திருமாவை வம்புக்கு இழுக்கும் பாயாசம்!  -பகீர் கிளப்பும் இன்னொரு வாட்ஸ்அப் யுவராஜ் | Another Whatsapp Yuvaraj rises - Drags in Thol. Thirumavalavan

வெளியிடப்பட்ட நேரம்: 17:09 (06/01/2017)

கடைசி தொடர்பு:17:18 (06/01/2017)

திருமாவை வம்புக்கு இழுக்கும் பாயாசம்!  -பகீர் கிளப்பும் இன்னொரு வாட்ஸ்அப் யுவராஜ்

காதல் விவகாரம் தொடர்பாக மேடையில் பேசிய திருமாவளவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை வம்புக்கு இழுத்த தூத்துக்குடி ரவுடி பாயாசம் பேச்சிமுத்துப்பாண்டியின் வீடியோ வைரலாகி உள்ளது. இது எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதற்கு முன்பு போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை சமூக ஆர்வலர்கள் விடுத்துள்ளனர். 

'பாயாசம்' பேச்சிமுத்துப்பாண்டி

'பாயாசம்' பேச்சிமுத்துப்பாண்டி என்ற பெயர் தென்மாவட்ட காவல் நிலையங்களில் அடிக்கடி உச்சரிக்கப்படும் பெயர்களில் ஒன்று. ரவுடி பட்டியலில் உள்ள பாயாசம் பேச்சிமுத்து, வெளியில் இருந்தததை விட சிறையில் இருந்ததுதான் அதிகம் என்கிறது போலீஸ் வட்டாரம். தென்மாவட்டங்களில் நடந்த இரண்டு சமூகங்களுக்கு இடையே நடக்கும் மோதலில் பாயாசத்தின் பெயர் கண்டிப்பாக இடம்பிடிக்கும் என்று சொல்லத் தொடங்கிய போலீஸ் உயரதிகாரி, பாயாசத்தின் முழுக் கதையையும் நம்மிடம் விவரித்தார். 

 "தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் துரைபாண்டி. இவர், ஏ.டி.எம் காவலாளி. இவரது மகன் பேச்சிமுத்துப்பாண்டி. மணக்கரையில் பேச்சிமுத்துப்பாண்டி என்ற பெயரில் இரண்டு பேர் இருந்துள்ளனர். இதில் துரைபாண்டியின் மகன் பேச்சிமுத்துப்பாண்டி, கோயில்களில் கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கலை (தூத்துக்குடி பகுதிகளில் சர்க்கரை பொங்கலுக்கு பாயாசம் என்று ஒரு பெயர் உண்டு) சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். இதனால் பேச்சிமுத்து பெயருக்கு அடைமொழியாக பாயாசம் சேர்ந்து கொண்டது. 

13 கொலை வழக்குகள்

 பாயாசம், தான்சார்ந்த சமுதாயத்தின் மீது தீவிர வெறிக் கொண்டவராகவே இருந்துள்ளார். இதனால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இருசமூக மோதல் கொழுந்து விட்டு எரிந்த சமயத்தில் பாயாசம் பேச்சிமுத்து தான்சார்ந்த சமுதாயத்துக்காக அடி, தடியில் தொடங்கி கொலை வரை செய்துள்ளார். 

இவர், மீது நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டும் 13 கொலை வழக்குகள் உள்பட 23 வழக்குகள் உள்ளன. பல வழக்குகளில் தூத்துக்குடி, நெல்லை மாவட்ட போலீஸாரால்  தேடப்பட்டார் பாயாசம். இந்த இரண்டு மாவட்டங்களிலும் பாயாசத்துக்கு எதிரிகளும் உருவாகினர். எதிரிகள், போலீஸிக்குப் பயந்து பாயாசம், கொங்கு மண்டலத்துக்கு இடம் பெயர்ந்தார். 

 

வாட்ஸ்அப் யுவராஜ் 

அப்போது தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜிடன், பாயாசத்துக்கு அறிமுகம் கிடைக்கிறது. இந்த சமயத்தில் கோகுல்ராஜ், காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட, அந்த வழக்கில் யுவராஜ் கைது செய்யப்பட்டார். வாட்ஸ்அப்பில் பேசி போலீஸாருக்கே சவால் விடுவதே யுவராஜின் ஸ்பெஷாலிட்டி. 

அவரது கூட்டாளியாக பாயாசம், கொங்கு மண்டலத்திலேயே தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். அப்போது துரை என்ற குற்றவாளியை பிடிக்கச் திருப்பூர் அன்னூர் என்ற இடத்துக்கு சிவகங்கை தனிப்படை போலீஸார் சென்றனர். அப்போது போலீஸாரிடம்  பாயாசம் சிக்கியுள்ளார். அங்கிருந்து தனிப்படை போலீஸாரிடம் பாயாசத்தை அவர்கள் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது"என்றார். 

