சசிகலா: ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை! - புதிய தொடர் -1

சசிகலா

ஜெயலலிதா மீதான சசிகலாவின் விசுவாசம் அப்பழுக்கற்றது; கேள்விகளுக்கு அப்பாற்பட்டது’. இதைச் சொல்வது கடினமாக இருக்கலாம்; கேட்பது எரிச்சலாக இருக்கலாம்; புரிந்துகொள்ள சிரமமாகத் தோன்றலாம். ஆனால், ஜெ. - சசி நட்பின் வரலாற்றில், இதை ஆணித்தரமாய் எடுத்துச்சொல்ல, ஓராயிரம் உதாரணங்கள் இருக்கின்றன. சசிகலாவின் விசுவாசத்தை ஜெயலலிதா மனதார உணர்ந்திருந்தார். சசிகலா, ஜெயலலிதாவுக்கு அதைச் சரியான சந்தர்ப்பங்களில் உணர்த்தி இருந்தார். இந்த உணர்வுக்கடத்தல்தான், ஜெயலலிதாவின் கடைசி மூச்சு, உடலைவிட்டுப் பிரியும்வரை, சசிகலாவைப் அவர் பக்கத்திலேயே வைத்திருக்கக் காரணம். 

34 ஆண்டுகளுக்கு முன், கடலூரில் ஜெ. - சசியின் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. அந்தச் சந்திப்பு, பார்த்தால் புன்னகைக்கும் அறிமுகமாக மாறியது; அந்த அறிமுகம், ஜெ. - சசி நட்பாக வளர்ந்தது; அந்த நட்பு, ‘சசிகலா என் உடன்பிறவா சகோதரி’ என்று ஜெயலலிதாவை அறிவிக்கத் தூண்டியது; அந்த அறிவிப்பே, “சசிகலாவைத் தவிர எனக்கு இந்த உலகத்தில் யாரும் இல்லை” என்ற முடிவுக்கு, ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவைத் தள்ளியது. கடலூரில் ஏற்பட்ட ஜெ. - சசி சந்திப்பின் வரலாறு, மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் முடிவுக்கு வந்தது. இடைப்பட்ட 34 வருடங்களில் நடந்தது என்ன? 

ஜெயலலிதாவின் வாழ்வில், கடினமான காலகட்டங்கள் உருவானபோது, சசிகலாவின் நட்பு, ஜெயலலிதாவுக்கு அரணாக நின்றது; எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின், ரத்தக்களறியாய் கிடந்த, அரசியல் களத்தின் துரத்தல்களைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு அடைக்கலம் கொடுத்தது. வாழ்நாளின் இறுதிவரை, அபினைப் போல் ஜெயலலிதாவுக்கு ஆறுதல் அளித்தது. எதிர்திசையில் பார்த்தால், ஜெயலலிதாவின் நட்பு சசிகலாவுக்கு கோடிகளைக் கொட்டும் பம்பர் பரிசாய் அடித்தது; பொதுவில் அதிகமாய் தலைகாட்டாத சசிகலாவுக்கு, கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரம் செய்யும் சக்தியைக் கொடுத்தது. கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத சசிகலாவுக்கு, ‘நிழல்’ தலைவராக வலம்வரும் வாய்ப்பை வழங்கியது. அரசாங்கத்தில் எந்தப் பதவியிலும் அமராத சசிகலாவுக்கு, ‘நிழல்’ முதல்வராக ஆணையிடும் அதிகாரத்தைக் கொடுத்தது. அது எப்படி? 

இந்த வாய்ப்பைத் தக்கவைக்க, ஜெயலலிதாவின் பக்கம் இருந்த மற்ற காய்களை, சசிகலா கவனமாக வீழ்த்திக்கொண்டே இருந்தார். தன்னைத்தவிர... தன் குடும்பத்தைத்தவிர, ஜெயலலிதாவின் பக்கம், வேறு யாராவது சேர நினைத்தாலே... அவர்களைக் களையெடுத்துவிடுவார் சசிகலா. அதில், ஒருபோதும் சசிகலா அஜாக்கிரதையாக இருந்தது கிடையாது. இந்த விஷயத்தில் யாருக்கும், தயவுதாட்சண்யமே பார்க்கமாட்டார். சசிகலாவின் இந்த வியூகத்தால், ஜெயலலிதா யாரும் இல்லாதவர் ஆனார். வலம்புரிஜான், சசிகலா பற்றி ஒருமுறை குறிப்பிட்டபோது, “மொகலாய சாம்ராஜ்ஜியத்தில் மட்டும் சசிகலா இருந்திருந்தால், வெள்ளைக்காரனே இந்தியாவுக்குள் காலடி வைத்திருக்க முடியாது” என்றார். அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு, சசிகலாவை இப்படிக் கணித்திருந்தார். தீர்க்கதரிசனமான வார்த்தைகள் இவை என்பதை காலம் நிரூபித்தது. அப்படி சசிகலா வீழ்த்திய காய்கள் யார்... யார்? 

ஜெ. - சசி நட்பால், தமிழகம் சந்தித்த வரலாற்றுச் சோதனைகள் என்ன... ஜெ. - சசி குவித்த சொத்துக்களின் பின்னணி என்ன.... தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் இருந்தும், விளாரில் இருந்தும் புற்றீசல்போல் கிளம்பிய சசிகலாவுடைய உறவுகளின் வரலாறு என்ன... 34 வருட ஜெ. - சசி நட்பின் பயணத்தில் மொத்தமாக சசிகலா செய்தது என்ன... செய்யாமல் தவிர்த்தது என்ன... இவ்வளவு சர்ச்சைகளுக்குப் பின்னாலும், ‘ஜெயலலிதா மீதான சசிகலாவின் விசுவாசம் அப்பழுக்கற்றது’ என்று சொல்லப்படுவது எதன் பொருட்டு, அத்தனைக்கும் பதில் சொல்கிறது, ‘சசிகலா: ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை!’ 

நாளை முதல்...

இதன் தொடர்ச்சியை படிக்க...

- ஜோ.ஸ்டாலின்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!