‘ஆடம்பரத் திருமணமும்... தேர்தலில் படுதோல்வியும்!’ - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 27

 

-

 

 

ஜெயலலிதா டைரி குறிப்புகள் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 8 | பகுதி 9| பகுதி 10 | பகுதி 11 | பகுதி 12 | பகுதி 13 | பகுதி 14 |பகுதி 15 | பகுதி 16 | பகுதி 17 | பகுதி 18 | பகுதி 19 | பகுதி 20 | பகுதி 21 | பகுதி 22 | பகுதி 23 | பகுதி 24 | பகுதி 25 | பகுதி 26 

ஜெயலலிதா

‘எளிமை, துணிவு, நேர்மை, உழைப்பு போன்ற பண்புகளை, மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதைவிட மிகக் கூடுதலான அளவில் அமைச்சர்களிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’’ என்றார் காந்தி. இதைச் சொன்னது இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த அடுத்த ஆண்டு. இதை, அவர் சொல்லி ஏறத்தாழ ஆறு தசாப்தங்கள் ஆகின்றன. மக்களின் எதிர்பார்ப்பும் அப்படியேதான் இருக்கிறது. ஆனால், அதை நிறைவேற்றத்தான் அமைச்சர்கள் யாரும் இல்லை. நம்மை நாமே நொந்துகொள்ள வேண்டியதுதான். சரி... நாம் விஷயத்துக்கு வருவோம். 1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வி அடைந்தது. ஏன், அந்தத் தேர்தலில் பர்கூரில் ஜெயலலிதாவே... சுகவனத்திடம் தோற்றுப்போனார். அந்தத் தோல்விக்குப்பின் ஜெயலலிதா, ‘இந்தியா டுடே’வுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறாகக் கூறினார், “ஆம். நான் என் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு... சுதாகரன் திருமணத்தை அவ்வளவு ஆடம்பரமாக நடத்தியது.” முதன்முதலில் பொதுவெளியில் ஜெயலலிதாவே ஒப்புக்கொண்ட தவறு, அது. அப்படியென்றால், அந்தத் திருமணம் எவ்வளவு ஆடம்பரமாக நடந்திருக்க வேண்டும்? 

‘ஆடம்பரத் திருமணம்!’ 

திடீரென ஒருநாள் ஜெயலலிதா, 28 வயது சுதாகரனை தன் வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்தார். சுதாகரன் வேறு யாரும் இல்லை... ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி (ஆம், ஜெயலலிதா அப்படித்தான் குறிப்பிட்டார்) சசிகலாவின் அக்கா மகன்தான். தத்தெடுத்த சில நாட்களிலேயே அவருக்கு மிக ஆடம்பரமாகத் திருமணம் நடத்தினார். மணப்பெண், மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேத்தி.

இப்போது நாம் எல்லாம் ஜனார்த்தன ரெட்டி மகள் திருமணத்தைப் பற்றிப் பெரிதாகப் பேசுகிறோம்தானே... ரூ.6 கோடி செலவில் எல்.சி.டி வடிவில் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது; 30 ஆயிரம் விருந்தினர்கள் அழைக்கப்பட்டார்கள்; 36 ஏக்கர் பரப்பளவில் விஜயநகரப் பேரரசின் அரண்மனை போன்ற பிரமாண்ட செட் போடப்பட்டது; ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஆடைகள் எடுக்கப்பட்டது என்று... இதேபோல்தான் 1995-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இந்தத் திருமணம் குறித்துப் பெரிதாகப் பேசப்பட்டது. 

70,000 சதுர அடி பரப்பளவில் திரைப்பட கலை இயக்குநர் தோட்டாதரணியைக் கொண்டு பந்தல் போடப்பட்டது; ஒரே சமயத்தில், அங்கு 25,000 பேர் அமர்ந்து உணவு அருந்துவதற்கு ஏற்றாற்போல் அரங்கு அமைக்கப்பட்டது. வெளியூர்களிலிருந்து வரும் விருந்தினர்கள் தங்குவதற்காக சென்னையில் மட்டும் வெவ்வேறு ஹோட்டல்களில் 1,000 அறைகள் எடுக்கப்பட்டன... திருமணத்துக்கு வந்தவர்களுக்குக் கொடுப்பதற்காக 2 லட்சம் தாம்பூலப் பைகள் வாங்கப்பட்டன. இவை மட்டும் அல்ல... ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கச்சேரி, வாணவேடிக்கை என தமிழகமே அதுவரை கண்டிராத திருமணம். இல்லை... இல்லை... காண விரும்பாத திருமணம். 

