தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை; சசிகலாவுக்கு நெருக்கடி? | Are these IT raids to trap Sasikala?

வெளியிடப்பட்ட நேரம்: 12:26 (21/12/2016)

கடைசி தொடர்பு:13:02 (21/12/2016)

தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை; சசிகலாவுக்கு நெருக்கடி?

ரெய்டு நடைபெறும் வீடுசென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் மற்றும் அவரது உறவினர் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் இன்று காலை முதலே அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, சித்தூர், பெங்களுரு உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரேநேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் தொழிலதிபர் சேகர் ரெட்டி, அவரது சகோதரர் மற்றும் உறவினர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைகளின் தொடர்ச்சியாக இன்று சோதனை நடத்தப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கெனவே சென்னை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் ரெட்டியின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளின்போது பல கோடி ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகள், கணக்கில் காட்டப்படாத தங்க நகைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இந்நிலையில் இன்று அதிகாலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர். முதல்வர் ஒ.பி.எஸ்., பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இரண்டு நாட்கள் முன்புதான் சந்தித்து, வர்தா புயல் பாதிப்புக்கு 22,500 கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து வந்தார்.

வருமான வரித்துறையினர் சோதனையின் பின்னணி என்ன?.

முந்தைய ஆட்சியின்போது, தமிழ்நாட்டில் மின்சார வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் செய்த குற்றச்சாட்டு மற்றும் சட்டவிரோதமாக கோடிக்கணக்கான பணத்தை, ஹாங்காங்கில் முதலீடு செய்ததாக  தமிழக முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன், முன்னாள் தலைமைச் செயலாளர் கு. ஞானதேசிகன் ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.  நத்தம் விஸ்வநாதன், ஞானதேசிகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாக கடந்த செப்டம்பர் மாதம் 12-ம் தேதி திடீரென்று தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர்கள் கைது செய்யப்படவில்லை. அமலாக்கத்துறை சோதனை மட்டுமே நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. வருமான வரித்துறையினரும் ஏற்கெனவே நத்தம் விஸ்வநாதன் மற்றும் அவரது உறவினர் வீடுகளிலும் சோதனை நடத்தினர். தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு வெளிநாட்டிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றிருப்பது, கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதற்கான ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் அப்போதே தகவல்கள் வெளியாகின. இந்த சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் தொடர் சோதனைகள் நடைபெறும் என்று பரவலாக தகவல்கள் தெரிவித்தன.

நத்தம் விஸ்வநாதன் மற்றும் உறவினர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, சசிகலாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அந்த சமயத்திலேயே ஜெயலலிதாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

2016-ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு கரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள, ஃபைனான்சியர் அன்புநாதன் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. ஏராளமான கணக்கில் வராத பணம் அப்போது பிடிபட்டது. 

சேகர் ரெட்டியுடன் ஓ.பி.எஸ்அதன் தொடர்ச்சியாக, சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் டிசம்பர் 11-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில் இன்று, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் மற்றும் அவரது உறவினர் வீடுகளிலும் அதிரடியில் இறங்கியுள்ளனர். 

ஜெயலலிதா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர், அருகில் நின்ற சசிகலாவிடம் ஆறுதல் தெரிவிக்கும் வகையில், தலையில் கைவைத்து, "சகோதரி மறைந்தால் என்ன? சகோதரராக நான் இருக்கிறேன். கவலைப்படாதீர்கள்" என்று தெரிவித்தாராம். அண்மைக்காலமாக நடைபெறும் வருமான வரித்துறையினர் ரெய்டுகளைப் பார்க்கும்போது, சகோதரர் தனது கடமையை(?) ஆற்றத் தொடங்கி விட்டார் என்று தெரிகிறது.

மேலும், ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய பின், முதல்வர் ஒ.பி.எஸ்-ஐ கட்டித்தழுவி பிரதமர் ஆறுதல் கூறினார். ஒ.பி.எஸ்-ம் மத்திய அரசின் கண்காணிப்பில்தான் உள்ளார் என்பதை குறிப்பால் உணர்த்தும் வகையில், பிரதமர் அவ்வாறு செய்தாரா? என எண்ணத் தோன்றுகிறது.

சேகர் ரெட்டி, சென்னையில் பல்வேறு அரசியல் முக்கியப் பிரமுகர்கள், அமைச்சர்களுக்கு நெருக்கமானவர் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் இப்போது தலைமைச் செயலாளராக உள்ள ராம மோகன ராவ், முன்னான் தலைமைச் செயலாளர் ஞானதேசிகனுக்கு பின்னர் பொறுப்பேற்றவர். சசிகலாவின் ஆசியுடன் ராமமோகன ராவ் தலைமைச் செயலாளர் பொறுப்புக்கு வந்ததாக அப்போதே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்த சூழ்நிலையில், ஒ.பி.எஸ்,-ன் உதவியாளர், தலைமைச் செயலாளர் வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்தியிருப்பதன் மூலம் அடுத்த டார்கெட் சசிகலாவுக்கு நெருக்கமானவர்களாக இருக்கலாம் என்று, அரசியல் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது. 

அ.இ.அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக முதலில் பொறுப்பேற்பது என்ற முடிவில், கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை தூண்டிவிட்டு, அதற்கான முதல்கட்ட ஆயத்தப்பணிகளில் சசிகலா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தீவிரமாக உள்ளனர். அடுத்ததாக, முதல்வர் பதவியைப் பற்றி யோசிக்கலாம் என்ற முடிவுடன் சசிகலா காய்களை நகர்த்தி வரும் நிலையில், இன்றைய வருமான வரித்துறை ரெய்டு, பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே தெரிகிறது.

- சி.வெங்கட சேது
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்