 யார் இவர்?

பாயாசம் பேச்சிமுத்துவின் முதல் கொலை ரியல் எஸ்டேட் போட்டியில் 1996ல் நடந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அதாவது, பாயாசத்தின் மைத்துனருக்காக ரியல் எஸ்டேட் தொழில் மோதலில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலையில் குற்றவாளியாக பாயாசம் பேச்சிமுத்து சேர்க்கப்படுகிறது. இந்த வழக்கில் சிறைக்குச் சென்ற பாயாசம், வெளியில் வந்த போது குடும்ப பிரச்னையில் மனைவியை கொலை செய்தார். இதற்கிடையில் சாதிரீதியான கொலைகளிலும் பாயாசத்தின் பெயர்கள் அடிபடுகிறது. 

 இதனால் பாயாசத்தை கொலை செய்ய எதிர்முகாமில் இருப்பவர்கள் ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு வருகின்றனர். அப்போது, பாயாசத்தின் தந்தை துரைப்பாண்டி, ஏ.டி.எம் காவலாளியாக பணியில் இருந்தபோது அவரை கொலை செய்து விட்டு தப்பி ஓடியது. இதற்குப் பழிக்குப் பழியாக பாயாசம் எதிர்தரப்பினரை போட்டுதள்ளிய வழக்கில் சிறைக்குச் செல்கிறார். சிறையில் எதிர்தரப்பை சந்தித்த பாயாசம் அங்கேயே அவர்களுக்கு சவால் விடுகிறார். 'என் அப்பாவையும், என்னுடைய தலைவர் சுத்தமல்லி மதனைக் கொன்ற உங்களையும், உங்கள் தலைவரையும் கொல்லாமல் விடமாட்டேன்' என்று சொல்ல... சிறை வளாகமே பதற்றம் அடைந்தது. இதையடுத்து பாயாசம் வேறு சிறைக்கு மாற்றப்படுகிறார். 
 
சுத்தமல்லி மதன்

நெல்லை மாவட்டம், சுத்தமல்லியைச் சேர்ந்தவர் மதன். பிரபல ரவுடியான மதனின் அணியில் பாயாசம் இருந்தார். இந்த சமயத்தில் மதன் கொலை செய்யப்பட, அதற்கு பழிக்குப்பழியாக பல கொலைகள் நடந்துள்ளது. அதில் பாயாசத்தின் பெயரும் சேர்க்கப்பட்டது. அடுத்து தன்னுடைய அப்பா கொலைக்கு காரணமானவர்களை கொலை செய்ய தென்மாவட்டத்தில் தனி சாம்ராஜ்யத்தை ஏற்படுத்திய ஒரு கும்பலுடன் பாயாசம் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார். 

பாயாசத்தால் ஒருக்கட்டத்தில் சிக்கல் ஏற்பட அந்த கும்பல் தனியாக பிரிந்து சென்று விட்டது. இதன்பிறகு தனியொருவனாக பாயாசம், எதிரிகளிடம் மோதினார். அதன்பிறகே வாட்ஸ்அப் யுவராஜிடம் சேர்ந்துள்ளார். ஆனால் கோகுல்ராஜ் வழக்கில் யுவராஜ் பெயர் சேர்க்கப்பட்ட போது பாயாசத்தின் மீதும் போலீஸின் சந்தேகப்பார்வை விழுந்தது. ஆனால் அவர் வழக்கில் சேர்க்கப்படவில்லை.

கலப்பு திருமணம்

யுவராஜ் அணியில் இருந்த பாயாசத்துக்கும் கலப்பு திருமணத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அதன்தொடர்ச்சியாக சமீபத்தில் யுவராஜைப் போல வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோவை தனக்கு நெருக்கமானவர்களுக்கு அனுப்பி உள்ளார். அந்த வீடியோவில், 'சமீபத்தில் கலப்பு திருமணங்களால் கொலைகள் நடக்கின்றன. பிள்ளையைப் பெற்றவர்கள், அவர்களை குறித்து என்ன கனவு கண்டு இருப்பார்கள். எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைத்திருப்பார்கள். பெற்றோர்கள், தங்கள் பட்ட கஷ்டத்தை பிள்ளைகள் படக்கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால், கல்லூரியில் காதலிக்கிறார்கள். 

