புனிதங்களைப் பொசுக்கியவர் : புகழ்பெற்ற அரசியல் அறிஞர் பார்வையில் பெரியார்! பகுதி 1

பெரியார்

பேராசிரியர் சுனில் கில்னானி இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மை மிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். அவருடைய, ‘INCARNATIONS: INDIA IN FIFTY LIVES’ நூலில்... தந்தை பெரியார் குறித்து இடம்பெற்ற ‘SNIPER OF THE SACRED COWS’ கட்டுரை ஆசிரியரின் அனுமதி பெற்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது: 

இந்தியாவில் வாழும் அனைத்துப் பெண்களையும் தனியாகப் பிரித்து ஒரு தேசத்தை நாம் கட்டமைப்பதாக வைத்துக்கொள்வோம். இதை, ‘இந்தியப் பெண்கள் குடியரசு’ என்போம். இந்த நாட்டில், 60 கோடி பேர் இருப்பார்கள். ஆண்களால் மோசமாக ஆளப்படும் இந்தியாவுக்கு அடுத்த, பெரிய தேசமாக அது திகழும். அந்தத் தேசத்தின் மனிதவள வளர்ச்சிக் குறியீடானது மியான்மர், ருவாண்டா முதலிய நாடுகளுக்கு இடையே மோசமான இடத்தைப் பெறும். அந்தத் தேசத்தில் பள்ளிக்குச் செல்லும் சராசரி வருடங்கள் அதிர்ச்சி தரும் அளவாக 3.2 வருடங்கள் என்கிற அளவிலேயே இருக்கும். இது, ஆப்ரிக்கத் தேசமான மொசாம்பிக்கின் மோசமான கல்விநிலையோடு போட்டியிடும் நாடாகக் காட்சியளிக்கும். தனிநபர் வருமானத்தை, விலைவாசி ஏற்றத்தை கணக்கில்கொண்டு கணக்கிட்டால்... இந்த இந்தியப் பெண்கள் நாட்டின் வருமானம், ஐவரி கோஸ்ட், பப்புவா நியூ கினியா முதலிய நாடுகளுக்கு இடையே தள்ளாடும். கடந்த 15வருடங்களில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மூன்று மடங்கு பெருகியும் பெண்களின் நிலை இவ்வளவு அவலத்துக்கு உரியதாக இருக்கிறது. 

இந்தியப் பெண்களின் அளப்பரிய ஆற்றலை இந்த அளவுக்கு அடக்கி ஒடுக்காத நாடுகளின் எடுத்துக்காட்டுக்கு எங்கேயோ வெளிநாட்டைத் தேடவேண்டியதில்லை. வடக்கில் உள்ள மாநிலங்களைவிடத் தெற்கில் உள்ள மாநிலங்களில்... ஐ.நா சபையின் மனிதவளக் குறியீடு, பெண்களுக்கான அன்றாடச் சுதந்திரம் ஆகியவை மேம்பட்டே உள்ளன. எடுத்துக்காட்டாக, வடக்கில் பெரும்பாலான பெண்களுக்கு 18 வயதுக்குள் திருமணம் முடிக்கப்படுகிறது. தெற்கில் உள்ள சில மாநிலங்களில் 18 வயதுக்கு முன் திருமணம் செய்துவைக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை 15 சதவிகிதம் குறைவாக உள்ளது. இதைப்போலவே பெண்களின் கல்வியறிவு, வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை ஆகியவற்றில் வடக்கைவிடத் தெற்கு வெகுவாக மேம்பட்டிருப்பதைக் காணமுடியும். (வடக்கில் வேலைக்குச் செல்லும் பெண்கள் 36 சதவிகிதம், தெற்கில், கிட்டத்தட்ட 50 சதவிகிதம்.) இத்தகைய முக்கியமான பொருளாதார, சமூக வேறுபாடுகளுக்குக் காரணமாக, மையமாக அமைவது என ‘வடக்கு - தெற்கு வேறுபாடு’ என நாம் கருதலாம். இப்படிப்பட்ட வியப்பைத் தரும் வேறுபாட்டுக்குப் பின்னால்... ஆரம்பப் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத பெரியார் ஈ.வெ.ரா-வின் பங்களிப்பு மகத்தானதாக இருக்கிறது. 

