'நடராஜன் கண்ணசைவில்தான் எல்லாம் நடக்கிறது..!' பின்னணி சொல்லும் மன்னார்குடி உறவுகள் | Natarajan is the mastermind, Driving Sasikala

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (27/12/2016)

கடைசி தொடர்பு:10:05 (28/12/2016)

'நடராஜன் கண்ணசைவில்தான் எல்லாம் நடக்கிறது..!' பின்னணி சொல்லும் மன்னார்குடி உறவுகள்

தஞ்சாவூர் : தமிழகத்தில் இப்போது நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் நடராஜனின் கண்ணசைவில்தான் நடக்கிறது என்பது குறித்தும், அதன் பின்னணி குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு செல்ல நேரிட்டால், கட்சியையும், ஆட்சியையும் எப்படி வழிநடத்துவது என ஆலோசனை நடத்தியதாகச் சொல்லி 2011-ம் ஆண்டு சசிகலா, அவரது கணவர் நடராஜன் உள்ளிட்ட 13 பேரை கட்சியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா. உதவிக்கு இருக்கட்டுமே என வைத்திருந்தவர்கள், துரோகம் செய்வதா என கொந்தளித்தார் ஜெயலலிதா.

“இவை எல்லாம் எனக்கே தெரியாமல் நடந்தவை என்பதுதான் உண்மை. அக்காவை சந்தித்த நாள் முதல் அவர் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு வினாடியும் நான் நினைத்திருக்கிறேனே தவிர, கனவிலும் அக்காவுக்கு நான் துரோகம் நினைத்ததில்லை," என ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினார் சசிகலா. இதையடுத்து சசிகலாவை மீண்டும் போயஸ் கார்டனுக்குள் அனுமதித்த ஜெயலலிதா, கணவர் நடராஜன் உள்ளிட்ட உறவினர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என உத்தரவிட்டிருந்தார். தொலைபேசியில்கூட தொடர்புகொள்ளக் கூடாது என்று சொல்லியிருந்தார்.

அதன்படியே நடராஜனுடன் ஒட்டமாலே இருந்தார் சசிகலா. உறவினர்களின் திருமண நிகழ்வுகளில் நடராஜனை நேருக்கு நேர் சந்திக்கும் சூழல் ஏற்பட்டாலும் கூட, அதை சசிகலா தவிர்த்தே வந்தார். ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு நிலைமை தலைகீழ் என்கிறார்கள் மன்னார் குடி வட்டாரத்தினர்.

என்ன தான் நடக்கிறது என்பது தொடர்பாக நடராஜனின் பல்ஸ் அறிந்த மன்னார்குடி வட்டாரத்தில் விசாரித்தோம். "2011-ம் ஆண்டு சசிகலாவின் கணவர், உறவினர்களை கட்சியிலும், போயஸ் கார்டனிலும் இருந்தும் வெளியேற்றியதோடு, சசிகலாவின் கணவர் நடராஜன், தம்பி திவாகரன், அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ், ராவணன் என பலரை வழக்கு போட்டு, சிறையில் தள்ளி தன்னுடைய கோபத்தை தீர்த்துக்கொண்டார் ஜெயலலிதா. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்திலேயே, அதுவும் ஜெயலலிதாவுடன்தான் இருக்கும் போதே கணவர் உள்ளிட்ட உறவினர்கள் பழிவாங்கப்படுவதையும், சிறை சென்றதை பார்த்து கண்கலங்கியவர்தான் சசிகலா.

ஒட்டுமொத்த உறவுகளும் ஆடித்தான் போய்கிடந்தது. யாரும் யாருடனும் பேசாமல் நல்லது கெட்டது என எதுவுமே பகிர்ந்துகொள்ளாமல் தான் இருந்தனர். இருந்த காலத்தில் சின்னம்மாவுக்கு ஒரு நெருடல் இருந்துகொண்டே இருந்தது. அது அவருடைய கணவரின் முதிர்ச்சியைப் பற்றித்தான். கூடவே இருந்து பார்த்துக்கொள்ள வேண்டிய காலக்கட்டத்தில் பேசக்கூட அனுமதியில்லாத எமர்ஜென்சி காலமாகத்தான் கருதினார்கள் மன்னார்குடி உறவுகள். கணவர் மீது ரொம்ப பிரியமாக இருப்பவர்தான் சசிகலா. அவருடைய உடல் நலம் குறித்து ரொம்பவே அக்கறை கொள்வார். சிறையில் இருக்கும்போது கணவருக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் கேட்டு ஆடித்தான் போனார் சின்னம்மா.

ஒருநாள் நடராஜனின் வீட்டு சமையல்காரர் நவநீதகிருஷ்ணனிடம் போனில் பேசிய சின்னம்மா, "அவர் எப்படி இருக்கிறார்?, எந்த டாக்டர் வந்து பார்த்தார்கள் என்று நலம் விசாரித்தவர், நான் மாமாவிடம் பேசியாக வேண்டுமென கேட்க... ஓடிப்போய் போனை கொடுத்திருக்கிறார் சமையல்காரர், என்ன சசி..ன்னு கேட்டார். நலம் விசாரித்ததோடு, சில விஷயங்களை பேசினார்கள்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவின் குடும்ப உறவுகளெல்லாம் போய் போயஸ் கார்டனை எட்டிப்பார்த்துவிட்டு வந்துவிட்டார்கள். நடராஜன் மட்டும் இன்னும் போயஸ் கார்டன் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஆனால், சசிகலா பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும், முதல்வராக வர வேண்டும் என எழுந்துள்ள கோரிக்கைகளுக்குப் பின்னால் இருந்து இயங்குவது நடராஜன் தான்.

அ.தி.மு.க.வின் முழுப்பொறுப்பையும் கட்டிக்காக்கும் இடத்தில் சசிகலா இருக்கிறார், அவருக்கு அவ்வப்போது போனிலேயே தொடர்புகொண்டு உத்தரவுகளை கொடுக்கிறார். ஜெயலலிதாவின் மறைவு செய்தியை கூட, குடும்ப உறவினர்களில் கணவர் நடராஜனிடம் தான் முதலில் பதிவு செய்து இருக்கிறார் சின்னம்மா.

அப்போது இருந்து எதையெல்லாம் செய்ய வேண்டும் என 'ஒன் பை ஒன்'னாக நடராஜன் போனில் சொன்னது தான் நடந்திருக்கிறது. எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து வாங்கியது, நள்ளிரவில் பதவியேற்பு, சசிகலாவை பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் பொறுப்பேற்க விடுக்கப்பட்ட அழைப்பு எல்லாம் நடராஜனின் அறிவுரைப்படி தான் நடந்தது. நடந்து வருகிறது.

28 ஆண்டு காலமாக சசிகலாவுக்கும், நடராஜனுக்கும் இடையே இணைப்பு பாலமாக  நம்பிக்கைக்குரிய நபர்கள்தான் இருந்து வருகிறார்கள். அடுத்த பொதுச்செயலாளர், அடுத்த முதலமைச்சர் என்று சசிகலாவின் அத்தியாயம் தொடரும் பட்சத்தில் மத்திய அரசின் பார்வை எப்படி இருக்கும் என்பதை கவனித்து வருகிறார் நடராஜன். போனில் தான் எல்லாம் நடக்கிறது," என்றனர்.

- ஏ. ராம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்