ஏன்னா... உங்களுக்கு சோறு போடும் விவசாயத்தை எங்களால விட முடியாது ! -விவசாயியின் கண்ணீர் விசும்பல்

ய்யா அரசியல்வாதிகளா வயிறார சாப்பிட்டீங்களா?!.

'கட்டுங்கலங் காணும் கதிர் உழக்கு நெல் காணும். சொன்னா பொதி காணும், சோழராஜா சீமையிலே ' னு மெத்த கத்த புலவர்மாருங்க பாடித்தான் வச்சாங்க..இப்ப அதே சோழ பூமியில விவசாயிகளோட 'பாடி'ய தான் வக்கிறாங்க. 'மாடு கட்டி போரடிச்சா மாளாது 'செந்நெல்'னு  யானை கட்டி போரடிச்ச பூமி' இதுன்னு ஏட்டுல சர்க்கரையா எழுதி வச்சாங்க. ஆனால், இன்னைக்கு சம்சாரிங்க நெத்தியில சாவனும்னு எழுதி இருக்கே?. 'நெல்லு போட்டா நெல் விளையும்..புல்லு போட்டா புல் விளையும்'னு சொல்வாங்க..இப்போ இங்கே தற்கொலைதான் விளையுது. அதைத் தடுக்கத்தான் நாதியில்லை. நீங்களும் தான் கண்டுக்கலை.

கோவணம் கட்டிய விவசாயி உங்ககிட்ட கோட்டும் சூட்டும் கேட்கலை. கூடகோபுரம் கட்டித்தரவும் கேட்கலை... உங்க பசி ஆத்த... சோறு விளைவிக்க தண்ணீர்தானே கேட்டான். அதையும் நீங்க செய்யலை. கண்ணீர் தான் விட்டான்.. அப்பவும் யாரும் கண்டுக்கலை. இப்போ அல்லல் அதிகமாகி உசுரையே விடுறான்.. இப்பவும் கேக்க நாதியில்லை. நாதியில்லாத இனமா ஆயிட்டமே நாங்க.

நீங்க சர்புர்ன்னு போறதுக்கு உங்ககிட்ட 'ஆடி' காரு இருக்கலாம். ஆனா, உழவன் ஆடி பட்டத்துல நெல்லை போட்டாத்தான் உங்கள் பசியை ஆத்த முடியுமய்யா. அதுக்கு வழியில்லாம ஆடி போன சம்சாரி ஊர்க்கோடியில கோடி துணிக்கு காத்திகிட்டு பொணமா தான் கெடக்குறான். நீங்க வேடிக்கை தான் பாக்குறீங்க.

தெரியாம தான் கேக்கறேன். உங்களுக்கு என்ன பணத்தை திங்கும் உத்தேசமா? பணத்தை பத்தியே கவலைப்படுறீங்க. நாதியில்லாத ஆளா எங்களை மாத்துறீங்க.  'நாங்க ஆட்சிக்கு வந்தா நாட்டுல பாலாறும் தேனாறும் ஓடும்'ன்னு நைச்சியமா பொய் சொல்லி தேர்தல்ல ஓட்டு தான் வாங்கிறீங்க... பாலாறு, தேனாறு கிடக்கட்டும்...காவிரியில் கானல் நீரு கூட, ஓட முடியாத அளவுக்கு, மணலை ஏன் சுரண்டுறீங்க..விவசாயிகளை ஏன் ஓட்டாண்டி ஆக்குறீங்க?

உங்க தலைமைக்கு உடம்பு முடியாதப்ப, கோயில் கோயிலா ஏறி போய் சூடம் தான் கொளுத்தினீங்க. விளக்கு ஏத்தி கும்புட்டீங்க.. கோயில் கோயிலா படுத்து உருண்டீங்க. உங்களுக்கு காலமெல்லாம் சோறு போடுற விவசாயிகள் இத்தனை பேர் செத்தாங்களே.. யாராவது எங்க குறையை போக்கணும் நினைச்சீங்களா? எங்க குறையத்தான் கேட்டீங்களா?

இன்னொரு பக்கம் நீங்களும் இப்படித்தானா?. விவசாயிகள் உசுரோட இருக்க வழி ஏதும் செஞ்சு தராம, அவன் வலியால துடிச்சு செத்தப்புறம் காசு கொடுக்க வர்ற ராசா, செத்தபிறகு நீங்க கொடுக்குற அந்த லட்ச ரூபா காசு, எங்களுக்கு நெத்திக்காசு தானே ராசா... மானமுள்ள விவசாயி நெத்தி வியர்வை சிந்தி நிலத்துல கிடைக்கிற ஒத்த காசதானய்யா விரும்புறான்... உசுரே போனதுக்கு அப்புறம் அந்த லட்ச ரூபா காசை வைச்சு நாங்க என்ன செய்ய ஐயா.

காவிரி ஒப்பந்தத்த புதுப்பிக்காம, காவிரி வறண்டுபோக காரணமா இருந்தீங்க. இன்னும் மேலே போய் சும்மா கிடக்குற நிலத்தையும் பாலைவனமாக்கத்தான், மீத்தேன் திட்டம் மூலமா பாவம் பண்ண பார்த்தீங்க. இப்ப நீங்க கொடுக்குற காசு அந்த பாவத்துக்கான சம்பளமாய்யா?