பெரியார், இந்தியா முழுக்கப் பார்ப்பன எதிர்ப்புச் செயல்பாட்டாளராக, பகுத்தறிவாளராக, கேட்டார் பிணிக்கும் தகைமை கொண்ட சொற்பொழிவாளராக அறியப்பட்டார். காந்தியின் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்த பெரியார், பின்னர் வாழ்நாள் முழுக்கக் காந்தியை எதிர்ப்பவராக மாறினார். அடக்குமுறைகளுக்கு அஞ்சாத, பிம்பங்களை, மூடநம்பிக்கைகளை விடாமல் தகர்ப்பவராக அவர் இயங்கினார். 1920-களில் பெரியார் திராவிடச் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். அவரின் தொண்டர்கள் ஈ.வெ.ரா-வை, ‘பெரியார்’ என அழைத்தனர். மகத்தான மனிதர் எனப் பொருள் தரும் அந்தப் பட்டம், ‘மகத்தான ஆத்மா’ எனப் பொருள் தரும், ‘மகாத்மா’ எனும் காந்தியின் பட்டத்தைத் தாக்கும் நோக்கத்தோடு, ஈ.வெ.ரா-வுக்கு வழங்கி வந்தது. எப்போதும் தேர்தல்களில் நிற்கவில்லை என்றாலும், நவீன தமிழ் அரசியலில் தன்னுடைய ஆழமான முத்திரையைப் பெரியார் பதித்திருக்கிறார். அவரின் இயக்கத்தை அடியொற்றி வந்த கட்சிகளே தமிழகத்தை அரை நூற்றாண்டு காலமாக ஆள்கின்றன. தேசிய அளவில், தமிழ் மொழியைத் தூக்கிப் பிடித்து, இந்தி திணிப்பை எதிர்த்த அவரின் அரசியலின் நீட்சியாக விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவின் மொழிப்பன்மையைக் காக்கும் சட்டங்கள் அமைந்தன. சாதி குறித்த அவரின் பார்வை, இந்திய விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் இடஒதுக்கீட்டுக்கான சட்டத் திருத்தத்துக்கு உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது. தன்னுடைய சமகால அரசியல் தலைவர்களில் இருந்து வேறுபட்டு, பெண் விடுதலைக்கான குரலை ஆணாதிக்கத்தின் எந்தச் சுவடும் இல்லாமல்... அவர், கம்பீரமாக எழுப்பினார். பெண்களின் எழுச்சியை அடக்கி ஒடுக்கும் இந்தியக் குடும்பங்களின் ஆணாதிக்கப் போக்கைக் கடுமையாக அவர் சாடினார். 

பெரியார், ஆண்களின் கால்களுக்குக் கீழே கிடந்து தன்னையே தியாகம் செய்யும் பெண்களைக் கற்புக்கரசிகளாகக் கொண்டாடும் வடமொழிக் காப்பியங்களின் முட்டாள்தனத்தைச் சாடினார். பெண் கல்வி, காதல் திருமணங்கள், திருமண உறவு பொருந்தி வராவிட்டால் விவாகரத்து, பெண்களின் சொத்துரிமை எனப் பலவற்றுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தார். எல்லாவற்றுக்கும் மேலாகப் பெண் தன்னுடைய அக வாழ்க்கை, குழந்தை பெறுதல் ஆகியவற்றில் சுயமாக இயங்க வேண்டும் என வலியுறுத்தினார். ‘ஆண்மை அழியவேண்டும்’ என முழங்கிய கட்டுரையில், இப்படி எழுதினார்: ‘எங்காவது, பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா; எங்காவது, நரிகளால் கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா; எங்காவது, முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு விடுதலை உண்டாகுமா; எங்காவது, வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா; எங்காவது, பார்ப்பனர்களால் பார்ப்பனர் அல்லாதவர்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா என்பதை யோசித்தால்... இதன் உண்மை விளங்கும். அப்படி ஒருக்கால், ஏதாவது ஒரு சமயம்... மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாகிவிட்டாலும்கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம்’. 

