“ஆம்... எங்கள் சொத்தை சசிகலாதான் அபகரித்தார்!” - கொந்தளிக்கும் கங்கை அமரன் | Sasikala encroached my land illegally alleges Gangai Amaran

வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (27/12/2016)

கடைசி தொடர்பு:19:15 (27/12/2016)

“ஆம்... எங்கள் சொத்தை சசிகலாதான் அபகரித்தார்!” - கொந்தளிக்கும் கங்கை அமரன்

"WHO IS THE  BENAMI QUEEN OF TAMILNADU" என்ற பெயரில் ஆய்வுப்படத்தின் அடுத்த பகுதியை 'அறப்போர் இயக்கம்' வெளியிட்டுள்ளது. 43 நிறுவனங்களுக்கு சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள் பினாமியாக இருப்பதாக ஏற்கெனவே வெளியிடப்பட்ட முதல் வீடியோவில் அமைப்பு சொல்லி இருந்தது. மேலும் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில் இருந்தும், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஆடிட்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலமும் கூடுதல் தகவல்களை சேர்த்து வீடியோவை வெளியிட்டனர்.

அறப்போர் இயக்கத்தின் இரண்டாவது பகுதி வீடியோ டிசம்பர் 26-ம் தேதி வெளியிடப்பட்டது. சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள் எப்படி நேரடியாக சொத்து சேர்க்கத் தொடங்கினார்கள்? மேலும், மற்றவர்களின் சொத்துகளை  தங்களுடைய பெயருக்கு மாற்றுவதற்கு எவ்வாறெல்லாம் மிரட்டினார்கள் என்பது குறித்து இந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது.எடுத்துக்காட்டாக, இசையமைப்பாளரும், பாடலாசிரியருமான கங்கை அமரனுக்குச் சொந்தமான பண்ணை வீட்டை எப்படி மிரட்டி வாங்கினார்கள்? என்பது குறித்து இரண்டாவது பகுதி வீடியோவில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

சசிகலா குடும்பம் மிரட்டி வாங்கியது உண்மை!

பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பையனூர் என்ற இடத்தில் 22 ஏக்கர் பரப்பளவிலான கங்கை அமரினின் பண்ணை வீட்டை, சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள் மிரட்டி வாங்கியது தொடர்பான ஆவணங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

சசிகலாவின் சகோதரி மகன் பாஸ்கரன், கங்கை அமரனிடம் சென்று 'முதல்வர் ஜெயலலிதா உங்களைப் பார்க்க விரும்புகிறார்' என்று  அழைத்துச் சென்று சந்திக்க வைத்துள்ளார். பின்னர், 'முதலமைச்சருக்கு உங்களுடைய பங்களா மிகவும் பிடித்து விட்டது, எனவே, இந்த பங்களாவை நீங்கள் விற்றுவிடுங்கள்' என்று கூறுகிறார்.. அதற்கு பதிலளித்த கங்கையமரன். "இந்த நிலம் என்னுடைய இசைமைப்பு பணிகளுக்கு மிகவும் உபயோகமாக உள்ளது. மேலும் என் குடும்பத்தாருக்கும் இந்த வீட்டை விற்பதில் விருப்பம் இல்லை' என்று கூறியதாக அந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் காதில் வாங்கிகொள்ளாத ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், கங்கை அமரனை பின் தொடர்ந்த வண்ணம் இருந்துள்ளார். இந்த நிலையில் திடீரென்னு ஒருநாள், கங்கை அமரனின் வீட்டிற்கு  பதிவாளர் மற்றும் பிற அரசு அதிகாரிகளுடன் சென்று, அமரனையும்  அவருடைய மனைவியையும் மிரட்டி கையெழுத்துப் போட வைத்ததாக வீடியோவில் விவரிக்கப்பட்டுள்ளது.

பலகோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை வெறும் 13 லட்சம் ரூபாய்க்கு எழுதி வாங்குகிறார்கள் ..யார் பெயருக்கு எழுதப்படுகிறது? என்று கூட சொல்லாமலேயே எழுதி வாங்கப்படுகிறது. சில நாட்கள் போன பின்புதான் அந்த நிலம், அது சசிகலாவின் பெயருக்கு பதியப்பட்டுள்ளது என்று தெரிய வருகிறது.

381, 84, 91, 94 ஆகிய சர்வே எண் கொண்ட இந்த நிலத்தைத்தான்  கங்கை அமரன், மன்னார்குடி குடும்பத்துக்கு எழுதிக் கொடுத்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் 40-வது சாட்சியாக 'பையனூர் பங்களாவை என்னிடம் இருந்து மிரட்டிதான் வாங்கினார்கள்' என்று அவரே கூறியுள்ளார். கங்கை அமரனே மிரட்டப்பட்டுள்ளார் என்றால். சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்? என்று கேள்வி எழுப்புகிறது அப்படம்.

