வெளியிடப்பட்ட நேரம்: 11:38 (13/12/2016)

கடைசி தொடர்பு:13:27 (12/11/2018)

125 ஆண்டுகளில் சென்னையைத் தாக்கிய 14 புயல்கள்... எது மிக மோசம்?

எதிர்பார்த்ததை விட மிக ஆக்ரோஷமாகவே சென்னையைத் தாக்கியது வர்தா புயல். கிட்டத்தட்ட 192 கி.மீ வேகத்தில் சூறைக் காற்று வீசியுள்ளது. கன மழையும் பெய்துள்ளது. சென்னையின் வரலாற்றில் மிக மோசமான புயல் என்ற பெயரை வர்தா பெற்று விட்டது. இந்திய வானிலை ஆராய்ச்சி மையத் தகவலின் படி 1893-ம் ஆண்டு முதல் 2016 வரை தமிழகத்தில் 63 புயல்கள் கரையை கடந்துள்ளன.

புயல்கள்

 

புயல் கரையைக் கடக்கும்போது அதன் தன்மை மூன்று விதமாக மாறுகிறது:

- கரையை நெருங்கியதும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்

- 60 - 80 கி.மீ வரை சூறை காற்றை ஏற்படுத்தும் தீவிர புயல்

- 100 கிலோ மீட்டருக்கும் மேல் காற்றை சுழற்றி அடிக்கும் அதி தீவிர புயல்

கடந்த 125 ஆண்டுகளில், சென்னையில் நேரடியாக கரையை கடந்த புயல்களின் எண்ணிக்கை 14. அதில் 5 புயல்கள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து மழையை மட்டும் தந்து சென்றுள்ளன. கடைசியாக வீசிய வர்தா புயலையும் சேர்த்து 6 புயல்கள் மிகத் தீவிரமானவை என்று சுட்டிக் காட்டியுள்ளது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம். இதேபோல மூன்று தீவிர புயல்கள் சென்னையைத் தாக்கியுள்ளன. சென்னை மற்றும் மகாபலிபுரம் பகுதிகளைச் சேர்த்து மொத்தம் 21 புயல்கள் தாக்கியுள்ளன.

சென்னை என்று இல்லை ஒட்டு மொத்தமாக தமிழகத்தை நோக்கி வரும் புயல்கள் வட கிழக்கு பருவ மழை காலத்தில், அதாவது அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் மட்டுமே உருவாகின்றன. இதுவரை 6 புயல்கள் மட்டுமே வட கிழக்குப் பருவ மழை அல்லாத மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஏற்பட்டுள்ளன. சென்னையைத் தாக்கிய 6 அதி தீவிர புயல்களில் வர்தா புயலுக்கு மட்டுமே பெயர் வைக்கப்பட்டுள்ளது.

1994 புயல்

1994-ம் ஆண்டு வீசிய புயல்

 

1994 அக்டோபர் புயல்: காற்றின் வேகம் 132 கி.மீ

கடைசியாக 22 ஆண்டுகளுக்கு முன் 1994-ம் ஆண்டு அதி தீவிர புயல் சென்னையத் தாக்கியது. அக்டோபர் 29-ம் தேதி உருவான புயல் 31-ம் தேதி சென்னையின் கரையை கோரமாக சீண்டியது. தமிழகத்தில் 69 பேர் பலியானதாக கூறப்படுகிறது. 26 சென்டி மீட்டர் மழை பதிவானது. 132  கி.மீ வேகத்தில் அதிவேக காற்று வீசியது. வரலாற்றில் சென்னைப் பார்த்த உட்சகட்ட காற்றின் வேகம் அதுவாகத்தான் இருந்தது. அந்த காட்சியை வர்தா மூலம் நாம் காண முடிந்தது. 1994 புயலினால் 61 கோடி ரூபாய்க்கு பொருள் சேதம் ஏற்பட்டது. கடந்த நுற்றாண்டில் சென்னை போன்ற ஒரு மாநகரத்தில் புயலின் Eye எனப்படும் மத்திய சுழல் பகுதி நேரடியாக சென்னையைக் கடந்தது 1994-ம் ஆண்டு மட்டுமே என்பது அபூர்வ செய்தி. 22 ஆண்டுகளுக்குப் பிறகு, வர்தா புயலின் Eye பகுதியும் சென்னையைக் கடந்தது. வர்தா புயல் கரையைக் கடக்கும்போது, மாலை 4 முதல் 5.30 மணி வரை சாந்தமான வானிலை நிலவியது அல்லவா. அதுவே வர்தாவின் மத்திய Eye பகுதி. Eye பற்றி மேலும் தெரிந்து கொள்ள...

ஜல் புயல் 2010:

அதி தீவிர புயலாக உருவெடுக்கும் என்று அச்சுறுத்துலுடன் சென்னையை நோக்கி முன்னேறிய ஜல் புயல், சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடந்தது. ஆனால், மிகவும் வலு இழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைத் தொட்டது. இதனால் கன மழை பெய்தது. சென்னைக்கு பெரிய அளவு பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் ஆந்திராவை வெள்ளக் காடாக்கியது.

 

நீலம் புயல் 2012: காற்றின் வேகம் 85 கி.மீ

1994-ம் ஆண்டுக்கு பிறகு சமீப காலங்களில் சென்னைக்கு அருகே கரையைக்  கடந்த தீவிர புயல் ‘நீலம்’. அக்டோபர் 31-ம் தேதி மஹாபலிபுரத்தில் நிலத்தைத் தொட்ட நீலம் புயலால், சென்னையில் 85 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. சென்னை துறைமுகத்தில்; 7-ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. வர்தா புயலின் போது 10-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. நீலத்தின் வேகத்தால் தரை தட்டி நின்ற பிரதீபா காவிரி கப்பலின், 5 மாலுமிகளையும் சேர்த்து மொத்தம் சென்னையில் 19 பேர் பலியாகினர்.

நீலம் புயல்

1994-ம் ஆண்டுக்கு முன்னர் சென்னையில் ஏற்பட்ட புயல்களின் தன்மை மற்றும் அவற்றால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து முழுமையான தகவல்கள் சரி வர கிடைக்கவில்லை. இருந்தபோதும் 1994-ம் ஆண்டு புயலைப் பற்றிய ஆவணத்தில், கடந்த நூற்றாண்டில் சென்னையைத் தாக்கிய மோசமான புயல் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே அதற்கு முந்தைய கால புயல்கள் பற்றிய ஒப்பீடு இங்கு அவசியமானதாக கூறப்படவில்லை.

1898 புயல்

 

ஜல் புயலுக்குப் பிறகு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது வர்தா புயல். இதுவரை சென்னை காணாத பெரும்புயலும், மிக மோசமான புயலும் வர்தா தான். இதன் மூலம் இந்த டிசம்பரும் வரலாற்றில் இடம் பிடித்துவிட்டது.

ஒவ்வொரு புயலும் சென்னையின் எதிர்ப்பு சக்தியை கூட்டிக் கொண்டே செல்கிறது. வர்தா புயலின் போது அரசு இயந்திரம் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் அது நமக்கு தெரிந்திருக்கும். இனி இப்படி ஒரு புயல் சென்னையை தாக்கலாம் அல்லது தாக்காமலும் போகலாம், ஆனால் எத்தனை புயல் வந்தாலும் சமாளிக்க சென்னை கைகோர்த்து தயாராக இருக்கிறது.

- ரெ.சு.வெங்கடேஷ்