90 நாட்களில் 60 விவசாயிகள் பலி..! டெல்டா வேதனை | Continue farmer death : 60 farmers died in 90 days in Tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 12:31 (02/01/2017)

கடைசி தொடர்பு:13:53 (06/01/2017)

90 நாட்களில் 60 விவசாயிகள் பலி..! டெல்டா வேதனை

“நீரின்றி அமையாது உலகு” என்று உலகத்திற்கே நீதி சொன்ன தமிழனுக்கு நீரின்றி பயிர் அழிவதை கண்டு ஜீரணிக்க முடியவில்லை.  விவசாயிகள், தினம் தினம் வேதனையில் செத்து மடிவது வேதனையின் உச்சம்.  தமிழக வரலாற்றில் கரும்புள்ளியாக தொடரும் சோகத்திற்கு கடந்த 3 மாதங்களில் மட்டும் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்திருக்கிறார்கள்.  இதில் நாகை மாவட்டத்தில் மட்டும் இன்று வரை 32 பேர் பலியாகி உள்ளனர். திருவாரூரில் 14 பேர், திருச்சியில் 4 பேர் என டெல்டா மாவட்டங்களில் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு மிகவும் காலதாமதமாக கடந்த செப்டம்பர் 20ம் தேதி மேட்டூர்அணை திறக்கப்பட்டது.  ஆனால் அந்த நீர் கடைமடைப் பகுதி வரை வந்து சேரவில்லை.  என்றாலும் எப்படியும் ஆற்றில் தண்ணீர் வரும் அல்லது வடகிழக்கு பருவ மழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்தனர்.  சிலர் நாற்று விட்டும் நடவு செய்தனர். 

இந்நிலையில், காவிரி நீரும் நின்றுபோனது, எதிர்பாக்கப்பட்ட பருவ மழையும் பொய்த்துப்போனது.  சொந்த நிலத்தில் சாகுபடி செய்தவர்கள் போதுமான நீரின்றி மனம் நொந்தனர்.  குத்கை நிலத்தில் பயிரிட்டவர்கள் எப்படி குத்தகை பணம் கொடுப்பது என்று மனம் வெந்தனர்.  பச்சை பசேல் என காட்சி தரவேண்டிய விலை நிலங்கள், கடும் வறட்சியில் கருகி காய்ந்து போகவே அதில் ஆடு, மாடுகளை மேயவிட்டனர்.  ‘ஏற்கனவே குறுவை சாகுபடியும் கைவிட்டு போச்சி, கடன் வாங்கி செய்த சம்பா சாகுபடியும் கருகிப் போச்சி’ இந்த வேதனையும் அதிர்ச்சியும் விவசாயிகளை வாட்டி வதைக்கவே மாரடைப்பாலும், விஷமருந்தியும் உயிரை மாய்த்து வருகின்றனர்.  

ஏன் இந்த கொடுமை? விவசாயி பாபுவிடம் கேட்டோம், “இப்போதெல்லாம் விவசாயம்கிறது கண்ணுக்கு தெரிஞ்சி கல்லை கட்டிக்கிட்டு கிணத்துல குதிக்கற தொழிலா போச்சி.  கடனை நினைச்சி கவலைப்பட்டு விவசாயி செத்திடுராங்க.  ஆனா, அவரை இழந்த அந்த குடும்பம் படுகிற கஷ்டத்தை பார்த்தா விவசாயத்துமேல ஆர்வம் இருக்காது.  இதை சீரியஸா நினைச்சி தமிழக அரசு உடனே தடுக்கனும்.  அதற்கு முயற்சி செய்யனும்.  ஆனா, அவங்க கவனம் எல்லாம் ‘சின்னம்மாவை’ அம்மாவா ஆக்கிறதிலேயே இருக்கு. 

இந்த சூழ்நிலை தமிழ்நாட்டிற்கு ஒரு சாபக்கேடு.  உதாரணத்திற்கு 15 ஆயிரம் கடன் வாங்கி சாபடி செஞ்சா மேல 10 ஆயிரம் ரூபாய் இலாபம் கிடைக்கும்.  அதிலதான் அசலும் வட்டியும் கொடுக்கனும், எஞ்சியிருக்கிற பணத்தை வைச்சி குடும்பத்தை ஓட்டனும்.  முதலுக்கே மோசமாகி கடன் வாங்கின இடத்திற்கு என்ன பதில் சொல்றது என்ற கவலையிலதான் விவசாயிகள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுறாங்க.  இந்த வருடம் மழை அளவு குறையும்முன்னு வானிலை ஆய்வு மைத்தை வைச்சிருக்கிற அரசுக்கு தெரியும்.

