‘‘எல்லாத்துக்கும் காரணம் சசிகலாதான்...!’’ - ஒரு அ.தி.மு.க. தொண்டனின் குரல் | Sasikala is reason for all chaos, a voice of AIADMK Cadre

வெளியிடப்பட்ட நேரம்: 15:29 (26/12/2016)

கடைசி தொடர்பு:15:29 (26/12/2016)

‘‘எல்லாத்துக்கும் காரணம் சசிகலாதான்...!’’ - ஒரு அ.தி.மு.க. தொண்டனின் குரல்

‘‘அ.தி.மு.க-வின் நிர்வாகிகள் வேண்டுமானால்... பதவிக்காக, சசிகலாவிடம் விலைபோகலாம். நாங்கள் எப்போதும் விலை போவதில்லை’’ என்று கொதிக்கிறார்கள், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள். இந்த நிலையில், ‘‘ ‘சசிகலா பொதுச் செயலாளராவது அ.தி.மு.க. தொண்டர்களின் முடிவு’ என்று பொன்னையன் சொல்கிறார். நீங்கள் இப்படிப்பட்ட விஷயத்தில் பொன்னையன், அமைச்சர்கள், கட்சிப் பிரமுகர்கள் போன்றவர்களிடம் பேட்டி எடுத்தால்... அப்படித்தான் சொல்வார்கள். அதற்குப் பதில், எங்களைப் போன்ற அடிமட்டத் தொண்டர்களிடம் பேட்டி எடுக்க வேண்டும்’’ என்று விகடன் இணையதளத்தில் பதிவிட்டிருந்தார்.

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த குமரவேல் என்ற அ.தி.மு.க தொண்டர். அவரிடம் பேசினோம்...

‘‘எல்லாத் தொண்டர்களும் சந்தேகப்படுறாங்க...’’

‘‘எல்லாரும் அம்மா இறப்புலதான் சந்தேகம்னு சொல்றாங்க... ஆனா, எங்களுக்கு அவுங்க அப்போலோவுல  இருந்தாங்களானே சந்தேகமா இருக்கு. அம்மா, உப்புமா சாப்புடுறாங்க... கையெழுத்துப் போடுறாங்க... ஐ.சி.யூ-ல இருக்குறாங்க... குணமாயிட்டே வர்றாங்க... கொஞ்ச நாள்ல டிஸ்சார்ஜ் ஆகிடுவாங்கனு இப்படித் தினந்தினம் எதையாவது ஒண்ண சொன்னவங்க, ஏன் போட்டோவ வெளியிடல? அம்மா, மருத்துவமனையில இருந்தபோது அவுங்கள பார்க்க அத்தனை பேரு போனாங்க. ஒருத்தர் கூடவா அம்மாவ பார்க்கல. அவுங்க இறந்தபின்பு, ஆஸ்பத்திரியிலே வேல செஞ்ச நர்ஸுங்க, ‘அம்மா... எங்கள அப்படிக் கூப்பிட்டாங்க’னு சொன்னவங்க... ஏன், அவுங்க உயிரோட இருந்தபோது அதச் சொல்லல? இந்த மாதிரி நிறைய கேள்விகள் என்னைப்போன்ற அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் ஆயிரம் இருக்குது. இதுக்குக் காரணம், சசிகலாதான் நான் மட்டும் சொல்லல. என்னை  மாதிரி எல்லாத் தொண்டர்களும் சந்தேகப்படுறாங்க. சாதாரணமா ரேஷன் கடை வரிசையில நிக்கிற மாதிரிதான் இதையும் பேசிக்கிட்டு இருக்காங்க.

‘‘எல்லாத்துக்கும் காரணம் சசிகலாதான்...’’

‘ஒன்றரை கோடி மக்கள் சசிகலா பக்கம் இருக்காங்க’னு பொன்னையன் ஒரு பேட்டில சொல்லியிருக்கிறாரு. அடிமட்டத் தொண்டர்களுக்கு சசிகலா யாருனே தெரியாது. அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் அவுங்களுக்குத் தெரிஞ்ச ரெண்டு பேரத்தான் சொல்லிக்கிட்டு இருக்காங்க. சசிகலா முதல்வர் ஆகணும்னு, அவுங்களுக்கு மட்டும்தான் ஆசை. இல்லன்னா, பதவி இருக்காது. அவுங்க, பேசுவதெல்லாம் அவுங்களுடைய பதவிக்காகத்தான். சசிகலா, ஒரு சாதாரணத் தோழி மட்டுமே. ஒரு பெண்ணுக்குச் சாதாரணமாகத் தேவைப்படுகிற துணை மட்டும்தான் அவர். அம்மாவின் பல கஷ்டங்களுக்குக் காரணமே சசிகலாதான். சுதாகரனை வளர்ப்பு மகனாகக் கொண்டு வந்தது... சொத்துக் குவிப்பு வழக்குல சிறை போனது என எல்லாத்துக்கும் காரணம் சசிகலாதான். கட்சியில, ஒரு வார்டு கவுன்சிலராகக்கூட இருந்ததில்ல... ஒரு தெருமுனையிலக்கூட பிரசாரம் பண்ணியதில்ல. அம்மா சார்புல சட்டமன்றத்துக்குள்ள வந்ததில்ல. இப்படிப்பட்ட அவரை, எந்த அடிப்படையில தேர்ந்தெடுக்கிறாங்க? இது எல்லாம் ஏமாற்று வேலை. அம்மா இருந்தவரை, ‘அம்மா... அம்மா’னு சொன்னாங்க.  அவர், மறைஞ்சவுடன்... அவரையே மறந்துட்டாங்க. ஆனா, அடிமட்டத் தொண்டர்கள் என்னைக்குமே அம்மாவையும், அவுங்க செஞ்ச செயலையும் மறக்கமாட்டாங்க. 

