோட்டுகள் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி அடுத்த நாள் ஜப்பான் பறந்து விட்டார். அவரது வெளிநாட்டுப் பயணம் குறித்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக் தளங்களின் கலாய்ப்பவர்கள் அது பற்றிக் கண்டு கொள்ளவே இல்லை. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அவர் அறிவித்தது குறித்துத்தான் கலாய்த்தனர்.

இந்திய வீரர் பலி

8-ம் தேதி இரவு எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே ரஜெவ்ரி மாவட்டத்தில் நவ்செரா அருகே பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் உயிரிழந்தார். ஆனால், இதுகுறித்து யாரும் பேசவில்லை. பணம் குறித்த செய்திகளே முக்கிய இடம் பிடித்தன.ராணுவ வீரர்கள் குறித்து பேசும் பா,ஜ.க கூட இது குறித்து வாய் திறக்கவில்லை.

டெல்லி புகை மூட்டம்

தலைநகர் டெல்லியின் புகை மூட்டம் தலைநகரை மட்டுமின்றி இந்தியாவையே கவலைக்கு உள்ளாக்கியது. 9-ம் தேதியும் புகை மூட்டம் டெல்லியைச் சூழ்ந்துதான் இருந்தது. ஆனால், ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றுவது என்ற மக்களின் கவலை புகை மூட்டத்தையே காணாமல் போகச் செய்துவிட்டது.

தமிழகத்தில்...

தமிழகத்திலும் கூட ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அன்றாடம் வெளிவந்த செய்திகளையும் மோடியின் அறிவிப்பு இல்லாமல் செய்துவிட்டது. மோடியின் அறிவிப்பு மருத்துவமனையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு தெரியுமா? என்று கூட மீம்ஸ்கள் வெளியாகி கலக்கின. செல்லாமல் போனது ரூபாய் நோட்டுகள் மட்டுமல்ல செய்திகளும்தான்.

- கே.பாலசுப்பிரமணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!