வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (13/12/2016)

கடைசி தொடர்பு:18:00 (13/12/2016)

வர்தாவுடன் சேர்ந்து மரங்களை வேட்டையாடிய மனிதர்கள்! #SaveTrees

Vardah

"வர்தா புயல்" சென்னையை சூறையாடி கடந்துள்ளது. அந்த புயல் தரைப்பகுதிக்கு வந்தாலும் இன்னும் பல நாட்களுக்கு அழிவில்லை. அரபிக்கடலில் ஒரு ஆட்டம் போட்டுவிட்டுதான் கலைய உள்ளது. புயலின் குணம் இயற்கையானது. நமது அறிவியல் கணிப்பின் படி அதன் நன்மை தீமைகள் பற்றி முன்கூட்டி அறிந்துமே இவ்வளவு சேதம். ஆனால் சென்னையில் வாழும் மனிதர்கள் நேற்று அந்த புயலை பயன்படுத்தி தங்கள் கொடூரத்தை காட்டினர். ஆம், புயலின் சூறாவளியால் பிடுங்கி எறியப்பட்ட மரங்களுக்கு ஈடான எண்ணிக்கையில் மரங்களை வெட்டி எறிந்தனர். 

`தங்களின் வணிக நிறுவனத்திற்கு இடையூறாக இருக்கிறது, கார் நிறுத்த தொந்தரவாக இருக்கிறது, மரம் இருப்பதனால் பறவைகள் கூடுகட்டுகின்றன, அவற்றின் சத்தம் தொல்லையாக இருக்கிறது.'இவ்வளவு செலவு செய்து கட்டிய அப்பார்ட்மென்ட்டை மறைக்கிற மாதிரி இவ்வளவு பெரிய மரம் நல்லாவா இருக்கு' என்கிற சுயநல அங்கலாய்ப்பு என பல்வேறு காரணங்களால் மழையோடு மழையாய், புயலோடு புயலாய் ஆயிரக்கணக்கான மரங்கள் 'வேண்டுமென்றே' " வீழ்த்தப்பட்டுள்ளன. 

சென்னை நகருக்குள் மரம் வெட்ட வேண்டுமென்றால் அதற்கு பல்வேறு அனுமதி வாங்கவேண்டும் என்கிற விதிமுறைகள் இருப்பதானாலும், இவர்களின் 'அல்ப' காரணங்களுக்கு அந்த அனுமதி கிடைக்காது என்பதாலும் இந்த பாதையை தேர்வு செய்துள்ளனர். 

இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் மரங்கள் மிகக்குறைவான எண்ணிக்கையில் உள்ள நகரங்களில் சென்னையும் ஒன்று. மும்பை, டெல்லியில் போன்ற நகரங்களின் வெப்பகால பருவம் கடுமையானது,இருந்தாலும் அங்கு  சென்னையை விட மரங்கள் அதிகம். ஆனால் அதே கோடையில் சென்னையில் குறைவான எண்ணிக்கை கொண்ட மரங்களை கொண்டுதான் நாம் சமாளித்து வந்தோம். 

ஒவ்வொரு மழைக்காலத்திலும் சென்னையில் மரங்கள் ஆங்காங்கே  விழத்தான் செய்யும். ஆனால் இம்முறை இயற்கையினால் விழுந்தது ஒரு பக்கம் என்றால், அதே இயற்கையோடு சேர்ந்து மனிதனும் தனக்கே  குழிபறித்துக்கொண்டான். உண்மையில் இந்த ஆண்டு வெளியான மத்திய சுற்றுச்சுழல் துறை அறிக்கையில் சென்னையின் 144 கிமீ  உள்ள அடர் காடுகளின் சதவிகிதம் 9.04% என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது முன்பை விட கொஞ்சம் கூடுதலான அளவுதான். இருப்பினும் இதே நிலையை நீட்டித்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் காடுகளின் பரப்பளவை சிறப்பான அளவுக்கு உயர்த்த முடியும் என இயற்கை ஆர்வலர்களும், சென்னையை விரும்பும் மக்களும் எண்ணியிருந்தனர். 

ஒவ்வொரு நகரத்திலும் உள்ள காடுகளின் பரப்பளவு கிலோ மீட்டரில்..

டெல்லி - 180 சதுர கிமீ

பெங்களூரு - 97  சதுர கிமீ

ஹைதராபாத் - 88.4  சதுர கிமீ

மும்பை - 86.57  சதுர கிமீ

ஜெய்பூர் - 74.47  சதுர கிமீ

சண்டிகர் - 34.4  சதுர கிமீ

சென்னை - 24  சதுர கிமீ 

மேற்படி கணக்கில் சென்னையில் உள்ள பூங்காக்களும் அடங்கும். சென்னையில் 456 பூங்காக்கள் உள்ளதாக மாநகராட்சி குறிப்புகள் சொல்கின்றன. இதில் மரங்கள் உள்ள பூங்காக்கள் 60 சதவிகிதம்தான் இருக்கும்.  நகர விரிவாக்கம்,சாலை விரிவாக்கம் ஆகிய பெயரால் அரசும், சொந்த காரணங்களால் தனியாரும் சென்னையின் மர வளத்தை கைவத்து வந்தனர்.இதற்கு பல்வேறு அரசு சாரா நிறுவனங்கள் மற்றூம் இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றங்களில் பொது நலவழக்கு தொடுத்ததாலேயே இந்த அளவு மரங்களை இதுநாள் வரை காக்க முடிந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி எடுத்து வரும் மரங்களின் கணக்கெடுப்பு இன்னும் முடியாத சூழலில் இயற்கையும் - மனிதர்களும் இந்த சூறையாடலில் ஈடுபட்டுள்ளனர். 

வர்தா

சென்னையில் மட்டும் தோராயமாக  3 லட்சம் மரங்கள் இருந்ததாக சொல்லப்பட்டது. மீண்டும் லட்சக்கணக்கில் மரங்களை நட்டு வளர்ப்பதிலேயே சென்னை மீதான நம் அக்கறை இருக்கிறது. காரணம் இந்தியாவில் காற்று மாசு அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் துவக்க நிலையில் உள்ளது சென்னை. நம்மை போட்டியாளராக பார்க்கும் பெங்களூரு காற்று மாசில்லாமல் '41' என்கிற மதிப்பெண்களில் உள்ளது. சென்னையில் மரங்கள் அதிகம் வளர்ப்பது நமக்கு மட்டுமல்ல நம் சந்ததிக்கும் நன்று என 'புயலோடு போட்டியிட்டவர்கள்' எப்போதுதான் உணர்வார்களோ!  

-வரவனை செந்தில் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்