சசிகலாவை வளைக்கத்தான் இந்த ரெய்டா...? : முழுப் பின்னணி | Is this raid to trap Sasikala...? : A Detail Report

வெளியிடப்பட்ட நேரம்: 19:11 (08/12/2016)

கடைசி தொடர்பு:11:16 (09/12/2016)

சசிகலாவை வளைக்கத்தான் இந்த ரெய்டா...? : முழுப் பின்னணி

சசிகலா

மிழக அரசியல் களத்தைத் தங்கள் கையில் கொண்டுவர நினைக்கிறது பி.ஜே.பி. இதற்கான ஆட்டத்தை முதலில் சேகர் ரெட்டியிடம் இருந்து தொடங்கி உள்ளது. யார் இந்த சேகர் ரெட்டி? சசிகலா குடும்பத்தினரைக்  குறிவைக்கத் தொடங்கி உள்ளதா மத்திய அரசு? தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகின்ற வருமானவரித் துறையின் அதிரடிச் சோதனை மூலம் எதை உணர்த்த விரும்புகிறது? 

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தொண்டான்துளசி என்ற ஊர்தான் சேகர் ரெட்டியின் சொந்த ஊர். வயது 45. மத்தியதரக் குடும்பம். மனைவி, ஆந்திரா சித்தூரைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் சேகர் ரெட்டி, சிறிய கான்ட்ராக்டராக இருந்து சிமென்ட் ரோடு, கிராமச் சாலைகள் போடுவது; டெலிபோன் கேபிள் அமைப்பது என சிறுசிறு வேலைகளை எடுத்துச் செய்துவந்தார். தொடக்கத்தில் காட்பாடியில் இருந்து சென்னைக்கு வந்தபோது எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு ஹோட்டலில்தான் தங்குவார். ரயில்வே தொழிற்சங்கத் தலைவர் ஒருவரின் தொடர்பு மூலம் ரயில்வேயில் சிறுசிறு கான்ட்ராக்ட்களை எடுத்துச் செய்தார்.

அப்படித்தான் சேகர் ரெட்டி சென்னையில் கால்பதித்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தன் நண்பர் பிரேம் என்பவருக்குச் சொந்தமான விடுதியில் தங்கி, கான்ட்ராக்ட் மற்றும் டெண்டர் விஷயங்கள் தொடர்பாக அதிகாரிகளைச் சந்தித்து வந்தார். 

எம்.எல்.ஏ-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் நிறையப் பணிகள் நடைபெறும். அது தொடர்பான கான்ட்ராக்ட்களைப் பெற, சட்டமன்ற விடுதியில் எம்.எல்.ஏ-க்களைச் சந்தித்துப் பேசுவார். டெண்டர் சிபாரிசுக்காக எம்.எல்.ஏ-க்களைச் சந்திக்க ஆரம்பித்தபோது, ‘அரசியல் தொடர்புகள்’ ஏற்பட்டன. அதன்மூலம், 1998-ல் அ.தி.மு.க-வில் உறுப்பினர் ஆனார்.

திருப்பதி செல்வாக்கு!

திருப்பதி கோயிலில் அவருக்கு செல்வாக்கு இருந்தது. திருப்பதி கோயில் உயர் அதிகாரிகள் தமிழகம் வரும்போதெல்லாம் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வது சேகர் ரெட்டிதான். திருப்பதி கோயில் பிரசாதம் மற்றும் லட்டுகளை வாராவாரம் வாங்கித் தந்து, பல வி.ஐ.பி-க்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். வேலூர் கலெக்டராக இருந்த ஒருவருக்கு, திருப்பதியில் வேண்டிய உதவிகளைச் செய்தார் சேகர் ரெட்டி. அதன்மூலம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வட்டாரத்திலும் நுழைந்தார்.

‘நம்பிக்கை’ என்றால் ரெட்டி!

அரசியல் வட்டாரத்தில் நெருங்கியபோதுதான் டாக்டர் விஜயபாஸ்கரின் நட்பு கிடைத்தது. இருவரும் சென்னையில் ஒரே அறையில் தங்கியிருந்தார்கள். தனியார் மருத்துவமனையில் விஜயபாஸ்கர் டாக்டராகப் பணியாற்றிய நேரத்தில், சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேஷின் நட்பு கிடைத்தது. அந்த நட்பை சேகர் ரெட்டிக்கும் அறிமுகம் செய்துவைத்தார் விஜயபாஸ்கர். யாருடன் பழகினாலும் அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிவிடுவது சேகர் ரெட்டியின் ப்ளஸ். இது, எல்லோருக்கும் பிடித்துவிட வி.ஐ.பி-க்கள் வட்டாரத்தில் உலவ ஆரம்பித்தார்.

