வெளியிடப்பட்ட நேரம்: 16:33 (03/01/2017)

கடைசி தொடர்பு:12:34 (07/01/2017)

சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனும்... சாமான்யனின் பெருங்கனவும்!

‘வீடு’. எல்லோருக்குமான பெருங்கனவு. சராசரியாக, ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 1,09,980 மணி நேரம் உழைக்கிறான் என்கிறது ஓர் ஆய்வு. அப்படியானால், இதில் 80 ஆயிரம் மணி நேரம் அவன் தனக்கான ஒரு நிரந்தரக் கூட்டுக்காகத்தான் உழைக்கிறான். அவன் சிந்தை முழுவதும் வீடு குறித்த பிம்பங்கள்தான் படிந்திருக்கின்றன. அதற்கு உயிர் கொடுக்கத்தான், தன் உயிரைக் கரைத்து ஓடுகிறான். வீடு என்றால் ஆயிரக்கணக்கான சதுர அடிகளில் எல்லாம் இல்லை. எட்டு நூறு சதுர அடி வீடே சாமான்யனின் மனதுக்கு பேராசைதான். என்றாவது ஒருநாள், மஞ்சள் வெயில் மாலைப் பொழுதில் வீட்டின் கூடத்தில் அமர்ந்து, ஜன்னலில் வைக்கப்பட்டிருக்கும் செடியின் நிழல் தரையில் படர்ந்து இருப்பதை குடும்பத்துடன் ரசிக்க மாட்டோமா என்பதற்காகத்தான் மூச்சடைக்கும் இவ்வளவு ஓட்டமும். 

சரி... விஷயத்துக்கு வருவோம். கடந்த வாரம், சூரியனின் மஞ்சள் கதிர்கள் இலைகளுடன் ரகசியம் பேசும் ஒரு மாலைப் பொழுதில், பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் பையனூருக்குச் சென்றோம். சாலையின் ஒரு பக்கத்தில், கடல் பேரிரைச்சலுடன் நிலத்தைக் கழுவிக் கொண்டிருக்க... இன்னொரு பக்கத்தில், மேய்ச்சல் நிலம் பல ஏக்கர் கணக்கில் பரந்துவிரிந்து கால்நடைகளின் பசியைப் போக்கிக்கொண்டு இருந்தது. 

எங்கள் பயணத்தின் நோக்கம். அந்தச் சாலையில் கருங்குழி பள்ளம் என்ற இடத்தின் அருகே இருக்கும் சசிகலா, இளவரசி, விவேக் மற்றும் சுதாகரனுக்குச் சொந்தமான இடத்துக்குள் செல்ல வேண்டும் என்பது மட்டும்தான். 

சசிகலாவின் இடத்துக்குள் ஒரு பயணம்!

சசிகலா

கருங்குழி பள்ளம் அருகே இருக்கும் ஒரு கிராமத்துக்குச் சென்று... அதன், பின்வழியாகப் புதர்கள் நிறைந்திருக்கும் ஒரு முல்லை நிலத்துக்குள் புகுந்து... அங்கே மறைவாக ஓர் இடத்தில் எங்கள் வண்டியை நிறுத்திவிட்டு, மன்னார்குடி குடும்பத்துக்குச் சொந்தமான அந்த இடத்துக்குள் நுழைந்தோம். ஏறத்தாழ 200 அடி தூரத்தில் மக்களை நில ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காக்கவேண்டிய காவலர்கள் அங்கு நின்றுகொண்டிருந்தனர். மெல்ல அவர்கள் கண்களுக்குப் படாமல் ஓர் இடத்தில் பதுங்கி, அந்த இடத்தை எங்கள் கைப்பேசியில் பதிவு செய்யத் தொடங்கினோம். நீரோடை, மேய்ச்சல் நிலம் என இன்னும் சங்க இலக்கியத்தில் வரும் முல்லை நிலத்தின் வர்ணனை அங்கே விரிந்துகிடந்தது... ரியல் எஸ்டேட் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்...  “சென்னை மிக அருகில் ஐங்குறுநூற்று முல்லை நிலம்.”

எங்கள் அவசரம் எல்லாம் சூரியனுக்குத் தெரியவில்லை. ஓய்வு எடுக்க அவசரமாக மறையத் தொடங்கியது. இருள் தன் கருமையை மெல்ல வெளியின் மீது பூசத் தொடங்கியது. இப்போது நாங்கள் இருப்பது ஒரு மேய்ச்சல் நிலம். இதுவும் மன்னார்குடி குடும்பத்துக்குச் சொந்தமானதுதான்... இதனைக் கடந்து கொஞ்சம் உள்ளே புகுந்தால், அந்தச்  சொகுசு மாளிகை அருகே சென்றுவிடலாம். ஆனால், அது அவ்வளவு எளிமையானது இல்லை என்பது அதற்கு போடப்பட்டிருக்கும் பாதுகாப்பிலிருந்து தெரிந்தது. அருகே இருக்கும் இரண்டு மாடி கட்டடம், ஒரு கண்காணிப்புக் கோபுரம்போல் செயல்படுகிறது. 