திருமண ஊர்வலத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும் ஊர்வல வண்டிக்கு முன்னால், ஒட்டியாணம், வளையல்கள் என தலை முதல் கால்வரை நகைகளால் அலங்கரிக்கப்பட்டுச் செல்ல... இவர்களுக்கு முன்னால், தேவாரம் பாதுகாப்பு அளித்தபடியே சென்றுகொண்டிருந்தார். ஆம், மொத்த அரசு நிர்வாகமும், இந்தத் திருமணத்துக்காக முடக்கிவிடப்பட்டிருந்தது. ரோட்டோர மின்சாரக் கம்பத்திலிருந்து மின்சாரம் எடுக்கப்பட்டு மின்விளக்குகளுக்குப் பாய்ச்சப்பட்டது. இன்னொரு பக்கம் அதே நன்னாளில் மின்சாரம் இல்லாமல், சென்னையின் சில பகுதிகள் இருளில் மூழ்கி இருந்தன. 

அந்தத் திருமணத்தை, சசிகலா குடும்பத்தால் நியமிக்கப்பட்ட புகைப்படக்காரர்கள் மட்டும் பதிவுசெய்யவில்லை. தி.மு.க புகைப்படக்காரர்களும், திருமணப்பொழுதின் ஒவ்வொரு கணத்தையும் படம்பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஆம், அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான், தி.மு.க-வின் பிரசார ஆயுதமானது. 

‘என் சம்பந்தம் இல்லாமல் என்னைத் தத்தெடுத்தார்கள்!’

1996-ம் ஆண்டு தேர்தலில், அந்தத் திருமணத்தில் எடுக்கப்பட்ட படங்களைக் கொண்டு தி.மு.க-வின் சுவரொட்டி வடிவமைக்கப்பட்டது. ஒரு ரூபாய் சம்பளம் வாங்குபவருக்கு... ஒரு கோடி ரூபாய் செலவில் திருமணம் நடத்த எங்கிருந்து பணம் வந்தது என்று அந்தச் சுவரொட்டிகள் கேள்வி எழுப்பின? அது, உண்மையில் மக்கள் மத்தியில் தாக்கத்தை உணடாக்கியது. அது மட்டும் அல்ல... அந்தத் தேர்தலில் தி.மு.க. - த.மா.கா அமைத்த கூட்டணி; அதற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் குரல்கொடுத்தது என எல்லாம் சேர்த்து... அந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வை அதலபாதாளத்தில் தள்ளியது. இந்தக் காலகட்டத்தில்தான் ஜெயலலிதா காவிரிப் பிரச்னைக்காக மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால், இது எதுவும் முதன்மை பெறவில்லை. அந்தத் திருமணம், அவர் எடுத்த சில நல்ல நடவடிக்கைளையும் பின்னுக்குத் தள்ளியது. 1991 தேர்தலில், பர்கூர் தொகுதிக்கு பிரசாரம் செல்லாமலேயே வென்ற ஜெயலலிதா.. 1996 தேர்தலில் அதே தொகுதில் 8,366 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளரிடம் தோற்றார். 173 தொகுதிகளில் வென்று தி.மு.க., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. 

அ.தி.மு.க தோற்றது, தி.மு.க வென்றதுகூடச் செய்தியல்ல... சில ஆண்டுகளுக்குப்பின் ஜெயலலிதா யாரைத் தத்தெடுத்தாரோ... அதே சுதாகரனை கஞ்சா வழக்கில் கைதுசெய்தார் ஜெயலலிதா. ஏறத்தாழ 10 மாதங்கள் சிறையில் வைத்தார். சுதாகரனும், “என் சம்பந்தம் இல்லாமல் என்னைத் தத்தெடுத்துவிட்டார்கள்...” என்று ஆங்கில இதழ்களுக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார். 

இன்று, அதே சுதாகரன்தான்... அப்போலோவில் ஜெயலலிதாவைப் பார்க்க தன் சொந்த அத்தையால் அனுமதி மறுக்கப்பட்டு வாசலில் நின்றுகொண்டிருக்கிறார்.

(தொடரும்)

- மு. நியாஸ் அகமது

 

ஜெயலலிதா டைரி குறிப்புகள் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 8 | பகுதி 9| பகுதி 10 | பகுதி 11 | பகுதி 12 | பகுதி 13 | பகுதி 14 |பகுதி 15 | பகுதி 16 | பகுதி 17 | பகுதி 18 | பகுதி 19 | பகுதி 20 | பகுதி 21 | பகுதி 22 | பகுதி 23 | பகுதி 24 | பகுதி 25 | பகுதி 26 

இந்த தொடரின் அடுத்த பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!