மாற்றம்... முன்னேற்றம்.... வாலிபால் டீம்.... அன்புமணியின் 'பொங்கலோ பொங்கல்' ! | Anbumai Ramadoss Celebrated Pongal with Tribal people in Dharmapuri

வெளியிடப்பட்ட நேரம்: 16:52 (05/01/2017)

கடைசி தொடர்பு:20:47 (05/01/2017)

மாற்றம்... முன்னேற்றம்.... வாலிபால் டீம்.... அன்புமணியின் 'பொங்கலோ பொங்கல்' !

ர்மபுரி மாவட்டம் அரூரிலிருந்து 25 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கிறது  சித்தேரி மலை. படிப்பறிவு இல்லாத, அடிப்படை வசதிகள் இல்லாத, வேலைவாய்ப்புகள் இல்லாத,  பழங்குடியின மக்களை கொண்ட 60க்கும் மேற்பட்ட கிராமங்களை தாங்கியிருக்கும் சித்தேரி மலை  அன்புமணியால் நேற்று திருவிழாக்கோலம் பூண்டிருந்தது.

பொங்கல் தினத்தன்று தங்களது மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்காக, தனது மனைவி செளமியாவோடு தர்மபுரி சித்தேரி மலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடச்  சென்றிருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

வழி நெடுக... பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள்.  “நான்   ஐயாவுக்கு கை கொடுத்துட்டேன்.. ஐயாவுக்கு கை கொடுத்துட்டேன்”  என்று  ஆரத்தி எடுத்த பெண்கள் ஆனந்தத்தில் குதிக்கிறார்கள்.  இளைஞர்கள் அன்புமணியோடு செல்ஃபி எடுக்க  முண்டியடிக்கிறார்கள். இவற்றோடு ஊர்ந்து சென்று கொண்டிருந்த காரிலிருந்து சடாரென இறங்கி கரும்புத்தோட்டத்துக்குள் அன்புமணி புகுந்து அதகளப்படுத்துகிறார். எல்லாம் டிவிக்கான மாஸ் ஐடியா.  நடந்தவை அப்படியே இங்கே.

என் குழந்தைக்கு ஏற்கெனவெ பேர் வைச்சாச்சுங்க.., !

சரியாக 9.30 மணிக்கெல்லாம் அரூருக்குள் நுழைந்தது அன்புமணியின் கார்.   அரூரிலிருந்து சித்தேரிக்கு செல்லும் சாலையின் ஆரம்பத்தில்  ஆரத்தி தட்டோடு காத்துக்கொண்டிருந்த பெண்கள் கூட்டத்துக்கு நடுவே வந்து நின்றது. காருக்குள் இருந்து அன்புமணியும், செளமியாவும்  ஜோடியாக  இறங்க ஒரே ஆரவாரம்.  பெண்கள்  ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். ஆரத்தி எடுத்த பெண்கள் எல்லோருக்கும்  அன்புமணி கை கொடுத்து வணக்கம் சொல்ல... அந்த பெண்களுக்கு  ஒரே மகிழ்ச்சி! “ நான்.. ஐயாவுக்கு கை கொடுத்துட்டேன். நான் ஐயாவுக்கு கைகொடுத்துட்டேன்னு” கூட்டத்துக்குள் இருந்து எதையோ சாதித்த உணர்வில் வெளியே ஓடிவந்தார்கள்.

சிலர் அன்புமணியின் காலில் விழப்போக.. அவர்களை தடுத்து  காலில் எல்லாம் விழக்கூடாது... கைய குடுங்கம்மா.. என்று  கை  கொடுத்தார்.   ஒரு பெண், பிறந்த குழந்தையோடு கூட்டத்துக்குள் புகுந்து  ஐயா.. என் குழந்தைக்கு பேர் வையுங்கய்யா என்று அன்புமணியிடம்  கொடுத்தார்.  குழந்தையை வாங்கிய  அன்புமணி  இந்த  குழந்தைக்கு ஒரு  பேரச் சொல்லு  என்று செளமியாவிடம்  அன்புமணி கேட்க...   அந்த  பெண் குழந்தைக்கு   “சாரல்” என்று பெயர் சூட்டினார் செளமியா.  