பெரியார் இயங்கிய பகுதியின் கலாசாரப் பின்புலம், வடக்கைவிட மேம்பட்டதாகப் பெண்கள் சார்ந்து இருந்தது. எண்ணற்ற வீர மங்கைகள், சக்திமிகுந்த பெண் தெய்வங்கள், குறைந்த இனப்பெருக்க அளவு, சில சமூகங்களில் நிலவிய குடும்பக் கட்டுப்பாட்டுக் கலாசாரம் என வடக்கைவிடச் சாதகமான சூழல் தமிழகத்தில் நிலவியது. இவை வடக்கும், தெற்குமான வேறுபாட்டில் முக்கியப் பங்காற்றின எனலாம். என்றாலும், பெரியார் என்கிற முரட்டுத்தனம் மிக்கச் சிலை உடைப்பாளரை, குத்திக் கிழிக்கும் நாவன்மை கொண்டவரை, தகிக்கும் அறிவு கொண்டவரைப் பற்றி மென்மேலும் வாசிக்கையில், என் மனதில் ஒரு கேள்வி சூழ்கிறது. இந்தியாவின் பிற பகுதிகளில் பெரியாரைப் போன்ற தலைவர்கள் எழுந்திருந்தால்... அதே நாட்டில் பெண்களின் நிலைமை இன்னமும் மேம்பட்டதாக இருந்திருக்குமே என்கிற ஆதங்கமே அது. 

‘கடவுள் இல்லை... கடவுள் இல்லை... 
கடவுள் இல்லவே இல்லை! 
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்... 
கடவுளை பரப்பியவன் அயோக்கியன்... 
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி!’ 

- என்கிற வரிகளோடு தன்னுடைய சுயமரியாதை கூட்டங்களைத் தொடங்குவதைப் பெரியார் வழக்கமாகக் கொண்டிருந்தார். பெரியார் கருஞ்சட்டையில், அடங்காத வெண்தாடியோடு, தூய வெண் மண்டை சுரப்போடு காட்சியளிக்கும் காணொளியைக் காண்கிறேன். அதில், அவருக்கு அருகில்... ஒரு சிறிய நாய் அமர்ந்திருக்கிறது. பிராமணர்கள், நாயை தூய்மையற்ற ஒன்றாகக் கருதுவார்கள். அவர்களை விரட்டுவதற்காக... பெரியார், நாய் ஒன்றை அருகில் வைத்திருப்பதைப்போல எனக்குத் தோன்றுகிறது. பெரியார் எல்லையில்லாத ஆற்றலைப் பல தளங்களில் கொண்டவராகத் திகழ்ந்தார் என்றாலும், அவர் விளங்கிக்கொள்ள முடியாத, குழப்பும் மொழியில் மக்களிடம் உரையாடியவர் இல்லை. எவையெல்லாம் பகுத்தறிவுக்கு எதிரானது என அவர் நம்பிய அனைத்தையும் அவர் கடுமையாகச் சாடினார். சாதி, மதம் என எதுவும் அவரின் தாக்குதலில் இருந்து தப்பவில்லை. 

