அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்பை ஏற்க தகுதி உடையவர் யார்...? - ஜெ. சொன்ன பதில்!” - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 39

ஜெயலலிதா டைரி குறிப்புகள் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்

 

 

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 8 | பகுதி 9| பகுதி 10 | பகுதி 11 | பகுதி 12 | பகுதி 13 | பகுதி 14 |பகுதி 15 | பகுதி 16 | பகுதி 17 | பகுதி 18 | பகுதி 19 | பகுதி 20 | பகுதி 21 | பகுதி 22 | பகுதி 23 | பகுதி 24 | பகுதி 25 | பகுதி 26 | பகுதி 27 | பகுதி 28 | பகுதி 29 | பகுதி 30 | பகுதி 31 | பகுதி 32 | பகுதி 33 | பகுதி 34 | பகுதி 35 | பகுதி 36 | பகுதி 37 | பகுதி 38

 

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 1 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 2 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 3 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

ந்தக் கட்டுரையை தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போதுதான் அவர் உயிரோடு இல்லை என்ற செய்தி வருகிறது. ஆம், அவர் இனி இல்லையாம்... போயஸ் சாலையின் காற்றைச் சுவாசிக்க, ஏகாந்தமான பொழுதில்... கொடநாட்டின் மெல்லியத் தூறலில் கைகளை நனைக்க, புத்தகங்களுக்கு வலிக்காமல் பக்கங்களை புரட்ட... இனி அவர் இல்லை. இல்லையென்றால், அவர் பூத உடல் இல்லை. ஆம், பூத உடல் மட்டும்தான் இல்லை. மற்றபடி அவர் நினைவுகள் எங்கும் வழிந்தோடிக் கொண்டுதான் இருக்கும். கொடநாட்டுப் பகுதியில் விளையும் காபியை அருந்தும்போது, அவர் நினைவுகளை நீங்கள் நாக்கால் உணரலாம்; மிதிவண்டியில் செல்லும் பள்ளி மாணவிகளைப் பார்க்கும்போது... அந்தப் பிள்ளைகளின் முகத்தில் ஜெயலலிதாவின் நினைவு நிழலாடலாம். ஹூம். 1,008 கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தன் இருப்பால் தமிழக அரசியலை நிறைத்தவர் ஜெயலலிதா என்பதை, அவர் அரசியல் எதிரிகளும் மறுக்க மாட்டார்கள். 

“புயலை தனித்து எதிர்கொள்ளல்!”

சரி... அவர் நினைவுகளை எழுத்தின் ஒவ்வொரு புள்ளிகளுடன் படரவிட்டுவிட்டு... சென்ற அத்தியாயத்தில் விட்ட இடத்திலிருந்து தொடர்வோம். 2014 நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவெங்கும் மோடி அலை வீசியது. எங்கு காணினும் மோடி குறித்த பேச்சுதான். அவர் குஜராத் மாடல் குறித்து சிலாகித்து எழுதினார்கள். தமிழகத்திலும் பி.ஜே.பி வலுவான கூட்டணியைக் கட்டி எழுப்பி இருந்தது. கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க போன்ற பிரதான கட்சிகள் இருந்தன. தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் இருந்தன. தனித்து நின்றது அ.தி.மு.க. ஜெயலலிதாதான், ‘‘தனித்து நிற்கலாம்’’ என்றார். ஆனால், இந்த முடிவு குருட்டு நம்பிக்கையில் எடுக்கப்பட்ட முடிவு என்று கட்சியின் சில மூத்த நிர்வாகிகளே அதை ரசிக்கவில்லை. ஆனால், என்ன செய்ய முடியும்...? ஜெயலலிதா முடிவு எடுத்துவிட்டார். அதற்கு நாம் கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும் என தேர்தல் பணிக்குத் தயாரானார்கள். 

 

விசித்திரமான தேர்தல் அது... பி.ஜே.பி. கூட்டணி, மோடிதான் எங்கள் பிரதமர் வேட்பாளர் என்று அவரை முன்னிறுத்தி வாக்கு கேட்டது. காங்கிரஸுக்கு யாரைச் சொல்வது என்று தெரியவில்லை. தி.மு.க. கூட்டணி, இடதுசாரிகளின் நிலையும் இதுவாகத்தான் இருந்தது. இப்படியான சூழலில், அ.தி.மு.க-வுக்கு ஓர் அபிலாஷை இருந்தது. அது ஜெயலலிதாவை பிரதமராக ஆக்க வேண்டும் என்று. “எங்கள் அம்மாவுக்கு என்ன தகுதி இல்லை...? அவர் பிரதமரானால், இந்தியாவைச் சரியான பாதையில் வழிநடத்துவார்கள்” என்று மக்களிடம் முணுமுணுப்பாகத்தான் பேசினார்கள். உரக்கப் பேசும் அளவுக்கு அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. தமிழகத்தைத் தாண்டினால் இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் பெரிதாக தெரியாது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.  அதே நேரம், ஒரு வேளை மத்தியில் தொங்கு பாராளுமன்றம் அமைந்தால்... ‘ஜெயலலிதா பிரதமர் ஆகக்கூடும்’ என்று கிசுகிசுத்தார்கள். நிலைமை இவ்வாறாக இருக்க, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவை பிரதமர் வேட்பாளராக அங்கீகரித்தார். ஆம், மூன்றாவது அணிக்கான பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருந்தபோது மம்தா, “மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராக ஜெயலலிதாவை முன்னிறுத்தினால், நான் அவரை ஆதரிக்கத் தயாராகவே இருக்கிறேன்” என்றார். 

