வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (05/01/2017)

கடைசி தொடர்பு:01:01 (05/01/2017)

தோனியை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது? #Dhoni

ந்திய அணியின் கேப்டன் 'மிஸ்டர் கூல்' தோனி, இந்தியா கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இந்த காலத்தின் இணையற்ற கேப்டன்களில் தோனிக்கு முக்கிய இடம் உண்டு. மிகச் சுமாரான பின்னணியில் இருந்தும், மிகவும் பின் தங்கிய மாநிலத்தில் இருந்தும் வந்தவர் தோனி. பிரம்மாண்ட வெற்றியையும், மிகப்பெரிய உயரத்தையும் எட்டியவர். வெற்றியையும், தோல்வியையும் ஒன்றாக எடுத்துக்கொள்ளும் கேப்டன் இவர் தான். இவரது வெற்றிக்கான காரணமும் இது தான்.

முணுமுணுப்புகளை நிறுத்த இவர் செய்த காரியம்

2014ம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 28 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா லார்ட்ஸ் மைதானத்தில் பெற்ற வெற்றி இது. இந்த வெற்றியை பெற்றுத்தந்தவர் தோனி. ஆனால் அதன் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது இந்தியா. அப்போது தோனிக்கு எதிராக பேச்சுகள் எழ... தோனி செய்த அந்த ஒற்றை காரியம், அத்தனை பேரையும் வாயடைக்க வைத்தது.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தோனி. இத்தனைக்கும் இந்திய அணியின் சார்பில் அதிக டெஸ்ட் வென்ற கேப்டன் தோனி தான். கிரிக்கெட் வரலாற்றில் 60 டெஸ்ட்களுக்கு மேல் தாக்குப்பிடித்த 6 கேப்டன்களில் தோனி ஒருவர்.

செய்தியாளரை பேட்டி எடுத்த அந்த தருணம்

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது அரையிறுதி போட்டி யில் இந்தியா தோற்ற நேரம். இந்த அதிர்ச்சி தோல்விக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் கேப்டன் தோனி. அப்போது செய்தியாளர் ஒருவர், நீங்கள் தொடர்ந்து விளையாடுவீர்களா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு தோனி கோபப்படவில்லை. மிகவும் நிதானமாக பதில் அளித்தார். செய்தியாளரை தன் அருகில் அமர வைத்துக்கொண்டு, செய்தியாளரின் தோளில் கை போட்டு 'நான் ஓய்வு பெற வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா?' என கேள்வி எழுப்பினார். 'இல்லை' என்றார் செய்தியாளர். தொடர்ச்சியாக 'நான் நல்ல உடல் கட்டமைப்புடன் இருக்கிறேனா?' 'வேகமாக ஓடுகிறேனா?' என அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினார். அதற்கெல்லாம் செய்தியாளர் ஆம் என்றார். இறுதியாக 'நான் 2019 உலகக் கோப்பை தொடர் வரை நான் நல்ல முறையில் விளையாட முடியுமா?' என கேட்டார். 'நிச்சயமாக நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும்' என்றார்.  நீங்கள் முதலில் கேட்ட கேள்விக்கு பதில் இது தான் என்றார் கேப்டன் கூல்.

சத்தமில்லாமல் நிகழ்த்திய சாதனை

2015ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் அரை இறுதியில் இந்தியா தோல்வியை தழுவி வெளியேறிய நேரம். தோல்விக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தார் தோனி. ஆனால் சத்தமில்லாமல் அப்போது ஒரு சாதனையை செய்திருந்தார் அவர். காலிறுதி போட்டியில் பங்களாதேஷை வென்றதன் மூலம் அவரது தலைமையிலான 100வது ஒருநாள் போட்டியை வென்றிருந்தது இந்தியா.

ஆனால் அந்த சூழலில் அதை அவர் கொண்டாடவில்லை. உலகில் 100 ஒருநாள் போட்டிகளை வெல்வது என்பது நிச்சயம் சாதாரண விஷயம் இல்லை. 100 ஒரு நாள் போட்டிகளை வெல்லும் அளவுக்கு தாக்குப்பிடித்த கேப்டன்கள் 3 பேர் தான். ஆனால் இதை அவர் தலையில் வைத்துக் கொண்டாடவும் இல்லை. அதேநேரம் உலக கோப்பை அரையிறுதிப்போட்டி தோல்வியால் துவண்டு விடவும் இல்லை.

சச்சினும், தோனியின் ஆசையும்:

முதல்முறையாக துலீப் கோப்பைக்காக கிழக்கு மண்டல அணியில் தோனி இடம்பெற்றிருந்த போது, அவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. 12வது வீரராகத்தான் இடம் கிடைத்தது. அப்போது தான் சச்சினை பார்த்தார். அந்த போட்டியில் 199 ரன் எடுத்த சச்சினுடன் எப்படியாவது ஒரு ஆட்டமாவது ஆட வேண்டும் என நினைத்தார் தோனி.

2010ம் ஆண்டு சச்சின் தனது முதல் இரட்டை சதத்தை பூர்த்தி செய்த போதும்... சச்சின் டெஸ்ட் போட்டியில் 50வது சதத்தை பூர்த்தி செய்த போதும், சச்சினுக்கு எதிர்முனையில் இருந்தவர் தோனி. 'எனக்கு கேப்டனாக இருந்தவர்களிலேயே சிறந்தவர் தோனி தான்' - இது பின்னாளில் சச்சின் சொன்னது. உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற சச்சினின் ஆசையை நிறைவேற்றி, அவரிடம் கோப்பையை கொடுத்து அழகு பார்த்தார் மிஸ்டர் கூல் தோனி.