தி.மு.க ஆட்சியின்போதும் அதிகாரிகள் துணையுடன் சகல காரியங்களையும் செய்து வந்தார். அந்த ஆட்சியில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை எடுத்து கைமாற்றிவிட்டு, பணம் சம்பாதித்து வந்தார். அ.தி.மு.க ஆட்சி வந்ததும், அவருக்கு மீண்டும் ராஜயோகம் அடித்தது.

அதிகாரி ஆசி!

கான்ட்ராக்ட் வேலைகளை எடுத்துச் செய்ய ஆரம்பித்தபோது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலெக்டராக இருந்தவருடன் சேகர் ரெட்டிக்கு நெருக்கம் அதிகம் ஆனது. இருவரும் ஒரே மொழி பேசக்கூடியவர்கள். இப்போது, அந்த அதிகாரி... அதிகார மையத்தில் முக்கியப் புள்ளியாக இருக்கிறார். அந்த அதிகாரியின் ஆசி இப்போதும் அவருக்கு உண்டு. அவருடைய மகள் திருமணம் நடந்தபோது அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் சேகர் ரெட்டிதான் பார்த்தார். அவரின் ஆதரவோடு அரசின் பெரிய கான்ட்ராக்ட்கள் எல்லாம் கிடைக்க ஆரம்பித்தன. அவருக்குப் போகத்தான், மற்றவர்களுக்கு கான்டராக்ட்கள் கிடைக்கும் என்கிற நிலை உருவானது. ஒரு கட்டத்தில், ஆறுமுகசாமியிடம் இருந்து மணல் கான்ட்ராக்ட் பறிபோனதற்கு... அந்த அதிகாரிகளும் சில அமைச்சர்கர்களும் சேர்ந்த கூட்டணிதான் காரணம்! புதுக்கோட்டை ராமச்சந்திரன், சேகர் ரெட்டி வசம் இன்று மணல் பிசினஸ் போய்விட்டது!

செல்வாக்கு!

ஜெயலலிதா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர் பதவிக்கு தமிழகத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார் சேகர் ரெட்டி. மொத்த கேபினெட்டும் அம்மாவுக்காக பூஜை புனஷ்காரங்களில் இருந்தபோது... இந்த ஃபைல் மட்டும் மூவ் ஆனது என்றால், சேகர் செல்வாக்கைக் கவனியுங்கள். திருப்பதியில் மொட்டை போட போனபோது, ஓ.பன்னீர்செல்வத்துடன் போகும் அளவுக்கு நெருக்கம். பன்னீர்செல்வத்தின் அந்தப் பயண ஏற்பாட்டைச் செய்தவர் அவர்தான்.

கார்டனில் ஒலிக்கும் பெயர்!

அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பல வளையங்களைத் தாண்டி கார்டனுக்கு நெருக்கமானவராக மாறிவிட்டார் சேகர் ரெட்டி. காலப்போக்கில் டாக்டர் வெங்​கடேஷ் உள்ளிட்டோர் கார்டனைவிட்டு வெளியேற்றப்பட்டபோதும் விசுவாசத்தின் விளைவாக கார்டனுக்குள் நிலைத்து நின்றார். கார்டனில் அதிகமாக ஒலிக்கும் பெயர்களில் ஒன்றாக மாறிவிட்டது சேகர் ரெட்டியின் பெயர். கார்டனுக்குத் தேவையான எதையுமே இவர்தான் செய்து முடிக்கிறார். இப்போது, அ.தி.மு.க-வில் சேகர் ரெட்டி அசைக்க முடியாத ஆள். தினகரன், டாக்டர் வெங்கடேஷ், ராவணன், கலியமூர்த்தி, ‘மிடாஸ்’ மோகன் போன்றவர்கள் கண் அசைவுக்கு அ.தி.மு.க-வினர் தவம் கிடந்ததுபோல, சேகர் ரெட்டியைப் பார்க்கக் காத்துக் கிடப்பதாகச் சொல்கிறார்கள். சேகர் ரெட்டி போன் என்றால், அமைச்சர்கள் பலர் எழுந்து நின்றுதான் பேசுவதாகக் கிண்டல் அடிக்கிறார்கள். இவ்வளவு அதிகாரத்தோடு வலம் வந்தாலும்... அவர், அ.தி.மு.க-வில் வெறும் உறுப்பினர் மட்டுமே!