ஏற்கெனவே மூன்றாவது அணி குறித்த சில அனுபவங்கள் ஜெயலலிதாவுக்கு இருந்ததால், அவர் அந்தப் பக்கம் போகவில்லை. ஆனால் உற்சாகமானார். கட்சிக்காரர்களிடம், “மத்தியில் நமக்கான இடங்களைப் பெறுவோம். இந்த நாட்டை அவலங்களிலிருந்து மீட்டு, புதிய சுதந்திர இந்தியாவை படைப்போம்” என்றார். இந்த உற்சாகம் தொண்டர்களையும் தொற்றிக்கொண்டது. இப்போது உண்மையாக மனதளவில் ஜெயலலிதாவை பிரதமர் வேட்பாளராகக் கருதினார்கள். உற்சாகமாக வேலை செய்யத் தொடங்கினார்கள். 

தேர்தல் முடிவுகள் வந்தன... இந்தியா முழுவதும் மோடி அலை பெரும் ஆலமரங்களை எல்லாம் வீழ்த்தி இருந்தது. ஆனால், தமிழகத்தில் அந்த அலையை அ.தி.மு.க தடுத்து நிறுத்தி இருந்தது. ஆம், 39-க்கு 37 இடங்களை அ.தி.மு.க-வே கைப்பற்றி இருந்தது. ஆனால், அவர் நினைத்தது நிகழவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி தனிப்பெரும்பான்மையில் வந்ததால், அவர்களுக்கு அ.தி.மு.க-வின் ஆதரவு தேவையற்ற ஒன்றாகவே ஆனது. 

“சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பும்... மீட்சியும்!”

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 1 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 2 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 3 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

நாட்கள் வேகமாக நகர்ந்து செல்லத் தொடங்கின. கர்நாடகாவில் நடந்த சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையும் துரிதமாக நடைபெற்று தீர்ப்பு நாளும் நெருங்கியது. அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுதலை கிடைத்துவிட்டது. இது மட்டும்தான் பாக்கி. இதிலும் விடுதலை கிடைத்துவிட்டால்... வேறு எந்த அழுத்தங்களும் இல்லை என்றுதான் ஜெயலலிதா நினைத்தார். கிடைத்துவிடும் என்றும் நம்பினார். ஆனால், அவர் நம்பிக்கை பொய்த்தது. செப்டம்பர் 27, 2014 கர்நாடக அமர்வு நீதிமன்றம், அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. மீண்டும் ஒரு தடை... முதல்வர் ஜெயலலிதாவாக கர்நாடகம் சென்றவர், 20 நாட்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் கழித்த பின்னர்... மனதளவில் தளர்ந்து ஜெயலலிதாவாக ஜாமீனில் போயஸ் திரும்பினார்.

ஏறத்தாழ 8 மாதங்கள் அவர் வெளியில் வரவேயில்லை. ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்று இருந்தாலும், அரசு இயந்திரமே மொத்தமாக ஸ்தம்பித்தது போன்ற ஒரு தோற்றம் இருந்தது. எல்லாத் திட்டங்களும் ஜெயலலிதாவின் வருகைக்காகக் காத்திருந்தன. ஏன் புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை என்றால்... ‘நாங்கள் காத்திருக்கிறோம்’ என்றார்கள். அமைச்சர்களுடன்... திறக்கப்படாத பாலங்கள், புதிதாக வாங்கப்பட்ட பேருந்துகள் என அனைத்தும் காத்திருந்தன.

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 1 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 2 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 3 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு மே 11, 2015-ம்  நாள் வந்தது.  ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். இதை நான் இரண்டு வரிகளில் தட்டையாகக் கடக்கிறேன். இந்தத் தீர்ப்பு அவருக்குத் தந்த மனமகிழ்ச்சியை எத்தனை வார்த்தைகளில் எழுதினாலும் அப்படியே உங்களிடம் கடத்த முடியாதுதான். தீர்ப்பு குறித்து சர்ச்சைகள் எழாமலும் இல்லை... ‘சொத்துக்களை மதிப்பிட்டதில் தவறு இருக்கிறது’ என்றார்கள். கர்நாடக அரசும், தி.மு.க-வும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஜெயலலிதா, விமர்சனங்கள் குறித்து கவலைப்படாமல் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார். பின், ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றார். 

“மீண்டுமொரு தேர்தல்... மீண்டுமொரு வெற்றி... மீளமுடியாத மரணம்!”