குழந்தையோடு நின்று கொண்டிருந்த இன்னொரு பெண் அன்புமணியை பார்க்க முடியாமல் கூட்டத்துக்குள் திண்டாடிக்கொண்டிருந்தார். அதை  கவனித்த  ஒரு பா.ம.க நிர்வாகி அந்த  குழந்தைக்கும் பெயர்  சூட்ட வேண்டுமென்று நினைத்து  சீக்கிரமா குழந்தையை  குடும்மா ஐயாகிட்ட கொடுத்து பேர் வைக்க சொல்லலாம்  என்று கேட்டார்.   'என் குழந்தைக்கு ஏற்கெனவே பேர் வச்சாச்சுங்க'. என்றபடி  கூட்டத்திலிருந்து நழுவினார்  அந்த பெண். கடைசியாக  அன்புமணிக்கும் செளமியாவுக்கும் கரும்பை பரிசாக ஊர்மக்கள் கொடுத்தார்கள். அவர்களோடு ஒரு  குரூப் ஃபோட்டோ எடுத்துக்கொண்டனர் அன்புமணியும், செளமியாவும். அன்புமணியின் கார் அடுத்த ஸ்பாட்டுக்கு கிளம்பியது.

கரும்புத்தோட்டத்துக்குள் ஜம்ப் ஆன அன்புமணி...

அடுத்த வரவேற்பு ஸ்பாட்டுகளான  கரிராமர் கோவில், வள்ளிமதுரை ஆகிய இடங்களிலும் ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள்.  கூடவே அந்த பகுதியின் குறைகளையும் அன்புமணியிடத்தில் சொல்ல.  “நிச்சயமா ஏற்பாடு செய்யுறேன்” என்று உத்திரவாதம் கொடுத்தபடி கிளம்பிச் சென்றார். இதையெல்லாம் டி.வி. ஒளிப்பதிவாளர்கள் படம்பிடித்தபடியே முன்னே சென்றுகொண்டிருந்தனர். காரில் சென்றுகொண்டிருக்கும்போதே  உள்ளே பேட்டியும் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.  திடீரென ஒரு இடத்தில் கார் நின்றது.  அன்புமணி இறங்கினார்  சட்டையை சரிசெய்தார் பக்கத்தில் இருந்த கரும்புத்தோட்டத்தின்  அருகே சென்று நின்றார்.  யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.  மக்கள் டி.வி தொகுப்பாளர் ஓடிவந்து  கரும்பு வெட்டுறவங்கள விசாரிக்கிற மாதிரி ஒரு விஷுவல் சார் என்று சொல்ல... சற்றும் யோசிக்காமல்  அப்படியே  ஜம்ப் செய்து வயலுக்குள் குதித்தார் அன்புமணி.

வயலில் ஆங்காங்கே  கரும்பு வெட்டிக்கொண்டிருந்தவர்களை,  எம்.பி ஐயா வந்துருக்காங்க எல்லோரும் இங்க வாங்க என்று ஒன்று  திரட்டினார்கள் நிர்வாகிகள்.  அவர்கள் அருகில் சென்ற அன்புமணி, என்னம்மா எப்படி இருக்கீங்க..? கூலி எவ்வளவு கொடுக்குறாங்க.? என்றெல்லாம் விசாரிக்க ஆரம்பித்தார். 'எங்கய்யா குடுக்குறாங்க...?    காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் வேலை பாத்தா 180 ரூபாதான் குடுக்குறாங்க' என்று குறைகளை அடுக்கினார்கள். எங்க ஊரு திண்டிவனத்துல வெட்டுக்கூலி 1000 வரைக்கும் கொடுக்குறாங்க என்று அன்புமணி சொல்ல இங்க 400 ரூபாதான் கொடுக்குறாங்கய்யா என்று பதிலளித்தார்கள் விவசாயிகள்.

எல்லாவற்றையும் சோகமான முகத்துடன் கேட்டுக்கொண்டிருந்த அன்புமணி.  கடைசியில்,  அதுல ஒரு கரும்பு குடுங்க என்று கேட்டார். இந்தாங்கய்யா இத சாப்ட்டு பாருங்க என்று ஒரு கரும்பை நீட்டினார்கள். இதை சாப்ட்டா என் பல்லு போயிடும் என்று கையில் வாங்கிகொண்டு கிளம்பிவிட்டார். பொங்கல் விழாவுக்காக  அன்புமணி வந்திருக்கிறார் என்பதை அறியாத விவசாயிகள் 'சித்தேரியில் ஏதோ மீட்டிங் நடக்குதாம். அங்க போறாங்க' என்று தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள்.

மாற்றம்... முன்னேற்றம்.. வலிபால் டீம்.