டி 20 உலக கோப்பை வெற்றி, 2011ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பையை கைப்பற்றியது, டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை நம்பர் ஒன் இடத்துக்கு கொண்டு சென்றது. இந்தியா வெல்ல முடியாது என கணிக்கப்பட்ட இடங்களில், போட்டிகளில் வென்று சாதித்தது என இந்திய அணியை உயரத்துக்கு கொண்டு சென்றதில் பெரும் பங்கு தோனிக்கு உண்டு.

தோனி ஒரு 'பைக் பிரியர்'

அவர் சார்ந்த ஜார்கண்டில் மிக அதிக வருமான வரி கட்டும் நபர் தோனி தான். இவரது ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய். தோனி ஒரு பைக் பிரியர். 35 பைக்குகள் வைத்திருக்கிறார். கூடவே ரேஸிங் டீமும் வைத்திருக்கிறார். கிரிக்கெட் வீரரான இவர், கால்பந்து மற்றும் ஹாக்கி அணியின் இணை உரிமையாளர், உரிமையாளராகவும் இருந்தவர் ஆவார்.

சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த விக்கெட் கீப்பர்... அதே நேரத்தில் சிறந்த கேப்டன். இப்படி 3 பொறுப்புகளையும் திறம்பட கையாண்டவர் தோனி தான். இதற்கு முன்னர் இந்திய அணிக்கு இப்படி ஒருவர் கிடைக்கவில்லை. இனி கிடைப்பார்களா என தெரியவில்லை.

மீடியாக்கள் என்றால் ஏன் அலர்ஜி தெரியுமா?

மீடியாக்கள் என்றால் தோனிக்கு கொஞ்சம் அலர்ஜி தான். 2007 உலகக் கோப்பையில் முதல் சுற்றில் இந்தியா வெளியேற... தோனியின் வீட்டு முன்னால் அவரது கொடும்பாவியை எரித்தனர் ரசிகர்கள். அப்போது மீடியாக்களுடன் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட அனுபவமுமே அலர்ஜிக்கு காரணம்.  அதனால் மீடியாக்களுடன் பேசும் போது தோனி மிக கவனத்துடனே பேசுவார். இதற்கு உதாரணம் ஒன்றை பார்ப்போம்.

அது 2014ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோற்ற நேரம். அரையிறுதி போட்டியில் தோற்று வெளியேறியது இந்தியா. தோனியிடம் கேள்வியை முன்வைக்கிறார்கள் செய்தியாளர்கள். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர் அடுத்த உலக கோப்பை விளையாடுவீர்களா? என கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கு தோனி கோபப்படவில்லை. தோல்வியின் விரக்தியில் பேசி விடவில்லை. மிக பொறுமையாக பதில் அளித்தார்.

"நான் உங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான பதில் சொல்கிறேன். நீங்கள் தான் அதை முடிவெடுக்க வேண்டும். நன்றாக ஆராயுங்கள். சில நாட்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.  ஆனால் எழுதும் போது நீங்கள் எடுக்கும் முடிவுக்கு நேரெதிராய் எழுதுங்கள். அதுதான் சரியாக இருக்கும். இப்போது நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்," என்றார். அது தான் தோனி.  வெற்றியோ, தோல்வியோ அதை தன் மேல் ஏற்றிக்கொள்ளாமல் இருப்பவர்.

வெற்றியோ, தோல்வியோ... தோனி எப்போதும் கூல் தான் !

கிரிக்கெட் வரலாற்றில் 60 டெஸ்ட்களுக்கு மேல் தாக்குப்பிடித்த கேப்டன்கள் மொத்தம் 6 பேர். அவர்களில் ஒருவர் தோனி. இதில் 27 டெஸ்ட்களில் வெற்றியை பெற்றுத்தந்தவர் தோனி. 27 தானா என கேட்பவர்கள், இதையும் கவனிக்க வேண்டும். 1932க்கு பின்னர் ஆசியாவுக்கு வெளியே வென்ற டெஸ்ட் போட்டிகள் என்பது 30க்கும் குறைவு.

தோனியின் வெற்றிக்கு என்ன காரணம் என கேட்டபோது சக வீரர்களால சொல்லப்படுவது இது தான். "போட்டியில் மிக மோசமாய் தோற்றாலும், மைதானத்தில் இருந்து டிரஸ்ஸிங் அறைக்கு வந்து விட்டால், வீரர்களை இயல்பாக வைத்திருப்பார். அதிகாரத்தின் முகத்தை அவர் காட்டியதில்லை. ஆட்டக்களத்தில் அசைக்க முடியாத மன உறுதியுடன் ஆடுவார். வெளியே இயல்பாக, மகிழ்வுடனே இருப்பார்".

தோற்றால் முடங்கிப்போகவோ, மற்றவர்களை மிதித்தோ பழக்கம் இல்லாதவர் தோனி. அதே நேரம் வென்றால் ஆட்டம் போடாதவர். வெற்றி, தோல்வி இரண்டையும் ஒன்றாக பார்க்கத்தெரிந்தவர்.  உலகக் கோப்பையை வென்ற போது, கோப்பையையும், உற்சாகத்தருணத்தையும் சச்சினிடம் கொடுத்து விட்டு, ஒதுங்கியே நின்றவர். அரிய வெற்றியை பெறும் போதும், எதிர்பாராத தோல்வியை சந்திக்கும் போதும் தோனியின் முகம் ஒரே மாதிரி தான் இருக்கும். அது தான் தோனி.

- ச.ஜெ.ரவி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்