வெளியிடப்பட்ட நேரம்: 08:35 (03/12/2016)

கடைசி தொடர்பு:21:18 (03/12/2016)

சீரான உணவு, உடற்பயிற்சி, மனவலிமை என உடம்பைப் படித்தவர் கருணாநிதி!

 

 

 

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த ஒரு மாதமாகவே வெளியில் வராமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில்தான் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 93 வயதான தி.மு.க தலைவர் கருணாநிதி கட்சி அலுவலகமான அறிவாலயத்துக்கு வராமல் இருக்க மாட்டார். உடம்புக்கு சரியில்லா விட்டாலும் கூட சிறிது நேரமாவது வந்து விட்டுப் போவார். ஆனால், கடந்த ஒரு மாதமாக அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இந்த வயதிலும் மிகச் சிறந்த நினைவாற்றலுடன் தன்னுடைய உடலை கவனித்துக் கொள்வதில் மிகுந்த அக்கறையும் எச்சரிக்கை உணர்வும் கொண்டவர் கருணாநிதி.

மன வலிமை மிக்கவர்..

'நீண்ட தூரம் ஓடினால்தான், அதிக உயரம் தாண்ட முடியும்' என்பதுதான் கருணாநிதி சொல்லும் பழமொழி. அவர் நீண்டதூரம் ஓடிய மனவலிமை கொண்ட மனிதர் என்றுதான் அவரைச் சொல்ல முடியும். பல்வேறு போராட்டங்களில் சிறை சென்ற போதிலும், தேர்தலில் தி.மு.க பல சறுக்கல்களை எதிர்கொண்ட போதிலும், அவற்றையெல்லாம் கண்டு, துவண்டுபோகாமல் இருப்பதற்கு  அவருடைய மனவலிமைதான் முக்கியக் காரணம்.

ஒரு மனிதன் மனதை வலிமையாக வைத்துக் கொண்டால் மட்டுமே, உடல்நிலையை சீராக வைத்திருக்க முடியும். மன வலிமையோடு, உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர் கருணாநிதி. அடுத்தது அவரது எழுத்துத் திறமை. அவரை என்றும் மனவலிமையாடு வைத்திருக்கும் மந்திரம் என்று கூட அவரது எழுத்தைச் சொல்லலாம். வந்த எதிர்க் கணைகளை எல்லாம் தனது பேனா வலிமையால் தகர்த்தெறிந்தவர். பராசக்தி படத்தில் தொடங்கி, நெஞ்சுக்கு நீதி, தற்போதைய ராமானுஜர் வரை, அவருடைய படைப்புகள், அனுபவங்களும், இலக்கியமும் கலந்ததாகவே அமைந்திருக்கும். 

 

விறால் மீனை விரும்பி சாப்பிடுவார்!

கருணாநிதிக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். "வயதிற்கு ஏற்பவும் காலநிலைக்கு ஏற்பவும் உணவு முறைகளை மாற்றிக் கொண்டவர். எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடியவர். காலையில் இட்லியும் மதியம் சாம்பார் சாதமும், காய்கறியும், கீரையும், மாலையில் தோசை போன்ற எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை பழக்கப்படுத்திக் கொண்டார். ஆப்பிள் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடியவர். ஆரம்பத்தில் மாமிச உணவுகளைச் சாப்பிட்டபோது விறால் மீனை மிகவும் அதிகம் விரும்பிச் சாப்பிட்டுள்ளார். முதுமைக்கும், காலநிலைக்கும் ஏற்றவாறு உணவை எடுத்துக் கொள்வார். அறிவாலயத்துக்கு அருகே உள்ள ஆனந்த பவன் ஓட்டலில் போண்டாவை வாங்கி வரச்சொல்லி சாப்பிடுவார். அறிவாலயத்தில் பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் நேரத்தில், இரவு தோசை வாங்கி வரச் சொல்லி சாப்பிடுவார். வீட்டில் கட்டுப்பாடுகள் இருந்தாலும் சில நேரத்தில்  சாப்பிட்டு விடுவார். வயதுக்கு ஏற்றவாறு உணவுகளை எடுத்துக் கொள்ளும் பழக்கத்துக்கு வந்து விட்டார். மிகக் குறைவான அளவே உணவை எடுத்துக் கொள்வார். ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறையாக உணவு எடுத்துக் கொள்ள தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டவர்" என்று தெரிவிக்கின்றனர்.

உடலைப் பாதுகாப்பதில் முன்னெச்சரிக்கையாக செயல்படக் கூடியவர்!

கருணாநிதி தனது உடல்நிலையில் சிறிய சோர்வு ஏற்பட்டாலே உடனடியாக  தெரிவித்து, அதற்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வார். தன்னுடைய உடலுக்கு என்னதேவை என்பதை முன்னெச்சரிக்கையாக தெரிவிக்கக் கூடியவர். நன்றாகப் படிக்கும் திறனாளி. 1971-ல் மெரினா கடற்கரையில் அன்பில், கருணானந்தம் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தபோது லேசாக அவருக்கு தலைவலி உடனடியாக டைகர் பாம் கேட்டு தேய்த்துக் கொண்டாராம்.