பெரியார், காந்திக்குப் பிறகு 10 வருடங்கள் கழித்துப் பிறந்தார். அவர், ஆடை உற்பத்திக்கு பெயர் பெற்ற கோவை மாவட்டத்தின் ஈரோட்டில் வளர்ந்தார். அவரின் சாதி... விவசாயிகள், வியாபாரிகள் நிரம்பிய இடைநிலை சாதியாகும். செல்வவளம் மிகுந்த வியாபாரியான அப்பாவின் அரவணைப்பில் வளர்ந்த பெரியார்.... நல்ல வீடு, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் வேலைக்காரர்கள் என்று செழிப்பான சூழலில் வளர்ந்ததால், இளம்வயதில் பெரிதாக அவமானங்களை எதிர்கொள்ளவில்லை. என்றாலும், அவர் சற்றே புரட்சிகர மனப்பான்மை கொண்டவராக அப்போதே திகழ்ந்தார். 

தனக்கு வடமொழி சொல்லித்தர அப்பாவால் நியமிக்கப்பட்ட சாதுக்கள், பிராமணக் குருக்கள் ஆகியோரை அவர் கேள்விகளால் துளைத்து எடுப்பார். பெரியாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் வீட்டுக்கு வருவதையே அவர்கள் நிறுத்திக்கொண்டார்கள். அவர்களின் போதனைகள் பெரியாரை ஈர்க்கவில்லை. எனினும், ஓர் இந்துவாகப் புண்ணியத்தலமாகக் கருதப்பட்ட காசிக்கு அவர் யாத்திரை போனார். 30 வயதை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருந்த பெரியாருக்கு தெளிவையும், திறப்பையும் தரும் காசியின் நிகழ்வுகள் அமைந்தன. அங்கு நடந்தவை குறித்து அவர் அடிக்கடி எழுதவும், பேசவும் செய்தார். தன்னுடைய தந்தை, பிராமணர்களுக்கு என்று நடத்திய பிரமாண்ட விருந்தை எதிர்த்ததால் ஏற்பட்ட பிணக்கில்... அவர் காசிக்குப் போனார். பணம் பிடுங்கும் காசியின் புரோகிதர்களின் போக்கும், பிராமணர் அல்லாதவர் மீது அவர்களுக்கு இருந்த வெறுப்பும் அவரைக் கடும் கோபத்துக்கு ஆளாக்கின. பெரியாரின் சாதியின் காரணமாகக் காசியின் எந்த மடத்திலும் அவருக்கு ஒரு வாய்ச் சோறுகூடக் கிடைக்கவில்லை. பிதிர்க்கடனுக்கு இடப்பட்ட உணவு இலைகளை வழித்துத் தின்னும் கொடிய நிலைக்கு அவர் காசியில் ஆளானார். 

அந்த அனுபவம், பரவலாக நம்பப்படுவதற்கு மாறாக... உடனே பெரியாரை மாற்றிவிடவில்லை. பிராமணர்கள் மீது தீப்பொறிபோல ஒரு தனிப்பட்ட கோபத்தை, அது பெரியாரின் மனதில் விதைத்தது. தென்னிந்தியா குறித்துச் சிறப்பான ஆய்வுகளை மேற்கொண்ட கேம்பிரிட்ஜ் பேராசிரியரான டேவிட் வாஷ்ப்ரூக் ஒன்றை கவனப்படுத்துகிறார். 1880-களில் இருந்தே சென்னையின் ஆளுமைகள்... இந்து மத நம்பிக்கைகளை நவீனம், அறிவியல் பார்வையோடு இணைக்க முடியுமா என்று தொடர்ந்து விவாதித்தனர். அன்னிபெசன்ட்டின் தியாசபிகல் இயக்கம், அதற்கான வாய்ப்பை வழங்கியது; கிறிஸ்தவ மிஷனரிக்களின் மதமாற்ற முயற்சிகளைத் தர்க்கரீதியாக அது எதிர்கொண்டது; பிராமணிய இந்து மதத்துக்கு அறிவியல் விளக்கத்தை அந்த இயக்கம் தந்தது; இது, தெற்கின் ஆதிக்க சாதி ஆட்களுக்குக் கடவுள் காட்டிய வழியாகத் தோன்றியது; தங்களுடைய சாதி, மத நம்பிக்கைகளை நவீனப்போர்வையில் மறைத்துக்கொள்ள வசதியான வாய்ப்பாக அன்னிபெசன்டின் இயக்கம் அமைந்தது. ஆதிக்கச் சாதியைச் சேராத பெரியாருக்குக் காப்பாற்றிக்கொள்ள எந்தச் சாதிப் பெருமையும் இல்லை. ஆகவே, முன்முடிவுகள் இல்லாமல் பகுத்தறிவோடு இயங்கினார். ‘எனக்குக் கடவுளோடு எந்தத் தகராறும் இல்லை. அவரை நான் நேரில் பார்த்ததுகூட இல்லை எனப் பெரியார், எள்ளல் ததும்பப் பேசுவார்’ என்கிறார் தமிழகத்தின் மிக முக்கியமான பண்பாட்டு வரலாற்று ஆசிரியரான ஆ.இரா.வேங்கடாசலபதி. பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றை தற்போது சலபதி எழுதிக்கொண்டிருக்கிறார். 

