வெளியிடப்பட்ட நேரம்: 08:34 (22/12/2016)

கடைசி தொடர்பு:12:06 (22/12/2016)

சாகித்ய அகாடமி விருது பற்றி, வண்ணதாசன் பற்றி இவையெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

சாகித்ய அகாடமி

* சாகித்ய அகாடமி அமைப்பு, இந்திய மொழிகளில் இலக்கியத்தை மேம்படுத்தவும், எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தவும், இலக்கியச் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கவும் 1954 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட தன்னாட்சி உரிமை பெற்ற ஒரு அமைப்பு. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு உலகலாவிய இலக்கியங்களை மொழிபெயர்ப்பதுடன், சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து படைப்பாளர்களை விருதளித்து அங்கீகரிப்பது, சிறந்த ஆளுமைகளின் புத்தகங்களை வெளியிடுவது, படைப்பாளிகளை ஆவணப்படுத்துவது போன்ற பணிகளையும் செய்கிறது.  

* சாகித்ய அகாடமி விருது, இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாகும். ஒவ்வோராண்டும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 24 மொழிகளில் சிறந்த படைப்பு ஒன்றைத் தேர்வு செய்து இந்த விருது வழங்கப்படும். சிறுகதை, நாவல், கவிதை, இலக்கிய விமர்சனம், பயண நூல், வாழ்க்கை வரலாறு, நாடகம், சுய சரிதை உள்பட அனைத்து வகை இலக்கிய வடிவங்களுக்கும்  இவ்விருது வழங்கப்படும். 

* 1955-ம் ஆண்டு முதன்முதலில் தமிழ் மொழிக்கான விருது, "தமிழ் இன்பம்" என்ற கட்டுரை நூலுக்காக ரா.பி.சேதுப்பிள்ளைக்கு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை 5000 ரூபாய். 1983ல், தொ.மு.சிதம்பர ரகுநாதன் எழுதிய "பாரதி; காலமும் கருத்தும்" என்ற இலக்கிய விமர்சன நூலுக்கு சாகித்ய அகாடமி வழங்கப்பட்ட தருணத்தில் இத்தொகை 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. 1988ல் வா.செ.குழந்தைச்சாமி எழுதிய "வாழும் வள்ளுவம்" என்ற நூலுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அப்போது 25 ஆயிரமாக பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டது. 2001ல் சி.சு.செல்லப்பாவின் "சுதந்திர தாகம்" நாவலுக்கு விருது வழங்கப்பட்ட தருணத்தில் 40 ஆயிரமாக உயர்ந்தது. 2003-ம் ஆண்டில் "கள்ளிக்காட்டு இதிகாசம்" நாவலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு இவ்விருது வழங்கப்பட்ட போது 40 ஆயிரமானது. 2009 முதல் 1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. கூடவே ஒரு பட்டயம். 

* ஆண்டு முழுவதும் வெளிவரும் நூல்களில் சிறந்தவற்றைத் தேர்வு செய்ய, சாகித்ய அகாடமி நிர்வாகம் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி குழுவை அமைக்கும். அக்குழு குறிப்பிட்ட புத்தகங்களைத் தேர்வு செய்து மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட கருத்தாளர்களுக்கு அனுப்பும். ஒவ்வொரு கருத்தாளரும் இரண்டு நூல்களை பரிந்துரை செய்வார்கள். அவ்விதம் பரிந்துரை செய்யப்பட்ட நூல்களில் இருந்து சாகித்ய அகாடமி அமைக்கும் நடுவர் குழு, ஒரு நூலை ஏகமனதாக தேர்வு செய்யும். அந்த ஆண்டில் சிறந்த நூல்கள் ஏதும் வரவில்லை என்று கருதினால் கடந்த ஆண்டுகளில் வெளிவந்த நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 

வண்ணதாசன்

* 2016-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை நூலுக்காக வண்ணதாசனுக்கு வழங்கப்படுகிறது. இந்த நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருந்தது. டி.செல்வராஜ், டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன், எம்.ராமலிங்கம் உள்ளிட்ட நடுவர் குழு இந்த நூலை விருதுக்கு தேர்வு செய்தது.  