சசிகலா

‘‘சசிகலா, டெபாசிட்கூட வாங்க மாட்டாங்க!’’

சசிகலா, தலைமைப் பொறுப்பேத்தாங்கன்னா கண்டிப்பா அ.தி.மு.க அழிஞ்சிடும். அவுங்களுக்குத் தொண்டர்கள் யாரும் வாக்களிக்க மாட்டோம். வேண்டுமானா, அவுங்க ஆதரவாளர்கள வெச்சி... சசிகலா ஜெயிக்கலாம். ஆனா, மக்கள் மத்தியில் வெற்றிபெற முடியாது. ஒருவேளை, ஆர்.கே. நகர் தொகுதியில சசிகலாவ நிக்கவெச்சா அவுங்களால டெபாசிட்கூட வாங்க முடியாது. கண்டிப்பாக கட்சி அழிஞ்சிடும். ‘ஓ.பி.எஸ்., சசிகலா பிடியில் இருந்து வெளியில வந்து அம்மாவப்போல ஆட்சி செய்வேன்’னு சொன்னா... நான் மட்டும் அல்ல, அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் வாக்களிப்பாங்க. ஆனா அவரும், ‘சின்ன அம்மா... சின்ன அம்மா’ என்று சொன்னால்... மத்தவங்களப்போல அவரையும் ஒதுக்கிவைக்க வேண்டியதுதான். மாறாக, அவர் தன்னிச்சையா செயல்பட்டால் அ.தி.மு.க மீளும். காரணம், அவரு மீதிருந்த நம்பிக்கையாலத்தான்... அம்மா, அவர முதல்வராக நியமிச்சாங்க. வர்தா புயலின்போது அவர் ஆற்றிய களப்பணி மிகவும் சிறப்பாக இருந்துச்சு. இதேநிலை தொடர்ந்தா... தவறு செய்யும் அமைச்சர்கள்மீது உண்மையா நடவடிக்கை எடுத்தா... சசிகலாவவிட்டுத் தனிச்சுவந்தா... நிச்சயம் அவர நாங்க ஆதரிப்போம். கட்சியிலேர்ந்து அவர ஓரங்கட்டினாலும், தொண்டர்கள் நாங்க அனைவரும் அவர் பக்கம் நிற்போம். தானாக சசிகலா, பதவி ஏற்பதைவிட அனைவரும் அழைச்சித்தான் இந்தப் பதவிக்கு வந்ததுபோல இருக்கணும்ங்கிறதுக்காக இப்படி ஒரு நாடகத்த நடத்துறாங்க. 

‘‘நிர்வாகிகள் பலர் விலை போய்ட்டாங்க!’’

‘சசிகலாதான் பொதுச்செயலாளர்’னு முதல்வரு சொல்லல. அவர், சொல்லவைக்கப் படுறாரு. அதனாலதான் ஓ.பி.எஸ்., பிரதமரைச் சந்தித்து வந்தபின் சசிகலாவ சந்திக்கல. அடுத்த தலைவரா அம்மாவுடைய அண்ணன் மகள் தீபா வந்தால் ஏற்போம். அம்மாவின் ரத்த சொந்தம் அவரு. அதோட, அம்மாவோட முகச் சாயல் எல்லாம் அப்படியே இருக்கிறது. தனது அத்தை முதல்வராக இருந்தப்பக்கூட அதன்மூலம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இருந்தவரு தீபா. ‘உங்கள் அத்தையைப்போல பல சோதனைகளைக் கடந்து போராட முடியுமா’ என்று ஒரு டி.வி. சேனல், அவரிடம் பேட்டி கண்டபோது, எந்த தயக்கமும் இல்லாமல்... ‘நிச்சயமாக’ என்றார். அவரைப்போன்ற தைரியமிக்கவர் அ.தி.மு.க-வுக்கு வர வேண்டும். இதத்தான் மக்கள் விரும்புகிறாங்க. அவரால் மட்டும்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும். இதுக்கு உதாரணம், ‘சின்ன அம்மா’ என்று வைக்கப்பட்ட போஸ்டர்களிலே சாணிய அடிச்சாங்க... அவரு முகத்தக் கிழிச்சாங்க. ஆனா, தீபாவுக்காக வைக்கப்பட்ட போஸ்டர்களிலே அதுபோல நடக்கல. இதுலேர்ந்து என்ன தெரியுது? அனைத்து தொண்டர்களும் எதிர்ப்பு மன நிலையிலே இருக்குறாங்க. ஆனா, இத எப்படி வெளிப்படுத்துவதுனு தெரியல. ஏன்னா, நிர்வாகிகள் பலர் விலை போய்ட்டாங்க’’ என்றார் ஆவேசத்துடன். 

அடிமட்டத் தொண்டனின் குரல் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.

- ச.செந்தமிழ் செல்வன், படங்கள்: க.சுகன், மாணவப் பத்திரிகையாளர்கள்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்