பெரியார் தொடர்ந்து பகுத்தறிவோடு இயங்குவதற்கு அவரின் பொருளாதாரச் சூழலும் உதவியது. மகாவீரர், புத்தர் போலப் பெரியாரும் பிராமணியத்தைக் கடுமையாக எதிர்த்தார். அவர்களைப்போலப் பெரியாரும் செல்வவளம் மிகுந்த குடும்பத்தில் இருந்தே எழுந்தார். பெரியாரும் புத்தர், மகாவீரரைப்போல மேல் சாதி அடுக்கில் இருந்து எழுந்து மக்களைப் பிளவுபடுத்தும் இந்தியாவின் பழைமையான சாதி அமைப்பைச் சாடினார். பெரியாரைப்போலப் பிராமணர்களை, அவர் காலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யாரேனும் சாடியிருந்தால் ஆதிக்கச் சாதியினர் கொன்றிருப்பார்கள். 

1920 - 1930-களில் பெரியார் தெருக்களில் இறங்கி, எதிர்க்குரல் எழுப்பும் தலைவராக இருக்கவில்லை; காசியில் இருந்து திரும்பியதும் விடுதலைப் போராட்ட அலையில் அவர் ஈர்க்கப்படவும் இல்லை. மாறாக, திருமணம் செய்து குடும்பஸ்தரான பெரியார், கோவைப் பகுதியில் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக, தன்னுடைய குடும்பத் தொழிலை... தன்னுடைய தொழில் திறமையால் மாற்றிக் காட்டினார். நிர்வாகத் திறமைக்குப் பெயர் பெற்றிருந்த பெரியார், 1918-ல் ஈரோடு மாநகராட்சியின் தலைவராகச் சிறப்பாகச் செயலாற்றினார். இந்தியாவில் சமூகரீதியாக மிகவும் முன்னேறிய பகுதிகளில் கேரளாவின் கோட்டயம் மாவட்டம் முதன்மையானதாகும். கல்வியறிவு 90 சதவிகிதத்தைத் தாண்டிய மாவட்டமாக அது உள்ளது; புகையிலை அற்ற மாவட்டமாகத் தன்னைச் சில ஆண்டுகளுக்கு முன்னால் அறிவித்துக் கொண்டது. இந்த மாவட்டத்தின் வைக்கம் எனும் நகரில், சாலைகள் சந்திக்கும் பகுதியின் மத்தியில்... மரத்தூண்களால் ஆன ஒரு சிவன் கோயில் உள்ளது. இதை நம்பூதிரி பிராமணர்கள் கட்டுப்படுத்தி வந்தார்கள். இந்தச் சாலைகளே, 40 நெருங்கிக் கொண்டிருந்த பெரியாரை அரசியலை நோக்கி செலுத்தியது.

(தொடரும்)

தமிழில்: பூ.கொ.சரவணன் 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!