22 ஏக்கரில் ஆரம்பித்து அருகில் உள்ள சிறுதாவூர், கருங்குழிபள்ளம் உள்ளிட்ட இடங்களில் 112 ஏக்கர் நிலத்தையும் இவர்கள் மிரட்டி வாங்கியுள்ளதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. சசிகலா, இளவரசி மற்றும் இளவரசியின் மகன் விவேக், சுதாகரன் ஆகியோரின் பெயரில் இந்த 112  ஏக்கர் நிலமும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

406 சர்வே எண்ணை எடுத்துக் கொண்டால், சுதாகரன் பெயரில் பதிவு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதே சர்வே எண் அரசின் வலைதளத்தில் 'அரசாங்க குளம்' என்று கூறப்பட்டுள்ளது. அதேபோன்று. 345 சர்வே எண்ணும் அரசாங்க நிலத்தின் சர்வே எண்ணைக் காட்டுகிறது. அரசாங்க நிலமும் சுதாகரன் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 112 ஏக்கர்  நிலத்தின் மதிப்பு தற்போது 300  கோடி ரூபாயைத் தாண்டும் என அறப்போர் இயக்க வீடியோ விவரிக்கிறது.

அதிகாரத்தில் இருந்தவர்கள் பிடுங்கிக் கொண்டார்கள்!

அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவுகள் பற்றி, இசையமைப்பாளர் கங்கை அமரனிடம் கேட்டபோது, "பண்ணை வீட்டை பிடுங்கிக் கொண்டார்கள். இது, நீதிமன்றத்தில் ரிக்கார்டிலேயே உள்ளது. திரும்ப அதை எதற்கு சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்? இதை எழுதுவதால், கையை விட்டுப்போன சொத்தை திருப்பி உங்களால் பெற்றுத்தர முடியுமா? எத்தனை வருடமாக இந்த வழக்கு  நடந்து கொண்டு உள்ளது. இதைப்பற்றிப் பேசவே எரிச்சலாக உள்ளது. ஊரையெல்லாம் கொள்ளையடித்து விட்டு போய் விட்டார்கள். ஒவ்வொருத்தராக பிடிபடுகிறார்கள். நீதிமன்றத்திற்குப் போனால், மருத்துவமனையில் போய் படுத்துக்கொள்கிறார்கள்" என்று கொதித்தார்.

பாட்டுப் பாடி, கச்சேரி நடத்தி சேர்த்த நிலம்!

"கொள்ளை அடித்தவர்களின் முகம் வெளியே வருவதில்லை. வரும்போது வரட்டும். போன சொத்தைப் பற்றி கவலையில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் நிலத்தைப் பறித்துக் கொண்டு, 'வாயை மூடிக்கொண்டு போங்கள்' என்று சொல்வார்கள். அப்படித்தான் நாம் போக வேண்டுமா? ஊரைக்கட்டி ஆள்பவர்களானாலும் முடிவில் ஒருபிடி மண்தான் என்பதை பிறகு தெரிந்து கொள்வார்கள்.

சினிமாவில் பாட்டு எழுதி, கச்சேரிக்குப் போய், பாடல் பாடி, கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்த அந்த இடத்தை ஒரே நொடியில் பிடுங்கிக் கொண்டார்கள். அவர்கள் கேட்டால் அதை எழுதிக் கொடுத்து விட வேண்டும். இந்த அம்மா போய்ச் சேர்ந்து விட்டார்கள் என்பதால், இதையெல்லாம் சொல்ல முடிகிறது. இதுகுறித்து யாராவது வாய் திறந்திருப்பார்களா? இப்போது, அவர் இல்லை என்பதால் தானே பேச முடிகிறது".

 

 

இந்த விவகாரத்தில், அப்போது ஜெயலலிதாவைப் பார்த்தீர்களா? நில விவகாரம் குறித்து பேசினீர்களா?

"ஜெயலலிதாவைப் பார்த்திருக்கிறேன். அறிமுகப்படுத்தும்போது, போய்ப் பார்த்தேன். மலர்ச்செண்டை வாங்கிக் கொண்டு ஜெயலலிதா சென்று விட்டார்.  அவர்களைக் காட்டித்தானே, சசிகலா குடும்பத்தினர் பேச ஆரம்பித்தார்கள்" என்றார் மிகுந்த கவலையும் கோபமுமாக.

இதுதொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷிடம் பேசினோம்.."சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் எங்கெல்லாம் சொத்தை வளைத்துப் போட்டுள்ளார்கள்? என்பது பற்றி தொடர்ந்து அடுத்தடுத்த வீடியோவை வெளியிட இருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை எங்கள் பணி ஓயாது. மேலும் இதுகுறித்து சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கலாம்? என்று ஆலோசித்து வருகிறோம். விரைவில் சொத்தை இழந்தவர்கள் அவற்றைத் திரும்பப் பெறுவார்கள்" என்றார் அவர்.

- கே.புவனேஸ்வரி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்