தேர்தல் கூட்டணி வைச்சுக்க ஒற்றுமையா போய் பேசுறீங்க. வருஷா வருஷம் பெரும் எழவா இருக்கும் இந்த காவிரி பிரச்னை தீர்க்க மட்டும் ஒண்ணு சேர மாட்டேங்குறீங்க. காவிரி பிரச்னை தீர்ந்து போயி, தண்ணீ தான் வந்துடுச்சுன்னா, ஆத்துல மணல் அள்ள முடியாம போயி, கட்சிக்காரங்களும், அமைச்சர்களும் சோத்துக்கு அல்லாடுவாங்களோங்கற கரிசனமா உங்களை தடுக்குது?

எது எதுக்கோ ஒண்ணா சேருறீங்க. ஆனா கர்நாடகாக்காரன் சட்டப்படி நமக்கு தர வேண்டிய 192 டி.எம்.சி தண்ணீரை வாங்குறதுக்கு ஒத்துமையா போராடினீங்களா?. இல்லையே... ஏன், விவசாயி இளைச்சவன்..இளிச்சவாயன்..தேர்தல் நேரத்துல ஐநூறு ஆயிரத்துற்கு அவனோட ஓட்டுகளை அடிமாட்டு ரேட்டுக்கு வாங்கிடலாம்னு தானே நினைக்கிறீங்க. 'விழுகிற விவசாயிகள் பொணமெல்லாம் உங்க பணத்தாசையால் தான்'னு இன்னமும் உணராத ஜென்மங்கள் தானே நீங்க.

'இந்தியா விவசாய நாடு..இந்தியாவின் முதுகெழும்பு விவசாயம்'னு வெளியே எல்லாம் விளம்பரம் தூள் பறக்குது..ஆனா உண்மையில விவசாயியும், விவசாயமும் முதுகெலும்பு உடைஞ்சு மூலையில தான் கிடக்குது. 90க்கும் அதிகமான விவசாயிகள், இப்போ செத்து போயிருக்காங்க. உங்களுக்கு பொன்னி அரிசி உருவாக்குற விவசாயிகளான நாங்க தான் எலிக்கறிய தின்னோமுங்க.

பணப்பஞ்சத்தை விடவும் உணவு பஞ்சம் கொடிது. விவசாயிகள் நினைச்சா அது தானே நடக்கும். நாங்க அப்படி எப்பவும் நினைக்க மாட்டோம். எதிரிக்கும் சோறு போடும் வம்சமுங்க நாங்க. ஆனா எங்களை தான் கேவலமா நினைக்குறீங்க நீங்க.

கர்நாடகாகாரன் மேகதாதுவுல அணை கட்டுறான். ஆந்திராகாரன் பாலாறுல அணை கட்டுறான். கேரளாகாரன் முல்லை பெரியாறுல அணை கட்டுறான்...அதை தடுக்க உங்களுக்கு துப்பில்லை. அதைப்பத்தியும் உங்களுக்கு கவலையில்லை. தண்ணீ வராத ஆத்துல இருந்து மணலை சுரண்டி, அவங்க கிட்டையே விக்கிறீங்க. நாங்க விக்கித்து போய் நிக்கறதை பத்தி உங்களுக்கு கவலையில்லை.  விவசாயிகள் சாகுறது உங்களுக்கு பதைபதைப்பை ஏற்படுத்தலை. ஈரக்கொலை நடுநடுங்கி கிடக்கும் விவசாயிகளின் அபயகுரலும் உங்களுக்கு கேட்கலை.

காவிரியை நம்பி இருந்த எங்க பொழப்பு, இப்போ கைவிரி நிலைமைக்கு போயிடுச்சு.   இதுக்கு முழுப்பொறுப்பு நீங்க தானே. நட்டநடவு பட்டுருச்சேன்னு வரப்புலேயே, 90 விவசாயிகள் சரிஞ்சு விழ காரணமும் நீங்க தானே.

தை பொறந்தா வழி பிறக்கும்னு தானே சொல்வாங்க. ஆனா இப்போ தை பிறக்க வலி தானே எங்களுக்கு பிறக்குது. உழவர் திருநாளை உழவர் திதி நாள் ஆக்கீட்டீங்களே?. இன்னும் என்ன வேணா செய்யுங்க... எவ்வளவு கொடுமை படுத்த முடியுமோ பண்ணுங்க. ஆனா கருமாய விவசாயத்தை விட்டா எங்களுக்கு வேற தொழில் தெரியாது.  உங்களுக்கும் சோறு போடும் விவசாயத்தை எங்களால விட முடியாது.

கட்டுக்கட்டா பதுக்கி வைச்ச கறுப்பை வெள்ளையாக்க படாத பாடு படுற நீங்க... வெள்ளாமை வெளையறதைப்பத்தியும், விவசாயி சாகுறதைப்பத்தி எல்லாம் கவலைப்பட முடியுமா அய்யா?. இத்தனை பேரு பொணமானதுக்கு அப்புறமும் உறுதியா ஒண்ணு சொல்றோம்.  ஏர் உழுறவனுக்கு வழிவழியாக  வலி தொடர்ந்தாலும், எல்லோருக்கு சோறு போடும் விவசாயத்தை மட்டும் விட்டுட மாட்டான்.

ஏன்னா கருமாய விவசாயத்தை விட்டா... எங்களுக்கு வேற தொழில் தெரியாது.  உங்களுக்கும் சோறு போடும் விவசாயத்தை எங்களால விடவும் முடியாது.
 

- துரை.வேம்பையன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!