நாங்கள் ஒரு மரத்தின் மீது ஏறி நின்று பார்த்தது வரை... அந்தப் பங்களா, அதைச் சுற்றி உள்ள 100 ஏக்கர் மாயக் கோட்டைக்குள்ளே ஏறத்தாழ 100 மின்விளக்குகள், சாலை வசதிகள் என அந்த ஊரின் அருகே இருக்கும் எளிய மனிதர்களின் வீடுகளுக்குச் சற்றும் பொருத்தம் இல்லாமல், சாமான்யர்களின் உலகத்திடமிருந்து தன்னை துண்டித்துக்கொண்டு வேறோர் உலகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. 

நாங்கள் இருந்த மேய்ச்சல் நிலத்தின் அருகே ஓர் ஓடை... இந்த வறட்சியிலும் மெல்ல சலசலத்து ஓட, அங்கு நீர் பருகிய எகினம் என்னும் முல்லை நிலத்துப் பறவை, மெல்ல உயரப் பறந்து... அந்தக் கட்டடத்துக்கு மேல் சென்று மறைந்தது. ஆனால், அந்த மாளிகை மற்றும் இடத்துடன் பின்னப்பட்டிருக்கும் சந்தேகம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.
  
அறத்தைப் புதைத்து நடப்பட்ட மரம்!

இவ்வளவுதானா... நாங்கள்கூட என்னமோ ஏதோ என்று நினைத்துவிட்டோம்... அவர்களுக்குத்தான் பல இடங்களில் சொத்து இருக்கிறதே...? ஆம். இருக்கிறது. அதையெல்லாம் எப்படி வாங்கினார்கள் என்று தெரியாது. ஆனால், இந்த இடம், அதில் இருக்கும் ஒரு சொகுசு வீடு எல்லாம் இசையமைப்பாளர் கங்கை அமரனை மிரட்டி வாங்கியது. இதுகுறித்து அறப்போர் இயக்கம் ஒரு வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறது. இந்தச் சொத்தை வாங்கியபோது... சசிகலா, அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் இல்லை. அவர், கட்சியைக் கைப்பற்றி... ஆட்சியைக் கைப்பற்ற காய் நகர்த்துவார் என்று அப்போது யாரும் நினைக்கவில்லை. அப்போது அவர் ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரி மட்டும்தான். இப்போது, அவரிடம் எல்லாம் இருக்கிறது... குறிப்பாக, ஜெயலலிதாவினால் விரட்டப்பட்டவர்கள் எல்லாம் எங்கும் நிறைந்து இருக்கிறார்கள். 

நீங்கள் என்றாவது பழைய மகாபலிபுரம் சாலையில் செல்லும்போது நெய்தல், முல்லை நிலங்களை மட்டும் பார்த்துச் செல்லாதீர்கள். இந்தக் கட்டடத்தை, அங்கு அறத்தை புதைத்து அதன் மீது நடப்பட்டிருக்கும் மரத்தை, அதற்கு அளிக்கப்பட்டிருக்கும் காவலையும் பாருங்கள்.... இதுவெல்லாம் எப்படி வந்தது என்று உங்களுக்குள் கேள்வி கேளுங்கள். அந்தக் கேள்வியில்தான் எல்லாம் இருக்கிறது... தமிழகத்துக்கான வெளிச்சமும்!

இல்லை... இதற்கு முன்னால் இருந்தவர்களும் இதைத்தானே செய்தார்கள் என்று இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்வோமாயின், நம் பிள்ளைகளைச் சகதியில்தான் விட்டுச் செல்வோம். மீண்டும் நினைவூட்டுகிறேன், இந்தக் கருங்குழி பள்ளம் நிலத்தை மிரட்டி வாங்கியபோது... சசிகலாவிடம் நேரடியாக எந்த அதிகாரமும் இல்லை.

ஹும்... சொல்ல மறந்துவிட்டேன்... நாம் கடினப்பட்டு உழைத்துச் சம்பாதித்து கட்டிய 400 சதுர அடி வீட்டில்... 100 ஏக்கர் நிலத்தில் பரந்துவிரிந்திருக்கும் இந்தச் சொகுசு மாளிகையில் தூங்குவதைவிட நிம்மதியாகத் தூங்க முடியும்!

- மு. நியாஸ் அகமது, இரா. கலைச்செல்வன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்