"கருணாநிதியை முழுமையாக கவனித்துக் கொள்ளும் மருத்துவர் கோபால், கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்படும் சிறுசிறு பிரச்னைகளுக்கு ஏற்றவாறு சிறப்பு மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்கக் கூடியவர். ஆரம்பகாலத்தில் கருணாநிதிக்கு, மோகன்தாஸ், பத்ரிநாத் (சங்கர நேத்ராயலா), மார்த்தாண்டம் (ராமசந்திரா) ஜம்பு, ஆறுமுகம் போன்ற மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இன்றுவரை அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்போ அல்லது ரத்த அழுத்தமோ கிடையாது. முதுமை காரணமாகவே உடலில் ஒவ்வாமை ஏற்படுகிறது. விரைவில் கருணாநிதி வீடுதிரும்புவார்" என்கின்றனர் அவருக்கு நெருங்கியவர்கள்.

உடற்பயிற்சி - யோகா !

"உடலைக் கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதில் நடைபயிற்சி முக்கியமானது என்று எண்ணுபவர் கருணாநிதி. அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து விடுவார். முன்பெல்லாம் நாய் குட்டியுடன் மெரினா கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்வார். பொன்.முத்துராமலிங்கம், அன்பில்  தர்மலிங்கம், தயாளு அம்மாள் ஆகியோருடன் செல்வார். பிற்காலத்தில் கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் 3 அல்லது 4 முறை சுற்றி வருவார். சுமார் ஒருமணி நேரமாவது நடைபயிற்சியை மேற்கொள்ளக்கூடியவர். முதுகுவலிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் நடைபயிற்சி செல்வது நின்று விட்டது" என்றனர் அவர்கள்.

ஒருமுறை கருணாநிதி, தன்னுடைய உடற்பயிற்சி பற்றியும், யோகா, மூச்சுப்பயிற்சி பற்றியும் அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டதோடு. சர்வதேச யோகா தினம் தொடர்பாக கேள்வி- பதிலாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். "யோகாவை பெரிதும் விரும்புபவன்தான் நான்! இன்னும் சொல்லப் போனால் ஒருகாலத்தில் நானும் அன்றாடம் யோகா செய்து கொண்டிருந்தவன்தான். யோகக் கலையில் வல்லுநரான தேசிகாச்சாரியிடம் அந்தக் கலையைக் கற்றுக்கொண்டேன். அந்தக் கலையை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்தான்" என்று தெரிவித்திருந்தார்.

அவருக்கு நெருங்கியவர் சொன்ன தகவல். "கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டபோது அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டார். தஞ்சாவூரில் அறை தயாராக இருந்தும் அங்கு செல்லாமல் சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தார். பின்னர் அறைக்கு வந்தவர் உணவை முடித்து விட்டு மீண்டும் கிளம்பலாம் என்று மிக உற்சாகமாகக் கூறினார். அப்போதுதான் தலைவர் வந்த செய்தியை தயார் செய்து கொண்டிருந்தோம். எங்களுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. பயணக் களைப்பு எங்களை வாட்டிக் கொண்டிருந்தபோதும், அவர் மட்டும் உற்சாகமாகக் காணப்பட்டார். அதற்குக் காரணம் அவர் மேற்கொண்ட பயிற்சி முறையும் உணவும் தான்" என்று அதிசயத்துடன் குறிப்பிட்டார்.

நினைவாற்றல் திறன் மிக்கவர்  !

நேரத்தை மிகச் சரியாக பின்பற்றக் கூடியவர். குறித்த நேரத்துக்குத் தொண்டர்களை பார்ப்பது, தலைமைச் செயலகத்துக்கு  குறித்த நேரத்துக்குச் செல்வது என நேரந்தவறாமையை கடைபிடிக்கக் கூடியவர். எந்த ஊருக்குச் சென்றாலும் சரி, அல்லது தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றாலும் சரி, கடந்தமுறை, தான் பார்த்த நபர்கள் பற்றியோ அல்லது பேசிய பேச்சுக்கள் பற்றியோ அப்படியே எடுத்துக் கூறும் அசாத்திய திறமை படைத்தவர். அந்த அளவு நினைவாற்றல் கொண்ட மிகப்பெரும் அரசியல் தலைவர் கருணாநிதி.

பொதுவாக மனிதனுக்கு மூளையின் இரு பக்கங்களில் ஏதாவது ஒன்றுதான் சிறப்பாகச் செயல்படும் என்பார்கள். ஆனால் இரண்டு பக்கமுமே மேன்மையாகச் செயல்படுவது கருணாநிதிக்குத் தான் என பிரபல நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி ஒருமுறை தெரிவித்தார். 93 வயதிலும், "ராமானுஜர் தொடரின் சில கருத்துகளை இவ்வாறு மாற்றுங்கள்" என்று கூறி. இயக்குநரை அசத்தி விட்டார் தலைவர் என்றார் அவருடன் நெருங்கிப் பழகியவர்.

- கே. புவனேஸ்வரி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்