'அண்ணா' வகிக்காத தி.மு.க. தலைவர் பதவி கருணாநிதிக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?

தி.மு.க.வில் கருணாநிதியைத் தாண்டி, இப்போது ஸ்டாலினிசம் உருவாகி இருக்கிறது. ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டதை நாம் இப்படித்தான் பார்க்க வேண்டும். 63 வயதான ஸ்டாலின் தனது இளைஞர் அணிச் செயலாளர் பதவியை துறக்க பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் வாய்ப்பு கிடைத்துள்ளது. தி.மு.க.வில் படிப்படியாக வளர்ந்தவர் தான் ஸ்டாலின். ஆனால் அவர் இந்த உச்சத்தை தொட எடுத்துக்கொண்ட காலம் நிச்சயம் அதிகம்.

கருணாநிதிக்கு பின்னர் ஸ்டாலின்தான் என்பது நிர்ணயிக்கப்பட்டிருந்த போதும், ஸ்டாலினின் கைக்கு பதவி கிடைக்க இத்தனை ஆண்டுகள் பிடித்தது. ஆனால் அண்ணாவுக்கு பின்னர் தி.மு.க.வின் தலைமை பொறுப்பு கருணாநிதிக்கு கிடைத்தது. கருணாநிதிக்கு மேல் மூத்த முக்கிய தலைவர்கள் இருந்த போதும். பதவி கருணாநிதிக்கு எப்படி கிடைத்தது? சொல்லப்போனால் அண்ணாவே தி.மு.க.வின் தலைவராக இருக்கவில்லை. பொதுச்செயலாளராகத்தான் இருந்தார். அண்ணாவே வகிக்காத தலைவர் பதவி, கருணாநிதிக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?

பெரியார் - மணியம்மை திருமணத்தால்  திராவிடர் கழகம் இரண்டாக உடைந்த காலகட்டம் அது. திராவிடர் கழகத்தை கைப்பற்ற வேண்டும் என மூத்த தலைவர்கள் அண்ணாவிடம் வலியுறுத்தினார்கள். அதனை ஏற்க மறுத்த அண்ணா புது கட்சி துவங்க முடிவு செய்தார். 1949 செப்டம்பர் 17 கூடிய கூட்டத்தில் திராவிடர் கழகத்தில் இருந்து விலகிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ‘‘திராவிட முன்னேற்ற கழகம்‘‘ என்ற புதிய கட்சியினை அண்ணா துவக்கினார். கட்சியின் பொதுச் செயலாளராக அண்ணா தேர்வு செய்யப்பட்டார்.

சென்னையில் ராபின்சன் பூங்காவில் அன்றைய தினம் நடந்த துவக்க விழா பொதுக் கூட்டத்தில் கொட்டும் மழைக்கு இடையே வார்த்தை மழையாக உரையாற்றினார் அண்ணா. அவர் தனது உரையில் ‘‘அன்றும் இன்றும் என்றும் பெரியார்தான் என் தலைவர். அதனாலேயே தி.மு.கழகத்துக்கு ‘தலைவர்’ என யாரையும் தேர்வு செய்யவில்லை. தலைவர் நாற்காலியை பெரியாருக்காக காலியாகவே வைத்திருக்கிறோம். இருதய பூர்வமான தலைவர், இருதயத்தில் குடியேறிய தலைவர், நமக்கெல்லாம் அப்பொழுது வழிகாட்டிய தலைவர் பெரியார். அவர் அமர்ந்த பீடத்தை, தலைவர் பதவியை, தலைமை நாற்காலியை அவருக்காக காலியாகவே வைத்திருக்கிறோம். அந்த பீடத்தில் நாற்காலியில் வேறு ஆட்களை அமர்த்தவோ அல்லது நாங்களோ அல்லது நானோ அமர விரும்பவில்லை’’ என பேசினார்.

அண்ணா தனது தலைவரான பெரியாருக்கு என ஒதுக்கி வைத்திருந்த, தானோ, தன்னுடன் வந்த தலைவர்களோ அமர மாட்டோம் என உறுதியேற்றிருந்த அந்த ‘தலைவர்’ நாற்காலி கலைஞரின் கைக்கு போன நிகழ்வு அண்ணாவின் மறைவுக்கு பின்தான் நடந்தேறியது.

நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மை மாநிலங்களில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சி அண்ணாவின் தலைமையில் எழுந்த தி.மு.க.விடம் 1967-ல் ஆட்சி கட்டிலை ஒப்படைத்தது. காங்கிரஸ் அமைச்சரான பூவராகவனை தவிர முதல்வராக இருந்த பக்தவச்சலம் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் தோல்வியை சந்தித்தனர். இந்த தோல்வியில் இருந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜரும் தப்பவில்லை.

மக்களின் எழுச்சியால் வென்ற அண்ணா 1967 மார்ச் 6-ல் முதல்வராக பதவியேற்றார். முதல்வராக பதவியேற்று முழுதாக 2 ஆண்டுகள் கூட முடியாத நிலையில் அண்ணாவின் இதய துடிப்பு முழுமையாக நின்று போனது. இதனால் அண்ணா வகித்த முதல்வர் பதவிக்கு கட்சியிலும் ஆட்சியிலும் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராக பொறுப்பேற்றார். புதிய முதல்வராக நெடுஞ்செழியன்தான் வருவார் என நினைத்து கொண்டிருந்த போது, கருணாநிதியே, புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டது தி.மு.க.வின் திருப்பு முனை ஆனது.

யார் அடுத்த முதல்வர் என எல்லோரும் எதிர்பார்த்தபோது கருணாநிதியின் பெயர் அடிபட்டது. அவருக்கு ஆதரவும்  இருந்தது. இதையடுத்து, முதல்வர் போட்டியிலிருந்து விலகிக் கொண்ட நெடுஞ்செழியன் தனக்கு மந்திரி பதவியும் வேண்டாம் என மறுத்து விட்டார். இதனால் 1969 பிப்ரவரி 10-ல் முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி மந்திரி சபையில் நெடுஞ்செழியனைத் தவிர அண்ணாவின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அனைவரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

அப்போது ‘‘மேலும் சில அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். நெடுஞ்செழியனை மந்திரி சபையில் சேர்க்க தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். அவர் எந்த இலாகாவையும் எடுத்துக் கொள்ளலாம்’’ என கருணாநிதி தெரிவித்தார். அப்போது அமைச்சர் பொறுப்பினை ஏற்க  முழுமையாக மறுத்த நெடுஞ்செழியன் அடுத்த 6 மாதத்தில் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அதற்கு காரணமாக அமைந்தது கட்சி பொதுச் செயலாளர் பதவிக்கு நடந்த தேர்தல்தான்.

அண்ணாவின் மறைவுக்குப்பின் தி.மு.க.வின் பொதுச் செயலாளராக இருந்து வந்த நெடுஞ்செழியன் மீண்டும் அப்பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்தார். முதல்வராக கருணாநிதியும், பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும் இருந்தால் மோதல் ஏற்பட வழி வகுக்கும் என கட்சியின் மூத்த தலைவர்கள் கருதினர். இதனால் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட கருணாநிதியை வலியுறுத்தினர். இதனை எதிர்பார்க்காத நெடுஞ்செழியன் தனது வருத்தத்தை அறிக்கையாக வெளியிட்டார். இதற்கு பதில் அறிக்கை கொடுத்த கருணாநிதி, பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடாமல் அமைச்சர் பதவியை ஏற்று கொள்ளுங்கள்’’ என கேட்டிருந்தார்.

இந்த அறிக்கை போருக்கு இடையில் உருவானது ஒரு சமரச திட்டம். அதன் படி இதுவரை தி.மு.க.வில் இருந்து வந்த ‘அவைத்தலைவர்’ என்ற பதவியை ‘தலைவர்’ என மாற்றுவது எனவும், கட்சியின் முக்கிய பணிகளை தலைவரும் பொதுச் செயலாளரும் கலந்து பேசி முடிவு செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டு, கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அந்த சமரச திட்டத்தின் விளைவாகவே அண்ணாவால் பெரியாருக்காக காலியாக வைக்கப்பட்டிருந்த ‘தலைவர்’ நாற்காலி கருணாநிதியின் கைகளுக்குள் சென்றது. பொதுச் செயலாளராக நெடுஞ்செழியன் தேர்வானார்.

சுமார் 48 ஆண்டு காலமாக கலைஞரின் கைகளுக்குள் கட்சியின் கடிவாளமாக இருந்து வந்தது தலைவர் நாற்காலி. அவரின் வயது முதிர்வு காரணமாக தற்போது ‘செயல் தலைவர்’ நாற்காலியாக உருமாறி ஸ்டாலின் வசம் சென்றுள்ளது.

- இரா.மோகன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!