தளர்ந்த உடல்... தளராத தலைமை... கருணாநிதி கடந்து வந்த பாதை !

ரசியல் மேடையில் இந்த கதையை நீங்கள் பல முறை கேட்டிருக்கலாம். தி.மு.க. தலைவர் கருணாநிதி, தன் வாழ்வில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை எத்தனை முறை சொல்லி இருப்பார் என்பது அவருக்கே தெரியாது. தன் வாழ்க்கையில் மிக முக்கியமான சம்பவமாக இதை அவர் சொல்வதுண்டு. அவரது தன்னம்பிக்கையை, விடா முயற்சியை இந்த சம்பவம் உணர்த்துவதாக பலரால் பாராட்டப்பட்டிருக்கிறது இந்த சம்பவம்.

ஒரு ஆண்டுக்கு முன்னர்,  கருணாநிதியிடம் 'இத்தனை வயதாகிவிட்டது. அரசியலில் எப்படி இவ்வளவு சலிப்பில்லாமல் இயங்குகிறீர்கள்? ஓய்வு எடுக்கலாம் என தோன்றியதே இல்லையா' என அவரிடம் கேட்கப்பட்டபோது, அதற்கு அவர் அளித்த பதில் இந்த சம்பவத்தை அடிக்கோடிட்டு தான்.

அரசியல் நான் விரும்பிய பாதை

"பாதிக்கிணறு தாண்டும் பழக்கம் எனக்கு எப்போதும் கிடையாது. நான் சிறுவனாக இருந்தபோது, எனது நண்பன் தென்னனுடன் திருவாரூர் குளத்தில் நீந்திக்கொண்டிருந்தேன். குளத்தில் நீந்தி மைய மண்டபத்தை அடைய வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு. பாதி தூரம் கடந்து சென்று விட்டோம். 'என்னால் முடியவில்லை. திரும்பி விடலாம்' என்றார் நண்பன். திரும்புவதென்றால் முக்கால் பகுதி நீந்த வேண்டும். மைய மண்டபம் என்றால் கால் பகுதி தான் நீந்த வேண்டும்' என்று சொன்னேன்.இருவரும் நீந்தி மைய மண்டபத்தை அடைந்தோம். எனவே எதையும் பாதியில் விட்டுச் செல்வது என் பழக்கம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் அரசியல் நான் விரும்பி தேர்ந்தெடுத்த பாதை" என்றார் அவர்.

தமிழக அரசியல் களத்தில் கருணாநிதியைப் போல வெற்றி கண்டவரும் இல்லை. அவரை போல சரிவுகளை சந்தித்தவர்களும் இல்லை. அவரைப் போல விமர்சிக்கப்பட்டவர் தமிழக அரசியலில் யாரும் இல்லை. நீண்ட காலம் அரசியலில் இருப்பது என்பது அவருக்கு மிகப்பெரிய சிக்கலைத் தான் கொடுத்தது. பல பிரச்னைகளில் அவர் மீது ஆத்திரங்களை வாரி கொட்டுகின்றனர். ஆனாலும் அவர் இன்னும் அரசியலில் சுறுசுறுப்பாக இயங்குகிறார்.  இது போன்ற விமர்சனங்களின் போதெல்லாம், 'எல்லா பாதைகளிலும் குளிர் சோலைகளும் இருக்கும். சுடும் பாலையும் இருக்கும். பாலையைக் கண்டதும் பதுங்கி ஓடுபவன் நான் அல்ல' என விளக்கம் கொடுப்பார்.

13 தேர்தல்களில் தொடர் வெற்றி

கருணாநிதி இதுவரை 13 தேர்தல்களை சந்தித்துள்ளார். எதிலும் அவர் தோற்றதில்லை. 1957-ம் ஆண்டு முதன்முதலில் கருணாநிதி போட்டியிட்டது குளித்தலை தொகுதியில். அன்று நடந்த தேர்தலில் அவருடன் களம் கண்டவர்கள் யாரும் இன்றைய அரசியல் களத்தில் இவரளவு செயல்பாட்டில் இல்லை. இவர் மட்டுமே இருக்கிறார். இவரை விட ஒன்றரை ஆண்டு முதிர்ந்தவர் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன். 1957-ம் ஆண்டு கருணாநிதியோடு தேர்தலை சந்தித்தவர் அன்பழகன் தான். கடந்த தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என அன்பழகன் ஒதுங்கி கொண்டார். 93-வது வயதில் இப்போதும் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் கருணாநிதி.

1957-ம் ஆண்டு தனது முதல் தேர்தலை சந்தித்த போது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 10 வயது கூட இல்லை. ஜெயலலிதாவுக்கு 21 வயது இருக்கும்போது கருணாநிதி, தி.மு.க.வின் தலைவராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் ஆகி விட்டார். ஜெயலலிதா முதல் முறை சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் நின்றபோது கருணாநிதி இருமுறை முதல்வராகி இருந்தார். கடந்த தேர்தலிலும் ஜெயலலிதாவுக்கு நேரெதிராய் முதல்வர் வேட்பாளராய் களம் கண்டிருக்கிறார்.

1971-ல் பெற்ற பிரம்மாண்ட வெற்றி

32 வயதில் எம்.எல்.ஏ., 44-வது வயதில் முதல்வர், கட்சியின் தலைவர், போட்டியிட்ட 13 தேர்தல்களிலும் இடைவிடாத வெற்றி, 93 வயதிலும் எம்.எல்.ஏ. என இவர் அடைந்த உயரங்கள் பல. இதற்குப் பின்னால் கருணாநிதியின் கால நேரம் பார்க்காத உழைப்பு இருக்கிறது.

