இனி விளம்பரங்களில் சசிகலா படம், பெயர் கூடாது... சங்கடம் தவிர்க்க 'புது முயற்சி'?

நாளிதழ்களில் வழங்கப்படும் விளம்பரங்களில் தன்னுடைய படத்தையோ, பெயரையோ குறிப்பிடக்கூடாது என்றும், சின்னம்மா என குறிப்பிட்டு ஜெயலலிதா படத்துடனே விளம்பரம் செய்ய வேண்டுமென வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா இறந்தபிறகு,'சசிகலாதான் அடுத்த தலைமை' என்கிற ரீதியில் விவகாரம் ஓடிக் கொண்டிருக்க, அதற்கு கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஆதரவும், தொண்டர்கள் மத்தியில் எதிர்ப்பும் இருந்து வருகிறது. சசிகலாவின் படத்தை போட்டு, கட்சி தலைமை ஏற்க வாருங்கள் என அழைப்பு விடுத்து விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. விளம்பரங்களில் எல்லாம் ஜெயலலிதா இருந்த இடத்தில் சசிகலா இடம்பெற்று விட்டார். அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் தங்கள் சட்டை பாக்கெட்டுகளில் வைக்கும் படங்கள் கூட ஜெயலலிதாவுக்கு பதில் சசிகலாவின் படங்கள் இடம்பெறத்துவங்கி விட்டன.

இந்நிலையில், விளம்பரங்களில் தன் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்த வேண்டாம் என சசிகலா உத்தரவிட்டுள்ளார். அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ ஏடான நமது எம்.ஜி.ஆரில் தமது படங்களை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிட்ட சசிகலா, தன்னை தலைமையேற்க அழைப்பு விடுக்கும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கவில்லை.

அதாவது தனது பெயரை, படத்தை பயன்படுத்தாமல், ஜெயலலிதாவின் படத்தை போட்டு, 'சின்னம்மா' என சசிகலாவை குறிப்பிட்டு கட்சித்தலைமை ஏற்க வாருங்கள் என அழைப்பு விடுக்கலாம். மற்றபடி சசிகலா என்ற பெயரையோ, தனது படத்தையோ பயன்படுத்தக்கூடாது. நமது எம்.ஜி.ஆர். நாளிதழுக்கு மட்டுமல்லாமல், மற்ற நாளிதழ்களுக்கு இது தெரியப்படுத்தப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகளுக்கு இது தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதை நாளிதழ்களில் உள்ளவர்களும் நமக்கு உறுதிப்படுத்தினர். இது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். "எங்களுக்கும் இந்த தகவல் சொல்லப்பட்டிருக்கு. ஆனால்,நாங்க பொறுப்புல இருக்கிறவங்க சொன்னா, எங்க கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கிறவங்க கேப்பாங்க. எதிர்கோஷ்டி ஆட்கள் கேட்காம விளம்பரம் கொடுக்க வாய்ப்பிருக்கு. அதனால்தான், ஒவ்வொரு பத்திரிகைகளுக்கே போன் போட்டு,' போட்டோவோட விளம்பரம் கொடுத்தா போடாதீங்க'ன்னு சொல்லி இருக்காங்க. எங்க தரப்புலயும் ஒவ்வொரு நிருபருக்கும் போன் போட்டு சொல்லிட்டு இருக்கோம்" என்றார்.

 

'எதற்காக இந்த தடை?' என்று அ.தி.மு.கவின் மாநில நிர்வாகியிடம் பேசினோம்.  "தன்னை அலுவலக ரீதியாக்க செயற்குழு,பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக அறிவிக்கும் வரை தனது படம் வேண்டாம் என நினைக்கிறார். ஏற்கெனவே அம்மா (ஜெயலலிதா) இறந்த உடன் அவரை மறந்து விட்டு சின்னம்மா என அலைகிறார்கள் என அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது புகார் உள்ளது.

அதற்கேற்ப நிர்வாகிகளும் அம்மாவின் படத்தை விட பெரியதாக தனது படத்தைப் போட்டு விளம்பரம் செய்வது அந்த சிக்கலை பெரிதுபடுத்துவதாக சின்னம்மா நினைக்கிறார். அதனால் இந்த விளம்பரம் வேண்டாம்ன்னு நினைக்கிறார். ஏற்கெனவே அம்மா மறைந்த மறுநாள் அவர் சடலத்தைச் சுத்தி தனது குடும்பம் மொத்தமும் நின்றது சசிகலா விருப்பம் இல்லாமல்தான் நடந்தது. அந்த காட்சி எல்லோரையும் சசிகலாவுக்கு எதிராக முணுமுணுக்க வைக்கும் அளவுக்குப் போனது. சசிகலா எதிர்ப்பையும் மீறி குடும்ப உறுப்பினர்கள் மொத்தமும் அங்கே நின்றார்கள். அவரால் அப்போது தடுக்க முடியவில்லை.

ஆனால், அதன்பிறகு தனது உறவுகளை போயஸ்கார்டனுக்கு படை எடுக்க வேண்டாம்னு அவர் அறிவித்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அடுத்து, அம்மா மீதான தனது விசுவாசம் அறியாமல் தன்னால் தான் அம்மாவுக்கு தீமை நடந்தது போன்ற தோற்றம் உருவாகி வருவதும் சின்னம்மாவை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த சூழலில், தன்னை தலைமை ஏற்க வாருங்கள் என அழைப்பு விடுக்கும் விளம்பரங்களில் அம்மா படத்தை விட சின்னம்மா படத்தை பெரிதாக போடுகிறார்கள். இதனால் படங்களை கிழிப்பது, சாணி அடிப்பது போன்ற எதிர்மறை சம்பவங்கள் நடக்கிறது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணவே இப்போது படமே வேண்டாம் என்ற முடிவுக்கு சின்னம்மா வந்திருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை," என்றார்.

இந்த முடிவுக்கேற்ப இன்றைய நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் எந்த இடத்திலும் சசிகலாவின் படத்தை பயன்படுத்தவில்லை. அதே நேரத்தில் ஜெயலலிதா படத்தை போட்டு சின்னம்மா என சசிகலாவை குறிப்பிட்டு கட்சித் தலைமை ஏற்க அழைப்பு விடுத்து விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

மிகுந்த கவனத்தோடு அரசியல் பாதையில் பயணத்தை துவக்குகிறார் சசிகலா.

- துரை.வேம்பையன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!