எல்லாவற்றையும் கடந்து சித்தேரி மலையேறியது அன்புமணியின் கார். விழா நடக்கும் பேரேரி கிராமத்தில்  மேளதாளத்தோடு அன்புமணியை வரவேற்றார்கள். அன்புமணிக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. வேடியப்பன் சாமி ஊர்வலத்தின் முன்னே நடக்க வைத்து  விழா நடக்கும் இடத்துக்கு அன்புமணியையும் அவர் மனைவி செளமியாவையும் ஊர்மக்கள் அழைத்துச்சென்றார்கள்.  கரிய பெருமாள் கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு அங்கு தயாராக இருந்த பொங்கல் அடுப்பை அன்புமணியும் செளமியாவும்  சேர்ந்து ஏற்றி வைத்தார்கள். விளையாட்டுப்போட்டி தொடங்கியது.

முதலில் வாலிபால் போட்டி. அணி வீரர்களுக்கு தன் படம் பதித்த டீ.. சர்ட்டுகளை வழங்கிய அன்புமணி. ஒரு அணிக்கு மாற்றம் என்றும் இன்னொரு அணிக்கு முன்னேற்றம் என்றும் பெயர் வைத்து,  இதில் எதாவது ஒரு அணி ஜெயிக்கும். ஆனால், நிஜத்தில் மாற்றம், முன்னேற்றம் இரண்டுமே ஜெயிக்க வேண்டும் என்று பஞ்ச் பேசிவிட்டு  முதல் சர்வீஸை தன் கையால் போட்டு விளையாட்டுப்போட்டிகளை துவக்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து நிறைய  பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்றது. மதிய உணவை மலைவாழ் மக்களோடு முடித்த அன்புமணியும், செளமியாவும் இரண்டு மணிநேர ஓய்வுக்குப் பிறகு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

'புடவைனு சொல்லக் கூடாது... பொங்கல் பரிசு'னு சொல்லுங்கப்பா...

நிகழ்ச்சியின் நிறைவில் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிகளும், ஊர் பெண்கள் அனைவருக்கும் புடவைகள் வழங்கும் வைபவம் ஆரம்பமானது. மேடையில் பேசிய ஒருவர் எல்லோருக்கும் புடவைகள் இருக்கிறது. யாரும் அமர்ந்திருக்கும் இடத்தைவிட்டு எழுந்திருக்க வேண்டாம் என்று சொல்ல.. அவரைக்கூப்பிட்ட அன்புமணி புடவைனு சொல்லதப்பா பொங்கல் பரிசுனு சொல்லுப்பா என்று கடிந்துகொள்ள, மன்னிக்கணும் எல்லோருக்கும் பொங்கல் பரிசு இருக்கிறது என்று கரெக்‌ஷன் செய்து பேசினார்.

நிறைவாக பேசிய அன்புமணி, “ எல்லோருக்கும் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள். இந்தவருடம் என் மனைவியோடு  வந்து  பொங்கல் விழாவை சித்தேரியில் கொண்டாடியது என மகிழ்வை தருகிறது. இந்த  நிகழ்ச்சியின் மூலம் வெளியில் தெரியாத உங்கள் கிராமம் பொங்கலன்று உலகம் முழுவதும் தெரியபோகிறது. நீங்கள் டிவியில் வரப்போகிறீர்கள். அப்படியாவது உங்களுக்கு நல்லது நடக்கட்டும் உங்களுக்கு  அடிப்படை வசதிகளே இன்னும் கிடைக்கவில்லை.

காலையிலிருந்து நான் பேசிய அத்துனைபேரும் குடிக்க தண்ணீர் இல்லை, நல்ல ஆஸ்பத்திரி இல்லை, பள்ளிக்கூடம் இல்லை என்றுதான் சொல்கிறார்கள். மத்திய அரசு மலைவாழ் மக்களுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குகிறது. ஆனால், இங்கு இருக்கும் மாநில அரசு அதை உங்களுக்கு பெற்று திட்டங்களை நிறைவேற்றுவதில்லை. நான் இந்த பகுதியை முன்னேற்றி காட்டுகிறேன். உங்கள் பிள்ளைகள் நன்றாக படித்து நல்ல வேலைக்கு போய் வாழ்கையில் முன்னேற வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று முடித்தார்.

ஒரு சூட்டிங் போல நடந்து முடிந்தது பொங்கல் கொண்டாட்டம்.

பொங்கலோ பொங்கல்.!

- எம்.புண்ணியமூர்த்தி,

படங்கள்: க.தனசேகரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்