கடந்த ஐந்தாண்டில் 6-வது பெரும் விபத்து... கலங்கடிக்கும் ரயில் விபத்துகள்! | Five major train accidents in India in the last five years

வெளியிடப்பட்ட நேரம்: 15:04 (20/11/2016)

கடைசி தொடர்பு:11:07 (21/11/2016)

கடந்த ஐந்தாண்டில் 6-வது பெரும் விபத்து... கலங்கடிக்கும் ரயில் விபத்துகள்!

த்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள புக்ராயன் அருகே, இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில், பாட்னா - இந்தூர் விரைவு ரயிலானது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.  சுமார் 14 பெட்டிகள் தடம் புரண்ட இந்த ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.  100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரித கதியில் நடக்கிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்த மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பலியானவர்களுக்கு நிதியுதவி அளிக்க மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. விபத்துக்கான காரணம் ஏதும் தெரியவில்லை.

மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, இது தொடர்பான விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.  இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சகம், உத்தரப்பிரதேச மாநில அரசு, மத்திய பிரதேச மாநில அரசு மற்றும் பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதி ஆகியவற்றின் மூலம் நிவாரண நிதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நிலைமை குறித்து பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்  ஆகியோர்  கண்காணித்து வருகிறார்கள்.

இந்த மிகப்பெரிய விபத்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய 6-வது விபத்து இது. இதற்கு முன்னர் கடந்த 4 ஆண்டுகளில் மிகப்பெரிய 5 ரயில் விபத்தை நாம் கடந்து வந்திருக்கிறோம். அவை குறித்த விவரங்கள்.

மார்ச் 20, 2015 - தடம் புரண்ட டேராடூன்-வாரணாசி எக்ஸ்பிரஸ் - 38 பேர் பலி

2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ம் தேதி. உத்தரப்பிரதேசத்தில் டேராடூன் - வாரணாசி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டார் காயம் அடைந்தனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பச்ராவன் ரெயில் நிலையம் அருகே, காலை 9.30 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. விபத்தில்  டேராடூன் - வாரணாசி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் உட்பட மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து நடந்ததாக சொல்லப்பட்டது.

மே 26, 2014 :  உ.பி.யில் சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் மோதி விபத்து - 22 பேர் பலி

2014-ம் ஆண்டும் மே மாதம் 26-ம் தேதி. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோரக்தாம் விரைவு ரயில் தடம் புரண்டு, நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் 22 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். "டெல்லியிலிருந்து கோரக்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில், சந்த் கபிர் நகர் மாவட்டம் சுரெய்ப் ரயில் நிலையத்துக்கு காலை 10 மணிக்கு வந்தது. அப்போது, திடீரென தடம் புரண்டு அருகில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இந்த விபத்தில் 22 பேர் பலியாகினர்.

மே 4, 2014: மஹாராஷ்டிராவில் தடம்புரண்ட பயணிகள் ரயில் - 21 பேர் பலி

கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 4-ம் தேதி. மகாராஷ்டிராவில் பயணிகள் ரயில் தடம்புரண்டதில் ரயிலில் பயணம் செய்த 21 பேர் பலியாகினர். மகாராஷ்டிரா மாநிலம் திவா ஜங்ஷன் - சாவந்தவாடி இடையே செல்லும் பாசஞ்சர் ரயில் ரெய்காட் மாவட்டத்தில் நாகதானே - ரோகா ரயில் நிலையம் இடையே தடம் புரண்டது. இதில் 4 பெட்டிகள் மற்றும் ரயில் இன்ஜின் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு கவிழ்ந்தன. 20 பேர் இதில் பலியாகினர். 100க்கும்மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

டிசம்பர் 28, 2013:  பெங்களூரு ரயிலில் தீ : 26 பேர் பலி

கடந்த 2013-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 28-ம் தேதி. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், புட்டபர்த்தி அருகே சென்றுகொண்டிருந்த பெங்களூர்-நண்டெட் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகாலை நேரிட்ட தீ விபத்தில் 26 பயணிகள் உயிரிழந்தனர். பலர் தீக்காயமடைந்தனர். பெங்களூரில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் நண்டெட் நகருக்கு சென்று கொண்டிருந்த இந்த ரயில், அதிகாலை 3.45 மணிக்கு புட்டபர்த்தி சத்ய சாய் பிரசாந்தி நிலையம் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, ஏசி கோச்சில் தீ பிடித்து விபத்துக்குள்ளானது. மின் கசிவால் இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஜூலை 30, 2012: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ : 35 பேர் பலி


கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில், ஆந்திரா மாநிலம், நெல்லூர் அருகே வந்த போது ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் எஸ் 11 பெட்டி முழுமையாக எரிந்து 35 பேர் பலியாகினர். 25 பேர் படுகாயமடைந்தனர். ரயிலில் பயணிகள் எடுத்து வந்த சிலிண்டர் வெடித்து தீ பிடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இந்த ரயில் விபத்துகளுக்கான விசாரணைகள் நடைபெற்றன. ஆனால் அதன் அறிக்கை ஏதும் வெளியிடப்பட்டதாய் தெரியவில்லை. இப்போது இன்னுமொரு விபத்து நடந்திருக்கிறது. விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து, கண்டறிந்து அதை தடுக்க வேண்டியது மிக அவசியம்.

- ச.ஜெ.ரவி,

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close