அதனால அவங்களே மழையை நம்பி விவசாயம் செய்ய வேண்டாம்முன்னு அறிவுரை செஞ்சிருக்கலாம் அரசு.  அதையும் மீறி விவசாயம் செய்றவங்களுக்கு அரசின் வேளாண்மை பொறியியல் துறையில புழுதி அடிக்க சேறு பண்ண டிராக்டர் இருக்கு.  நடவு, அறுவடைக்கு மிஷின் இருக்கு.  இதையெல்லாம் விவசாயிகளுக்கு இலவசமா செய்து கொடுக்க ஏற்பாடு செஞ்சிருக்கனும்.  வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் விதை, உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்துகளை கொடுத்திருக்கலாம்.  அப்படி செய்திருந்தால் விவசாயிகள் கடனை எண்ணி தற்கொலைக்கு போக மாட்டாங்க. 

இன்னொரு கொடுமை மண்பானை செய்கிற குயவன்கூட அவர் உற்பத்தி பன்ற பொருளுக்கு உற்பத்தி விலையோட இலாபத்தையும் சேர்த்து விலை வைக்கிறார்.  ஆனா ஊருக்கே சோறுபோடுற உழவன் உற்பத்தி செய்கிற எந்த பொருளுக்கும் எங்கேயோ ஏ.சி. ரூமில உட்கார்ந்துகிட்டு அரசாங்கம்தான் விலை வைக்குது.  இதில விவசாயோட கஷ்டத்தையோ, நஷ்டத்தையோ கணக்குல எடுத்துகிறது இல்ல.  இந்த அவலம் மாறனும் அப்பதான் விவசாயம் உருப்படும்” என்றார்.  

காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் தலைவரான குருகோபி கணேசன், “நேற்றைக்கு நாகை அருகே திருப்புகளுரைச் சேர்ந்த கண்ணன் பயிர் கருகிய வயலிலேயே விழுந்து பரிதாபமா செத்திருக்கார்.  வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரத்தைச் சேர்ந்த பக்கிரிசாமி 2 ஏக்கர் சாகுபடி பயிர்களை காப்பாற்ற கடைசி முயற்சியா வயலில் பம்புசெட் அமைக்க முயற்சி செய்திருக்கிறார்.  அதுவும் தோல்வியில் முடிந்த விரக்தியில் மயங்கி விழுந்து செத்திருக்கிறார்.  இன்றைக்கு வேதாரண்யம் அருகே பஞ்சநதிக்குளம் கோகுலராஜன், மேலசேத்தி கணபதி என இரண்டு விவசாயிகள் பலியாகி இருக்காங்க.  இதைப்பற்றி இதுவரை தமிழக அரசு அணு அளவும் அக்கரைகொள்ளவில்லை என்பது வேதனையா இருக்கு. 

தி.மு.க. சார்பில் தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் நாகை மாவட்டத்தில் 6 பேர் இறந்த நிலையில் அவரவர் வீட்டிற்கே சென்று ஆறுதல் கூறி ஒரு லட்சம் நிதி வழங்கினார்.  ஆனால், இன்றைக்கு நாகை மாவட்டத்தில் மட்டும் 24 பேர் இதுவரை இறந்திருக்கிறார்கள்.  அரசுக்கு புரிய வைக்க முன்உதாரணமாய் ஒரு எதிர்கட்சி தலைவர் செயல்பட்டும்கூட, அரசு விழித்துக்கொள்ளவில்லை என்றால் எப்படி விவசாயி வாழ்வான்? விவசாயம் வாழும்? போனது போச்சி இனியாவது டெல்டா விவசாயிகளை காப்பாற்ற அரசு முன்வரவேண்டும். 

உயிரிழந்த உழவர்களின் குடும்பத்திற்கு 15 லட்சம் நிவாரண நிதி கொடுக்கனும்.  உழவர்களுக்கு பாதிப்பின் அடிப்படையில் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கனும்.  உளுந்து, பயிறு முழுமையா மானியத்துல கொடுக்கனும், குறுவை, சம்பா அழிந்துபோன நிலையில் உளுந்து பயிறு தெளிச்சாவது இந்த வருடம் வயலிலிருந்து இந்த பலனாவது கிடைத்ததே என்ற நிம்மதியாவது இருக்கும்.  அதையாவது இந்த அரசு செய்யுமா?” என்றார் வரத்தமாக.  

கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க. மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் போன்றவை விவசாயிகளின் பரிதாப நிலை குறித்து பலகட்ட போராட்டங்களை நடத்திவிட்டன.  நாட்டின் முதுகெலும்பு தொழிலான விவசாயம் வலுவிழந்து கொண்டிருப்பது தமிழக அரசுக்கு எப்போது புரியும்? உயிர் பலி தொடர்வது எப்போது முடியும்?

- மு. இராகவன்,

படங்கள் : க. சதீஷ்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்