 ஆந்திராவில் தலித் மாணவன் கொலை செய்யப்பட்டார். அவருக்காக பிரதமர் மோடி கூட மன்னிப்பு கேட்டு இருக்கிறார். யார் வேண்டும் என்றாலும் காதலிக்கலாம். காதலிப்பது தப்பு இல்லை. வீட்டில் சம்மதிப்பார்களா, அசிங்கமே என்று காதலிப்பவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். கேட்டால் டிகிரி முடித்திருப்பதாக பந்தா காட்டுகிறார்கள். காதலிப்பதால் அந்த குடும்பத்தின் கௌரவம் போய்விடுகிறது. அடுத்த பிள்ளைகளை திருமணம் செய்து கொடுக்க அவர்களை கொல்வது தவறில்லை.

திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மன்னிக்கவும் மதிப்பிற்குரிய திருமாவளவன், மீது அதிக மதிப்பு வைத்திருக்கிறேன். ஆனால், நீங்கள், மேடையில் எல்லா சாதிப் பெண்களையும் காதலித்து திருமணம் செய்யுங்கள் என்று பேசி உள்ளீர்கள். திருமாவளவன், சாதிப் பிரச்னையை இழுத்து விடுகிறாரா?
(அடுத்து வரும் வார்த்தைகளை பிரசுரிக்க முடியாது) சாதி முன்னேற்றத்துக்கு சாதித்தலைவர்கள் பாடுபட வேண்டும். தவறுதலாக பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள்' என்பதோடு அந்த வீடியோ முடிவடைகிறது. 

எதிர்ப்பு நோட்டீஸ் 

போலீஸாரிடம் பாயாசம் சிக்கிய தகவல் தெரிந்தவுடன், தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் போலீஸிக்கு எதிராக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில் நேதாஜி சுபாஷ் சேனை என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸில் திருப்பூரில் 4-ம் தேதி கைதான மணக்கரைப் பேச்சி முத்துபாண்டியை 'உடனடியாக நீதிமன்றத்தில் ஒப்படை... சட்ட முரணான காவலில் வைக்காதே... மனித உரிமை மீறல்களில் ஈடுபடாதே... போராடத் தூண்டாதே..' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளன. 

அடுத்த நோட்டீஸில் தூத்துக்குடி கண்காணிப்பாளர், முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு எதிரான வாசகங்கள் உள்ளன. மேலும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஆட்கொணர்வு மனுவும் பேச்சிமுத்துப்பாண்டி தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

என்கவுன்டர்?

 வழக்கறிஞர் பாலு, "என்னுடைய கட்சிக்காரர் பேச்சிமுத்துப்பாண்டி மீது சில வழக்குகள் உள்ளன. ஆனால், இரு சமூகத்தினரிடையே நடந்த அனைத்து மோதல், கொலை வழக்குகளில் பாயாசத்தின் பெயரை பொய்யாக போலீஸார் சேர்த்து விட்டனர். தற்போதுகூட அவரை பிடித்து வைத்துக் கொண்டு என்கவுன்டர் செய்ய போலீஸ் முயற்சிக்கிறது. அதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். தற்போது பேச்சிமுத்துப்பாண்டியிடம் போலீஸார் எங்கு வைத்து விசாரிக்கின்றனர் என்ற விவரம் தெரியவில்லை" என்றார். 

ஆலோசனை 

 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தரப்பில் பேசியவர்கள், "அமைதியாகவும், அறவழியிலும் எங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் செயல்பட்டு வருகின்றனர். எங்களை வம்புக்கு இழுக்கும் வகையில் வாட்ஸ்அப்பில் ஒருவர் பேசுகிறார். அவர், எங்கள் தலைவரை விமர்சிக்கும் வார்த்தைகள் காதால் கேட்க முடியாத வகையில் உள்ளன.

 இதற்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக எங்கள் தலைவரிடமும் கலந்து ஆலோசிக்க உள்ளோம். இதுபோன்ற செயல்கள் தேவையில்லாத பிரச்னைகளை ஏற்படுத்தும்"என்றனர்.

கைது 

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், கீழபுத்தநேரி பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு மே 25-ம் தேதி சுடலைக்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாயாசத்தை முறப்பநாடு போலீஸார் தேடி வந்தனர்.  நெல்லை மாவட்டம்,  தாலுகா  போலீஸ் நிலையத்திலும் வெடிமருந்து வழக்கில் பாயாசத்தை போலீஸார் தேடி வந்தனர். தற்போது அந்த வழக்கில் பாயாசம் கைது செய்து நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயாசம் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாகவும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்படவுள்ளதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

நமது நிருபர்


டிரெண்டிங் @ விகடன்