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 1 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 2 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 3 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

2016. அடுத்த சட்டமன்றத் தேர்தல் வந்தது. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி கொடுத்த உற்சாகத்தில், ஜெயலலிதா இந்தத் தேர்தலையும் கூட்டணி இல்லாமல் சந்திக்கத் தயாரானார். சில கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கினார். ஆனால், அவர்களும் ‘‘இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும்’’ என்றார். தி.மு.க., காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருந்தது. பா.ம.க-வும் தனியாக தேர்தலை எதிர்கொள்ளத் தயாரானது. மக்கள் நலக் கூட்டணி என ஒரு புது கூட்டணி, இந்தத் தேர்தலில் உதயமாகி இருந்தது. இதில், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.ஐ., சி.பி.எம் இருந்தது. பா.ஜ.க தனித்து நின்றது. 

ஜெயலலிதா, ‘‘மக்களால் நான்... மக்களுக்காக நான்” என்ற கோஷத்துடன் பிரசாரம் சென்றார். சென்ற தேர்தல் அளவுக்கு இல்லாவிட்டாலும் இந்த முறையும் சில இலவசங்களை முன்வைத்தார். ‘‘இலவச கைப்பேசி, பெண்கள் டூவீலர் வாங்குவதற்கு மானியம் தரப்படும்’’ என்றார். ‘‘மீண்டும் ஆட்சிக்கு வரும்போது படிப்படியாக மதுபானக் கடைகள் மூடப்படும்’’ என்றார்.  

கருத்துக்கணிப்புகள், தி.மு.க கூட்டணி வெற்றிபெறத்தான் வாய்ப்புகள் அதிகம் என்றன. அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. 2015 டிசம்பரில் பெய்த கனமழையால் சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது.  செம்பரம்பாக்கம் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டதுதான் காரணம் என்று அரசு மீது மக்கள் கோபம் கொண்டிருந்தார்கள். இது, தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னையைத் தாண்டி இந்தக் கோபம் எங்கும் எதிரொலிக்கவில்லை. 134 தொகுதிகளை அ.தி.மு.க கைப்பற்றியது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி என இரண்டு தொகுதிகளில் முறைகேடு காரணமாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. பின்னர் நடந்த தேர்தலில் இந்தத் தொகுதிகளையும் கைப்பற்றினார் ஜெயலலிதா.

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 1 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 2 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 3 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி என அரசியல் வரலாற்றில் அவர் ஒரு முக்கியக் குறிப்பை எழுதி முன்னேறிச் சென்றுகொண்டிருக்கும் போதுதான், செப்டம்பர் 22, 2016 அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஆம், போயஸ் கார்டனில் ஓர் ஆலோசனைக் கூட்டத்தில் மயங்கி விழுந்தார். அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். முதலில் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்றவர்கள்... பின்னர், நுரையீரல் தொற்று என்றார்கள்... தொண்டர்கள் பதபதைத்துப் போனார்கள்... தமிழகமே குழம்பி நின்றது... எங்கெங்கிருந்தோ எல்லா மருத்துவர்களும் வந்தார்கள். பின், அப்போலோ நிர்வாகம், ‘அவர் கொஞ்சம் கொஞ்சமாகக் குணமடைந்து வருகிறார்’ என்றது. தொண்டர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டார்கள். பின்னர், டிசம்பர் 4 மாலை ‘இதயத்துடிப்பு செயல்பாட்டில் கோளாறு’ என்றார்கள். 75 நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பின் டிசம்பர் 5 திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா மரணித்ததாக அப்போலோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. 

ஆம், ஒரு சகாப்தம் முற்றுப் பெற்றது.

1998-ம் ஆண்டு ஜெயலலிதாவிடம் சாமன்ய மக்கள், ஒரு வார இதழ் மூலம் ஒரு கேள்வியை முன்வைத்திருந்தார்கள், “உங்களுக்குப் பிறகு அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்பை ஏற்க தகுதி உடையவர் என்று யாரை கருதுகிறீர்கள்...?’’ என்று. அதற்கு அவர், “தகுதியுடையவர்கள் பலர் இருக்கிறார்கள். கழக உடன்பிறப்புகள் அதை முடிவு செய்வார்கள்” என்றார். இருக்கலாம்... ஆனால், ஜெயலலிதாவைப்போல ஓர் இரும்பு மனுஷி நிச்சயம் அ.தி.மு.க-வுக்கு எப்போதும் கிடைக்கமாட்டார்.

(நாளை தொடர் முற்றுப்பெறும்)

- மு. நியாஸ் அகமது

ஜெயலலிதா டைரி குறிப்புகள் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 1 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 2 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 3 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 8 | பகுதி 9| பகுதி 10 | பகுதி 11 | பகுதி 12 | பகுதி 13 | பகுதி 14 |பகுதி 15 | பகுதி 16 | பகுதி 17 | பகுதி 18 | பகுதி 19 | பகுதி 20 | பகுதி 21 | பகுதி 22 | பகுதி 23 | பகுதி 24 | பகுதி 25 | பகுதி 26 | பகுதி 27 | பகுதி 28 | பகுதி 29 | பகுதி 30 | பகுதி 31 | பகுதி 32 | பகுதி 33 | பகுதி 34 | பகுதி 35 | பகுதி 36 | பகுதி 37 | பகுதி 38

Do you like the story?

Please Appreciate the Author by clapping!