வளைக்கும் பி.ஜே.பி.! 

இன்று (8-12-16), சேகர் ரெட்டியின் தி.நகர், அண்ணா நகர் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். இதன் பின்னணி பற்றி விசாரித்தபோது பி.ஜே.பி பிரமுகர் ஒருவர், பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்தார். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, தமிழக அரசியல் களத்தைக் கைப்பற்ற முயற்சி செய்யும் பி.ஜே.பி அதற்கான முதல்கட்ட வேட்டையை தொடங்கிவிட்டதாகக் கூறிய அவர், மேலும் பல செய்திகளை நம்மிடம் கொட்டினார். சசிகலாவை, கட்சியின் பொதுச் செயலாளர் ஆக்குவதற்கு பி.ஜே.பி கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. பொதுச் செயலாளர் பதவிக்கு, பி.ஹெச்.பாண்டியனையோ அல்லது செங்கோட்டையனையோ நியமிக்க வேண்டும் என்றும், தம்பித்துரையை மத்திய அமைச்சர் ஆக்கும் யோசனையும் இருப்பதாக சசிகலாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துமனையில், சசிகலாவுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ-க்கள் கையெழுத்துப் போட்டுள்ளனர். அந்த ஃபைலை எல்லாம் கிழித்துப் போட்டுவிட்டனர். அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு நேரில் வந்த வெங்கய்ய நாயுடு, அவர் தயார் செய்து கொண்டு வந்திருந்த பைலில்... எம்.எல்.ஏ-க்கள் அனைவரையும் கையெழுத்துப் போடவைத்து கவர்னர் மாளிகைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அத்துடன், அன்று இரவே அவர்களைப் பதவி ஏற்கவைத்தது வரை  எல்லாமே வெங்கய்ய நாயுடு உத்தரவின் கீழ்தான் நடந்தது. 

ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்த தமிழகம் வந்த பிரதமர் மோடி, விமானத்தைவிட்டு 20 நிமிடங்கள்  கழித்தே வெளியே வந்தார். விமானத்தில்... அவர், ஆளுநர் மற்றும் தமிழக பி.ஜே.பி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டுத்தான் வந்தார். வரும் காலங்களில் யாரிடம் பேசுவது, என்ன செய்வது என்கிற உத்தரவுகளை பிரதமர், அவர்களுக்கு சில குறிப்புகளைக் கொடுத்துவிட்டுத்தான் சென்று இருக்கிறார். அதன்படி, தமிழகத்தில்   ஆளுநர் அனுமதி இல்லாமல் எந்த ஃபைலும் நகரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய அரசுக்கு தமிழகத்தின் சார்பில்... தம்பித்துரை மட்டுமே தொடர்பாக இருப்பார் என்று கூறப்பட்டு உள்ளது. இன்னும் 10 நாட்களுக்குள் அமித்ஷா தமிழகம் வர இருக்கிறார். அப்போது, இன்னும் பல விஷயங்கள் நடக்கும். அதற்குள், சசிகலா குடும்பத்தை தங்கள் வளையத்துக்குள் கொண்டுவரவே இன்று சேகர் ரெட்டி வீடுகளிலும், ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்திலும் வருமானவரித் துறையினர் அதிரடிச் சோதனையை இன்று நடத்தியுள்ளனர். இது, சசிகலா தரப்புக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.   

திடீர் தாக்குதல்! 

இவ்வளவு அறிவுரைக்குப் பிறகும், சசிகலா சார்பில் வேறு சிலரிடம் உதவி கேட்கப்பட்டு இருக்கிறது. இதுவே  இந்தத் திடீர் ரெய்டுக்கு காரணம். மேலும்,  நேற்று போயஸ்  கார்டன் இல்லத்தில் நடராஜனும் சசிகலாவும் அமைச்சர்களை சந்தித்துப் பேசி உள்ளனர். இது, டெல்லிக்கு கடும் கோபத்தை  ஏற்படுத்தி உள்ளது. சேகர் ரெட்டியிடம், சசிகலா மற்றும் அ.தி.மு.க முக்கியப் புள்ளிகளின் பணம் இருப்பதால்  அவரை வளைத்தால், பொருளாதார ரீதியாக மிகப்பெரிய இழப்பு இருக்கும் என்பதால்... முதலில் அவரை, தேர்ந்து எடுத்துள்ளனர்.      

- பிரம்மா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close