* சாகித்ய அகாடமி விருதுகளை தென்மாவட்டங்களில் பிறந்த எழுத்தாளர்களே அதிக அளவில் பெற்றுள்ளார்கள். குறிப்பாக திருநெல்வேலி வட்டாரத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அதிக அளவில் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள். சாகித்ய அகாடமி விருது பெற்ற தென்மாவட்ட எழுத்தாளர்கள்; சு.வெங்கடேசன் (மதுரை), அ.மாதவன் (செங்கோட்டை), ஜோ.டி.குரூஸ் (உவரி), மேலாண்மை பொன்னுச்சாமி (விருதுநகர்), நீல பத்மநாபன் (இரணியல்), தி.க.சிவசங்கரன் (திருநெல்வேலி), தோப்பில் முகமது மீரான் (தேங்காய்ப்பட்டினம்), பொன்னீலன் (நாகர்கோவில்), வல்லிக்கண்ணன் (திருநெல்வேலி), மீ.ப.சோமு (மீனாட்சிபுரம்), பி.ஸ்ரீ. ஆச்சார்யா (தென் திருப்பேரை), அழகிரிசாமி (இடைச்செவல்), நா.பார்த்தசாரதி (சிவகாசி), தொ.மு.சி.ரகுநாதன் (திருநெல்வேலி), ஆதவன் (கல்லிடைக்குறிச்சி), சு.சமுத்திரம் (திருநெல்வேலி), கி.ராஜநாராயணன் (கோவில்பட்டி), சி.சு.செல்லப்பா (சின்னமனூர்), கவிஞர் வைரமுத்து (தேனி), மு.மேத்தா (பெரியகுளம்), நாஞ்சில்நாடன் (வீர நாராணமங்கலம்), பூமணி (தூத்துக்குடி), டி.செல்வராஜ் (தென்கலம்) வண்ணதாசன் (திருநெல்வேலி).

* சிறுபான்மையினர் பேசும் மொழிகளில் வெளிவரும் சிறந்த நூல்கள், சிறந்த படைப்பாளர்களைத் தேர்வு செய்து பாஷா சம்மான் என்ற விருதையும் சாகித்ய அகாடமி வழங்குகிறது. 1 லட்சம் பரிசுடன் கூடிய இந்த விருது சௌராஷ்டிர மொழி மேம்பாட்டுக்கு பாடுபட்ட கே.ஆர்.சேதுராமன், தடா.சுப்பிரமணியம் இருவருக்கும் 2006ல் வழங்கப்பட்டது. இதுதவிர மொழி பெயர்ப்புக்கென ஒரு விருது, குழந்தை இலக்கியத்துக்கான பால சாகித்ய அகாடமி விருது, 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கான யுவபுரஸ்கார் விருது போன்ற விருதுகளையும் சாகித்ய அகாடமி வழங்குகிறது. இம்மூன்று விருதுகளும் 50 ஆயிரம் பரிசுத்தொகையையும், பட்டயங்களையும் உள்ளடக்கியதாகும்.  

* இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள வண்ணதாசனின் தந்தை, தி.க.சிவசங்கரன். மார்க்சிய அறிஞரும் எழுத்தாளருமான இவர் ’விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்’ என்ற நூலுக்காக 2000-மாவது ஆண்டில் சாகித்ய அகாடமி விருது பெற்றது குறிப்பிடத்தகுந்தது. 

* வண்ணதாசன் பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது இயற்பெயர் கல்யாணசுந்தரம். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் என தொடர்ந்து இயங்கி வருபவர். எல்லா ஆளுமைகளாலும் பெரிதும் மதிக்கப்படுபவர்.

* கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், சமவெளி, பெயர் தெரியாமல் ஒரு பறவை, மனுஷா மனுஷா, கனிவு, நடுகை, உயரப் பறத்தல், கிருஷ்ணன் வைத்த வீடு, ஒளியிலே தெரிவது  ஆகியவை வண்ணதாசன் எழுதிய முக்கிய சிறுகதை நூல்கள். 

* கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதை இலக்கியத்திலும் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார் வண்ணதாசன். புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு ஆகியவை அவரின் கவிதை நூல்கள். இவை தவிர, அகமும் புறமும் என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்திருக்கிறது. எல்லோர்க்கும் அன்புடன் என்ற பெயரில் வண்ணதாசன் எழுதிய  கடிதங்கள் தொகுக்கப்பட்டு அழகான நூலாக வெளியிடப்பட்டுள்ளன. மீண்டும் பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு, ‘சில இறகுகள் சில பறவைகள்’ என்ற பெயரில் வெளியானது. 

* வண்ணதாசனின் சகோதரர் பெயர் கணபதி. திருவேந்தி என்ற பெயரில் இவர் குறுந்தொகைக்கான உரையை எழுதியிருக்கிறார்.   

 

- வெ.நீலகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்