தனது பதின் வயதின் துவக்கத்தில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி. அந்த வயதில் 'மாணவ நேசன்' என்ற துண்டு கையெழுத்துப் பத்திரிகையை நடத்தி, அவர் வாழ்ந்த திருவாரூர் பகுதியில்  மாணவர்களை திரட்டினார் கருணாநிதி. மிகவும் இளம் தலைவராக இருந்த கருணாநிதி, அண்ணா மறைவுக்குப் பின்னர் தனது 44-வது வயதில் முதல்வரானார். கட்சியின் தலைமை பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

அண்ணா மறைவுக்கு பிறகு 1971-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் தேர்தலை சந்தித்தது தி.மு.க. ராஜாஜி, காமராஜர் ஆகியோர் ஓரணியில் நிற்க... அவர்களை எதிர்த்து போட்டியிட்டு பிரம்மாண்ட வெற்றியை பெற்றார். 184 இடங்களில் வென்று மீண்டும் முதல்வரானார் கருணாநிதி. தனிப்பெரும் கட்சி 184 இடங்களில் வென்றது அப்போது தான். அந்த வெற்றியை அதன் பின்னர் யாராலும் பெற முடியவில்லை. அதன் பின்னர் எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து விலகியதால், 13 ஆண்டுகள் ஆட்சி அதிகார வாய்ப்பை இழந்திருந்தது தி.மு.க. அப்போது கூட கருணாநிதி தேர்தலில் தோல்வியை தழுவியதில்லை. மாணவ நேசன் கையெழுத்துப் பிரதியை நடத்தியவர், இப்போது கட்சியின் தலைவர், எம்.எல்.ஏ. ஆகிய பொறுப்புகளோடு, முரசொலி பத்திரிகையின் ஆசியராகவும் இருந்து வருகிறார்.

வெற்றிகளை மட்டுமல்ல... பழிகளும் ஏராளம்...

கருணாநிதி ஏற்றங்களை மட்டுமல்ல. வீழ்ச்சியையும், கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தவர். தமிழகத்துக்கு மதுவிலக்கு அகற்றும் யோசனையை கொண்டு வந்தது, ஈழ விவகாரத்தில் இவரது செயல்பாடு, 2 ஜி ஊழல் என இவர் மீதான விமர்சனங்கள் எண்ணற்றவை. அரசியலில் நீண்டகாலம் தாக்குப்பிடித்தவர் என்பதால் ஏராளமான பழிகளை இவர் எதிர்கொண்டிருக்கிறார். எதிர்கொண்டு வருகிறார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., வைகோ, இப்போது அழகிரி என இவருக்கு ஏராளமான சிக்கல் தொடர்ந்து கொண்டே வருகின்றன.

இந்தி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, மாநில சுயாட்சிக் கொள்கை என தி.மு.க. கடைபிடித்த கொள்கைகளில் இருந்து இவர் விலகி வந்தது கடுமையாகவே கேள்விக்குள்ளாப்பட்டது. முக்கியமாக ஈழ விவகாரத்தில் தி.மு.க.வின் செயல்பாடு, கருணாநிதி மீது இன்றைய தலைமுறையினரை ஆத்திரப்பட வைத்தது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் தேர்தல் அரசியலில் தோல்வியை தழுவாமல் பயணம் செய்து விட்டார் கருணாநிதி. இந்த 60 ஆண்டுகளில் அவர் முதல்வராக இருந்தது வெறும் 18 ஆண்டுகள் தான். ஆனால் எப்போதும் இவரே கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொண்டு வருகிறார்.

தளர்ந்த உடல்... தளராத தலைவர் !

கருணாநிதி மீதான இந்த விமர்சனங்களின் போது, தி.மு.க. தரப்பில் தரப்படும் விளக்கம் 'காய்த்த மரங்களே கல்லடி படுகின்றன' என்பார்கள். உண்மையில் காய்த்த மரம் தான் கருணாநிதி என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. 60 ஆண்டுகளைக் கடந்த அரசியல் அனுபவம், 48 ஆண்டுகளாக அரசியல் கட்சியின் தலைவர் என இவர் எட்டிய உயரம் நிச்சயம் மிகப்பெரிய சாதனை தான்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான நேர்காணலை நடத்தினார் தி.மு.க. கட்சியின் தலைவர் கருணாநிதி. அவரோடு பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் நேர்காணலை நடத்தினர். ஆயிரக்கணக்கானோரை நேர்காணல் செய்த கருணாநிதி, நேர்காணலை நடத்தியவர்களில் ஸ்டாலினையும், துரைமுருகனையும் கூட நேர்காணல் செய்தார். கட்சியின் அடுத்த தலைவர் என சொல்லப்பட்ட ஸ்டாலினை கருணாநிதி நேர்முகத்தேர்வு செய்தது வெறும் செய்தி அல்ல. நான் இன்னும் தளர்ந்து விடவில்லை என்பதை சொல்வதாகத்தான் அது இருந்தது. வயது முதிர்ந்து விட்டாலும், இன்னும் தளராமல் தலைமை பொறுப்பில் இருந்து வருகிறார். இப்போது உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

எந்த இளம் தலைவர்களுக்கும் இவரது ஆற்றலும், செல்வாக்கும் இல்லை. புதைகுழிகள் நிறைந்த பாதை என சொல்லப்படும் அரசியல் பாதையில் இத்தனை நீண்ட காலம் தாக்குப்பிடிப்பது என்ன சாதாரணா விஷயமா என்ன?

- ச.ஜெ.ரவி,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!